செவ்வாய், மே 08, 2012

தொடர்கதை --> காதலி காதலி!#8

முந்தைய பாகங்கள்: 

காதலி காதலி!  #1 | #2  | #3 | #4  | #5 |  #6  | #7 

அழுகையும் சோகமுமாய் சோர்ந்து போய் அமர்ந்து இருந்தான், ராமு.
அவன் சொன்ன கதையைக் கேட்ட குமரேசன், "தம்பி, உனக்காக, கைய வெட்டிக்கிற அளவுக்கு வந்திருக்குதுயா இந்தப் பொண்ணு, கட்டிக்கோ இவளையே, நல்லா இருக்கும்யா உன் வாழ்க்க"

"அத தான்னே நானும் நெனைக்கிறேன், ஆனாலும் இப்போதைக்கு எனக்கு வேல இல்லையேண்ணே.. இந்தப் பொண்ணோட அப்பாவும் எனக்கு இவள கல்யாணம் பண்ணி வைக்றதுல விருப்பமா இல்ல.. அதான் யோசனையா இருக்கு.."

"உனக்கென்னையா.. தங்கம் நீ.. நல்லா வருவயா, கல்யாணம் பண்ணிக்கோ, சும்மா ஒரு வேலேல சேந்துகிட்டே படி.. நீ நல்லாப் படிக்கிற புள்ள தான, கண்டிப்பா ஒரு நாள் கலெக்டர் ஆவயா"

"சரிண்ணே. அவங்க அப்பாக்கு தகவல் சொன்னேன், அவரு இரக்கமே இல்லாம என் பொண்ணு செத்துட்டா என்ன மீறிப் போனப்போவேனு பெரிய வார்த்த எல்லாம் பேசுறாரு.."

"அப்பானா கோவம் வரதான் செய்யும், இத்தன வருசம் பெத்து வளத்த பொண்ணு, நேத்து வந்தவனுக்காக நம்மள மீறிப் போய்ட்டாளேனு வருத்தம், கோவம் இருக்கத்தான் செய்யும், மாறிடுவாருயா.. கவலப்படாத.. இப்போதைக்கு உன் படிப்பையும் இந்த பொண்ணையும் மட்டும் நென."

"ம்ம் சரிணே..", ராமு சோகமாய் உட்கார்ந்திருக்க, உள்ளிருந்து தாதி வந்தாள், "நீங்க தான அந்தப் பெண் கூட வந்தது? கண்ணு முளிச்டாங்க, வந்து பாருங்க, ரொம்ப சிரமப் பட வைக்காதிங்க, ரொம்ப வலுவில்லாம இருக்காங்க"

உள்ளே சென்றான் ராமு, ரேணுகாவின் அருகில் சென்றான்.

வார்த்தைகள் எழாமல் போனாலும்,
சைகைகள் சேராமல் போனாலும்,
கண்கள் கலங்கின,
ஒன்றாய்க் கலந்தன.

அமைதியாய் ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம், விழியோடு
விழி மன்னிப்புக் கடிதம் போட்டுக் கொண்டார்கள்.

"ஏய் பாத்துக்கிட்டே இருக்காதடா, ஏதாவது பேசு..", சோகத்தையும் அமைதியையும் தன் சில்லென்ற வார்த்தைகளால் உடைத்தாள் ரேணு.

"உன்ன என்ன சொல்லனே தெரில... ஏன் ரேணு இவ்ளோ சேட்ட செய்ற.. இதுக்கு உனக்கு தண்டனை கண்டிப்பாக் குடுக்கணும்.."

"ஏய் பெருசா தண்டனை குடுக்காத, நான் பாவம்.."

"என்ன தெரிமா தண்டனை", அவள் அருகே நெருங்கினான் ராமு.

"ஏய்.. கொழுப்புடா உனக்கு..", போ தூரமா.

"ஏய் பைத்தியம், உன் காதுல சொல்ல வந்தேன், ஒடன கற்பன பண்ணிக்கோ நீயா., நான் நல்ல பையன்.."

"என்ன சொல்ல வந்த..?"

"உன்ன எப்பவும் என்னோடவே வச்சுப்பேன், உங்க அப்பாகிட்ட போன்னு இனி சொல்ல மாட்டேன், உனக்கு ஒடம்பு சரி ஆனதும் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்.."

"ஹையா.. அப்போ வா.. எனக்கு இப்போவே சரியா போச்சு.." துள்ள நினைத்து தோற்றுப் போனாள் ரேணுகா.

"ஏ ஏ.. படு கழுத, அதான் ஒடம்பு சரி இல்லல.. படு..", படுக்க வைத்து தலையில் மெல்ல வருடினான் ராமு.


"ராமு நெசம்மா? என்ன இப்போ ஒடம்பு சரியானதும் கல்யாணம் பண்ணிபேல? சும்மா எனக்கு இப்போதைக்கு சந்தோசத்துக்கு சொல்லலயே?"

"இல்ல ரேணு, உங்கப்பாட்ட பேசிப் பாத்தேன், ஒத்துக்கிற மாதிரி தெரியல, அதான், உன்ன இப்போவே கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்., உனக்கு என் மேல நம்பிக்க இருக்குல ரேணு? நான் நல்லா வருவேன்னு?"

"இருக்குடா, சீக்கிரமா நீ பெரிய ஆளா வருவ"

-------------------------------------------------------------------

இவ்வளவு பாசமாக இருந்த ரேணுகாவும் ராமுவும் எப்படிப் பிரிந்தார்கள்? ஏன் ராமு வெளிநாடு சென்றான்? வாசிக்கலாம் அடுத்த பாகத்தில்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக