செவ்வாய், மே 15, 2012

தொடர்கதை --> காதலி காதலி!#12

முந்தைய பாகங்கள்: 


காதலி காதலி!  #1 | #2  | #3 | #4  | #5 |  #6  | #7  |  #8  |  #9 |   #10 |   #11 

காரைக்குடி, அந்த வரிசை வீடுகளின் முன் வந்து தேவதை போல, அழகாய், வெள்ளை நிறத்தில், சொர்க்கம் போல நின்றது அந்த மகிழ்வுந்து.

கதவு திறந்தது, உள்ளிருந்து இறங்கினார், வெள்ளைச் சட்டை, கருப்பு கால்ச்சட்டை அணிந்த ஒருவர். வயது முப்பது தான் இருக்கும், மிடுக்காய் இருந்தார். ஆயினும், அனுபவம் பளிச்சிட்டது கண்களில். கையில் விலை உயர்ந்த கடிகாரம். பார்த்தாலே பெரும் பணக்காரர் என்று பட்டது.

நீண்ட நாட்களாக, தண்ணீருக்காய் ஏங்கிய ஒரு பாலைவன வழிப்போக்கன் போல, பார்வையில் தாகம் இருந்தது, தேடல் தெரிந்தது.

தனக்குத் தெரிந்த ஒன்றை, தொலைத்த ஒன்றை விட்டுச் சென்ற ஒன்றைத் தேடி வந்தவன் போலத் தேடினார் எதையோ.

அந்த வரிசை வீடுகளில், ஒரு வீட்டின் முன் பதிந்தது அவரது பார்வை.

அந்த வீட்டின் வாசலில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பத்து வயதுக்கு உள்ளே இருக்கும் அவர்களுக்கு. இந்தக் காட்சியைப் பார்த்த அந்த பணக்காரரின் முகம் சற்று வாடியது. தேடி வந்தது, தொலைந்தே போனது நிரந்தரமாய் என்பது போல இருந்தது அவரது உணர்வு.

குண்டான தோற்றம், கருப்பு நிறம், ஒரு பெண் வெளியே வந்தார் அந்த வீட்டில் இருந்து.

இவரை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தார். ஏதோ இவன் தன்னிடம் கேட்கப் போகிறான் என்று நினைத்துக் கொண்டாள்.

அந்தப் பார்வையில் அலட்சியம் இருந்தது, ஏதோ எதிரியைப் பார்ப்பது போல இருந்தது. என் நேரத்தை வீணடிக்க வந்தாயா என்பது போல கேள்வி இருந்தது.

அந்தப் பெண்ணிடம் கேட்டார், " இங்க.. ரேணுகானு..."

"அப்டி எல்லாம் யாரும் இல்லைங்க.." விசுக்கென்று ஏதோ வேண்டாதவரைப் பார்த்தது போல உள்ளே சென்றாள் அந்த அம்மா.

நொறுங்கிப் போனார் அவர்.
தேடிவந்து, விவரம் கேட்போருக்கு இப்படியா பதில் சொல்வார்கள்? சொத்தையே எழுதி வை என்று சொன்னது போல, எரிக்கிறார்களே பார்வையால்.

மீண்டும் வெளியே வந்து, " ஏ.. ப்ரியா.. இங்க வா.. படிக்கணும், காலைல இருந்து ஒரே வேலயாட்டாப் போச்சு உனக்கு, பரீட்சை இருக்குல, வா படி.." , சத்தமிட்டாள் அந்தப் பெண்மணி.

"இதோ வரேன்மா.. கொஞ்ச நேரம்..", சிணுங்கலும் கெஞ்சலும் சேர்ந்து சில்வண்டு போலக் கத்தினாள் அச்சிறுமி.

அருகில் இருந்த வீட்டைப் பார்த்தார். கதவு மூடி இருந்தது.

வேகமெடுத்தார் அந்த வீட்டை நோக்கி. தயக்கம் இன்றி அவசரமாக கதவைத் தட்டினார்.

உள்ளிருந்து சத்தம் வந்தது, " இதோ வரேன்..", தளர்ந்த குரல், சோகத்தின் குரல், கரைந்து கொண்டிருந்த உயிரின் குரல். தனிமையின் குரல்.

கதவு திறக்கப்பட்டது. வந்தார் ஒரு வயதான மனிதர். மெதுவாய்த் கேட்க அவர் வாய் எடுக்கும் முன்னே, அவசரமாய்க் கேட்டார், "அண்ணே.... குமார் அண்ணே... எண்ணத் தெரிலயானே?"

"யாருப்பா.. சரியா தெரிலயே.. எனக்குக் கொஞ்ச நாலா கண்ணு பார்வை சரியாத் தெரில...", இழுத்து மெதுவாய் பேசினார் அந்தப் பெரியவர்.

"அண்ணே.. நான் தான்னே, ராமு, ராமச்சந்திரன். இங்க பக்கத்துல தங்கி இருந்தனே, முந்தி ரொம்ப வர்சத்துக்கு முன்னாடி, நியாபகம் இல்ல?"

"அட நம்ம ராமுவா.. அடையாளமே தெரியலப்பா.. இன்னும் சின்னப் பையன் மாத்ரி இருக்கப்பா.. முப்பது வயசுக்காரன் மாதிரி இருக்கப்பா.. வா உள்ள வா.. "

"முப்பதா.. நாப்பதுக்கு மேல ஆச்சுண்ணே.. ", குனிந்து நெளிந்து நுழைந்தார் அந்த குறுகிய வாசலுள், ராமச்சந்திரன்.

"பாத்து வாப்பா... முட்டிக்காத.. மெதுவா வா.."

------------------------------------------------------------------------------------

சேர்ந்தார்களா ரேணுகாவும் ராமுவும்? வாசிக்கலாம் வரும் பாகங்களில்.

2 கருத்துகள்: