முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இருபத்தியாறு (21+4) வயதினிலே!

  "என்னடா இந்தப் பொண்ணு கணக்குல கொஞ்சம் வீக்கோ?", என்று நீங்கள் நினைப்பது எனக்குக் கேட்கிறது. உண்மை தான், கொஞ்சம் வீக் தான். ஆனால், இப்போது எனக்கு இருபத்தியாறு வயது துவங்கி இருக்கிறது, அதனால் தான் முடிந்த வயதை கணக்குப் போட்டு இருக்கிறேன். புரிகிறதோ? 

21 வருடம் அம்மா அப்பா கையைப் பிடித்துக் கொண்டு இருந்தேன். 4 வருடம் தனியாக இருந்தேன். இப்போதும் தனியாகத் தான் இருக்கிறேன். (தனிமை தனிமையோ, கொடுமை கொடுமையோ!)

சரி இந்த இருபத்தி ஐந்து வருடங்களில் நான் "இது சரி", "இது தவறு", என்று இப்போது வரை கற்று இருப்பவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். விருப்பம் இருந்தால் வாசித்துப் பாருங்கள். இதில் இருப்பவை எல்லாம் என்னுடைய சுய அனுபவங்கள் கொண்டு நான் எழுதி இருப்பவை. உங்களுக்கும் இது சரியாக இருக்க அவசியம் இல்லை.   

சரி "வளவள" என்று பேசாமல் சொல்ல வந்ததைச் சொல்கிறேன், கேளுங்கள்!

இதில் வெவ்வேறு தலைப்புகளாகப் பிரித்து எழுதி இருக்கிறேன், பின்னாளில் நான் மறுபடி இதைப் படித்துப் பார்க்கையில் எனக்கு எளிதாக இருக்கும் பாருங்களேன்? பெரும்பாலும் நான் எழுதுவதெல்லாம், எனக்காகத் தான். எனக்கு பொழுதை நன்றாகக் கழித்தது போல இருக்கும், மீண்டும் படித்துப் பார்க்கையில்  நாட்குறிப்பைப் போல இருக்கும், பொழுது போக்காக இருக்கும் பாருங்களேன்? 

வாழ்க்கை முழுக்கப் படிக்கணும்!

சிறுவயதில் இருந்தே எனக்கு, "படிப்பது" என்பதை ஒரு கடினமான விஷயம் போல இல்லாமல், ஒரு விளையாட்டு போல, சுவாரசியமான விஷயமாக ஆக்கியதில் என் அப்பாவுக்குத் தான் பங்கு அதிகம். சிறு வயதிலேயே வீட்டில் இருக்கும் படுக்கை அறையில் ஒரு பக்கச் சுவர் கருப்பு நிற வண்ணம் அடிக்கப்பட்டு எனக்குக் கரும்பலகையாக இருந்தது. அதில் எழுதி எழுதி என் "எழில்" மிஸ் சொல்லிக் கொடுப்பது போல, இல்லாத மாணவர்களுக்கு நான் பாடம் எடுத்து விளையாடி விளையாடியே நன்றாகக் படித்துவிடுவேன்! இது பால்வாடியில் இருந்தே பழக்கம் எனக்கு. கருப்பு நிறம் அடிப்பதற்கு முன்னால் ஒரு ஆணியில் மாட்டும் கரும்பலகை ஒன்றில் விளையாடி இருக்கிறேன். 

பிறகு, டெக்னாலஜி வளர்ந்தது, நானும் வளர்ந்தேன். இன்னும் கரும்பலகையில் விளையாடினால் நன்றாகவா இருக்கும்? அதனால் இப்போது நான் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி வீட்டில் இருக்கும் "டேப் ரெகார்டரில்" நானே என் புத்தகத்தைப் பார்த்து வாசித்து, பதிந்து, அதை மறுபடி மறுபடி கேட்டுக் கேட்டு விளையாடுவேன்! எனக்கு இப்படி எல்லாம் எங்கிருந்து "ஐடியா" வந்தது என்று எனக்கே தெரியவில்லை. ஒருவேளை என் அப்பா சிறுவயதில் நான் பேசியதை எல்லாம் பதிந்து வைத்து இருந்தார், அதைக் கேட்டு இப்படி செய்திருக்கலாம்!

இப்படியாக சிறுவயதில் இருந்தே எனக்கு படிப்பது என்றால் பிடிக்கும். ஆனால் ஒரு ஐந்தாம் வகுப்பு வரை, நான் சுமார் மாணவி தான். முதலாக எல்லாம் வந்ததில்லை. ஆறாவதில் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. என் உடன் படித்தவர்களால் முன்பு போல நன்றாகப் படிக்க முடியவில்லை (ஏனென்றால், நான் எப்போதும் போல தான் இப்போதும் படித்துக் கொண்டு இருந்தேன்). இப்படியாக, திடீரென நான் வகுப்பில் முதலாக வந்தேன்! பின்பு அப்படியே கொஞ்சம் நன்றாகப் படிப்பவர்கள் "லிஸ்ட்டில்" நானும் இடம் பெற ஆரம்பித்தேன், முதலில் வர வேண்டும் என்று ஆசை இருக்கும், ஆனால், முதலில் கண்டிப்பாக வர வேண்டும் என்றெல்லாம் படித்தாக எனக்கு நினைவில்லை. எப்போதாவது முதலில் வருவேன், பெரும்பாலும் இரண்டு மூன்று தான். என் அப்பாவுக்கு தான் இதில் அதிக வருத்தம், "நீ ஜாலியா படிச்சே ரெண்டாவது வர்ற, அப்போ இன்னும் நல்லா படிச்சா first வருவேல?" என்று சொல்லிக் கொண்டே இருப்பார். ஆனால், எனக்கென்னவோ, அப்படிப் படித்தால் உள்ளதும் போய்விடும் என்று ஒரு திடமான நம்பிக்கை. அதனால், நான், "நாம படிக்கிறத படிப்போம், வர்றது வரட்டும்", என்ற போக்கில் தான் படிப்பேன். 

எனக்கு இந்த approach இது வரை மிகவும் சிறப்பாக வேலை செய்து இருக்கிறது. கவனிக்க: நான் இன்றும் படித்துக் கொண்டு தான் இருக்கிறேன் (PhD in Marine Molecular Biology), இன்று வரை இதே போல தான் படிக்கிறேன், ஆராய்ச்சி செய்கிறேன். எனக்கு ஆர்வமாக இருக்கும் விஷயத்தை, நானே கண்டுபிடிப்பதில் இருக்கும் ஆனந்தம் தான் எனக்கு வேண்டுமே தவிர, வேறு எதுவும் என் "முக்கியக்" குறிக்கோள் இல்லை. ஆசை இருக்கத்தான் செய்யும், "பெரிய ஆராய்ச்சியாளராக வர வேண்டும்", என்றெல்லாம், மறுக்கவில்லை. ஆனால், அதை என் முக்கிய குறிக்கோளாக நான் மேலோங்காமல் பார்த்துக் கொள்வதில் கவனமாக இருக்கிறேன். எனக்கு சந்தோஷமாக ஒன்றைச் செய்வது தான் பிடித்தம், அது இதற பலன்களை தானாகத் தந்துவிடுகிறது! தரவில்லை என்றாலும், இழப்பதற்கு ஒன்றும் இல்லை, சந்தோஷமாகத்தானே செய்தேன், பிறகு இழக்க என்ன இருக்கிறது? என்ன, சரி தானே?

என்னுடைய பல்கலைக்கழகத்தில்
PhD Qualifying Seminar கொடுத்தபோது எடுத்தது

எனக்குப் படிப்பதும், புதிதாய்த் தேடி ஒன்றைக் கற்றுக் கொள்வதும், அதைப் பற்றி, பேசுவதும், பகிர்ந்து கொள்வதும், அதிக ஆனந்தம் தருபவை. சுருக்கமா சொல்லனும்னா, "I  am a happy nerd". பெரும்பாலும் nerd எல்லாம் introvert ஆக இருப்பார்கள், நான் ஒரு extrovert nerd. நன்றாக வாயாடுவது என்றால் என்னை மிஞ்சுவது கொஞ்சம் கடினம் தான்.  

பொங்கலும் பாடலும்!

சிறுவயதில் மார்கழி மாதம், வீட்டுப் பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் சூடாக தினமும் காலை ஆறு முப்பது மணிக்கு பொங்கல் தருவார்கள். அந்தப் பொங்கலை வாங்கிச் சாப்பிட என்று, சீக்கிரமே ஒரு கிண்ணத்தைத் தூக்கிக் கொண்டு சென்று விடுவேன் (sustainable living, நாங்க எல்லாம் அப்போவே அப்படி :P). சரியாக பொங்கல் கொடுக்கும் நேரம் தான் போவேன், பூஜைக்கு, பஜனைக்கு எல்லாம் போவதில்லை :P 

இப்படிப் போன போது, ஒரு நாள் சீக்கிரமே போக, அங்கு பஜனையே முடியவில்லை. சரி, என்று நின்று கொண்டு இருந்தேன் ஒரு ஓரமாக, "எப்போடா பொங்கல் கிடைக்கும்" என்று பார்த்துக் கொண்டு. அப்போது பஜனையில் பாடிக் கொண்டு இருந்த என் அம்மா, கூட வந்து உட்காரச் சொன்னார். சரி என்று உட்கார்ந்தேன். எல்லோரும் ஒன்றாக ஒருசேர பாடிக் கொண்டு இருந்தது என்னவோ உட்கார்ந்து கேட்கையில் நன்றாக இருந்தது (உட்கார்ந்ததும் கவனம் பொங்கலில் இருந்து பஜனைக்குக்  கொஞ்சம் திரும்பிவிட்டது). அப்படியே நானும் உடன் சேர்ந்து பாட முயற்சித்தேன். பிறகு சாமி எல்லாம் கும்பிட்டுவிட்டு, குஷியாக பொங்கல் வாங்க வரிசையில் சென்று நின்றுகொண்டேன். அப்போது யாரோ ஒரு பாட்டி, "பாப்பா, நீ ரொம்ப நல்லா பாடறயே...", என்று சொல்ல, அன்று ஆரம்பித்தது என் பஜனை. 

தினமும் எப்போது பஜனை ஆரம்பிக்கும் என்று கேட்டேன். ஐந்து மணிக்கு என்றார்கள். பாட வேண்டும் என்ற ஆர்வம், சீக்கிரமே எழுந்து, அம்மா வெந்நீர் வைத்துக் கொடுப்பார், குளித்துவிட்டு, அம்மாவுக்கு முன்னாள் கோவிலுக்குச் சென்றுவிடுவேன். யார் முதலில் செல்வது என்று போட்டி வேறு இருக்கும் சில சமயம். இப்படியே பிள்ளையார் கோவிலில் பஜனை பாடி பாடி, ஒரு பெரிய பாடகியாக நான் வளர்ந்ததெல்லாம் ஊர் அறிந்த வரலாறு. உண்மை தான், நான் பெரிய பாடகியும் கூட :P (பாருங்க கீழ இருக்குற வீடியோவ, ஏதாவது அசம்பாவிதம் நடந்தா நான் பொறுப்பல்ல) எனக்கு ஏதோ ஒரு சாமிப் பாட்டு புத்தகம் கிடைத்தால், அதற்கு நானே ஒரு நல்ல "tune" போட்டு நன்றாகப் பாடுவேன்.


இப்போது பெரிதாக நான் "மதம்" என்று ஒன்றைப் பின்பற்றவில்லை என்றாலும், எனக்கு "இந்து மதம்" தான் தெரியும், அந்தச் சூழலில் தான் வளர்ந்தேன். இப்போது எனக்கு, இப்படித் தான் சாமி, இப்படித் தான் வழிபாடு என்பதில் பெரிதாக நம்பிக்கை இல்லை. ஆனாலும் கூட்டம் இல்லாத சமயம் கோவிலுக்குச் செல்லப் பிடிக்கும். இப்படி சாமி கும்பிட்டால் இது நடக்கும் என்பதில் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை என்றாலும், அம்மாவுக்காக கோவிலுக்குச் செல்வேன். எனக்கு இப்போதும் கடவுளை வாழ்த்திப் பாடும் இந்து மதப் பாடல்கள் பாடுவது பிடிக்கும். பிற மத பாடல்கள் எனக்குப் பழக்கம் இல்லை, ஆனால் பழக்கம் ஏற்பட்டால் பாடுவதில் எந்தத் தயக்கமும் இல்லை.

என் மதமே என் தொழில்!

என்ன குழப்பமா?  சொல்கிறேன். அறிவியல் தான் என் மதம், அதுவே என் தொழில்!

ஆராய்ச்சி மாணவி ஆகிற்றே? இருக்காதா பின்னே?


"கற்க கசடறக்  கற்றவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக"

இது எனக்கு மிகவும் பிடித்தமான திருக்குறள். கடவுள் என்று ஒன்று இருக்கிறதா? அது என்ன? என்ன வடிவம்? நிறம்? இதை நோக்கிய ஒரு  பயணமாகத் தான் நான் அறிவியலைப் பார்க்கிறேன். உயிர் எப்படி உருவாகியது என்பது எவ்வளவு பெரிய கேள்வி? கடவுளா உருவாக்கினார்? சரி கடவுள் என்றே இருக்கட்டுமே. அந்தக் கடவுளை நோக்கிய தேடல் தான் ஆன்மிகம்? முற்காலத்தில் முனிவர்களும், துறவிகளும் தான் எதிர்காலத்தைக் கணித்துச் சொன்னார்களாம்.  அப்படி இருப்பின், என் பார்வையில் இன்று அறிவியலாளர்கள் தான்  முனிவர்கள். குழப்புகிறதா?

ஆம், நான் இப்போது ஆராய்ச்சி செய்யும் துறை - உலகத்தில் இரு நூறு வருடங்கள் கழித்து எந்த உயிரனங்கள் வாழும், எது அழியும். புவி வெப்பமயமாகுமா (Global warming)? கடல் அமிலமாகுமா ( Ocean Acidification)? (இதெல்லாம் ஏற்கனவே நடந்து கொண்டு தான் இருக்கிறது!) சரி, அப்படி ஆனால், அதனால் எந்த உயிரினங்கள் எல்லாம் பாதிக்கப்படும்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இப்போதே நம்மால் பதில் சொல்ல முடியும்?  எத்தனை ஆச்சர்யம் பாருங்களேன்? இருநூறு வருடங்கள் கழித்து என்ன ஆகும் என்று இப்போதே நம்மால் பதில் சொல்ல முடியும்! அப்போ சொல்லுங்க? அறிவியல் ஒரு மதம், ஆராய்ச்சியாளர்கள் தானே அதில் முனிவர்கள்? சரி இன்னும் கொஞ்சம் விளக்குகிறேன் தெளிவாக.

முனிவர்கள் தவம் செய்வார்கள்? உங்களுக்கு 'தவம்' என்ன, என்று தெரிந்திருக்கும் என்று வைத்துக் கொள்கிறேன். தவம் செய்வது போலத்தான் கல்வியும், ஆராய்ச்சியும். அதீத ஆர்வம் .தேவை. ஒரு தேடல் இருக்க வேண்டும். அதிக நேரம் கவனத்தை ஒரு விஷயத்தின் மீது செலுத்த வேண்டும். ஒழுக்கம் வேண்டும். இவை அத்தனையும் கடந்து, செய்த வேலை (ஆராய்ச்சி) பலனே இல்லாமல் தோல்வியில் முடிந்தால் அதைத் தாங்கும் தைரியம் வேண்டும் (பெரும்பாலும் தோல்வியில் மட்டும் தான் முடியும்! கடினமாக உழைத்தால் பிற துறைகளில் பலன் கிடைக்கலாம், ஆனால், ஆராய்ச்சியில் பலன் கிடைக்காமலே கூட போகலாம்!). சமயத்தில் இந்தியா போன்று வளர்ந்து வரும் நாட்டில் ஆராய்ச்சிப் படிப்புப் படித்தால், பலனோடு சேர்த்து, வரவேண்டிய scholarship பணமும் வராது! ஆக, பலனும் இல்லாமல், பணமும் இல்லாமல் செய்கின்ற ஒன்று துறவுக்குச் சமம் தானே?

என்னைப் பொறுத்தவரை அறிவியலாளர்கள் தாம் இந்தக் கால முனிவர்கள், சித்தர்கள், எப்படி வேண்டுமாயினும் சொல்லலாம்.

இப்படி எல்லாம் பினாத்திக்கொண்டு (இது ஒரு உண்மை வார்த்தை தானா?) இருப்பதால், பல சமயம் எனக்கும் என் பெற்றோருக்கும்  ஆகாமல் போய்விடுகிறது! என்ன செய்ய? அவர்களைப் பொறுத்தமட்டில் பிள்ளையார் கோவிலில் பஜனை பாடிய அந்தக் கண்மணியைத் தான் இன்னும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். பாவம், நான் எவ்வளவு சொன்னாலும் என் வேகத்திற்கு ஈடு கொடுத்து புரிந்து கொள்வதில் சற்று சிரமப்படுகிறார்கள்! அதை நானும் தவறென்று சொல்வதில்லை. அவர் அவர் மதமும், நம்பிக்கையும் அவர் அவருக்கு.

தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறடி பாயும்!

பெற்றோரின் கடமை என்ன? பிள்ளைகளை நெறிப்படுத்துவது? சிறு பிள்ளையாக இருக்கையில் எனக்கு அம்மா அப்பா என்ன சொன்னாலும் அது தான் உண்மை. அது தான் சரி. அதை மட்டும் தான் செய்ய வேண்டும். சில நேரங்களில் சேட்டை எல்லாம்  செய்வேன், ஆனால் பெரும்பாலும் பிற பிள்ளைகளைக் காட்டிலும் சற்று நல்ல பிள்ளையாகத் தான் இருந்திருக்கிறேன்.

ஆனால், இப்போது சில வருடங்களாகவே, என் பெற்றோருக்கு அதீத வருத்தம் என்னால்! காரணம்? அவர்கள் சொல்லிக் கொடுத்த எல்லாவற்றையும் சரியாகச் செய்துவிட்டேன்! குழப்புகிறதா? எனக்கும் தான்.

சிறு வயது முதல் அப்பா சொல்வார், "நல்லா  படிக்கணும்,பெரிய ஆளா வரணும், நம்ம நாட்டுக்கு ஏதாச்சும் செய்யணும்" இது போல இருக்கும் அந்த அறிவுரைகள். அதைச் செய்யும் பயணத்தில் தான் நான் இருக்கிறேன்.

அப்பா சொன்னது, "நல்லா படிக்கணும்"
நான் செய்தது, "மிகவும் நன்றாகப் படித்தேன், இன்றும் படிக்கிறேன், ஒரு படி மேலே சென்று ஆராய்ச்சி செய்கிறேன்"

அப்பா சொன்னது, "பெரிய ஆளா வரணும்"
என்னைப் பொறுத்தமட்டில் மனிதர்களில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் இல்லை, செய்யும் தொழிலோ, கல்வியோ கூட ஒருவரை பெரியவராக ஒருபோதும் உயர்த்தாது. எல்லோரும் சமம் தான். ஆனால், இந்த "பெரிய ஆளா வரணும்" எப்படி? இதை நான் புரிந்து கொண்டது, என் திறமையை வளர்த்தெடுப்பது. அதை நான் செய்து கொண்டே இருக்கிறேன், படிப்படியாக.

அப்பா சொன்னது, "நாட்டுக்கு ஏதாச்சும் செய்யணும்"
இங்கு நான் பாரதியையும், வள்ளுவரையும் துணைக்கு அழைக்க விரும்புகிறேன்.

"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை", வள்ளுவர்

"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!", பாரதியார்.

"கல்விச் செல்வமே சிறந்த செல்வம்" என்கிறார் வள்ளுவர். "அந்தச் செல்வத்தை எட்டுத் திசைகளிலும் சென்று இங்கு கொண்டு வந்து சேர்த்திடு!", என்கிறார் பாரதி. இது இரண்டையும் சொல்லித் தந்து, இவை எல்லாம் சரி என்று சொல்லிக் கொடுத்தது தமிழ் ஆசிரியர், இன்னொன்று அப்பா!


தாயும் குட்டியும்!

ஆனால், இருவருமே இப்போது இதை உண்மையில் நான் செய்கையில் சற்று வருத்தப்படுவதும், "வெளிநாட்ல போய் தான் நீ படிக்கணுமா? நம்ம நாட்டுக்கு வேல செய்யணும்!" என்பதும் இவர்கள் தாம். படித்து முடித்த பிறகு நாட்டிற்குத் தானே திரும்பப் போகிறேன்?  நாட்டைவிட்டு வேறு நாடு சென்று பயிற்சி பெற்றுத் திரும்ப நம் அரசாங்கம் தானே அனுப்புகிறது மாணவர்களை? என்னதான் அரசாங்கம் மீது குறைகள் இருந்தாலும், எனக்கு மிகுந்த நன்றி உண்டு, எனக்கு உதவி கேட்டபோது கிடைத்தது இந்திய அரசிடம் இருந்து.

"இதைச் செய் இதைச் செய், படி படி", என்று சொன்ன அத்தனை பெற்றோரும், இன்று, பிள்ளைகள் வளர்ந்த பிறகு, "அமைதியான, சாந்தமான, பக்கத்துல ஒரு வேல, காலைல போனா சாயங்காலம் வந்துரனும், ஊர்ல இருக்கணும்" இப்படித் தான் அறிவுரை சொல்கிறார்கள்! சிறுவயதில் நீங்கள் தந்த ஊக்கமும், வேகமும் எங்கே? வாழ்வின் இந்தக் கட்டத்தில், "இது நாம செய்ய வேண்டியது  இல்ல,வேற இந்த வேலையெல்லாம் செய்ய ஆள் வரும்" என்று அயர்ந்து போனது எப்போது? பிறகு இப்படி அமைதியான வாழ்க்கை தான் வேண்டும் என்றால், "கனவு காணுங்கள்" என்றெல்லாம் சொல்லி உந்தித்தள்ளியது ஏன்?

இன்று அந்தக் கனவுகளைத் தேடி ஓடும் வேளையில், பிடித்து  பின்னால் இழுப்பது ஏன்? இது பெண் பிள்ளைகளுக்கு என்று மட்டும் இல்லை, எல்லாப் பிள்ளைகளையும் இன்று, பிள்ளைகள் வளர்ந்து வேலைக்குப் போகும் வயது வந்ததும், பல பெற்றோர் இப்படிப் பின்னுக்கு இழுப்பதைப் பார்க்கிறேன். ஏன்? பாசமா? பயமா? "எங்க நம்ம பிள்ள ரொம்ப கஷ்டப்படுமோ?" என்று பயமா?

உங்கள் பிள்ளை பதினாறு அடி பாய வேண்டுமா? பாயவிடுங்கள்!

என் பெற்றோர் சற்று சிரமப்பட்டாலும், பெண்ணை வெளியே அனுப்புவது என் ஊருக்கு சற்று புதிது என்றாலும், அனுப்பினார்கள். அதற்கு என்றும் நான் நன்றி செலுத்துவேன்.

பணத்தை முதலீடு செய்யச் சிறந்த வழி?

நான் ஆராய்ச்சிப் படிப்பு தான் படிக்கிறேன், ஆனால் பகுதி நேரமாக teach செய்ய வேண்டும் universityஇல் அதற்கு சம்பளம் தருவார்கள். சிக்கனமாகச் செலவு செய்தால் நம் நாட்டில் ஒரு குடும்பத்தை தாராளமாக நடத்தும் அளவுக்கு பணத்தை சேமிக்கலாம்.

சரி இப்போது நாம்(ன்) சுயமாக கையில் பணம் எல்லாம் வைத்து சமாளிக்கப் பழகி இருக்கிறோம் அல்லவா? அந்தப் பணத்தை எப்படி முதலீடு செய்வது? (சூனா பானா நாமளும் வளந்துட்டோமேடா) இருபதுகளில் சம்பாதிக்க ஆரம்பிக்கும் அனைவருக்கும் இருக்கும் குழப்பம் இது தான். நான் முதலீடு செய்ய கண்டுபிடித்திருக்கிறேன் ஒரு சிறந்த வழி. என் பணத்தை என் மீது தான் நான் முதலீடு செய்கிறேன். ஒரு பகுதியை university fees கட்ட பயன் படுத்துகிறேன் (இது தான்  பெரும் பங்கு).

எனக்கு பாட்டுப் பாட, நடனம் ஆட முறைப்படி கற்றுக் கொள்ள வேண்டும் என்று சிறுவயதில் அதிக ஆசை. ஆனால், சரியான வாய்ப்பு அமையவில்லை. நான் நினைக்கிறன் தனியாக இது போல "special class" அனுப்பினால் என் "பாதுகாப்புக்கு" சரி இருக்காது (நம் நாடுதானே பெண்களுக்கு பாதுகாப்பில் முதல் இடம் உலகத்தில்?) என்று என் பெற்றோர் அனுப்பவில்லை என்று. ஏனென்றால், இரண்டு மாதம் சிறுவயதில் "பரதமும் பாட்டும்" பக்கத்தில் ஒரு மாமியிடம் கற்றுக் கொண்டேன், மிகவும் வயதானவர், அதற்கு மேல் மாமிக்கு உடம்புக்கு முடியவில்லை.  நிறுத்திவிட்டார்கள் என் வகுப்பை, வெளியில் வேறு எங்கும் சேர்த்து விட முடியாது என்று சொல்லி. பிறகு ஒரு வருஷம் "ஹிந்தி" கற்றுக் கொண்டேன், அந்த ஹிந்தி teacher நாங்கள் இருந்த "quarters"இல் இருந்த நிறைய பிள்ளைகளுக்கு ஒன்றாக சேர்த்து சொல்லிக் கொடுப்பார் வீட்டிற்கே வந்து. அவர் அடுத்த வருடம் குழந்தை பிறந்ததால் வர முடியாது, வேண்டும் என்றால், அவர் வீட்டிற்கே வந்து படிக்க வேண்டும் என்றார். அவ்வளவு தான். அந்த ஹிந்தி பரிட்சையில் நான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதலாவதாக எல்லாம் வந்தேன், ஆனால், அவ்வளவு தான்.

பயணங்கள் போகலாம்!

எனக்கு இப்படி சிறு வயதில், ஆசைப்பட்டு கற்றுக் கொள்ள முடியாமல் போன கலைகள், மொழிகள் என்று இப்போது கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை. ஆதலால், ஒரு பகுதியை, "நடனம்" கற்க பயன்படுத்துகிறேன்.

இன்னுமொரு பங்கை சுய சேமிப்பில் வைத்திருக்கிறேன். ஒரு பங்கு வீட்டிற்குத் தேவைப்பட்டால் அனுப்ப, என் பெற்றோருக்கு பெரும்பாலும் பணத்தேவை என்னிடம் இருந்து இருப்பதில்லை. தேவைப்படும் சமயம் அனுப்புவதுண்டு. ஒரு பங்கை பிறருக்கு உதவ, குறிப்பாக கல்விக்காக உதவ பயன்படுத்துகிறேன் (இது தான் மிகச்சிறிய பங்கு - தனக்குப் போகத்தான் தானம்; போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து). இன்னொரு பகுதியை "travel" செய்ய சேமிக்கிறேன். எனக்கு நிறைய வேறு வேறு நாடுகளுக்குச் செல்ல மிகவும் பிடிக்கும். குறிப்பாக, புதிதாக ஒரு நாட்டிற்குச் சென்றால், அங்கு இருக்கும் சுற்றுலா தளங்களுக்குச் செல்வதை விட, அங்கிருக்கும் மனிதர்களை, கலாச்சாரத்தை கவனிப்பதும்,  உணவுகளை ருசிப்பதும் எனக்கு அலாதி பிரியம். எனக்குப் புதிய மனிதர்களை நண்பர்களாக்கிக் கொள்வது மிகவும் பிடிக்கும்.

கணவன் மனைவி!

(எனக்கு இன்னும் கல்யாணம் எல்லாம் ஆகல, பார்த்த அனுபவம் வச்சு சொல்றேன்)

வள்ளுவர், பாரதி சொன்னார்கள் என்று சொன்னேனே, இதை வைத்து என் அப்பாவிற்கும் எனக்கும் கருத்து வேறுபாடு!

"வள்ளுவரும் பாரதியும் சொன்ன காரணத்தால் மட்டுமே ஒன்று சரியாகி விடாது", என்பது என் வாதம். வள்ளுவர் தான் பின்வரும் இந்தக் குறளையும் எழுதி இருக்கிறார், ஆனால், எனக்கு இதில் உடன்பாடு இல்லை! எந்த ஒரு எழுத்தும், விதி முறையும், காலத்திற்கு ஏற்ற போல மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஏன்? நாம் எல்லோரும் மனிதர்கள் தான், தவறு செய்ய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன, இன்று நான் சொல்லும் ஒன்று சரி இல்லை என்பதை நான் நாளை உணரலாம்! சரி, விஷயத்திற்கு வருகிறேன். இதோ அந்தக் குறள்:

"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை"

இதன் பொருள், "வேறு தெய்வம் எதுவும் தொழாமல் தன் கணவனை மட்டும் தொழும் மனைவி சொன்னால், பெய் என்றதும் மழை பெய்யுமாம்".

எனக்கு இது போன்று இருக்கும் சில குறள்கள் சரி என்று சொல்லிக் கொண்டிருப்பதில் விருப்பம் இல்லை. அன்பில் கரைந்து ஒருவருக்கொருவர் சார்ந்து, சேர்ந்து, சமமாக இருத்தல் வேண்டும் கணவனும் மனைவியும். ஒரு சில நேரங்களில் ஒருவர் கீழ் இறங்கிச் செல்வதில் தவறில்லை. ஆனால், எப்போதுமே ஒருவர் மட்டுமே கீழிறங்கிச் செல்வது, என்னைப் பொறுத்த வரையில், தவறு! ஆனால், இந்தக் குறள் அதற்கு மாறாக இருப்பதாக எனக்குப்படுகிறது. ஆதலால் தான், காலத்திற்கு ஏற்றார் போல மாற்றம் இருக்க வேண்டும் என்கிறேன்.

அம்மா அப்பா :)

இந்த குறிப்பிட்ட குறள் எடுத்துக்காட்டை சொல்வதற்கு முன்பே, என் அப்பா நான் சொன்னதை மறுத்து, கோபித்துக் கொண்டார்! பிறகு அதை விளக்கும் சமயம் அமையவில்லை. இது போல நான் ஏதாவது  பேச, அது வம்பில் முடிய, இப்போது நாங்கள் பேசுவதே இல்லை! எனக்கு அப்பா அம்மாவோடு சண்டை போட்டாலும் பேசாமல் இருப்பதில் துளியும் விருப்பம் இல்லை. அதுவும் எங்கோ தூரத்தில், தனியாக வாழ்ந்து கொண்டு இருக்கையில், அவர் குரலைக் கேட்காமல் இருப்பது? கொடுமை! அது தான் கொடுமை! அம்மாவால் பேசாமல் எல்லாம் இருக்க முடியாது, தினமும் பேசிவிடுவார், பேசவில்லை என்றாலும் கோபித்துக் கொள்வார். அப்பா தான் பிடிவாதம். ஆயிரம் முறை கெஞ்சிவிட்டேன், பேச விருப்பம் இல்லை அவருக்கு. இரண்டு மாதம் ஆகிவிட்டது! அழாத நாள் இல்லை, அவரும் அழுதிருப்பார் கண்டிப்பாக. சரி இருக்கட்டும், புரியும் ஒரு நாள். (இந்தப் பதிவை அவர் படித்தால்: அப்பா தயவு செஞ்சு பேசுங்கப்பா")

இது போல என் கதை எல்லாம் (தற்பெருமை பேசி) ஒரு  புத்தகம் எழுத ஆசை எனக்கு. எழுதட்டுமா? நீங்க படிப்பிங்களா? 

கருத்துகள்

  1. பெருமையாக ஆச்சரியமாக இருக்கும்மா- திருப்பூரில் நீ கலந்து கொண்ட விழா இன்னமும் பசுமையாக நினைவில் உள்ளது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. எனக்கும் இப்போதான் போனது மாதிரி இருக்கு. ஆனா எவ்வளவு வருஷம் ஆச்சு!

    ரொம்ப நன்றி :)

    பதிலளிநீக்கு
  3. Madhan Mohan7/31/2018 4:46 PM

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. என் பெண் எனக்கு எழுதுவது போல் உள்ளது. கண்கள் கலங்க ஆரம்பிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப ரொம்ப நன்றி. மகளா நெனைக்கிறதெல்லாம் பாக்கியம்!

      நீக்கு
  5. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை very intresting ah இருக்கு, நானும் கோயம்புத்தூர் மாவட்டம் தான் பல்லடம்....
    நீங்க சொன்னிங்களே எல்லா நாட்டுக்கும் போகணும் கலாச்சார பார்க்கணும்னு, எனக்கு தான் சிறு வயதிலிருந்து இப்போ வரை கனவு, என்ன நீங்க படிச்சிருக்கிங்க, நான்12th fail, நானும் இதுபோல் முயற்சிப்பேன்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
      மெய்வருத்தக் கூலி தரும்.

      வாழ்த்துக்கள்!

      நீக்கு

  6. நெகிழ்ச்சியாக உள்ளது...... மனம்போல் அனைத்தும் நடக்கும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. அறிவியல் மதம். ஓ என் கடவுளே.

    ஒரு பெண் இப்படி சொல்லியதில் பேரானந்தம். எனக்கு எவரெல்லாம் இயற்கை மற்றும் அறிவியலின் மீது அதீத பற்று கொள்வாரோ அவர்தம் வழியை பின்பற்றி செல்வது பிடிக்கும்.

    இப்படி சில நண்பர்களை நான் இணையம் மூலமாகவே கண்டேன். பெரும்பாலும் ஆண்களே அவரில் பலர். முதன் முதலில் தாங்கள் ஒரு பெண்ணாக.

    நல்லது நண்பரே. உலகம் ஓர் ஆச்சர்யம். அதை ஒரு கை பார்த்துவிடுவதே சிறப்பு

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்