[ சின்ன சின்ன ஆசை பதிவின் தொடர்ச்சி ]
நான் இருந்த அப்பார்ட்மெண்ட் |
வீடு மிகவும் பெரியது! பொதுவாகப் பார்த்தால்,
அவ்வளவு ஒன்றும் பெரியது இல்லை, ஆனால், நான் சென்னையில் இருந்த ஒரே ஒரு புறா கூண்டு
ஹாஸ்டல் அறையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மிக மிக மிகப் பெரியது! உள்ளே நுழைந்ததும்,
ஏதோ இங்லிஷ் பேய் படத்தில் வரும் வீட்டில் நுழைவது போலவே இருந்தது! ”அச்சச்சோ...! இந்த
வீட்ல நான் தனியா இருக்கனுமா? ரெண்டு மாசமா?”
பெட்டி படுக்கையை எல்லாம் வைத்துவிட்டு,
பொருட்களை எல்லாம் கொஞ்சம் அடுக்கி வைத்தேன். நல்ல, பசி, ஒரே ஒரு வாழைப் பழம் மட்டும்
சாப்பிட்டேன். நீண்ட பயணம், கிட்டத்தட்ட இந்தியாவில் இருந்து கிளம்பி இரண்டு நாட்கள்
ஆகி இருக்கும்! அமெரிக்காவில் இரவு ஒரு மணி, ஆனால் எனக்கு தூக்கமே வரவில்லை, இந்தியாவில்
பகல் நேரம் ஆச்சே அது! ”ஜெட் லேக்” “ஜெட் லேக்” என்றார்களே அது இது தானா? தூக்கம் வராமல்
உருண்டு புரண்டு கொண்டிருந்தேன். திடீரென, என் வீட்டிற்குள் யாரோ நடப்பது போல இருந்தது!
தனியாக நான் மட்டும் தானே இருக்கிறேன்! எப்படி? யார்? பிரம்மையாக இருக்குமோ? இருக்கும்
இருக்கும்!
மீண்டும் யாரோ என் வீட்டிற்குள் நடப்பது
போலவே இருந்தது! இது என்னடா? உண்மையிலேயே யாரோ இருக்கிறார்களா? பயம்! மெதுவாக பூனை போல எழுந்து, கையில் மொபைலை
வைத்துக் கொண்டே வீட்டுக்குள் தேடத் தொடங்கினேன்... (திருடன் யாராவது இருந்தால், உடனே
உதவிக்கு அழைக்கலாமே மொபைலில் யாரையாவது :P ) யாருமே இல்லை, பெரிய பெரிய கப்போர்ட்,
ஒரு ஆள் ஒழியும் அளவுக்கு! எதுக்குய்யா இவ்வளவு பெருசு பெருசா...? ஏற்கனவே பார்த்த
இங்லிஷ் படம் எல்லாம் நினைவுக்கு வந்தது, கப்போர்டுக்குள் நுழைந்து தானே நிறைய படங்களில்
வேறு எங்கோ மாய உலகத்திற்கு எல்லாம் போவார்கள்! அய்யயோ..., ஒரே பயம்!
கட்டிலுக்கு அடியில், பாத்ரூமில் என்று
எல்லாப் பக்கமும் தேடுதல் வேட்டையை முடித்த பிறகு, கதவை பத்து முறை இழுத்துப் பார்த்துவிட்டு, என் படுக்கை அறையின் கதவை மூடி, படங்களில் எல்லாம் வருவது போல கதவின் முன்னால், chair, table, பெட்டி என்று எல்லாவற்றையும் இழுத்து வைத்துவிட்டு, அப்பாடா என்று வந்து படுத்தால், மீண்டும் யாரோ நடக்கிறார்கள்! இது என்னடா...!? பிறகு தான் புரிந்தது,
வீடு மர வீடு என்று, அதுவும் அப்பார்ட்மெண்ட் என்பதால், பக்கத்து வீட்டில் யாரோ நடந்தது
தான் அப்படி இருந்திருக்கிறது! ஆனாலும், பயம், தூக்கமே இல்லை!
எங்கம்மா சொல்வார், இல்லை, திட்டுவார்,
“மூஞ்சீல வெயில் அடிச்சாக் கூட எந்திக்க மாட்டிகிறியே...” என்று. ஆனால், இன்று, லேசாக
எதோ வெளிச்சம் வந்தே விழித்துக் கொண்டேன்! காலையில் 5.30 மணி! அடக் கடவுளே, தூங்கினதே,
2 மணிக்கு மேல, அதுக்குள்ள முழிப்பு வந்துடுச்சே!
சரி என்னென்னவோ செய்து பார்த்தேன்,
தூக்கமே வரவில்லை! வெளியே செல்லவும் பயம்! வெளியில் போனால், என்ன உடை அணிந்து செல்வது
என்று யோசிக்கத் தொடங்கினேன். இந்த நாட்டுக்காரர்கள் நான் போடும் சொக்காவைப் பார்த்து
சிரித்துவிட்டால்? என்னெனவோ யோசித்து யோசித்து, ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தே, நேரம்
எல்லாம் கழிந்தது! மணி 7!
சரி, குளிப்போம்! சொல்ல மறந்துவிட்டேனே,
என் பாத்ரூமில் ”பாத் டப்” எல்லாம் இருந்தது! ஆனால், அதில் படுத்துக் கொண்டு குளிக்க
எல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை. ஷவரில் தான் குளித்தேன். இந்த ஷவரில், தண்ணீரை எப்படி
சரியான சூட்டில் வர வைப்பது என்ற ஆராய்ச்சியிலேயே பாதி நேரம் போனது! ஒன்னு சூடா வருது,
இல்ல, சில்லுனு வருது...! ஒரு வழியாக அந்த ஆராய்ச்சியை எல்லாம் முடித்து, குளித்து
விட்டு வந்து கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால், வாயைச் சுற்றி அனுமான் மாதிரி வெள்ளையாக
இருக்கிறது! அடக் கடவுளே! நல்லா தானே குளிச்சோம்? அங்கு இருந்த குளிருக்கு அப்படி வந்தது
போல, இது தான் பனிப்பத்தோ? பத்தோ, ஒன்பதோ, போகட்டும் என்று வைத்திருந்த மாய்ஸ்டரைசரைத்
தடவினேன். அப்பாடா, சரியாகிவிட்டது முகம்.
Bogue Street |
ஒரு வெள்ளை நிற, குர்த்தா மாதிரியும்
இல்லாத, டி ஷர்ட் மாதிரியும் இல்லாத ஒரு டாப்-உம் ஜீன்ஸ்-உம் அணிந்து கொண்டு கிளம்பினேன்,
கையில் map, mobile, குடை, பின்னால் ஒரு லேப்டாப் பை, என்று எல்லாம் எடுத்துக் கொண்டு,
யுனிவர்சிட்டி இருக்கும் பக்கம் நோக்கி. Cedar Street, River Street, Bogue
Street, North Shaw lane, south Shaw lane – என்று எல்லா சாலைகளின் பெயரையும் பார்த்துக்
கொண்டு, எந்த சாலையில் போவது என்று யோசித்துக் கொண்டு இருந்தேன். போகிற வழியிலேயே ஒரு
ஆறு (Red Cedar River)! அடடா! என் வீட்டுக்குப் பக்கதுல ஒரு ஆறா! அவ்வளவு சந்தோசம், அதுவும் சுத்தமான
ஆறாக இருந்தது, ஆற்றங் கரையில் வாத்து எல்லாம் மேய்ந்து கொண்டிருந்தது. அழகான ஊர்
அது, East Lansing.
அழகான ஊர் மட்டும் அல்ல, அமைதியான ஊர்! ஊரில் முக்கால் வாசி பேர், அங்கிருக்கும் Michigan State University – இல் வேலை பார்ப்பவர்களாகவோ, படிப்பவர்களாகவோ தான் இருக்கிறார்கள். மக்கள் கூட்டம் இல்லாத ஊர், குறிப்பாக அதிக மக்கள் தொகை இருக்கும் இந்தியாவில் இருந்து போகிறவர்களுக்கு, நிச்சயம் அது மயான அமைதியாக இருக்கும் (ஆம், மிகவும் பயமாகத் தான் இருந்தது எனக்கு முதலில்). சாலையில் நடந்து செல்லும் போது, பெரும்பாலும் நான் தனியாகத் தான் நடந்து சென்று கொண்டிருப்பேன். ஊரிலேயே, நான் மட்டும் தனியாக இருப்பது போல் எல்லாம் உணர்ந்த தருணங்களும் உண்டு!
Red Cedar River |
குறிப்பாக இன்னொரு விசயம், இந்த யுனிவர்சிட்டிக்கு
compound wall- ஏ இல்ல!! இங்கு நம்ம ஊரில் எல்லாம், பெரீஈஈஇய காம்பவுண்டுக்குள்ள தான
இருக்கும்! இன்னொரு வேடிக்கையான காரியம் ஒன்று செய்தேன் முதல் நாள், ரோட்டில் நடந்து
போய்க் கொண்டிருந்த போது. சாலையைக் கடப்பது என்றாலே, எனக்கு பொதுவாக கொஞ்சம் பயம் தான்,
ஆனால், இந்த ஊரில் தான் சாலையில் கூட்டமே இல்லையே? பிறகு என்ன இருக்கிறது பயப்பட?!
ஆனாலும், பயந்தேன். சாலையைக் கடக்க, சிகப்பு விளக்கு எரிந்தது, சரி என்று நின்றேன்
(ரோட்ல என்னத் தவர யாருமே இல்லனாலும், வெளிநாட்ல போய், போலீஸ் புடிச்சிட்டா?! எதுக்கும்
வம்பு! வண்டியே வரலேனாலும், ரோட்ல ஆளே இல்லனாலும் நிப்போம்!) தூரமாக ஒரே ஒரு கார் வந்தது,
அதுவும் வந்து, நின்றுவிட்டது! (இது என்னடா கொடும, நாம நிக்கறோம், அந்த காரும் நிக்குது?)
சரி, என்று ஒரு கட்டத்தில் நான் சாலையைக் கடக்க ஆரம்பித்தேன், சிகப்பு விளக்கு எரிந்த
போதே. கேட்டதே ஒரு சத்தம், யாரோ ஒருவர், ஆங்கிலத்தில் எதோ சொல்கிறார், மைக் வைத்துக்
கொண்டு, சத்தமாக! ஆள் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை, சத்தம் மட்டும் வருகிறது!
”போச்சு, போச்சு, போலிஸ் தான் போல”,
பயத்தில் இரண்டு அடி எடுத்து வைத்து நடந்தவள், மீண்டும் பின் நோக்கி வந்து, இருந்த
இடத்திலேயே சாலையைக் கடக்காமல், நின்று கொண்டு, அந்தக் கார் காரரைப் பார்த்தேன். அவர்
நகராமல் அதே இடத்தில் தான் இருந்தார், காத்துக் கொண்டு. அவரைப் பார்த்தேன், அவர் சாலையைக்
கடக்குமாறு ”சைகை” செய்தார், நடக்கும் சிக்னலும் மாறி இருந்தது பச்சையாக, ஆனால், யாரோ
ஆங்கிலத்தில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்த அந்த சத்தம் மட்டும் நிற்கவே இல்லை. நான், சரி,
அது யாராகவும் இருக்கட்டும் என்று, சாலையைக் கடந்து, ஒரே ஓட்டமாக ஓடிவிட்டேன். இருந்த
பயத்திலும், பதட்டத்திலும், அந்தக் குரல் என்ன சொன்னது என்று கூடக் கேட்கவில்லை ஒழுங்காக!
ஒருவழியாக தேடி அழைந்து, இறுதியாக என் Professor இருந்த lab-ஐ கண்டுபிடித்துச் சென்று
சேர்த்தேன். நல்ல மனிதர் அவர், அருமையாக புன்னகையோடு வரவேற்று, என்ன மாதிரி
project என்று விளக்கினார். திரும்பி வரும்போது பயம் இல்லை, நிதானமாக இருந்தேன், அப்போது
தான் புரிந்தது, சிக்னலில் விளக்கு பச்சையாக மாறியதும், அந்த சாலையின் பெயரைச் சொல்லி,
“walk time, walk time”, என்று அந்த சிக்னல் போஸ்ட்டில் இருந்து பதிந்து வைத்திருந்த
சத்தம் கேட்கிறது என்று.
எனக்கே காலையில் நான் அடித்த கூத்தை
நினைத்து சிரிப்பு சிரிப்பாக வந்தது. இதுக்குப் போயா பயந்தோம்? அந்தக் கார்காரர் என்ன
நினைத்திருப்பார்?
Kanmani's Journey to the Far Side of the World :) |
அன்று முழுவதும் சாப்பிடாமல் இருந்தேன்,
எங்கே சென்று, தனியாக எப்படி சாப்பிடுவது என்று யோசித்துக் கொண்டு. எப்படியோ, இறுதியாக
என் வீட்டிற்கு அருகில் இருந்த McDonald’s இல் ஒரு burger, roll, என்று சாப்பிட்டு, அம்மாவோடு அலைபேசியில் பேசி, ஒரு வழியாக முடித்தேன் அந்த நாளை. அம்மா அப்பா என எல்லாரையும்
விட்டு, தனியாக எப்படியோ ஒரு பயணம், நீண்ட தூரம், கடல், மலை, காடு தாண்டி, பறந்து...
என்று நினைத்து, எனக்கே, ஒரு சபாஷ் சொல்லிக் கொண்டேன் பெருமையாகத் தூங்குவதற்கு முன்,
புன்னகையோடு!
அடுத்த பதிவில், இன்னும் பிற அனுபவங்கள் பற்றி எழுதுகிறேன் :)
Nice Kanmani.. Last pic sema :)
பதிலளிநீக்குthank you :)
பதிலளிநீக்குVery nice kanmani.. Happy to c u shining in our field ur narration is superb..
பதிலளிநீக்குthanks :) selva ganesh
நீக்குஉண்மையில் தனியாக போய் நாம் சந்திக்கும் அனுபவங்கள் மிக பெரிய பாடம் அது, haha ஆனா நீங்க அந்த Traffic Signal ah அடிச்ச கூத்து இருக்கே அதை நெனச்சா எனக்கே இப்போ சரியான சிரிப்பு சிரிப்பா வந்திருச்சு....😂😁😋
பதிலளிநீக்குOpena ah சொன்னா சரியான லூசு நீங்க
சிரிப்பு வரணும்னு தான் பகிர்ந்துக்கிட்டேன். சிரிக்க வைக்க முடிஞ்சதுனு சந்தோஷம் :)
நீக்குசில நேரம் புது இடத்துக்கு போறப்போ அப்படி தான் கொஞ்சம் பயத்துல லூசுத்தனம் செய்வேன். நன்றி!