வியாழன், மே 03, 2012

தொடர்கதை --> காதலி காதலி!#4

முந்தைய பாகங்கள்:


காதலி காதலி!  #1 | #2  | #3 

அன்று காலை பத்து மணி, ஞாயிற்றுக் கிழமை, நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சியை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ரேணுகா.

பின்னே இருந்து ஒரு கை, அவளது கண்களை மூடியது, "ராமு சும்மா இரு.. நாடகம் பாக்கறேன்ல.. கைய எடு.."

"நாடகம் பாத்தா ஒலகத்தயே மறந்துடுவியே... ஞாயிற்று கிழமை தான் எனக்கு விடுப்பு, அன்னிக்காவது உன்னோட கொஞ்ச நேரம் செலவு பண்ணலாம்னா நாடகம் பாத்துட்டு உக்காந்துட்ற"

"ஆமா போ, அப்படியே பெருசா லட்சக் கணக்குல போட்டு வாங்கிக் குடுத்துட்ட பாரு, எங்க அப்பா என்ன எப்டி பாத்துக்கிடாங்க தெரியுமா, அவங்கள எல்லாம் விட்டுட்டு, உன்ன கல்யாணம் பண்ணேன் பாரு, என்ன கொஞ்சினா மட்டும் போதாது, சம்பாதிக்கணும், பணம் இல்லாம எதுவும் நடக்காது"

"ஏய், ஏன் எப்பப்பாரு பணம் பணம்னே பேசற, பணக்காரண கல்யாணம் பண்ணி இருந்தா புரியும் உனக்கு, பணம் இருந்திருக்கும், அத சம்பாதிக்க ஓடிருப்பானே தவிர உன்ன நல்லா பாத்ருக்கமாட்டான்."

"உடனே அறிவுரைய ஆரம்பிச்சிடாத, போ, போய் சமையல் பண்ணு, வாரம் முழுக்க நான் தான பண்றேன், இன்னிக்கு ஒரு நாள் நீ தன் பண்ணனும், போ.."

"உனக்கு இப்போ புரியாது ரேணு, ஒரு நாள் பாசமா பாத்துக்க ஆள் இல்லாம ஏங்குவ, அப்போ புரியும் உனக்கு..", சமையல் செய்ய அடுப்படியில் நுழைந்தான் ராமு(ராமச்சந்திரன்).

கால் மேல் கால் போட்டு மீண்டும் நாடகம் பார்க்கத் தொடங்கினாள் ரேணுகா.

அழுகை நிற்கவே இல்லை ரேணுகாவிற்கு, கணவன் தனக்காக பாசமாக சமைத்த நாட்கள், தன் கடும் சொல் தாங்கிய நாட்கள், நினைவை வந்து வதைத்தது.

"அப்பா எப்பம்மா வருவாங்க?", முரளியின் கேள்வி காதுள் மீண்டும் மீண்டும் ஒலித்தது.


அழுதவாறே படுக்கையில் யோசனையில் மூழ்கினாள் ரேணு மீண்டும்.

கல்லூரி இறுதி ஆண்டு,

"ராமு, இனி நம்ம எப்டி சந்திக்கிறது? எங்க வீட்ல எனக்கு மாப்ள பாக்க ஆரமிச்சுட்டாங்க, நீ கண்டிப்பா பெரிய மென்பொருள் நிறுவனத்-ல வேலைக்கு சேந்திடு, அப்புறம் எங்க வீட்ல பேசு, ஒத்துப்பாங்க, ஒத்துக்கலனா, நான் உன்னோட வந்துடறேன்."

"ரேணு, நான் உனக்கு எத்தன தடவ சொல்லிருக்கேன், எனக்கு மென்பொருள் நிறுவனத்ல வேல பாக்க விருப்பம் இல்லன்னு, நான் அரசு சேவைப் பிரிவு தேர்வுக்கு தயார் பண்ணிட்டு இருக்கேன், அது இன்னும் ஒரு 4 வருசத்துக்குள்ள நான் கண்டிப்பா தேர்ச்சி ஆகிடுவேன், என்னோட வாழ்நாள் லட்சியம் ரேணு இது, தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ, அப்புறம் பெத்தவங்க சம்மதத்தோட தான் நம்ம கல்யாணம் நடக்கணும்."

"நீ தேர்ச்சி ஆவணு என்ன நிச்சயம் ராமு, இப்போ கல்லூரியிலயே தேர்ச்சி ஆகிட்டா சம்பாதிக்கலாம் சீக்ரமா"

"சீக்கிரமா பணம் சம்பாதிக்கணும்னு, எனக்கு பிடிக்காத ஒரு வேலைய என்னால செய்ய முடியாது ரேணு, நீ எனக்காக காத்துக்கிட்டு இரு, தயவு செஞ்சு, நீ மேல படி, வீட்ல படிக்கிறேன்னு சொல்லு. இப்போதைக்கு கல்யாணம் வேணாம் நாலு வர்ஷம் போகட்டும்னு சொல்லு.."

"சரி, நான் பேசிப் பாக்கறேன், நீ நான் சொன்னா கேக்கவே மாட்ட.."


-----------------------------------------------------------------------------

என்ன நடந்தது ராமு ரேணுவுக்குள்? வாசிக்கலாம் நாளை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக