முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அன்புள்ள அப்பா!

அப்பா,

எல்லாருக்குமே உலகத்துல அப்பாவ ரொம்பப் பிடிக்கும், நானும் அதே போல தான். உங்களப் பாத்துப் பேசச் சொன்னா நாள் முழுக்க பேசுவேன். எல்லாருக்கும் கெடச்சிட மாட்டாங்க நல்ல அப்பா, என் அப்பா போல நல்ல அப்பா.

என்ன தேவதையா தான் பாத்திங்க, அப்படித் தான் வளத்திங்க. ஒன்னு கேட்டா பத்து வாங்கித் தருவிங்க. ஏன், எனக்குப் பேரு கூட எவ்வளவு அழகா வச்சிருக்கிங்க...

சின்ன வயசுல என் காலுக்கு கீழ படுத்து ஒறங்கலனா உங்களுக்குத் தூக்கமே வராது. "இது யாரு செல்லம்... அப்பாச் செல்லம்..." இப்படி நீங்களே சொல்லிச் சொல்லிக் கொஞ்சிப்பீங்க.
"நீ யாரு செல்லம் டா?", நீங்க கேக்குறப்போலாம், "அப்பாச் செல்லம்..", இப்படி நான் சொல்லலேனா, எவ்வளவு வாடிப் போவிங்க! சின்ன விசயம் தான், ஆனாலும் அது உங்களுக்கு அவ்வளவு வருத்தமா இருந்ததே, ஏன்பா?

அம்மா அப்போ ரொம்ப ஒல்லியா இருப்பாங்க, அம்மா இடுப்புல என்னத் தூக்குனா எலும்பு குத்தும்னு அம்மாகிட்ட நான் போகவே மாட்டேன்.. நீங்க தான் என்னத் தூக்கிச் சொமப்பீங்க.

நானும், சொகுசா உங்க கைல உக்காந்துக்கிட்டு, "அப்பா தான் பஞ்சு மாதிரி, அம்மா குத்துறா எலும்பா.."னு சிரிச்சிக்கிட்டு வருவேன்.

சின்ன வயசுல தெருவுல போற காய் வண்டி, பழ வண்டிக்காரங்கள எல்லாம் நான் கேலி பேசுவேன்னு, அத எல்லாத்தையும் கேசெட்ல* பதிஞ்சு வச்சு, நான் பெருசானதுக்கு அப்புறமும் போட்டுக் கேட்டு ரசிச்சிருக்கிங்க.

நான் மொத மொத "அ ஆ இ ஈ.." சொன்னது தொடங்கி, கெழவி மாதிரி கத பேசுறது வரைக்கும் எல்லாத்தையும் பதிஞ்சு வச்சிருக்கீங்க கேசட்ல*

இதோ, இவற காதலிக்கிறேன்னு சொன்னேனே.. அன்னிக்கு உங்களுக்கு எவ்வளவு கோவம் வந்துச்சி. அன்னிக்கி தான் என்ன ரெண்டாவது தடவையா நீங்க அடிச்சிங்க.

மொத தடவ அடிச்சது நெனவிருக்காப்பா? நான் ரெண்டாவது படிச்சப்போ? அன்னிக்கி எனக்கு சயின்ஸ் எக்சாம்*, இளநி எப்புடி தென்ன மரத்துல இருந்து கீழ விழுந்து, தண்ணீல அடிச்சிட்டுப் போய், தென்ன மரமாகுதுனு சொல்லிக் குடுத்திங்க. அது தான் பெரிய கேள்வி, எனக்குப் புரியாத கேள்வி. நீங்க சொல்லிக் குடுத்தது இன்னிக்கும் நெனவுல இருக்கு. ஆனா அன்னிக்குப் பரிட்சையில தான் நெனவுல இல்லாமப் போச்சு. அப்போ எனக்கு, மனப்பாடம் பண்ணி எழுதி தான் பழக்கம், அர்த்தம் தெரிஞ்சாலும், மனப்பாடம் பண்ணினது மறந்து போக, எழுதாம வந்துட்டேன் அந்தக் கேள்விய.

ரொம்பக் கம்மியா மார்க்* வாங்கி இருந்தேன். அன்னிக்கு சாயங்காலம் நீங்க அடிச்சிங்கலே ஒரு அடி. அப்பா... மறக்கவே முடியாது. ஆயுசுக்கும் மறக்காது. நடுவீட்டுல அப்படியே நான் யூரின் போய்டேன். :D :D :P
நெனைவிருக்காப்பா?

அதுக்கு அடுத்து நீங்க எனக்கு சொல்லிக் குடுக்ரதயே விட்டுடிங்க, நானா தான் படிச்சேன். ஆனாலும் அட்வைஸ்* பண்றது மட்டும் நல்லா பண்ணுவிங்க :P
"அத இப்டி எழுதணும், இப்படி படிக்கணும்.."னு.

இன்னிக்கு, எனக்கும் ஒரு மகன் இருக்கான். பத்தாவது படிக்கிறான். ஆனாலும் உங்கள நெனச்சுப் பாக்குறப்போலாம், அந்த அஞ்சு வயசுப் பிள்ளையாவே ஆகிட்றேன். சந்தோசமா உணர்றேன். உங்களைப் பாக்கணும், பேசனும்னு நெனைக்கிறேன்.

அப்பா, இங்க என் பக்கத்துல இருக்கிங்கலாப்பா ? என்னப் பாத்துட்டு இருக்கிங்கலாப்பா? :'( நீங்க என்ன விட்டுப் போன அந்த நாள், நான் எப்படி நொறுங்கி போனேன்னு எனக்கு தான் தெரியும். எத்தன பேர் பாசம் காட்டினாலும், அது உங்களைப்போல வராதுப்பா.

இதோ, இந்த லெட்டெர* மடிச்சு உங்க படத்துக்கு முன்னாடி வைக்கப் போறேன் , எப்பவும் போல, படிச்சிட்டு, பதில் சொல்லுங்கப்பா..! பதில் சொல்லுங்கப்பா...!


என்றும் உங்கள் மகள்,
ராஜ குமாரி.


*கேசட் - cassette - ஒலிப்பேழை
சயின்ஸ் எக்சாம் - Science Exam - அறிவியல் தேர்வு
யூரின் - Urine- சிறுநீர்
அட்வைஸ் - Advice - அறிவுரை
லெட்டர் - Letter- கடிதம்
மார்க் - marks- மதிப்பெண்

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்...