வியாழன், ஜூன் 30, 2016

கோணம்மா சம்முக வடிவு!

சமீபமாக படிப்பதற்காக ஹாங்காங் வந்திருக்கிறேன். ஆராய்ச்சிப் படிப்பு என்கிற காரணத்தினால் எப்படியும் ஒரு நான்கு ஆண்டுகள் இனி இங்கு தான் இருக்க வேண்டும். சென்ற முறை அமெரிக்கா சென்ற போதும் சரி (என்ன ஜப்பானுல கூப்டாக, அமெரிக்காவுல கூப்டாக... moment :P) இப்போது இங்கு வந்த போதும் சரி. என் அம்மா அப்பா சொன்ன அறிவுரைகள் சில:

1) நல்ல பிள்ளையா இருக்கணும்.
2) போறது படிக்கறதுக்கு, படிச்சோமா வந்தோமானு இருக்குணும்.
3) தெனமும் skype ல பேசிரணும்.
4) ஜாக்கிரதையா இருக்கணும், அந்த ஊரு பிள்ளைங்கள மாதிரி குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது!

இன்னும் பல அறிவுரைகள் இருந்தாலும், பெரும்பாலும் முக்கியமான அறிவுரைகள் இவை தான். என்னம்மா சென்னையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஊருக்குப் போனாலே சொல்வார், “என்ன நீ, கட்டப்பை (அதயே, styleஆ சொன்னா, big shopper :P) எல்லாம் கொண்டுட்டு வர்ற, நல்லா சென்னைல இருந்து வந்தா, நல்ல பை கொண்டு வர வேண்டாமா? ஊர்ல இருந்த மாதிரியே தான் இருக்க, ஒரு மாற்றமும் இல்ல!” என்பது போன்ற வசனங்களை.

Ginger, Guy, Kanmani :D Lab Friends
“கட்டப்பையும் பை தான, அதுல என்ன இருக்கு? ஆமா, உங்களுக்கு மாறுனாலும் குத்தம், மாறாம அப்படியே இருந்தாலும் குத்தம்!”, என்று நான் பதில் சொல்லிக் கொண்டிருப்பேன்.

என் அம்மா உடனே, “இல்ல, முடியக் கிடிய கொஞ்சம், straightening பண்ணி, அழகா மேக்கப் போட்டு வந்தா பாக்க நல்லா இருக்கும்ல, ஆனா அதுக்குன்னு குட்டப் பாவாடை எல்லாம் போடக் கூடாது!”

இப்படித் தான் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த போதும் சொன்னார். என் வாதம் -  ”நான் எப்படி வளர்ந்தேனோ, அப்படித் தான் இருக்கும் என் பழக்கம், எனக்கு முடியை straightening செய்யும் காசை சேர்த்து வைக்கலாம், அதுவும் இல்லாமல் கண்ட கழுதையெல்லாம் செய்தால் ஒரு வேள முடி கொட்டித் தீர்த்துவிட்டால்? (ஏற்கனவே கொட்டுது!) காசு குடுத்து மேக்கப் போடுவதற்கு நான் நான்கு வேளை நன்றாக சாப்பிட்டுவிடலாம். அத்தியாவசிய தேவை தவிர்த்து ஏன் அதிகம் செலவு செய்வானேன்?”

இப்போது, இங்கு வந்தும் இந்தியாவில் எப்படி இருந்தேனோ அப்படித் தான் இருக்கிறேன். சிறு மாற்றங்கள் இருக்கத் தான் செய்கின்றன, உணவு முறை மாறி இருக்கிறது - அதிகமாக இங்கு மாமிசம் தான் சாப்பிடுகிறார்கள். நான் இட்லி தோசை என்று கிடைக்காத சோகத்தில், wheat bread, corn flakes, பால், முட்டை, வாழைப் பழம், ஆப்பிள் என்று நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன் :P

வந்த முதல் நாள் அம்மாவிடம் skype இல் பேசினேன். அம்மா, “என்ன, நீ அங்க போயும் அதே மாதிரி தான் இருக்கற?” (இதைக் கேட்கும் போது, அவர் முகத்தில் ஒரு சந்தோசம் - நம்ம பொண்ணு எங்க போனாலும் கழுத அப்படியே தான் இருக்கும், என்று)

“அம்மா, பின்ன வேற நாட்டுக்கு வந்தா மூஞ்சி மாறியா போகும்?”

இங்கு யாரும் என்னை விசித்திரமாகப் பார்ப்பது போலத் தோன்றவில்லை எனக்கு (வரும் முன் அவ்வளவு பயம் எனக்கு, எங்கே எதுவும் கேலி செய்வார்களோ என்றெல்லாம்). இங்கு இருக்கும் மக்கள் அன்பானவர்களாகத் தான் தெரிகிறார்கள் இந்த ஒரு சில வார காலத்தில்.

”dzou / sen" - Good morning
"m / goi" - Thank you - இப்போதைக்கு இந்த இரண்டு மட்டும் தான் Cantonese இல் கற்றுக் கொண்டு இருக்கிறேன். கூடிய விரைவில் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.

இங்கு எல்லா இடங்களுக்கும் செல்ல நல்ல பேருந்து வசதியும், மெட்ரோ ரயில் வசதியும் உள்ளது. நம் ஊர் போல பேருந்தில் conductor "ticket ticket" என்று கொடுப்பதில்லை. பேருந்தின் உள்ளே நுழையும் போதே இருக்கும் machine இல் காசு போட்டு உள்ளே செல்லலாம். "Octopus" என்று இங்கு ஒரு card கிடைக்கிறது. இதை ATM card போல பயன்படுத்திக் கொள்ளலாம்.

Octopus card
பெரும்பாலும், இந்த card-ஐ பேருந்தில் பயணம் செய்யவும், மெட்ரோவில் செல்லவும் பயன்படுத்தலாம். ஐம்பது ஹாங்காங் டாலர்கள் இந்தக் கார்டை வாங்கும் போது டெபாசிட் செய்ய வேண்டும், மீண்டும் கார்டைக் கொடுத்தால், இந்தப் பணத்தை கொடுத்துவிடுவார்களாம். முதலில், நூறு ஹாங்காங் டாலர்கள் கொடுத்து பணம் ஏற்றிக் கொள்ளலாம் கார்டில். பேருந்து, மெட்ரோ தவிர்த்து, ஷாப்பிங் மால், பெரிய கடைகள் எல்லாவற்றிலும் இந்தக் கார்டை வைத்து பொருட்களும் வாங்கிக் கொள்ளலாம். இதை காசு கொடுத்து அதற்கென இருக்கும் இடங்களில் “topup" செய்தும் கொள்ளலாம். Online topup பற்றி எனக்குத் தெரியவில்லை, ஏனெனில் என்னிடம் இன்னும் இந்த ஊரில் bank account இல்லை.

மறந்தே போனேன் பாருங்களேன். நான் இங்கு தங்கி இருக்கும் இடம் ஊரைவிட்டு மிகவும் தூரத்தில் இருக்கிறது, ஊருக்குள் செல்ல வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் ஆகும். University of Hong Kong கினுடைய marine ஆராய்ச்சி கூடம் ஒன்று இங்கு இருக்கிறது. அங்கு தான் நான் அருகில் இருக்கும் தங்குமிடத்தில் இருக்கிறேன். கடை எதுவும் அருகில் கிடையாது. ஹாங்காங் - கடல் ஓரத்தில் இருக்கும் மலைகளில் தான் இருக்கிறது இந்த ஆராய்ச்சிக் கூடம். காற்றில் ஈரப்பதம் அதிகம் என்பதால், சகட்டு மேனிக்கு வேர்த்து ஊத்துகிறது. ஊருக்குள் செல்ல அதிக நேரம் ஆகிறது என்பதால், வாரம் ஒரு முறையோ அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறையோ சென்று மொத்தமாக வேண்டிய சமையல் பொருட்களை வாங்கி வந்துவிட வேண்டும்.

My Laboratory - Swire Institute of Marine Science, HKU
ஆனால், அழகான இடம் இது. கடலோரத்தில் மலை மேல், மிகவும் அற்புதமான இடம். இருப்பினும், இதே இடத்தில் பல வருடங்கள் வாழ்வது எல்லாம் சரி வருமா என்று தெரியவில்லை. நான் இங்கு ஒரு மூன்று நான்கு மாதங்கள் மட்டுமே இருப்பேன், பிறகு ஊருக்குள் இருக்கும் University main campus இல் இருக்கும் ஆய்வுக் கூடத்தில் தான் ஆராய்ச்சி எல்லாம்.

வந்த அன்றே, இங்கிருக்கும் ஆராய்ச்சி மாணவர்களோடு சேர்ந்து கொண்டு ஊருக்குள் சென்றேன். அதில் ஒருவர், என்னை ஏர்போட்டிற்கு அழைத்துச் செல்ல வந்த “Guy" (ஆளு பேரு தான்), பிறகு  Circle, Jorein என்று இரு பெண்கள். ஆமாங்க, ஆமா பேரே “guy", "circle" தான்.

“Fish balls", என்று ஒரு snack item வாங்கிக் கொடுத்தார்கள். Spicy வேண்டுமா என்று கேட்டார்கள், “ம்ம், ஆமாம்”, என்று வாங்கினேன். ஆனால் பாருங்கள் இந்த ஊரு “spicy" ஏ எனக்கு சப்பென்று தான் இருந்தது! ஐயஹோ! என் செய்வேன் இன்னும் நாலு வருஷத்துக்கு?

பிறகு சாப்பிட நிறைய பழங்கள், காய்கறிகள் என்று வாங்கி வந்தேன். நன்றாகப் பேசினார்கள் அனைவரும் என்னிடம். மாணவர்கள் எல்லோருக்கும் ஆங்கிலம் வருகிறது, ஆனால், கடைகளுக்கு எல்லாம் சென்றால் பாஷை தெரியாமல் கஷ்டம் தான். சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பெண் பில் போடும் முன் ஏதோ “கையா முய்யா” என்று கேட்டார். திறுதிறுவென விழித்துக் கொண்டே நின்றேன். பின்னர், “baeg, baegu" என்றார். பின்னர் தான் புரிந்தது, “bag" வேண்டுமா என்று கேட்கிறார் என்று.

எப்படியோ, ஓடிவிட்டது இரண்டு வாரங்கள். இந்த sunday - big wave beach என்ற பீச்சிற்குப் போகிறோம், வருகிறாயா?”, என்று கேட்டார்கள் உடன் தங்கியிருப்பவர்கள். சரி, அறையிலேயே இருந்து என்ன தான் செய்யப் போகிறோம், வெளியே சென்று பழகினால் தானே நாமாக தனியே பேருந்தில் செல்ல எல்லாம் பழக முடியும் என்று, “வருகிறேன்” என்று சொல்லி, உடன் சென்றேன்.

பீச், என்றால், நம்மூரில் கால் நனைத்து விளையாடிவிட்டு வருவோம், சிலர் குளிப்பார்கள், நான் அதிலும் சுத்தம், ஊரிலேயே உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பதோடு சரி.

இங்கு பார்த்தால், அதிர்ச்சி, அதிர்ச்சி, பேரதிர்ச்சி! எல்லாருமே, "bikini" போட்டு இருக்காங்க! நான் மட்டும் இழுத்துப் போர்த்தியது போல உடை அணிந்து கடற்கரையில் உட்கார்ந்து, “பே” என்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன். எல்லோரும், “லல்லல்லல்லலல்லா...” என்று உடைகளை தூக்கிப் போட்டுவிட்டு, "bikini" இல் குதித்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள். இதில், சில பெண்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி, என்னென்னவோ வித்தை எல்லாம் காட்டிக் கொண்டு இருந்தார்கள். ஒரு குடும்பம், ஒரு tent ஐ ஒரு மணி நேரமாக கஷ்டப்பட்டு போராடி கட்டிக் கொண்டு இருந்தார்கள். சிலர், பந்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள். சிலர் எதோ ஒரு தட்டைத் தூக்கி எறிந்து விளையாடினார்கள்.

நான் மட்டும், “ஐயய்யோ, தெரியாம வந்துட்டோமேடா”, என்று உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன். இதில் என்னுடன் வந்த பெண்களும், ஆண்களும் “beer" அருந்த, நான் “lemon juice" ஐ சப்பிக் கொண்டு இருந்தேன். ஆனால், இவர்கள் "beer" குடித்தாலும் இரண்டு tin தான் குடித்தார்கள், மயங்கி விழவும் இல்லை, ஆட்டம் போடவும் இல்லை, எப்போதும் போல் தான் இருந்தார்கள்.

இறுதியாக, ஒரு உணவகத்தில் சாப்பிடச் சென்றோம். நான் menu card இல் இருந்த படங்களை எல்லாம் பார்த்தேன், எது நம்மூர் சாப்பாடு மாதிரி இருக்கிறது என்று பார்த்து, ஒரு படத்தைக் காட்டி, “இது வேண்டும்”, என்றேன். அது “Thai Fried Rice" என்றார்கள். முட்டை மட்டும் போட்டு ஒரு fried rice கொண்டு வந்தார்கள்.

சரி சாப்பிடலாம் என்று பார்த்தால், ஒரு ”குச்சி”, இல்லை, இல்லை, இரண்டு குச்சிகள். அந்த இரண்டு குச்சிகளை வைத்துத் தான் சாப்பிட வேண்டுமாம். ”நமக்கு spoonஅ வச்சே ஒழுங்கா சாப்ட வராது, இதுல குச்சி வேறயா”, என்றிருந்தது எனக்கு. நினைத்துப் பாருங்கள், இரண்டு குச்சிகளால், சாதம் சாப்பிட்டால் ஒரு தடவயில் வாயில் எவ்வளவு வைக்க முடியும் என்று. “இரண்டு மூன்று பருக்கை தான் வரும்”. ஒருவேளை இப்படிச் சாப்பிடுவதால் தான் பெரும்பாலும் இங்கு எல்லோருமே ஒல்லியாக இருக்கிறார்களோ? எப்படியோ அந்தக் குச்சிகளை வைத்துப் போராடி சாப்பிட்டு முடித்தேன்.

அனுபவங்கள் தொடரும்...

ஆமா, தலைப்பு என்ன கோணம்மானு கேக்கறிங்களா? எங்கப்பா ஊருல ரெண்டு பிள்ளைங்க இருந்தாங்களாம், கோணம்மா சம்முக வடிவுனு, ரெண்டு பேரும் தல சீவாம, செய்யாம, எனக்கென்னனு இருப்பாங்களாம்; நான் குளிக்காம, தல சீவாம, சோம்பேரியா வீட்ல சுத்திட்டு இருக்கப்போ, எங்கப்பா என்னப் பாத்து, “கோணம்மா சம்முக வடிவு மாதிரி இருக்க”னு சொல்வாங்க. இப்போ இங்க வந்தும், ஒன்னும் மாறல, கோணம்மா சம்முக வடிவு மாதிரி தான் இருக்கேன் :P  (ஹலோ, அதுக்குனு குளிக்காம எல்லாம் இல்ல, மாறலனு சொல்ல வரேன், யாரு கண்டா, மாறுனாலும், மாறலாம்?!!)

வியாழன், பிப்ரவரி 04, 2016

முதல் நாள் அன்று!


[ சின்ன சின்ன ஆசை பதிவின் தொடர்ச்சி ]

நான் இருந்த அப்பார்ட்மெண்ட்
வீடு மிகவும் பெரியது! பொதுவாகப் பார்த்தால், அவ்வளவு ஒன்றும் பெரியது இல்லை, ஆனால், நான் சென்னையில் இருந்த ஒரே ஒரு புறா கூண்டு ஹாஸ்டல் அறையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மிக மிக மிகப் பெரியது! உள்ளே நுழைந்ததும், ஏதோ இங்லிஷ் பேய் படத்தில் வரும் வீட்டில் நுழைவது போலவே இருந்தது! ”அச்சச்சோ...! இந்த வீட்ல நான் தனியா இருக்கனுமா? ரெண்டு மாசமா?” 

பெட்டி படுக்கையை எல்லாம் வைத்துவிட்டு, பொருட்களை எல்லாம் கொஞ்சம் அடுக்கி வைத்தேன். நல்ல, பசி, ஒரே ஒரு வாழைப் பழம் மட்டும் சாப்பிட்டேன். நீண்ட பயணம், கிட்டத்தட்ட இந்தியாவில் இருந்து கிளம்பி இரண்டு நாட்கள் ஆகி இருக்கும்! அமெரிக்காவில் இரவு ஒரு மணி, ஆனால் எனக்கு தூக்கமே வரவில்லை, இந்தியாவில் பகல் நேரம் ஆச்சே அது! ”ஜெட் லேக்” “ஜெட் லேக்” என்றார்களே அது இது தானா? தூக்கம் வராமல் உருண்டு புரண்டு கொண்டிருந்தேன். திடீரென, என் வீட்டிற்குள் யாரோ நடப்பது போல இருந்தது! தனியாக நான் மட்டும் தானே இருக்கிறேன்! எப்படி? யார்? பிரம்மையாக இருக்குமோ? இருக்கும் இருக்கும்!

மீண்டும் யாரோ என் வீட்டிற்குள் நடப்பது போலவே இருந்தது! இது என்னடா? உண்மையிலேயே யாரோ இருக்கிறார்களா? பயம்! மெதுவாக பூனை போல எழுந்து, கையில் மொபைலை வைத்துக் கொண்டே வீட்டுக்குள் தேடத் தொடங்கினேன்... (திருடன் யாராவது இருந்தால், உடனே உதவிக்கு அழைக்கலாமே மொபைலில் யாரையாவது :P ) யாருமே இல்லை, பெரிய பெரிய கப்போர்ட், ஒரு ஆள் ஒழியும் அளவுக்கு! எதுக்குய்யா இவ்வளவு பெருசு பெருசா...? ஏற்கனவே பார்த்த இங்லிஷ் படம் எல்லாம் நினைவுக்கு வந்தது, கப்போர்டுக்குள் நுழைந்து தானே நிறைய படங்களில் வேறு எங்கோ மாய உலகத்திற்கு எல்லாம் போவார்கள்! அய்யயோ..., ஒரே பயம்!

கட்டிலுக்கு அடியில், பாத்ரூமில் என்று எல்லாப் பக்கமும் தேடுதல் வேட்டையை முடித்த பிறகு, கதவை பத்து முறை இழுத்துப் பார்த்துவிட்டு, என் படுக்கை அறையின் கதவை மூடி, படங்களில் எல்லாம் வருவது போல கதவின் முன்னால், chair, table, பெட்டி என்று எல்லாவற்றையும் இழுத்து வைத்துவிட்டு, அப்பாடா என்று வந்து படுத்தால், மீண்டும் யாரோ நடக்கிறார்கள்! இது என்னடா...!? பிறகு தான் புரிந்தது, வீடு மர வீடு என்று, அதுவும் அப்பார்ட்மெண்ட் என்பதால், பக்கத்து வீட்டில் யாரோ நடந்தது தான் அப்படி இருந்திருக்கிறது! ஆனாலும், பயம், தூக்கமே இல்லை!

எங்கம்மா சொல்வார், இல்லை, திட்டுவார், “மூஞ்சீல வெயில் அடிச்சாக் கூட எந்திக்க மாட்டிகிறியே...” என்று. ஆனால், இன்று, லேசாக எதோ வெளிச்சம் வந்தே விழித்துக் கொண்டேன்! காலையில் 5.30 மணி! அடக் கடவுளே, தூங்கினதே, 2 மணிக்கு மேல, அதுக்குள்ள முழிப்பு வந்துடுச்சே!

சரி என்னென்னவோ செய்து பார்த்தேன், தூக்கமே வரவில்லை! வெளியே செல்லவும் பயம்! வெளியில் போனால், என்ன உடை அணிந்து செல்வது என்று யோசிக்கத் தொடங்கினேன். இந்த நாட்டுக்காரர்கள் நான் போடும் சொக்காவைப் பார்த்து சிரித்துவிட்டால்? என்னெனவோ யோசித்து யோசித்து, ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தே, நேரம் எல்லாம் கழிந்தது! மணி 7!

சரி, குளிப்போம்! சொல்ல மறந்துவிட்டேனே, என் பாத்ரூமில் ”பாத் டப்” எல்லாம் இருந்தது! ஆனால், அதில் படுத்துக் கொண்டு குளிக்க எல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை. ஷவரில் தான் குளித்தேன். இந்த ஷவரில், தண்ணீரை எப்படி சரியான சூட்டில் வர வைப்பது என்ற ஆராய்ச்சியிலேயே பாதி நேரம் போனது! ஒன்னு சூடா வருது, இல்ல, சில்லுனு வருது...! ஒரு வழியாக அந்த ஆராய்ச்சியை எல்லாம் முடித்து, குளித்து விட்டு வந்து கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால், வாயைச் சுற்றி அனுமான் மாதிரி வெள்ளையாக இருக்கிறது! அடக் கடவுளே! நல்லா தானே குளிச்சோம்? அங்கு இருந்த குளிருக்கு அப்படி வந்தது போல, இது தான் பனிப்பத்தோ? பத்தோ, ஒன்பதோ, போகட்டும் என்று வைத்திருந்த மாய்ஸ்டரைசரைத் தடவினேன். அப்பாடா, சரியாகிவிட்டது முகம்.

Bogue Street
ஒரு வெள்ளை நிற, குர்த்தா மாதிரியும் இல்லாத, டி ஷர்ட் மாதிரியும் இல்லாத ஒரு டாப்-உம் ஜீன்ஸ்-உம் அணிந்து கொண்டு கிளம்பினேன், கையில் map, mobile, குடை, பின்னால் ஒரு லேப்டாப் பை, என்று எல்லாம் எடுத்துக் கொண்டு, யுனிவர்சிட்டி இருக்கும் பக்கம் நோக்கி. Cedar Street, River Street, Bogue Street, North Shaw lane, south Shaw lane – என்று எல்லா சாலைகளின் பெயரையும் பார்த்துக் கொண்டு, எந்த சாலையில் போவது என்று யோசித்துக் கொண்டு இருந்தேன். போகிற வழியிலேயே ஒரு ஆறு (Red Cedar River)! அடடா! என் வீட்டுக்குப் பக்கதுல ஒரு ஆறா! அவ்வளவு சந்தோசம், அதுவும் சுத்தமான ஆறாக இருந்தது, ஆற்றங் கரையில் வாத்து எல்லாம் மேய்ந்து கொண்டிருந்தது. அழகான ஊர் அது, East Lansing.


அழகான ஊர் மட்டும் அல்ல, அமைதியான ஊர்! ஊரில் முக்கால் வாசி பேர், அங்கிருக்கும் Michigan State University – இல் வேலை பார்ப்பவர்களாகவோ, படிப்பவர்களாகவோ தான் இருக்கிறார்கள். மக்கள் கூட்டம் இல்லாத ஊர், குறிப்பாக அதிக மக்கள் தொகை இருக்கும் இந்தியாவில் இருந்து போகிறவர்களுக்கு, நிச்சயம் அது மயான அமைதியாக இருக்கும் (ஆம், மிகவும் பயமாகத் தான் இருந்தது எனக்கு முதலில்). சாலையில் நடந்து செல்லும் போது, பெரும்பாலும் நான் தனியாகத் தான் நடந்து சென்று கொண்டிருப்பேன். ஊரிலேயே, நான் மட்டும் தனியாக இருப்பது போல் எல்லாம் உணர்ந்த தருணங்களும் உண்டு!


Red Cedar River
குறிப்பாக இன்னொரு விசயம், இந்த யுனிவர்சிட்டிக்கு compound wall- ஏ இல்ல!! இங்கு நம்ம ஊரில் எல்லாம், பெரீஈஈஇய காம்பவுண்டுக்குள்ள தான இருக்கும்! இன்னொரு வேடிக்கையான காரியம் ஒன்று செய்தேன் முதல் நாள், ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருந்த போது. சாலையைக் கடப்பது என்றாலே, எனக்கு பொதுவாக கொஞ்சம் பயம் தான், ஆனால், இந்த ஊரில் தான் சாலையில் கூட்டமே இல்லையே? பிறகு என்ன இருக்கிறது பயப்பட?! ஆனாலும், பயந்தேன். சாலையைக் கடக்க, சிகப்பு விளக்கு எரிந்தது, சரி என்று நின்றேன் (ரோட்ல என்னத் தவர யாருமே இல்லனாலும், வெளிநாட்ல போய், போலீஸ் புடிச்சிட்டா?! எதுக்கும் வம்பு! வண்டியே வரலேனாலும், ரோட்ல ஆளே இல்லனாலும் நிப்போம்!) தூரமாக ஒரே ஒரு கார் வந்தது, அதுவும் வந்து, நின்றுவிட்டது! (இது என்னடா கொடும, நாம நிக்கறோம், அந்த காரும் நிக்குது?) சரி, என்று ஒரு கட்டத்தில் நான் சாலையைக் கடக்க ஆரம்பித்தேன், சிகப்பு விளக்கு எரிந்த போதே. கேட்டதே ஒரு சத்தம், யாரோ ஒருவர், ஆங்கிலத்தில் எதோ சொல்கிறார், மைக் வைத்துக் கொண்டு, சத்தமாக! ஆள் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை, சத்தம் மட்டும் வருகிறது!

”போச்சு, போச்சு, போலிஸ் தான் போல”, பயத்தில் இரண்டு அடி எடுத்து வைத்து நடந்தவள், மீண்டும் பின் நோக்கி வந்து, இருந்த இடத்திலேயே சாலையைக் கடக்காமல், நின்று கொண்டு, அந்தக் கார் காரரைப் பார்த்தேன். அவர் நகராமல் அதே இடத்தில் தான் இருந்தார், காத்துக் கொண்டு. அவரைப் பார்த்தேன், அவர் சாலையைக் கடக்குமாறு ”சைகை” செய்தார், நடக்கும் சிக்னலும் மாறி இருந்தது பச்சையாக, ஆனால், யாரோ ஆங்கிலத்தில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்த அந்த சத்தம் மட்டும் நிற்கவே இல்லை. நான், சரி, அது யாராகவும் இருக்கட்டும் என்று, சாலையைக் கடந்து, ஒரே ஓட்டமாக ஓடிவிட்டேன். இருந்த பயத்திலும், பதட்டத்திலும், அந்தக் குரல் என்ன சொன்னது என்று கூடக் கேட்கவில்லை ஒழுங்காக! ஒருவழியாக தேடி அழைந்து, இறுதியாக என் Professor இருந்த lab-ஐ கண்டுபிடித்துச் சென்று சேர்த்தேன். நல்ல மனிதர் அவர், அருமையாக புன்னகையோடு வரவேற்று, என்ன மாதிரி project என்று விளக்கினார். திரும்பி வரும்போது பயம் இல்லை, நிதானமாக இருந்தேன், அப்போது தான் புரிந்தது, சிக்னலில் விளக்கு பச்சையாக மாறியதும், அந்த சாலையின் பெயரைச் சொல்லி, “walk time, walk time”, என்று அந்த சிக்னல் போஸ்ட்டில் இருந்து பதிந்து வைத்திருந்த சத்தம் கேட்கிறது என்று.

எனக்கே காலையில் நான் அடித்த கூத்தை நினைத்து சிரிப்பு சிரிப்பாக வந்தது. இதுக்குப் போயா பயந்தோம்? அந்தக் கார்காரர் என்ன நினைத்திருப்பார்?


Kanmani's Journey to the Far Side of the World :)
அன்று முழுவதும் சாப்பிடாமல் இருந்தேன், எங்கே சென்று, தனியாக எப்படி சாப்பிடுவது என்று யோசித்துக் கொண்டு. எப்படியோ, இறுதியாக என் வீட்டிற்கு அருகில் இருந்த McDonald’s இல் ஒரு burger, roll, என்று சாப்பிட்டு, அம்மாவோடு அலைபேசியில் பேசி, ஒரு வழியாக முடித்தேன் அந்த நாளை. அம்மா அப்பா என எல்லாரையும் விட்டு, தனியாக எப்படியோ ஒரு பயணம், நீண்ட தூரம், கடல், மலை, காடு தாண்டி, பறந்து... என்று நினைத்து, எனக்கே, ஒரு சபாஷ் சொல்லிக் கொண்டேன் பெருமையாகத் தூங்குவதற்கு முன், புன்னகையோடு!

அடுத்த பதிவில், இன்னும் பிற அனுபவங்கள் பற்றி எழுதுகிறேன் :) 

புதன், ஜூலை 08, 2015

சின்ன சின்ன ஆசை! சிறகடிக்கும் ஆசை....!

எல்லோருக்கும் இருக்கும் ஆசை தான். அப்படிச் சொன்னால் சரியாக இருக்காது. எல்லோருக்கும் இருக்குமா இந்த ஆசை என்று தெரியவில்லை, ஆனால், நிச்சயமாக பெரும்பாலானோருக்கு இருக்கும் என்று நம்புகிறேன் (சரி, யாருக்கு இருக்குதோ இல்லையோ, எனக்கு இருக்குது, இருந்தது!).

எவ்வளவு ஆசையோ, அவ்வளவு பயம்! ”என்னதான் ஆசை!” என்கிறீர்களா? இந்நேரம் தலைப்பை வைத்தே புரிந்து இருக்கும், இருந்தாலும் சொல்வது அடியேனின் கடமை! விமானத்தில் பறப்பது! ம்ம், எல்லோருக்குமே இருக்கும் ஆசை தானே! அடிக்கடி பறப்பவர்களுக்குப் பறந்தவர்களுக்கு இருக்காது, என்னைப் போல பறக்க வாய்ப்பே (சிலருக்குப் பணமும்) இருந்திராதவர்களுக்கு இருக்கும்! நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள், ”பணமா இல்ல, மதுரையில இருந்து சென்னைக்கு flightல போலாமே...?” என்று, ”வாஸ்தவம் தான், அப்பாகிட்ட கேட்டா கூட்டிட்டுப் போவாங்க தான், பணம் தருவாங்க தான்...” ஆனால், ட்ரெயின், பஸ் என்று 400 ரூபாய்க்குப் போகும் இடத்தில் பல ஆயிரம் கொடுத்துப் போக மனம் ஒருபோதும் வந்ததில்லை, ஒவ்வொரு பைசாவும் அப்பா சம்பாத்தியம் ஆயிற்றே! (மேலும், சாப்பாடு தவிர்த்து வேறு எதற்கும் அதிகம் செலவு செய்யப் பிடிக்காது எனக்கு! சாப்பாட்டு ராமி :P சாப்பாட்டுக்கு மட்டும் கணக்கு வழக்கு கிடையாது! Flightல் செல்லும் பல ஆயிரத்திற்கு பல நாட்கள் சாப்பிடலாமே என்று கணக்குப் போடும் ஆள், நான்)

இன்னும் வேலைக்குப் போகவில்லை, சம்பாத்தியம் இல்லை! ஆனாலும், நானே சம்பாதித்துப் பறக்க வேண்டும்! எப்படியோ, ஒரு வழியாக அமெரிக்காவில், மிசிகனில் (Michigan State) ஒரு பல்கலைக்கழகத்தில் (Michigan State University, East Lansing) இரண்டு மாதம் இன்டேர்ன் (Intern) ஆக இருக்கும் வாய்ப்பைப் பெற்றுவிட்டேன். (இந்த fellowship பற்றி அறிய, ”இங்கே” செல்லவும்!) பறக்கும் செலவில் இருந்து எல்லாம் அவர்களே கொடுத்துவிடுவார்கள் (ஆஹா, வேற என்னய்யா வேணும்). அடுத்து இப்போது அமெரிக்காவில் நான் போகும் இடத்தில் ஜூன், ஜூலை, ஆகசஸ்ட் மாதங்களில் வெதர் (weather) எப்படி இருக்கும் என்று ஆராயத் தொடங்கினேன் (ஆராய-னு சொன்னதும் பெரிய ஆராய்ச்சி போலனு நெனைக்க வேணாம்! எல்லாம் Google தான் :P)

அப்படியே, எப்படி மக்கள், இடம், சுற்றுலா செல்ல ஏற்ற இடங்கள் என்று பலவாறு பல பொழுதுகள் என் ஆராய்ச்சி தொடர்ந்தது. பிறகு விசா (VISA) வாங்கும் பணியைத் தொடங்கினேன். இணையத்தில் எளிதில் முடிந்தது அப்ளிகேசன் வேலைகள் எல்லாம். பிறகு இரண்டு நாட்கள் நேரில் செல்ல வேண்டி இருந்தது - ஒரு நாள் போட்டோ, கைரேகை எடுக்க; இன்னொரு நாள் இன்டெர்வியூ. இன்டெர்வியூ என்றால் படிப்பு சம்பந்தமாக பயங்கரமான கேள்வி எல்லாம் கேட்கமாட்டார்கள். ”ஏன் போகிறோம், எதற்குப் போகிறோம்”?, போன்ற எளிய கேள்விகள் தான். (மொதல்ல இண்டெர்வியூனு சொன்னதும் நானு அப்படியே ஷாக் ஆகிட்டேன் :P)

விசா கிடைத்தாயிற்று, அடுத்து? பெட்டி கெட்டும் வேலை! என் அப்பா கேளியாக, ”மஞ்சப்பை கொண்டு போ... இல்லனா இரும்புப் பெட்டி...”, என்றார். இப்படி கிண்டல் கேளிக்கு நடுவே ”என்ன எடுத்துச் செல்லலாம், என்ன கூடாது’, என்ற கூகுள் ஆராய்ச்சி தொடர்ந்தது...

Lufthansa Economy
டிக்கெட் புக் செய்து அனுப்பி இருந்தார்கள். Lufthansa விமானத்தில் டிக்கெட், சரி அந்த விமானத்தைப் பார்ப்போம் என்று அந்த ஏர்லைனின் வெப்சைட்டிற்குச் சென்றேன். என் நேரம், அன்று பார்த்து அந்த ஏர்லைனின் ஏதோ விமானம் விபத்துக்குள்ளாகி இருக்க, அதைப் போட்டு இருந்தார்கள் அந்த வெப்சைட்டிற்குள் நுழையும் முன்பே ”கருப்புப் பக்கம்” ஒன்றில்! சொல்லவும் வேண்டுமா?? ஏற்கனவே பெரிய பயந்தாங்கொளி, இது இன்னும் பீதியைக் கிளப்பியது! ஒரு வேளை நாம போறப்பவும் வெடிச்சிட்டா?? :-O

எப்படியோ, சமாதானம் ஆகி, பொட்டி கட்டும் வேலையைத் தொடர்ந்தேன். எனக்கு மொத்தம் 60 கிலோ பொருட்கள் எடுத்துச் செல்லலாம் என்று இருந்தது டிக்கெட்டில், ’கொஞ்சமாக பேக்(pack) செய்வது நலம்’, என்று முடிவு செய்தேன்.

உடை! என்ன உடை அணிவது? உடன் படிக்கும் நண்பர்கள் பலரும் ”மினி ஸ்கர்ட், ஷார்ட்ஸ்,” என்று ஐடியா கொடுக்க, என்னால் அதை கற்பனை கூட செய்ய முடியவில்லை! அம்மா என்னடா என்றால், ”சுடிதார் கொண்டு போ... சேலை கொண்டு போ...” என்றார். நான் இரண்டுக்கும் நடுவாக, ஜீன்ஸ் பேண்ட்டும், டாப்ஸ்களும் எடுத்துச் செல்லலாம் என்று முடிவு செய்தேன். ஏற்கனவே கொஞ்சம் டாப்ஸ் இருந்தது என்னிடம், ஒரு நான்கு ஐந்து வாங்கினேன் புதிதாக. குளிருக்கு ஏற்றார் போல இருக்கும் உடை, ஷூ என்று எல்லாம் தயார்.

குறிப்பாக இன்னொரு மறக்கக் கூடாத விஷயம், ப்ளக் பாயிண்ட் அடாப்டர் (plug point adapter), இந்தியாவில் இருக்கும் சார்ஜர்கள் அமெரிக்காவில் சேராது, அதற்கு சிறிதாக ஒரு அடாப்டர் கிடைக்கும், அதைப் பொருத்தி நம் சார்ஜரையே பயன்படுத்தலாம். இதை நான் வாங்க வேண்டும், வாங்க வேண்டும் என்று கடைசி நேரம் வரை வாங்காமல், மறந்தே போய்விட்டேன், கடைசியில் இங்கு வந்திருந்த இன்னொரு இந்திய நண்பரிடம் வாங்கினேன், அது வரை லேப்டாப்பில் டேட்டா கேபிளை வைத்து சார்ஜ் ஏற்றிக் கொண்டு இருந்தேன்.

எல்லாம் தயார், அத்தை – மாமா, சித்தி – சித்தப்பா, பெரியம்மா - பெரியப்பா என்று எல்லா சொந்தங்களுக்கும் நேரிலும் அலைபேசியிலும் சொல்லிவிட்டு, கிளம்பினேன். இரவு இரண்டு மணிக்கு எனக்கு விமானம். பயம், சந்தோஷம், எல்லாம் கலந்த ஒரு உணர்வு. விமான நிலையம் வாசல் வரை தான் அம்மா அப்பாவை அனுமதித்தார்கள், அவர்களுக்கு ஒழுங்காக “டாட்டா” கூட போடவில்லை, பயத்தில் அங்கும் இங்கும் திரும்பிக் கூடப் பார்க்காமல் வந்துவிட்டேன். அம்மா வருத்தப்பட்டார், ஒழுங்கா டாட்டா கூட சொல்லவில்லை என்று. அவருக்கு ஏதோ தைரியமாக எஞ்சாய் செய்து கொண்டு போவது போலத் தெரிந்ததாம் என்னைப் பார்க்க, ”நீ இப்போவே இப்படினா, கல்யாணம் எல்லாம் செஞ்சு போனா சுத்தமா என்ன மறந்துடுவ போல...” என்று சோகமாகச் சொன்னார். அந்நேரம் எனக்கு இருந்த பயம், எப்படிப் போக வேண்டும் என்று தெரியாது, யாருக்குப் புரியும் சொன்னால் அந்த விநோத மனநிலை.

ஆனால், விமானத்தில் ஏறி கொஞ்ச நேரத்திலேயே எல்லாம் சரியாகிவிட்டது. சமாளித்துவிடலாம் என்று நம்பிக்கை வந்துவிட்டது. ”டேக்காஃப்” (takeoff) ஆகும் போது பயமாக இருக்குமோ என்று நினைத்தேன், சிலர் காது அடைக்கும் என்றெல்லாம் சொல்லி இருந்தார்கள், ஆனால், பெரிதாக எதுவும் செய்யவில்லை, காது மட்டும் லேசாக அடைத்தது போலத் தோன்றியது சில நேரம்.

விமானம் நன்றாக இருந்தது. ஜன்னல் சீட் தான் கிடைக்காமல் போனது... நடுவில் உட்கார்ந்து கொண்டு வேடிக்கையே பார்க்க முடியவில்லை. முன் இருக்கையில் ஸ்க்ரீன் இருந்தது, அதில் நிறைய படம் பார்த்தேன் மாற்றி மாற்றி, சாப்பிட வெஜ் wrap கொடுத்தார்கள், நன்றாக இருந்தது, சாப்பிட்டேன். டாய்லெட் மிகவும் சின்னதாக இருந்தது (பின்ன, பெருசாவா வைக்க முடியும்..?) “PUSH” என்று எழுதி இருந்தது, தள்ளினால் திறந்தது, உள்ளே தாழ் இருந்தது, அதை மூடினால் தான் லைட்(light) ஆன்(on) ஆனது, ஒரு அம்மா டாய்லெட் கதவை மூட மறந்துவிட்டார் போல, அடுத்து போனவர் திறந்துவிட்டார்! நல்ல வேலை நான் முதலிலேயே ஒழுங்காக ஆராய்ச்சி செய்து மூடிவிட்டேன்! (முதல் முறை போகும் போது எப்படி மூடுவது, திறப்பது என்று தெரியாமல் அந்த அம்மா போல ஆக நிறைய வாய்ப்பு இருக்கிறது, ஆதலால், கவனம்).

என் நண்பர்கள் எல்லாம் கேலியாக முன்பே சொன்னார்கள், டிஷ்யூ பேப்பர் எல்லாம் உபயோகித்துப் பழகிக் கொள் என்று, அர்த்தம் புரிந்தது. கஷ்டம் தான் இந்த டிஷ்யூ பேப்பர் உபயோகிப்பது. என் அம்மா சொன்னார், “வெறும் பேப்பர மட்டும் யூஸ் பண்ணி எதாவது இன்ஃபெக்‌ஷன்(infection) வந்துடாம... ஒழுங்கா தண்ணி யூஸ் பண்ணு...”, என்று. ஃப்லைட்டில் நினைத்தாலும் தண்ணீர் எல்லாம் யூஸ் பண்ண முடியாது!

விமானத்தில் எதோ ”டாக்ஸி டாக்ஸி” (taxi) என்று சொன்னார்கள், "டாக்ஸி ஆகும் போதும், சீட் பெல்ட் போட வேண்டும்" என்றெல்லாம், ”என்னடா அது டாக்ஸி, ஒருவேள எறங்குனதுக்கு அப்பறமா டாக்ஸில கூப்டு போவாங்களோ...?” என்று பார்த்தால், விமானம் தரையில் ஓடுவதைத் தான் அப்படிச் சொல்வார்கள் போல! நமக்கு எங்க அவ்வளவு அறிவு, இப்போது தான் தெரிந்து கொண்டேன்.

சென்னையில் கிளம்பிய நான், அடுத்து ஃப்ரான்க்ஃபர்ட்டில் (Frankfurt) (இது ஜெர்மனியில் இருக்கிறது என்று டிக்கெட் வந்த பிறகு தான் கண்டுபிடித்தேன்) வந்து சேர்ந்தேன். இங்கிருந்து, சிகாகோவிற்கு (chicago) அடுத்த விமானம். விமான நிலையம் அத்தனை பெரிது, ஒரு டெர்மினலில்(terminal) இருந்து இன்னொன்றிற்குச் செல்லவே ரயில் இருந்தது. அடுத்த விமானம் ஏற ரயிலில் போக வேண்டும் என்று சொன்னார்கள் விசாரித்த போது. ”என்னது??? நான் ஃப்லைட் ஏற கேட்டா, இவங்க ட்ரெயின் ஏற வழி சொல்றாங்க...”, என்று முதலில் கொஞ்சம் முழித்தேன், பிறகு சரி என்று அவர்கள் காட்டிய திசையில் ரயிலைத் தேடிப் புறப்பட்டேன். ரயில் ஏறும் இடத்தைக் கண்டுவிட்டேன், “அப்பாடா, பாத மாறிப் போகாம சரியா வந்தாச்சு...”, என்று நிம்மதியாக இருந்தது.

விமானத்தில் ஒரே குளிர், குடுத்து இருந்த போர்வையைப் போத்திய பின்னும் குளிர், எப்படியோ சமாளித்தேன்! ஒரு வழியாக சிக்காகோவிற்கு பத்திரமாக எந்த சேதாரமும் இல்லாமல் வந்து சேர்ந்தேன். அடுத்த இரண்டு மணி நேரத்தில் எனக்கு அடுத்த விமானம். வந்து இறங்கியதும் நேராக கஸ்டம்ஸிற்கு (Customs) அனுப்பினார்கள். அங்கே சென்றால் அதிர்ச்சி. ஏற்கனவே என்னுடைய அம்மா கொடுத்துவிட்ட “பிரியாணி மசாலா, ஃப்ரைட் ரைஸ் மசாலா, பாஸ்மதி அரிசி...”, எல்லாவற்றையும் தூக்கிக் குப்பையில் போட்டுவிடுவார்களோ என்று பயம், ஆனால், இங்கு கஸ்டம்ஸிற்கு வந்தவுடன் இன்னொரு பெரிரிரி....ய பயம். எனக்கு முன்னால் ஒரு இருநூறு பேர் நின்றார்கள்!!!. அடுத்த ஃப்லைட் ஏற நடுவில் இரண்டு மணி நேரம் கூட முழுமையாக இல்லை! எப்படிப் பிடிப்பேன் அடுத்த ஃப்லைட்டை? வரிசையில் போய் நின்றேன். இருநூறு பேரையும் அடுத்து என்னை அனுமதித்தார்கள். மறுபடி லக்கேஜை எடுத்து அடுத்த ஃப்லைட்டிற்கு செக் இன் செய்துவிட்டு வெளியே வந்த போது ஒரே சந்தோஷம், “ஹைய்ய்யா, மசாலா பொடி பாஸ்மதி அரிசி எல்லாம் தப்பிச்சிடுச்சு... குப்பைல போடல...”. என்னிடம் கேட்டார்கள் சாப்பிடும் பொருள் எதும் பெட்டியில் இருக்கிறதா என்று, “ நான் மசாலா எல்லாம் இருக்கு...”, என்று கொஞ்சம் தயங்கியவாறு சொன்னேன், “நல்ல மனுசன், அது பரவாயில்ல”னு சொல்லி அனுப்பிட்டாறு.

ஆனால், அந்த சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. எனது ஃப்லைட் போர்டிங் டைம் 5:12 மணி மாலை, ஆனால், நான் ஐந்து மணிக்கு தான் லக்கேஜ் செக்கின் முடித்து அடுத்து டெர்மினலுக்குச் செல்ல வழி தேடிக் கொண்டு இருந்தேன். ஒரு வழியாக கண்டுபிடித்துப் போனால், அடுத்து ஐந்து நிமிடம் கழித்து தான் அடுத்த ரயில் என்றார்கள், எனக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டது, இந்த ஃப்லைட்டை விடப் போகிறேன் என்று.

அந்த காத்திருக்கும் ஐந்து நிமிடத்தில் ஊரில் இருந்தே வாங்கி வந்த மேட்ட்ரிக்ஸ் ஸிம் கார்ட் (Matrix Sim card) வேலை செய்கிறதா என்று பார்த்தேன். வேலை செய்தது, அப்பாவிற்கு கால் செய்து வந்துவிட்டதாக சொன்னேன். ஃப்லைட்டை விடப்போகும் செய்தியைச் சொல்லவில்லை. கொஞ்சம் நம்பிக்கை இருந்தது, எப்படியாவது ஓடிச் சென்றாவது பிடித்துவிடலாம் என்று (நாங்களாம் யாரு).

ரயில் ஏறி டெர்மினலுக்கு வந்தால், அங்கு இன்னொரு இருநூறு பேர்...! இந்த இருநூறு பேரையும் செக் செய்து உள்ளே அனுமதிப்பார்கள் போல, எப்படியும் குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். அவ்வளவு தான், முடிந்தது கதை!

ஏற்கனவே 5.20 ஆகி இருந்தது, எட்டு நிமிடம் லேட்! இருந்தாலும் முயலுவோமே என்று ஓடினேன். கூட்டத்தில் எல்லோரிடமும் எனக்கு நேரம் ஆச்சு ப்ளீஸ் வழி விடுங்க என்று டிக்கெட்டைக் காட்டி கேட்டு கேட்டு வரிசையில் முன்னே சென்றுவிட்டேன். எல்லோருமே வழி விட்டார்கள், ஒரே ஒருத்தன் மட்டும் முறைத்துக் கொண்டு விடவில்லை, போகிறான் என்று அவனுக்குப் பின்னால் சென்றேன். அவசரத்தில் பேண்ட் பாக்கெட்டில் இருந்த சாவியை எடுக்க மறந்துபோனேன். ஸ்கேனர் அதைக் காட்ட, ”என்ன பாக்கெட்டில்?” என்று வேற ஒரு தரம் செக்கிங். கடைசியில் எல்லாம் முடிந்தது ஏறிவிடலாம் என்று பார்த்தால் இன்னும் ஒரு கால் மணி நேரம் உள்ளே நடந்து சென்றால் தான் என் கேட்(gate) வரும் போல, ஓடினேன், ஓடினேன், கேட்டின் எல்லை வரை ஓடினேன், அங்கே கேட் மூடப்பட்டு இருந்தால், மீண்டும் திரும்பிவிட்டேன் :P போர்டிங் முடிந்துவிட்டது என்றார்கள், அடுத்த ஃப்லைட்டில் போக முடியுமா என்று கேட்டேன், முடியும் என்று அடுத்த ஃப்லைட்டில் பாஸ் கொடுக்க, அடுத்த ஃப்லைட் எப்போ என்று பார்த்தால் இரவு ஒன்பது மணிக்கு. என்னைக் கூப்பிட ஏழு மணிக்கே வருமாறு சொல்லி இருந்தேன், பிறகு அவர்களுக்கு கால் செய்து, ”இப்படி இப்படி ஆகிடுச்சு”, பதினொரு மணிக்கு தான் வருவேன் என்று சொன்னேன்.

Michigan State University
அந்தத் தோழி (இங்கு வந்த பிறகு இப்போது நல்ல தோழி ஆகிவிட்டார்) மிகவும் நல்லவர், பரவாயில்லை, வருகிறேன் என்றார். சரி, இனி இரண்டு மணி நேரம் என்ன செய்ய? சுத்தினேன், வேடிக்கை பார்த்தேன், சாப்பிடலாம் என்று பார்த்தேன், ஆனால், என்ன சாப்பிட தனியாக என்று சாப்பிடவில்லை. ஒரு வழியாக வந்து சேர்ந்தேன், என்னைக் கூப்பிட வந்த தோழி சாப்பிட பழம், தண்ணீர், அமெரிக்காவின் அத்தியாவசிய தேவையான மற்றொரு பொருள் – அதான் இந்த “டிஸ்யூ பேப்பர்” எல்லாம் வாங்கி வந்து இருந்தார். அடடா, எவ்வளவு நல்லவர்! :)

எனக்காக வீடு பார்த்து முன் பணம் எல்லாம் கொடுத்து இருந்தார், வீட்டிற்கு கொண்டு போய்விட்டு, எல்லாம் விளக்கம் தந்து, மறுநாள் எப்படி கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்று எல்லாம் சொல்லி ஒரு மேப் (map) கொடுத்துவிட்டுச் சென்றார்.

இப்படியாக இனிதாக அமெரிக்கா வந்து சேர்ந்து, சில வாரங்கள் ஆகிவிட்டன. அமெரிக்க அனுபவங்கள் குறித்து அடுத்த பதிவுகளில் பார்ப்போம். :)

வியாழன், ஏப்ரல் 30, 2015

ஓசில தோசை!

வணக்கம்! நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதுகிறேன்….

”தமிழ்ல எழுதவே மறந்து போகுமோ!”, என்ற பயமும்; நேற்று இரவு தொடங்கி, இன்று காலை வரையில் நான் வாசித்த “அரியலூர் அடுக்கு தோசையும், இன்ன பிற…” என்கிற ரஞ்சனி அம்மாவின் மின்-புத்தகமும் தான், நான் இப்போது எதையோ என் கணினியில் கிறுக்க ஆரம்பித்திருக்கக் காரணம்.


Courtesy:  தோசை அம்மா தோசை!

பல மாதங்களுக்கு முன்பே, சொல்லப் போனால், ”அரியலூர் அடுக்கு தோசையும், இன்ன பிற…” மின்–புத்தகம் வெளிவந்த அதே நாள், இரவு, டவுன்லோட் செய்துவிட்டேன். “இன்று வாசிப்போம், நாளை வாசிப்போம்”, என்று தள்ளிப்போட்டுத் தள்ளிப்போட்டு, ஒரு வழியாக, FINALLY! நேற்று தான் வாசிக்கத் தொடங்கினேன்! (புத்தகம் வாசிக்கக் கூட நேரமில்லாத அளவு “பிஸி” என்று நினைக்காதீர்கள், சில நாட்களாக, இல்லை, இல்லை, ஒரு வருடமாக, “Time Management” மறந்து, கொஞ்சம் சோம்பேரியாக, படம் பார்த்து, பாட்டுக் கேட்டு, ஆங்கில நாவல்கள் படித்து, சென்னை ஊரை சுற்றிப் பார்த்து, பொழுதைப் போக்கிக் கொண்டு இருந்துவிட்டேன். ”எழுத வேண்டும், எழுத வேண்டும்”, என்று நினைத்து நிறைய தலைப்புகளைக் குறித்து வைப்பேன் நாட்குறிப்பில், ஆனால், அவற்றை எழுத நல்ல நேரம் தான் அமையவேயில்லை!)

”அரியலூர் அடுக்கு தோசையும், இன்ன பிற…”, தலைப்பே மிகவும் ஈர்த்துவிட்டது என்னை! வாசிப்பவரை ஈர்ப்பது, முதலில் தலைப்பு தானே! (”ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க”னு தலைப்பு வச்சா தானே நாம வாங்குவோம்?)

ரஞ்சனி அம்மாவின் வலைப்பதிவுகளை அழகாக தொகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அம்மாவின் அனுபவக் கதைகள் எல்லாம்! அரியலூரில் இருக்கும் அவரின் ”சித்தியா” வீட்டிற்குச் சென்ற அனுபவத்தை வைத்துத் தொடங்குகிறது புத்தகம். மிகவும் ரசித்தேன் அரியலூரில் நண்டு சிண்டுகளோடு வந்த பகுதிகளை.

அடுத்ததாக, ஆங்கில ஆசிரியையாக இருந்த போது ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்பு - அடிபொளி! (இந்த வார்த்தை இந்த புத்தகத்தில் இருந்து கற்றுக் கொண்டேன்.) குறிப்பாக, கொரியன் மாணவர் “சிவப்புப் பொட்டு” பற்றி கேட்டதாக வந்த பகுதியை வாசித்து, சிரித்தேன்! (தென் கொரியா போக வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை, நிறைய கொரியன் படம், தொடர்கள் என்று பார்த்துப் பார்த்து! அதனாலோ என்னவோ, இந்தப் பகுதி மனதில் நன்கு பதிந்துவிட்டது)

பிறகு, விவேகானந்தர் பற்றிய புத்தகம் எழுதிய அனுபவம் குறித்து எழுதி இருந்த பதிவு, ஒரு புத்தகம் எழுதுவதற்கு எவ்வளவு மெனக்கெட வேண்டும், எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் நாம் எழுதிய புத்தகம் வெளி வரும்போது, என்பது புரிந்தது!

அடுத்து, ”சிமெண்ட் சொம்பு” கதை - Strict மாமியார், பயந்த மருமகள்! சிரித்து ரசித்தேன்.

ஒரு சிலரது எழுத்தைப் படிக்கும் போது தான், நாமும் எழுதினால் என்ன என்று தோன்றும், எனக்கு அம்மாவின் எழுத்தைப் படிக்கும் போது, அப்படி!
நீங்களும் நிச்சயம் சாப்பிடுங்கள், அடுக்கு தோசையை! சுவை அருமை!

இலவசமாக இந்த மின் – புத்தகம், “இங்கு”!

ரொம்ப ரொம்ப நன்றி ரஞ்சனி அம்மா, திரும்ப எழுத வச்சதுக்கு!


I’m back, I’m back! (ஒரு சினிமாப் பாட்டு இருக்கே இப்படி? அதப் போட்டுக்கோங்க BGMக்கு) 

வியாழன், அக்டோபர் 30, 2014

இப்படியாக ஒரு பயணம்!

காலையில் இருந்தே ஒரே படபடப்பு, எந்த வேலையிலும் கவனமே செல்லவில்லை. மேலதிகாரி கொடுத்த வேலைகள் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டே இருந்தேன், ஆயிரம் பிழைகளோடு! இப்படி அரையும் குறையுமாக முடிப்பதற்கு, அப்படியே போட்டுவிட்டு உட்காரலாம். ஆனால் என்ன செய்ய, சும்மா உட்கார்ந்தால் பார்ப்பவர்கள் ஏதாவது நினைப்பார்களே!

என்னவோ, “லொட்டு லொட்டு” என்று கணினியின் பொத்தான்கள் எல்லாவற்றையும் தட்டிக் கொண்டே இருந்தேன். மனம் மட்டும் அதே படபடப்பு நிலையில் லயித்துக் கிடந்தது!

சாயங்காலம் ஆறு மணிக்கு விடுதி அறையில் இருக்க வேண்டும். அப்போதான் கிளம்பி, ஒன்பது மணிக்கு ரயிலைப் பிடிக்க முடியும். ஆறு மணிக்கு அறையில் இருக்க வேண்டுமேயானால், ஐந்து மணிக்கு ஆஃபீசில் இருந்து கிளம்ப வேண்டும்! அது கொஞ்சம் கடினம்! கொஞ்சம் இல்லை, ரொம்பவே!

இது ஒரு காரணம் படபடப்புக்கு.

இந்தப் பெரிய ஊருக்கு நான் இரண்டு வருடம் பழசு. சென்னை! பிழைப்புத் தேடி, எல்லோரையும் போல நானும் வந்தேன். மாதம் பதினைந்தாயிரம் சம்பளம்!!! முதலில் ஐயாயிரத்தில் தான் ஆரம்பித்தேன், பிறகு படிப்படியாகக் கூடி, இப்போது இந்தப் பெரிய தொகை! இது எனக்குப் பெரிய தொகை தான். எனக்குத் தெரிந்து, இங்கு வேலை தேடி வந்து வேலையே கிடைக்காமல் இருப்பவர்கள் பலர், வேலை இருந்தும், இரண்டு, மூன்று ஆயிரம் மட்டும் ஊதியம் வாங்குவோர் பலர். இவர்களை எல்லாம் பார்க்கும் போது, பதினைந்து ஆயிரம், பெரிய்ய்ய்ய்ய்ய தொகை என்று, என்னை நானே தேத்திக் கொண்டேன்.

ஆனாலும், ஆழ் மனதிற்கும், அடுத்தவர் மனதிற்கும் இது மிகவும் சிரிய்ய்ய்ய்ய்ய தொகை என்பது நன்றாகவே தெரியும். போன மாதம் கடன் வாங்கி இருந்தேன், தங்கச்சியின் காலேஜ் ஃபீஸ் கட்ட, ஒரு இருபத்தி ஐந்தாயிரம். என்ன செய்ய, மாதம் என் செலவு போக, வீட்டுக்கு காசு அனுப்பியது போக, கையில் மிச்சம் இருப்பதே இல்லை! இந்த ஊர் என் காசை எல்லாம் ”ஆ”ப்போட்டு விடுகிறது!

கடன் வாங்கியதற்கு இன்று தான் வட்டி குடுக்கும் நாள். மூன்று மாதமாக வட்டியும் கொடுக்கவில்லை! இன்று கடன் கார அம்மா, விடுதி அறைக்கு வந்து வாங்கிக் கொள்கிறேன் என்றது (பொதுவாக மூத்தோரை மரியாதை இல்லாமல் "அது, இது" என்றெல்லாம் சொல்பவள் இல்லை நான், அந்தம்மா மிகவும் கடுமையாகப் பேசுவதாலோ என்னவோ மரியாதை கொடுக்க மனம் வருவதேயில்லை), ஆனால், என் கையில் காசே இல்லை! என்ன செய்ய? என்ன செய்ய?

இதுவும் ஒரு காரணம் படபடப்பிற்கு.

ஊருக்குப் போகமல் ரயில் டிக்கெட் பணம் எல்லாவற்றையும் மிச்சம் பிடிக்கிறேன் என்று இதுவரை ஊர் பக்கம் போயே இரண்டு வருடம் ஆகியாயிற்று. வந்ததில் இருந்து ஊர் பக்கம் போகவே இல்லை, ஃபோனில் பேசுவதோடு சரி. ஃபோனும் வாரம் ஒரு முறை தான், அதிலும் மிச்சம் பிடிக்கலாமே! இதுக்கு மேலும் மிச்சம் பிடித்தால், என் அம்மாவுக்கே என் முகம் மறந்து போகும் போல! அதுதான், இந்த முறை, "கடனின் வட்டியைக் கட்டாவிட்டாலும் பரவாயில்லை", என்று ஊருக்குக் கிளம்பிவிட்டேன்.

தீபாவளி நேரம், சென்னையே ஊருக்குப் போகும் நேரம்! பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஸன் என எல்லா இடமும் கூட்டம் இருக்கும் நேரம்! இந்தக் கூட்டத்தில் நானும் ஐக்கியம் ஆகி, ஊருக்குப் போக வேண்டும் என்று நினைத்தால் இன்னும் பெரிய்ய்ய்ய படபடப்பு! வைத்திருக்கும் நூறு இருநூறையும் யாராவது ஆட்டயப் போட்டுவிட்டால்?

இப்படியாகப் படபடப்பில் மாலை வரை ஓட்டிவிட்டேன், உருப்படியாக ஒரு வேலையும் பார்க்காமலே!

ஐந்து மணிக்கு என்னவோ காரணம் சொல்லி கிளம்பியும்விட்டேன்! ”ஆஹா, வெற்றி!”, என்று ஒரு புறம் சந்தோஷமாக இருந்தாலும், மறுபக்கம், அந்தக் கடன்கார அம்மாவை நினைத்தாலே… “கிர்ர்ர்” என்று சுற்றியது!

அறைக்கு வந்துவிட்டேன் ஐந்தே முக்காலுக்கெல்லாம், கடன்கார அம்மாவைக் காணோம்! சரி சிறிது நேரம் கழித்து வருவார் என்று நினைத்தவாறே முகம், கை, கால் கழுவி உடை மாற்றி, ஊருக்கு எடுத்துச் செல்ல வேண்டிய புதுத் துணிகள், தங்கச்சிக்கு, அம்மாவுக்கு, அப்பாவுக்கு என வாங்கிய சிறு சிறு பரிசுகள் என எல்லாவற்றையும் எடுத்து வைத்து முடித்தேவிட்டேன், கடன்காரம்மாவைக் காணோம்???!!! அடடா, இப்போது என் முகத்தை நீங்கள் பார்க்க வேண்டுமே, புன்னகையும், பீதியும் கலந்த ஒரு “ரியாக்‌‌ஷன்”. கிளம்பி, அறையைப் பூட்டிவிட்டு, பக்கத்தில் இருக்கும் பறக்கும் ரயில் நிலையத்தை நோக்கி நடந்தேன்.

படபடப்பு இப்போது இன்னும் அதிகம்! பாதையில் அந்த அம்மா வந்துவிட்டால்? மானமே போகுமே! ”காசு குடுக்க வக்கில்ல எங்கடி போற மு… சிரிக்கி..”, என்பது போல ஏதாவது சொல்லித் திட்டிவிடுவாள்!

ஐயோ! என்ன செய்ய! வேகமாக நடக்கத் தொடங்கினேன். நடக்க என்பதைவிட, ஓடினேன்! என் பிழைப்பை நினைத்தால், எனக்கே பாவமாக இருந்தது! என்ன வாழ்க்கை!

இந்த ஊரில், ஆடம்பரமாகச் செலவு செய்பவர்களை எல்லாம் பார்த்தால், எனக்குப் பொறாமையாகத் தான் இருக்கும், சில நேரங்களில் கோவம் கூட வந்துவிடும்! இங்கு இருக்கும் ஃபீனிக்ஸ் மாலையும், ஈ.ஏ வையும் வெளியில் இருந்து மட்டும் தான் நான் வாயைப் பிளத்து பார்த்திருக்கிறேன். உள்ளே சென்று விண்டோ ஷாப்பிங் செய்யக் காசு தேவையில்லை என்ற போதும். அங்கு இருக்கும் பொருள்களின் பளபளப்பும், ஈர்ப்பும், அதற்கு உள்ளே சென்று கொண்டிருக்கும் மனிதர்களும், அவர்களின் கார்களும், பைக்குகளும், உடுப்பும், மிடுக்கும், என்னை ஒரு புழு பூச்சி போல கூனிக் குறுகச் செய்து, என் தாழ்வு மனப்பான்மையை தூண்டிவிட்டுவிடும்! பிறகு, ஏன் தான் இப்படிப் பிறந்தேனோ என்பது போல வாட வேண்டி வரும். இதற்கு அந்தப் பக்கம் போகாமல் இருப்பதே நல்லது! ”துஷ்டனைக் கண்டால், தூர விலகு”, என்று சும்மாவா சொன்னார்கள். இந்த ஆடம்பரமும், பகட்டும் தான் எனக்கு துஷ்டன்!

ஸ்டேசனில் லோக்கல் ட்ரெயின் டிக்கெட் எடுத்தேன், ரயில் வரக் காத்திருந்தேன். வந்தது ஐந்து நிமிடத்தில், கூட்டம், ஒரே கூட்டம், தொங்கிக் கொண்டு தான் வந்தார்கள், நானும் லேடீஸ் கம்பாட்மெண்ட்டில் ஏறி, இருக்கமாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டேன்! இப்படி சாகசம் எல்லாம் செய்வேன் என்று ஊரில் இருக்கும் போது நான் கனவிலும் நினைத்ததில்லை! ஊரில் இருக்கையில், பேருந்தின் படிப் பக்கம் நிக்கவே பதறுவேன். ஆனால், இந்த ஊர், என்னை ரயிலில் தொங்கும் அளவுக்கு மாற்றிவிட்டிருக்கிறது. எனக்கே என் மீது ஆச்சரியம்! இந்த மாற்றம் எல்லாம், நல்லதா கெட்டதா என்று கூட எனக்குப் புரியவில்லை!

இறங்க வேண்டிய ஸ்டேஸன் வந்துவிட்டது, இறங்கினேன். வேறு ஒரு ரயில் மாறி எக்மோர் செல்ல வேண்டும், மாறினேன். அதிஷ்ட வசமாக இந்த ரயிலில் கூட்டம் இல்லை. ஏதோ ஒரு கம்பாட்மெண்ட்டில் ஏறினேன். ஏறி உட்கார்ந்த பிறகு தான் கவனித்தேன், அந்தக் கம்பாட்மெண்ட்டில் பெண்களே இல்லை என்று! ஆண்கள் கம்பாட்மெண்ட் என்று ஒன்று உண்டா என்ன? எனக்குத் தெரிந்து இல்லை! ஒரு மாதிரி இருந்தது எனக்கு, எழுந்து வந்து கதவோரம் நின்று கொண்டேன்.

எக்மோர் வந்தது! இறங்கினேன். காத்துக் கொண்டு இருந்தேன் என் ரயிலுக்காக. போன் அடித்தது! “kadangaari calling”, பளிச் பளிச் என போனில் தெரிந்தது! இவ்வளவு நேரம் அந்த அம்மாவை மறந்து இருந்தேன், “ச்ச,..” எடுப்போமா வேண்டாமா? திட்டுவார் எப்படியும். சரி எடுப்போம் என்று மனதை தயார் செய்து கொண்டு எடுத்தேன்.

“ஏ, என்னடி, ஆளக் காணோம்! ஓடிட்டியா? காசு எனக்கு இன்னிக்கு வந்தாகணும். எப்போ வருவ?”

”நான் ஊருக்குப் போய்கிட்டு இருக்கேன், வந்ததும் ரெண்டு நாள்ல குடுத்தற்றேன்…”

கண்டபடி கத்தி, நான் ஊரிலிருந்து வரும் தினம், நானே போய் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி வைத்தார்.

”பணத்துக்கு எங்க போறது?”, தீவிரமாக யோசித்துக் கொண்டே இருக்கையில் என் ரயில் வந்தது. ஏறி அமர்ந்தேன். டிக்கெட் காட்டிவிட்டு, மேலே ஏறிப் படுத்தேன். யோசித்துக் கொண்டே இருந்தேன். எப்படித் தூங்கிப் போனேன் என்றே தெரியவில்லை.

காலையில் அலாரம் வைத்திருந்தது அடித்து, பதறிப் போய் எழுந்தேன், பக்கத்தில் தூங்குபவர்களுக்குத் தொல்லையாக இருந்திருக்குமோ, என் அலாரம் சத்தம்? இல்லை, இருந்ததாகத் தெரியவில்லை, எல்லோரும் குரட்டைவிட்டுக் கொண்டிருந்தார்கள்.

எங்கோ நின்றது, அடடா, விருதாச்சலம்! இரவு 12.40க்கு வரவேண்டிய ஊரே இப்போது தான் காலை ஐந்து மணிக்கு வருகிறது! இதற்கு மேல் நான் எங்கு தூங்குவதற்கு? கீழே “Side lower birth” ஒன்று காலியாக இருந்தது, யாரும் இல்லை! நன்றாக கால் நீட்டி உட்கார்ந்து, வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். லேசாகத் தூரல் விழுந்து கொண்டிருந்தது, எனக்கு மழையில் நனையப் பிடிக்காது, இருந்தபோதும், தூத்தல் பிடிக்கும்! அதுவும், நனையாமல் ரசிக்க மிகவும் பிடிக்கும்.
இதுவரை ரயில் பயணத்தில், அதிகாலையில் இப்படி வேடிக்கை பார்க்கும் வாய்ப்பே எனக்குக் கிடத்ததில்லை. இன்று தான் முதல் முறை! பச்சை பசேல் என வயல்கள் என்ன, தோட்டங்கள் என்ன, புல் தரைகள், மாடு, ஆடு, ஆறு, குட்டை, குளம், எத்தனை எத்தனையோ! ஒரு நிமிடம், ”இத்தனை அழகான இடங்களைப் பார்க்காமல் இத்தனை நாள் இந்தச் சென்னை ஊரில் கிடந்தோமே”, என்று தோன்றியது.

ரயிலில் இருந்த மற்றவர்கள், ஒவ்வொருத்தராக எழுந்தார்கள், “எங்கம்மா இருக்கு?”, என்று சிலர் கேட்டார்கள். எல்லோரும் தங்கள் தங்கள் மொபைலுக்குச் சார்ஜ் போட ப்ளக் பாயிண்டுகளைத் தேடி ஓடினார்கள்! சிலர், ப்ளக் பாயிண்ட்டிற்குச் சண்டை வேறு! வெளியில், ஆடுகளும் மாடுகளும் ஆனந்தமாக, ஒற்றுமையாக, புற்களை ருசித்துக் கொண்டு இருந்தன!

பயணம் தொடர்ந்தது!