முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கண்மணி Diary 2018

எப்போதும் வருடம் முடியும் சமயம் ஒரு ஞான உதயம் வரும், அது என்ன என்றால், blogஇல் எழுத வேண்டும் என்பது. இப்போது 2018 ஆம் வருடம் முடிய இருப்பதால் அந்த ஞான உதயம் வந்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை!

என்னுடைய பழைய பதிவுகளை எல்லாம் படித்துப் பார்த்துக் கொண்டு இருந்தேன், எல்லாம் என்றால், எல்லாம் இல்லை, ஒரு சிலவற்றை. எனக்கே நான் எவ்வளவு மாறி இருக்கிறேன் என்று நினைத்துப் பார்க்கையில் அத்தனை ஆச்சர்யமாக இருந்தது. மாற்றம் ஒன்று தான் மாறாதது என்பார்களே அது போல, என் அப்பா எவ்வளவு மாறி இருக்கிறார், என் குடும்பம், என் priorities, எனக்கு முக்கியமானவை, எனக்கு முக்கியமானவர்கள், என்று எவ்வளவு மாற்றம்!

ஆனால், எல்லாமே மாறிவிடுமா? இல்லை, நிறைய விஷயங்கள் இன்னும் மாறாமல் தான் இருக்கின்றன. நான் இதற்கு முன்பு இருந்தது போலவே இப்போதும் அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வமாக இருக்கிறேன், புதிதாக நிறைய படித்து கற்றுக்கொண்டு இருக்கிறேன், இது எனக்கு சிறுவயதில் இருந்தே பிடித்த விஷயங்கள். இந்த 2018ஆம் வருடம் வாழ்க்கையில் இது வரை இருந்ததிலேயே மிகவும் கடினமான வருடம், அதே நேரம் இனிமையான வருடம்! இன்பம் துன்பம் இரண்டையும் குறைவில்லாமல் அள்ளித்தந்த வருடம் இது! வாழ்க்கையில் இன்பம் மட்டும் இருப்பின் அதில் இனிப்பின் அருமை தெரியாமல் போகும், உண்மை.

திசம்பர் மாதம் மிகவும் ரம்யமான மாதமாக இருக்கிறது ஹாங்காங்கில், சில்லென்ற குளிர் காலம், நகர் முழுதும் விழாக் கோலம், தோரணங்களும், நட்சத்திரங்களும், இனிமையான கிறிஸ்துமஸ் கீதங்களும், அத்தனை அருமையான மாதம். 

இந்த அற்புதமான மாதம் மனதிற்கு மிகவும் ரம்யமாக இருக்கிறது. நண்பர்களோடு இந்த மாத துவக்கத்தில் ஒரு "கேம்பிங்" சென்றிருந்தேன் வார இறுதியில். கடல் ஓரத்தில், என் முதல் கேம்பிங் அனுபவம் அது. "புய் ஓ" என்னும் இடத்தில இந்த கேம்பிங் செய்தோம். சரி, அது இருக்கட்டும். இது இந்த வருடத்தின் ஒரு ரம்மியமான நினைவு, ஆனால் இன்னும் நிறைய ரம்மியமான நினைவுகள் இந்த வருடம் தந்திருக்கிறது. 

Pui O, Hong Kong
முதலில் இனிப்புச் செய்தியா, கசப்புச் செய்தியா? கசப்பு தான் முதலில் வந்தது, பிறகு இனிப்பு, அதே வரிசையில் சொல்கிறேன். இந்த வருட தொடக்கம், இந்தியாவிற்கு வந்திருந்தேன், அப்பா அம்மா தம்பி என்று ஆனந்தமாக, சற்று சிறு சிறு சண்டைகளோடு தொடங்கியது என் புது வருடம். சண்டை வருவதெல்லாம் மிகவும் சாதாரணம், நான் தான் ஏதாவது பேசிக்கொண்டு இருப்பேன், அது என் அப்பா அம்மாவிற்கு கோபம் வந்துவிடும். 

சரி, அது இல்ல கசப்பு செய்தி. இப்படியாக, எப்போவும் போலவே தொடங்கியது என் வருடம். 

ஏப்ரல் மாதம் தோழியோடு தாய்வான் செல்ல 2017 திசம்பரிலேயே டிக்கெட் எல்லாம் புக் செய்து தயாராக இருந்தேன், ஏப்ரல் மாதம் எப்போது வரும் என்பது போல இருந்தது. ஆனால் மார்ச் மாதத்தில் வந்து விழுந்தது ஒரு ஒரு மிகவும் கசப்பான செய்தி. நன்றாக நினைவு இருக்கிறது, காலையில் அன்று எழுந்து எப்போதும் போல குளித்து கிளம்பிக் கொண்டு இருந்தேன், சனிக்கிழமை, என் தம்பியிடம் இருந்து video call வந்தது, "டேய் என்னடா?" என்று எப்போதும் போல பேச ஆரம்பித்தேன், அவன் வேறு எங்கோ இருப்பது போலத் தெரிந்தது, 

"எங்கடா இருக்க?"

"மதுரை ல", என்றான்.

"என்ன மதுரைல, ஏதும் கல்யாணத்துக்கு போயிருக்கிங்களா எல்லாரும்?"

"இல்ல, hospital கு வந்திருக்கோம்!"

"என்ன? எதுக்கு?!"

"சொந்தக்காரர் ஒருத்தருக்கு heart attack..."

"சொந்தக்காரரா, யாரு?!!??"

"அப்பா!"

அது வரை இல்லாத ஒரு துக்கம், எங்கிருந்து நொடியில் வந்தது என்று தெரியவில்லை. அடிக்கடி இப்படி ஏதாவது என் தம்பி பொய் சொல்லி என்னிடம் விளையாடுவான், அது போல சும்மா ஏதும் சொல்கிறான் போல என்று, 

"டேய், புழுவாதா, சும்மா தான சொல்ற?!"

"இல்ல பிள்ள, நெஜமாத்தான், இப்போ நல்லாதான் இருகாங்க, ரெண்டு நாள் ஆச்சு!"

எனக்கு தூக்கிவாரி போட்டது, "என்னது, ரெண்டு நாள் ஆச்சா? என்கிட்ட பேசுனப்போ எதுவுமே சொல்லல? ஏன்? என்னடா சொல்ற? நான் நம்பமாட்டேன்", அழுகிறேன் தேம்பி தேம்பி.

"அப்பாவ காட்டு, நீ பொய் சொல்ற, நான் நம்ப மாட்டேன்...", என்று நான் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அருகில் சோகமான முகத்தோடு, அழுது அழுது கண்ணீர் எல்லாம் தீர்ந்து போனது போல என் அம்மா இருப்பதைப் பார்த்தேன், இன்னும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது. 

"மா, என்னமா, என்னமா ஆச்சு? அப்ப்பா எப்படி இருக்காங்க?"

அதன் பின் அழுகை அழுகை அழுகை மட்டும் தான். அழுது அழுது மறுநாளே ஹாங்காங்கில் இருந்து மதுரையை அடைந்திருந்தேன், என் வாழ்க்கையில் மறக்க முடியாத பயணமாக இது தான் இருக்கும். அழுது கொண்டே சென்றேன் வழி எல்லாம். எதுவும் யாராலும் சமாதானம் சொல்லி இருக்க முடியவில்லை எனக்கு. ஆனால், முயற்சி செய்தார்கள், அத்தனை நண்பர்கள் ஹாங்காங்கில் உடன் இருந்து என்னை அனுப்பி வைத்தார்கள். ஆறுதல் சொன்னார்கள். ஆனால், எனக்கு அத்தனை சோகம்!


Apaa, Kanmani

அப்பா நன்றாகிவிட்டார், உடல் நிலை மருத்துவம் பார்த்து சரியாகிவிட்டது. அறிவியல் வளர்ச்சி எத்தனை நல்லது? நன்றிகள் கோடி இந்த "Angio"  சார்ந்த, தொழில்நுட்பத்தின் பின் இருக்கும் ஒவ்வொரு விஞ்ஞானிக்கும் மருத்துவருக்கும்! 

கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள் மருத்துவர்கள். இப்போதும் எனக்கு எப்போதும் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கிறது, அப்பா எப்படி இருக்கிறாரோ, என்ன செய்கிறாரோ என்பது போலவே இருக்கும். எனக்கு அப்பாவை மிகவும் பிடிக்கும். யாருக்குத் தான் அப்பாவை பிடிக்காது இருக்கும்? 

இது தான் என் இந்த வருடத்தின் மிகவும் கசப்பான செய்தி, நிகழ்வு! இனி இப்படி ஒரு கசப்பான நிகழ்வு நடக்காமல் இருக்க வேண்டும்!? 

சரி, இனி இனிமையான செய்திக்கு வருவோம்? 

அப்பாவுக்கு உடல் நிலை நன்றாக முன்னேறி இருக்கிறது! இது தான் முதல் இனிமையான விஷயம் இந்த வருடம். நினைத்துப் பாருங்களேன், வேலை, பணம், வேறு ஏதேதோ முக்கியம் என்பது போலத் தோன்றுகிறது, இப்படி மனதிற்குப் பிடித்தமானவருக்கு ஏதேனும் இன்னல் வரும்வரை, வாழ்க்கையில் எது முக்கியம்? உறவுகளும், நண்பர்களும், மனிதர்களும் தாம்!

வெளிநாட்டுப் பயணங்கள் போவது என்பது இந்தியாவில் இருக்கும் பலருக்கும் ஒரு பெரும் கனவாகவே இருக்கிறது. முதல் முதலில் வெளிநாடு செல்லும் வரை எனக்கு அப்படி ஒரு கனவு இருந்ததா என்றால், அவ்வளவு தீர்க்கமாக இருந்தது என்று சொல்ல முடியாது. ஆசை இருந்தது, ஆனால், அவ்வளவு பெரிதாக அலட்டிக் கொள்ளும் அளவு இல்லை என்று சொல்லாம்.

இந்த வருடம் என் தோழி அபர்ணாவோடு தாய்வானுக்கு ஒரு பயணம் சென்றேன். அது மிகவும் இனிமையான அனுபவம். தாய்வானில் இருக்கும் மனிதர்கள் அத்தனை அன்பானவர்களாக இருக்கிறார்கள். என்னுடைய பழைய கல்லூரி ஜூனியர், "அருண்", அப்போது தாய்வானில் ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தான். அங்கு இருக்கும் இடங்களை எல்லாம் எனக்கும் அபர்ணாவுக்கும் அன்போடு சுற்றிக்காண்பித்தது அருண் தான். 

எனக்கு இயற்கையாக இருக்கும் காட்சிகளும் மரங்களும் இருக்குமிடம் மிகவும் பிடிக்கும். ஒரு மலை ஏறிச் சென்றோம். Jiaoxi  என்னும் இடம், அங்கு இருந்த ஒரு hiking trail இல் சென்ற அனுபவம் எனக்கு மிகவும் பிடித்தது. 

Hiking செல்கையில் நிறைய உணவு எதுவும் எடுத்துச் செல்லவில்லை, அங்கு மேலே ஏறும் முன், மலை அடியில் ஏதும் கடைகள் இருக்கும் அங்கு வாங்கலாம் என்று சென்றோம், ஆனால் அங்கு ஒன்றுமே கடைகள் இல்லை. பிறகு என்ன செய்ய, அத்தனை பசி, வழியில் ஒருவரிடம் இங்கு கடைகள் உண்டா என்று கேட்டோம். அதற்கு அவரோ, "அவரிடம் இருந்த அத்தனை உணவையும், நொறுக்குத் தீனியையும் எங்களிடம் கொடுத்துவிட்டார்! 
இல்ல, இருக்கட்டும், நான் வீட்டுக்கு தான் போறேன், எனக்கு இந்த சாப்பாடு அவசியம் இல்ல, என்று. 

பிறகு நடுவழியில் ஒரு Church இருந்தது, இது வரை நான் Church உள்ளே சென்றதே இல்லை. அது தான் முதல் முறை. மிகவும் அமைதியாக, மலை நடுவே, அத்தனை அழகாக இருந்தது.

Mother Teresa sisters - என்று ஒரு குழுவாக "sisters" இருந்தார்கள், இது வரை எனக்கு இவர்களைப் பற்றித் தெரியாது, இது தான் முதல் முறை. இவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டில் இருந்து வந்திருந்தார்கள், ஜப்பான்,சீனா, இந்தியா (கேரளா), தென் கொரியா, தாய்வான், இப்படி பல நாட்டைச் சேர்ந்தவர்கள். அனைவருமே தாய்வானிஸ் மற்றும் mandarin சைனீஸ் பேசினார்கள். இவர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று சேவை செய்வார்களாம். போர், வறுமை என்று பாதிக்கப்பட்டு இருக்கும் இடங்களுக்குச் செல்வார்களாம் குறிப்பாக. சிறுவயதில் எனக்குப் பேச்சுப் போட்டியில் பேசும் பழக்கம் உண்டு, அப்போது "role model" என்று பேசும் போதெல்லாம் நான் "அப்துல் கலாம் போல அறிவியலிலும், ஆழுமையிலும்; அன்னை தெரேசா போல அன்பும் கொண்டு இருக்க விரும்புகிறேன்", என்பது போலப் பேசுவேன். அதனால், நேரில் அன்னை தெரசா போல உடை அணிந்தவர்களைப் பார்த்த போது, அன்னை தெரேசாவையே பார்த்தது போல ஆனந்தம் எனக்கு. பிறகு உடன் வந்தவரை எல்லாம் விட்டு விட்டு, தனியாக வேகமாக மலை ஏறி, அருண் தம்பி, "அறிவு இருக்கா, தனியா முன்னாடி போய் ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சுன்னா..." என்று திட்டியதெல்லாம் வேறு கதை. இயற்கையை ரசித்தவாறே ஏறிட்டேன், ஹாஹா. 

Jiaoxi, Taiwan - Mother Teresa sisters
 ஆராய்ச்சியில் , என்னுடைய PhD projectல் முக்கியமாக செய்ய வேண்டிய "sample collection" பகுதியை முடித்துவிட்டேன், ஐந்து மாதங்கள் விடுமுறையே இல்லாமல், மொத்தமாக சீனாவில் ஒரு குக்கிராமத்தில் தங்கி இருந்து இந்த வேலையைச் செய்தேன். மொழி தெரியாது, உணவு - வெறும் வேக வைத்த காய்கறிகள், இப்படி துறவி போல இருந்து, வெற்றிகரமாக பெரும் முக்கியமாக பகுதியை முடித்தேன். நிறைய பாடங்கள் கற்றுக் கொடுத்தது இந்தச் சீன வாழ்க்கை. 

பிறகு அப்பா தனது பணியில் இருந்து ஒய்வு பெற்றார், எனக்கு மிகவும் ஆசை அவருக்கு ஒரு இருசக்கர வாகனம் என் சம்பாத்தியத்தில் வாங்கித் தர வேண்டும் என்று. அவர் ஒரே வண்டியையே பல வருடங்களாக, என் ஏழாம் வகுப்போ ஆறாம் வகுப்போ, அப்போதில் இருந்து ஒட்டிக் கொண்டு இருந்தார், ஆதலால், அவருடைய பணி ஒய்வு விழாவை ஒட்டி அவருக்கு ஒரு வண்டி வாங்கிப் பரிசளித்தேன். இது மிக மிக மிக மிக மிக ஆனந்தமான தருணம். அம்மாவுக்கு அப்பாவுக்கு தம்பிக்கு என்று பரிசுகள் வாங்கித் தரமுடியும் நிலையில் இருப்பதை எண்ணி, மிகவும் "grateful" ஆக உணர்கிறேன். இது எனக்கு மிகவும் பெரிய விஷயம்! எனக்கு பார்த்துப் பார்த்து செய்த அவர்களுக்கு என்னால் முடிந்தவரை எல்லாம் செய்யணும்!

Appaa retirement 

பிறகு ஒரு "project fund" பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தேன் (U21 Graduate Collaborative Research Awards), அது வெற்றிகரமாக கிடைத்தது (மொத்த மதிப்பு (5800 USD). இந்தத் தொகையை என்னுடைய ஆராய்ச்சிக்கும், ஒரு "technical training workshop" நடத்துவதாகவும் பயன்படுத்தப்போகிறேன் 2019இல். இதுவும் எனக்கு மிகவும் பெரிய விஷயம்! எனக்கு நான் படித்ததை பிறருக்கு சொல்லிக் கொடுப்பதில் அதிக ஆர்வம், இந்தப் பயிற்சி என்னைச் சிறந்த பேராசிரியராக தயார் செய்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். 

பிறகு, ஒரு training பெறுவதற்காக Swedenஇல் இருக்கும் Gothenburg பல்கலைக்கழகத்திற்குச் சென்று வந்தேன், இரண்டு வாரங்கள். மிகவும் பயனுள்ளதாக இருந்தது அந்தப் பயணம். அதோடு சேர்த்து, நிறைய பிற விஷயங்களும் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு நாடும், எப்படி வேறு வேறு மாதிரியாக இருக்கிறது! ஊரிலேயே இருந்திருந்தால் எத்தனை குறுகிய அனுபவத்தோடும் இருந்திருப்பேன்?

Tjarno Marine Station, University of Gothenburg, Sweden

 ஆராய்ச்சியில் பெரும் பகுதி, ஏற்கனவே என்ன கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வது. அதைக் கொண்டு தான், புதிதாக எது தெரியாதோ அதைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆக, இதற்கு நிறைய படிக்க வேண்டி இருக்கும். இந்த வருடம், என்னுடைய ஆராய்ச்சித் துறையில் இருக்கும் நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்து, நிறைய கற்றுக் கொண்டேன். சில சமயம், இன்னும் கடினமாக உழைக்க வேண்டும், இது போதாது என்று என்னை நானே கடிந்து கொண்டதும் உண்டு. சரியாக நினைத்த நேரத்தில் சில வேலைகளை செய்ய முடியாமல் போனதும் உண்டு. அடுத்து 2019இல் இன்னும் சிறப்பாக திட்டமிட்டு, சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன் (New year, new me, haha). 2019இல் நிறைய திருப்புமுனைகள் இருக்கும் நிச்சயமாக. அதற்காக என்னை நானே இன்று தயார் செய்து கொண்டு இருக்கிறேன். 

Diary எழுதும் பழக்கம் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது எனக்கு. புது வருடத்தின் முன்பு, என்னுடைய அடுத்த ஆண்டின் குறிக்கோள் என்ன, இந்த ஆண்டு என்ன எல்லாம் செய்திருக்கிறேன், செய்யத்தவறி இருக்கிறேன் என்று எழுதுவது உண்டு. இன்றும் அது போல எழுதி இருக்கிறேன். இங்கு நான் எழுதும் கதைகள் எல்லாம் ஒரு சிறிய பகுதி தான், இன்னும் சொல்லப் படாத கதைகள் எல்லாம் என் Diaryக்கு மட்டுமே தெரியும். சிறுவயதில் எழுதிய diaryயை எடுத்து படித்தால் இப்போது சிரிப்பாக இருக்கும். நல்ல நினைவுகள், மறந்து போனதாக நினைத்தவை கூட அதில் இருக்கும். எனக்கு அதை எடுத்துப் படிப்பது மிகவும் பிடிக்கும், செய்த நல்ல விஷயங்கள், தவறுகள், எத்தனை ஒழுக்கமாக இருந்து இருக்கிறேன் படிக்கும் விஷயத்தில் என்று எனக்கே ஆச்சர்யம் தரும் வகையில் எழுதி இருக்கும் சில குறிப்புகள், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...

Kanmani - Planner

நீங்கள் diary எழுதுவதுண்டா? எத்தனை வருடமாக? இல்லையா? எழுதிப் பாருங்கள்! வயதான பிறகு படிக்கையில் சிரிப்பாக இருக்கும், ஹாஹா. 

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும். நீங்கள் நினைக்கும் "நல்லவை" மட்டும் உங்களுக்கு சிறப்பாக நடக்கட்டும்! 

- கண்மணி, December 31, 2018



கருத்துகள்

  1. Ok kanmani.
    Hope your father is well. Have peaceful retirement life.
    Indian, Chinese, Taiwanese and Swedish.

    பதிலளிநீக்கு
  2. தோழிக்கு வணக்கம்,
    சமீபத்தில் உங்கள் வலைத்தளப் பக்கத்திற்கு வந்தடைந்தேன். படிக்கப் படிக்க அனைத்துமே (சில நீங்கலாக) சுவாரஸ்யத்தை அள்ளித் தருகிறது. இவ்வளவு நன்றாக எழுதுகிற நீங்கள், பல மாதங்களாக எந்தப் பதிவையும் எழுதாதது வருத்தத்தை அளிக்கிறது. மீண்டும், உங்கள் எழுத்துப் பணியை தொடங்குங்கள். புதிய எழுத்துக்களை வாசிக்கக் காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்