வியாழன், மே 10, 2012

தொடர்கதை --> காதலி காதலி!#9

முந்தைய பாகங்கள்: 


காதலி காதலி!  #1 | #2  | #3 | #4  | #5 |  #6  | #7  |  #8 


அன்று இரவும் இருட்டில் தன் நினைவுகளை அசை போட்ட வண்ணம் படுத்திருந்தாள் பாடலின் துணையோடு ரேணுகா, நிலவும் குளிர்ந்த காற்றும் அவளது நினைவுகளைக் கலைக்க சாளரத்தின் வெளியே போட்டி போட்டுக் கொண்டிருந்தன.

ராமுவின் மீது இருந்த காதல், பிரிவின் போது நரகமாய் வருத்தியது. தனது முட்டாள் தனத்தால் பிரிந்த அவர்களது உறவை, காதலை, வாழ்க்கையை, எண்ணி எண்ணி கண்ணீர் விடுவதே இரவில் அவளது முழு நேர வேலையாகிப் போய் இருந்தது.

கற்பனை செய்வாள், தன் அருகே ராமு படுத்து தன் கை பற்றி தன் கண்ணீர் துடைப்பதாக. நெற்றியின் முன் ஊசலாடும் தனது கூந்தலை கையால் ஒதுக்கி, கதை பேசுவதாய்.

கற்பனையிலேயே தனது வாழ்க்கை ஓடி விடுமோ என்ற பயம் தொடங்கி விடும் கற்பனை ஒத்திகைகளின் முடிவில்.

பக்கம் படுத்திருக்கும் அன்பு மகனின் தூங்கும் விழிகள் கூட "அப்பா எப்போமா வருவாங்க?" கேள்வி கேட்பது போலவே தோன்றியது அவளுக்கு.

கண்ணீரோடு முரளியின் முகம் பார்த்து, நெத்தியில் முத்தம் வைத்துத் தலை கோதி முடிக்கும் வேளை, மனம் சற்று லேசானது போல் தோன்றினாலும், முரளியை எப்படி நல்ல விதமாய் வளர்ப்பது,
தந்தையைப் பற்றி வளர்ந்த மகன் கேள்வி கேட்டால் என்ன சொல்லி சரி செய்வது? உண்மை சொன்னால் தன்னையே வெறுத்து விடுவானோ? எண்ணங்கள் விரிகையில் கணம் இன்னும் அதிகமாகவே செய்தது ரேனுகாவிற்கு.

நினைவுகள் மலர் விரிவது போல, மெதுவாய் விரிந்தது.

"ரேணு.. இன்னிக்கு நம்ம வீட்டுக்குப் போறோம்.. உனக்கு நான் நிறைய பரிசு வாங்கி வச்ருக்கேன்.."

"ம்ம்.. என்ன பரிசு ராமு? எனக்கு இன்னிக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா?"

"எனக்கும் தான் ரேணு.. நாளிக்கே நமக்கு கல்யாணம். நீ இதுவரைக்கும் எனக்காக அனுபவிச்ச சிரமத்துக்கெல்லாம் சேத்து கல்யாணம் முடிஞ்சப்ரமா உன்ன எப்டி பாத்துக்கறேன்னு பாரு.."

"ம்ம்.. நீ என்ன பாத்துப்பனு எனக்குத் தெரியும் ராமு.. நாளைக்கு வர காத்திருக்கக் கூட எனக்கு பொறுமை இல்லடா"

"ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆரப் பொறுக்கலயாம்-னு சொல்லுவாங்க, இவ்ளோ நாள் காத்துக்கிட்டு இருந்தேல, ஒரு நாள் முடியாதாக்கும்."

"ம்ம் சரி.. சரி.. என்ன பரிசு வச்ருக்க? சொல்லு... குடு.."

"வீட்டுக்குப் போனதும் குடுக்றேன், வீட்ல இருக்கு ரேணு.."

வீட்டில்:

நுழைந்ததும் தேடினாள் பரிசை ரேணுகா. "என்ன பரிசு.. சொல்லு ராமு.. எனக்கு ஆவலா இருக்கு., சொல்லு.."

"இரு.. காட்றேன்.. கிட்ட வா இங்க வா.."

"என்ன..? வந்துட்டேன் சொல்லு ராமு சீக்ரமா..", சிணுங்கினாள் செல்லமாய் ரேணுகா.

"கண்ண மூடு, திரும்பு அந்தப் பக்கம்...", திரும்பிய ரேணுகாவின் கண்களைக் கட்டினான் ராமு.

" கண்ணக் கட்டிட்டு காட்ற அளவுக்கு அவ்ளோ பெரிய பரிசா? சீக்கிரமா ராமு.."

"இரு.. பொறுமை ரேணு..", கண்களைத் திறந்து கையில் ஒரு பரிசுப் பொட்டலத்தை நீட்டினான்..

பிரிக்கத் தொடங்கினாள் ரேணுகா அந்தப் பொட்டலத்தை., பாவம் ராமு அறிந்திருக்கவில்லை அவள் பரிசைப் பிரிக்கத் தொடங்கிய பொழுதே அவர்களது பிரிவும் தொடங்கி இருந்தது.

பரிசைப் பிரிக்கத் தொடங்கிய போது இருந்த ஆனந்தம் காணாமல் போனது ரேணுகாவின் முகத்தில் பிரித்து முடித்த போது.

"இது தான் நீ சொன்ன பெரிய பரிசா?", ஏமாற்றம் கலந்த குரலில் கேட்டாள் ரேணுகா.

"ஏன் ரேணு பிடிக்கலையா? இது உனக்கு நல்லா இருக்கும், சாதாரண கைத்தறிப் பொடவ தான், ஆனாலும் இதுல என் அன்பு நிறைய இருக்கு ரேணு, என்னால இவ்ளோ தான் ரேணு முடியும்.. என்கிட்டே இப்போ பெருசா வேல கெடையாது, பெருசா பணம் கிடையாது.., இப்போதைக்கு இவ்ளோ தான் முடியும் ரேணு.. நான் நல்லா வந்துடுவேன் சீக்கிரமா, அப்போ உனக்கு விலை ஒசத்திய பரிசு வாங்கித் தரேன் ரேணு.." சமாதானம் செய்தான் ராமு.


"ம்ம்..", ஏமாற்றம் விலகாமலே இருந்தாள் ரேணுகா.

நினைவுகளோடு நித்திரை கொண்டாள் ரேணுகா. கனவிலும் பல நேரங்களில் அவளது நினைவுகளே நிறைந்து இருந்தன. தவறை உணர்ந்து ராமுவை எண்ணி தினம் ஏங்கினாள். பரிசுகளே வேண்டாம், ராமு மட்டும் மீண்டும் வரமாய் வாழ்வில் வந்தால் போதும் என்றே கனவிலும் வேண்டிக் கொள்ளத் தொடங்கி இருந்தாள் ரேணுகா.

--------------------------------------------------------------------


முரளியின் கேள்விக்கு விடை கிடைத்ததா? ரேணுகா ராமுவுடன் மீண்டும் சேர்ந்தாளா?

வாசிக்கலாம் வரும் பகுதிகளில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக