சனி, மே 12, 2012

தொடர்கதை --> காதலி காதலி!#11

முந்தைய பாகங்கள்:


காதலி காதலி!  #1 | #2  | #3 | #4  | #5 |  #6  | #7  |  #8  |  #9 |   #10 

ரயிலின் தாலாட்டில் அம்மாவின் நினைவு தான் வந்தது முரளிக்கு. சன்னலோரம் வீசும் குளிர்ந்த காற்று அம்மாவின் சுவாசம் தீண்டும் சுகம் தந்தது. வாகனங்களால் விஷமாகிப் போன வளியில் இன்னும் கொஞ்சம் ஈரம் காற்றில் மிஞ்சி தான் இருக்கிறது, அதற்கு சான்றாய் இருந்தது அந்த வாடைக் காற்று. நினைத்துப் பார்த்தான்.

தான் தூங்கிவிட்டதாக எண்ணி, தினமும் தன் நெத்தியில் முத்தமிடும், முத்தமிட்டவாறே அழும் தன் தாயின் அன்பு.

இனி மீண்டும் என்று கிடைக்கும் அந்த முத்தம்? தந்தை அருகில் இல்லாவிடினும், நத்தைக்குக் கூடு போல, ஆமைக்கு ஓடு போல, தன்னை வாழ்வின் எல்லாக் கட்டத்திலும் மூடி அணைத்துக் காத்து வந்த அன்னையின் பிரிவு அவனை வாட்டியது. நரகத்தின் மடியில் இருப்பது போல உணர்ந்தான் தாயின் பிரிவில்.

இதுவரை ஆசையாய் முத்தமிட்டு காலையில் எழுப்பிய தாயின் குரல் கேட்காமல் விடியலெல்லாம் வசந்தம் இழந்திடுமே!

உறங்கிடும் வேளையில் கூட அன்பாய் தலை கோதும் அந்த அன்புத் தீண்டல் இன்றி, இனி இரவுகள் இருண்டு போகுமே! சூனியம் ஆகுமே!

உணவில் சத்துக்களை விட, அன்பின் விகிதம் தான் அதிகம் இருந்தது இதுவரை, இனி அந்த அன்பின் விகிதம் சுத்தமாய்க் காணாமல் போகுமே..!

ஏங்கி ஏங்கி அழுகவே தொடங்கி இருந்தான் முரளி. தன்னைச் சுற்றி இருப்பவர்களை மறைந்து வாய் விட்டு அம்மா என்று அழத் தொடங்கி இருந்தான்.

புகையைக் கக்கியவாறு விரைந்து கொண்டு இருந்தது ரயில். விழுந்த கொண்டிருந்த சாரலை கிழித்துக் கொண்டு சென்றது.

இவன் தாயின் பிரிவுக்காய் அழுகிறான், மேகம் யாரின் பிரிவுக்காய் அழுததோ? மேகமும் தமிழ் நாட்டிலிருந்து தில்லிக்குக் கிளம்பி வந்ததோ இவனோடு? அதனால் தான் அழுகிறதோ தாய் மண்ணைப் பிரிந்தேனே என்று? தாயையும் தாய்மண்ணையும் பிரியும் நேரம் இருக்கும் துயரம், விவரிக்க முடியாதது.

மழையின் ஒரு துளி முகத்தில் தெளிக்க, சுற்றி அனைவரும் தன்னையே வினோதமாய்ப் பார்ப்பதை உணர்ந்து, அழுகையை நிறுத்தி, கால்ச்சட்டைப் பையில் மடித்து வைத்திருந்த கைக்குட்டையை எடுத்து விரித்து, முகம் துடைத்தான். அழுத்தமாய்த் துடைத்தான், பிரிவின் துயரம் துடைத்த துடைப்பில் ஓடட்டும் என்று எண்ணினானோ என்னவோ!

"சாய் சாய் காப்பி காப்பி..", இந்தி தொடங்கி இருந்தது. தமிழ் வாசம் குறைந்து இந்தி வாசம் காற்றில் உணர முடிந்தது முரளியால்.

நீண்ட நேரம் வாடைக் காற்றில் அழுதவாறு வந்ததால், லேசாக சளிப் பிடித்தார் போல உணர்ந்தான். தொண்டையில் உள்ளே ஈ சுற்றுவது போல இருந்தது, தலை பாரமாய் இருந்தது.

சிறுவன் ஒருவன் சன்னல் வெளியே கை நீட்டி மழையை ரசித்து விளையாடிக் கொண்டு இருந்தான் முரளியின் எதிரே.

"சாய் சாய்..", அந்தப் பக்கம் வந்த வியாபாரியிடம் ஒரு கோப்பை வாங்கினான்.

"பான்ச் ருபயா", ஐந்து விரல் நீட்டி ஒரு கோப்பை ஐந்து ரூபாய் என்றான் அந்த வியாபாரி.

ஐந்து ருபாய் கொடுத்து வாங்கிக் கொண்டான் முரளி. சிறிய கோப்பை, அதுவும் பிளாஸ்டிக் கோப்பை, அது ஐந்து ரூபாய், விலைவாசி அநியாயமாய்ப்பட்டது அவனுக்கு.

பருகியவாறு மீண்டும் நினைவில் மூழ்கினான்.

"அம்மா, எனக்கு குடிக்க எப்பவும் பால் தான் குடுக்றீங்க, இன்னிக்கு ஒரு நாள் தேநீர் வேணும்மா.. ஆசையா இருக்கு.."

"ஒருக்கக் குடிச்சுப் பழகிட்டா விடமுடியாதுடா., அதுவே பழக்கம் ஆகிடும், அம்மா இப்டி ஒருக்கனு பழகி தான் என்னால இப்போ விட முடில, பித்தம் டா இது, வேண்டாம்.."

"அம்மா இனி கேக்க மாட்டேன் ஒரே ஒரு தடவ.. ஒரே ஒரு தடவமா.."

"ம்ம்.. சரி ஒரு தடவ தான் கொஞ்சம் தான்.."

ஏழாவது படிக்கையில் அம்மாவிடம் ஒரு நாள் தேநீருக்காகக் கெஞ்சியது நினைவுக்கு வந்தது. அந்த சுவை நாவில் வந்தது.

நினைவுகளோடே பருகி முடித்தான்.

பயணம் தொடர்ந்தது தில்லியை நோக்கி, அம்மாவின் நினைவுப் பயணங்களோடு சேர்ந்தே!

---------------------------------------------------------------------

தில்லியில் எப்படி சமாளித்தான் முரளி? லட்சியம் அடைந்தானா? வாசிக்கலாம் அடுத்த பகுதியில்.

2 கருத்துகள்:

 1. //உணவில் சத்துக்களை விட, அன்பின் விகிதம் தான் அதிகம் இருந்தது...
  //மேகம் யாரின் பிரிவுக்காய் அழுததோ? ரொம்ப புடிச்ச வரிகள்

  //இந்தி தொடங்கி இருந்தது. தமிழ் வாசம் குறைந்து இந்தி வாசம் காற்றில் உணர முடிந்தது முரளியால்.சென்னை வந்தாலே அப்படித் தான் இருக்கிறது :(

  அன்னையர் தின சிறப்பு பதிவா... அன்னையின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 2. தொடர்ந்த ஊக்கத்திற்கு மிக்க நன்றி அண்ணா. ஆனால், அன்னையர் தின சிறப்புப் பதிவு என்று நினைத்து எழுதவில்லை. தோன்றியதைப் பதிந்தேன்.

  பதிலளிநீக்கு