முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சனிப் பிரதோஷம் - கோவிலுக்குப் போகலாமா?

இந்தப் பதிவை நீங்கள் படிக்கும் முன், "கடவுளும் கண்மணியும்!"  இந்தப் பதிவை படித்துவிடுங்கள், அப்போது தான் உங்களுக்கு எனக்கும் கடவுளுக்கும் இருக்கும் புரிதல் புரியும்! :)

சரி, சனி பிரதோஷம், கோவிலுக்குப் போகலாமா? அதுவும் குறிப்பாக சிவன் கோவிலுக்குப் போகலாமா? இந்தக் கேள்விக்கு எனது பதில் என்ன என்பதே இந்தப் பதிவு.

"என்னம்மா? சனி பிரதோஷம், ரொம்ப சிறப்பு சிவன் கோவிலுக்குப் போறது, போகலாமான்னு கேள்வி கேக்குற நீ?", இப்படி நினைக்கிறீர்களா? கடவுள் பக்தி நிறைய உங்களுக்கு உண்டா? அப்போ, இந்தப் பதிவை தயவு செய்து படிக்காதீர்கள், நீங்கள் அதற்கும் மீறி படித்தீர்களேயானால், என்னைத் திட்டுவீர்கள், இல்லை வருத்தப்படுவீர்கள், இல்லை, "இந்தப் பொண்ணு மோசம்!" என்று சொல்வீர்கள்! இதில் ஏதாவது ஒன்று நடக்கும். அதற்கும் மீறி படித்தால் படியுங்கள், நான் பொறுப்பில்லை பிறகு, படித்துவிட்டு என்னைத் திட்டாதீர்கள்! நான் பாவம்! :(
சிவன்

சரி, சனி பிரதோஷம், கோவிலுக்குச் சென்றால் என்ன சிறப்பு? நிறைய புண்ணியமாம்! விரதம் இருந்து சென்றால், நினைத்ததெல்லாம் நடக்குமாம், என் அத்தை  சொல்லிக்கொண்டு இருந்தார் காலையில் என் வீட்டிற்கு வந்தபோது. அவர் விரதம் இருப்பதாகவும் சொன்னார்.

விரதம்... நான் எல்லாம் இருந்ததே இல்லை! சாப்பிடாமல் இருப்பது மட்டும் ஏனோ என்னால் முடிவதே இல்லை! அதற்காக கண்மணி குண்டாக இருப்பாள் என்றெல்லாம் கற்பனை செய்துவிடாதீர்கள்! :D :D :P

சரி நாம் விஷயத்திற்கு வருவோம். எதற்காக இந்தக் கேள்வி? கோவிலுக்குப் போகலாமா என்று?

காரணம் இருக்கிறது! நேற்று சனி பிரதோஷம், நான் எங்கள் ஊரில் இருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்றேன், அம்மா ஆசையாக வா போகலாம் என்று அழைத்ததால்!

அதுவும் ஆயிரம் முறை கேட்டிருப்பேன், "கூட்டமா இருக்காதே? இன்னிக்கு பிரதோஷம்னு அத்த சொன்னாங்க? அப்போ கூட்டமா இருக்கும்ல, நாளைக்கு போகலாமா?"

"அதெல்லாம் ரொம்ப கூட்டம் இருக்காது, வா", இப்படி என்னை ஏமாற்றி அழைத்துச் சென்றுவிட்டார் அம்மா! :(

கூட்டம், அதுவும் கோவிலில் இருக்கும் கூட்டம் என்றாலே எனக்கு அத்தனை பயம்! ஏன்? காரணம் இருக்கிறதே! நான் பதினோறாவது வகுப்புப் படித்த போது, குடும்பமாக திருச்செந்தூர் சென்றிருந்தோம் , அத்தனை கூட்டம்! கூட்டத்தில் நடுவே அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டே பின்னே சென்று கொண்டிருந்தேன், ஒரு கட்டத்தில் அம்மா கையை நழுவவிட்டுவிட்டேன்! :(  சிக்கிவிட்டேன் தனியாக சிக்கிவிட்டேன் அந்தப் பெரிய, மிகப் பெரிய கூட்டத்தில், எனக்கு இருபுறமும் இரண்டு ஆண்கள், எனக்கு முன்னே ஒரு பாட்டி, பாவம் அந்தப் பாட்டி, என்னாலேயே மூச்சு விட முடியவில்லை! அவர்கள் எப்படித் தான் சமாளித்தார்களோ?

எனக்கு ஒரு புறம் நின்றவர் "டேய், எங்கம்மாவ கொன்னுடாதிங்கடா, இடிக்காதிங்கடா", என்று பெரிதாக குரல் எடுத்து கத்தத் தொடங்கிவிட்டார். பாவம் அந்தப் பாட்டி! என்னையும் வேறு அந்தப் பாட்டியோடு சேர்த்து இர பக்கமும் நின்றவர்கள் இடித்துத் தள்ளிவிட்டார்கள்! அழுதேவிட்டேன் ஒரு கட்டத்தில்! அம்மாவை வேறு காணோம்! பிறகு நான் அழுவதைப் பார்த்து ஒருவர் என்னைக் கூட்டிப்போய் என் அம்மா அப்பாவிடம் விட்டார்!

அன்றில் இருந்து ஏதாவது விசேஷம் பண்டிகை என்றாலே கோவிலுக்குச் செல்ல அத்தனை பயம் எனக்கு!

சரி நேற்று கோவிலில் என்ன ஆனது என்று கதை சொல்கிறேன் கேளுங்கள்!
உள்ளே செல்லும்போது கூட்டம் நிறைய இருந்தது போலத் தெரியவில்லை! "அப்பாடா" என்று உள்ளே சென்றேன், அம்மா சுற்றி சுற்றி கும்பிட்டார், நான் கை கூப்பிக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டே அம்மா பின்னே சென்றேன்.

சுற்றி முடித்துவிட்டு , நடுவில் உள்ளே இருந்த சாமியைக் கும்பிட அழைத்துச் சென்றார் அம்மா, கூட்டம்! :( அங்கு தான் ஊரே இருந்தது போலும், அத்தனை பெரிய கூட்டம்! கூட்டத்திருக்குள் நுழைய எனக்கு மனமே வரவில்லை, ஒரு ஓரமாக நின்றுகொண்டேன், "அம்மா, நீங்க வேணும்னா கும்புடுங்க உள்ள போய், நான் வெளிய ஓரமா நிக்கிறேன் இங்க, என்று ஒரு ஓரமாகச் சென்று நின்று கொண்டேன். என் அம்மா மிகப் பெரிய திறமை சாலி தான், அந்தக் கூட்டத்திற்குள் புகுந்து உள்ளே போய், வெளியேவும் வந்துவிட்டார்.

சிவன்
கூட்டம் பிடிக்காது தான், ஆனாலும் நேற்று கோவிலில் எனக்கு ஒரு விஷயம் மிகவும் பிடித்தது.

"சிவாய, பரமேஸ்வராய,
சந்திர சேகராய, நம ஓம்!
பவாய. குண சாம்பவாய,
சிவா தாண்டவாய நம ஓம்...!"

இப்படி கோவிலில் இருந்த எல்லோருமே ஒரே குரலில் மிகவும் அருமையாகப் பாடினார்கள், உண்மையில் அதைக் கேட்ட போது, ஏதோ ஒரு உணர்வு ஏற்பட்டது. "அந்த உணர்வு தான் கடவுளோ? அந்த ஒற்றுமை,  ஒன்று சேர்ந்து எல்லோரும் எல்லாவற்றையும் மறந்து பாடிய பாடல் தான் கடவுளோ?", என்றெல்லாம் கூடத் தோன்றியது!

எல்லோரும் சாமியைக் காண சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள், நான் என் அம்மாவைப் பார்த்துக் கொண்டே, அவர் எங்கு நிற்கிறார் என்று பார்த்துக் கொண்டே நின்று கொண்டிருந்தேன், அம்மா ஏதோ வேண்டிக் கொண்டார், அந்த வேண்டுதல் நிச்சயம் அவருக்காக இருக்காது என்பது எனக்குத் தெரியும்!

சரி அம்மா சாமி கும்பிட்டு வந்துவிட்டார், நானும் அம்மாவோடு சேர்ந்து கோவிலை விட்டு வெளியே வரலாம் என்றால், கூட்டம், யார் முதலில் சென்று பிரசாதம் வாங்குவது என்கிற போட்டியா. இல்லை, யார் முதலில் வீட்டிற்குச் செல்வது என்கிற போட்டியா என்று தெரியவில்லை எனக்கு, அது அந்த சிவனுக்குத் தான் வெளிச்சம், ஆனால், போட்டி போட்டுக்கொண்டு எல்லோரும் வெளியேறினார்கள்!(வெளியில் தான் பிரசாதம் தந்தார்கள்) நான் அம்மாவை அழைத்துக் கொண்டு ஒரு ஓரமாகச் சென்று உட்கார்ந்துவிட்டேன், கூட்டம் போனதும் நாம் போகலாம் சாமி என்று.

அந்தக் கூட்டத்தில் மட்டும் சிக்கி இருந்தால், மீண்டும் ஒரு முறை காணாமல் போய் இருப்பேன்!

கோவிலுக்கு வெளியே அத்தையைப் பார்த்தேன், "என்ன அத்த, ஒரே கூட்டம், எப்டி சாமி கும்டீங்க?", இப்படி நான் கேட்க, "எரநூறு ரூவா டிக்கெட் வாங்கிடேன்ல... முன்னாடி உக்கார வச்சுட்டாங்க...", பெருமையாகச் சொல்லிக் கொண்டார்!

"காசே தான் கடவுளடா" இப்படி பாட்டெல்லாம் பாடி இருக்காங்களே, அதெல்லாம் உண்மை தானோ?

சரி சொல்றதெல்லாம் சொல்லிட்டேன், இனி நீங்களே முடிவு செஞ்சுக்கோங்க, கோவிலுக்கு போலாமா? வேண்டாமா?

போலாமா? வேண்டாமா?!!!

கருத்துகள்

  1. அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்
    அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்.
    அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
    அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.

    = திருமந்திரம்.

    உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
    வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
    தெள்ளத் தெரிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
    கள்ளப் புலன் ஐந்தும் காளா மணி விளக்கே.

    ... திருமந்திரம்.

    ஆன்மாவின் சூக்குமத்தை உணர்ந்து நானே அவன் எனும் நிலை அடைந்தவர்க்கு
    கோவில் என்று தனியே ஒன்றுமில்லை.

    சுப்பு தாத்தா.
    www.pureaanmeekam.blogspot.com
    www.kandhanaithuthi.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரி தான், கோவில் என்று தனியே ஒன்றுமில்லை!
      நன்றி சுப்பு தாத்தா!

      நீக்கு
  2. நீங்கள் கடவுளை பக்தர்களின் வழி பார்த்தீர்களானால் இப்படித்தான் கேள்விகள் வரும்.. பக்தியை காட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி.. அவர்களுக்கு தெரிந்தது பாட்டு பாடுவது, உருகுவது.. பிரசாதம் வாங்குவதை பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள்.. அதில் சண்டை போட்டு என் ஆச்சி ஒவ்வொரு முறையும் வாங்கி வருவார்.. ஒரே ஒரு பருக்கை பொங்கலையோ புளியோதரையையோ தன் வாயில் போட்டு விட்டு மீதியை கடவுள் நம்பிக்கை இல்லாத என் தாத்தாவிற்காகவும், கடவுள் நம்பிக்கை குழப்பத்தில் இருக்கும் எனக்கும் என வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் பத்திரமாக கொண்டு வந்து எங்களை வம்படியாக திங்க வைப்பார்.. நான் மாட்டேன் என்று சொன்னாலும் என் தலையில் தட்டி வாயில் கொஞ்சத்தை திணித்து விடுவார்.. (அதில் லேசாக கலந்திருக்கும் திருநீரின் வாசமும் அதன் சுவையும் அவ்வளவு அருமையாக இருக்கும்..) அந்த அன்பு தான் கடவுள் என்பது என் கருத்து.. சண்டை போடாமல் பொறுமையாக இருந்தால், “கடவுள் ஆசி பெற்ற” அந்த பிரசாதம் எங்கே தங்களுக்கு கிடைக்காமல் போய் விடுமோ என்னும் பதற்றம் காரணமாக இருக்கலாம் கண்மணி.. தங்கள் பக்திக்கு கடவுள் அந்த பிரசாதம் கொடுத்திருக்கிறார் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு.. என்ன ஒன்று கூட்ட நேரத்தில் தான் சாமியை பார்ப்பேன் என்கிற அவர்களின் பிடிவாதம் தான் எனக்கு பிடிக்காது.. எங்கம்மா நம்ம் ஊர் பங்குனி பொங்கல், சித்திரை பொங்கல் அன்னைக்குலாம் ஒரு 4,5 தடவை கோயிலுக்கு கூட்டிட்டு போக சொல்லி டார்ச்சர் பண்ணிருவாங்க :-( ஆனால் நீங்கள் சொன்னீர்களே, மொத்தமாக கடவுளை பாடி வேண்டும் போது ஒரு மாதிரி இருக்கிறது என்று.. அந்த அலைகள் உண்மையிலேயே மனதில் ஒரு positive energyயை கொடுக்கும்.. அதனால் தான் மக்கள் கூட்டமாக வேண்டுவதை விரும்புகிறார்கள்.. இந்த மாதிரி குரூப்பாக பாடும் போது எனக்கு சில நேரங்களில் கண்கள் கலங்கும்.. ஏன்? தெரியாது ஆனால் கலங்கும்.. நான் எதையும் வேண்டி உருக மாட்டேன்.. ஆனாலும் கலங்கும். பக்தி என்பது நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் கை ரேகை மாதிரி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம்.. அதை “இப்படித்தான்” என்று யாராலும் வரையறுக்க முடியாது.. அவருக்கு கடவுளை அடையும் வழி, கடவுளோடு பேசும் வழி அதுவாக இருக்கலாம்.. நமக்கு அன்பு தான் ஒரே வழி என்பதாக இருக்கலாம்.. ஆனால் எந்த வழியாக இருந்தாலும், கடவுள் இருக்கிறார்.. அது நான் கண்ட உண்மை..
    ஓம் அல்லாஹூ அக்பர்.. ஆமேன்...நான் சரியாக கோர்வையாக சொல்லியிருக்கிறேனா என்று தெரியவில்லை.. கடவுள் பற்றியோ பக்தி பற்றியோ பேசும் போது மனது பக்தி சம்பந்தமாக பல விசயங்களை எண்ணங்கள் வழியாக கொண்டு வருகிறது... எல்லாவற்றையும் சொல்லிவிட்டேனா என்று தெரியவில்லை.. ஆனால் எனக்கு இப்போது மனது கொஞ்சம் லேசாக இருக்கிறது.. நல்ல பதிவு கண்மணி.. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு கண்மணி.. நிறைய டைப் செய்தேன்.. அது நெட்வொர்க் பிரச்சனையால் டெலீட் ஆகிவிட்டது :-( சரி அதில் ஞாபகம் இருப்பனவற்றை சொல்கிறேன்.. கடவுள் நம்பிக்கை என்பதை ஒவ்வொருவரும் அவர்கள் வழியில் காட்டுகிறார்கள்..நீங்கள் அன்பின் வழி என்கிறீர்கள்.. அவர்களுக்கு அது கடவுளிடம் உருகு வேண்டும் வழி.. கூட்டத்தில் பாட்டு பாடுவதில் ஒரு அதிர்வலை இருக்கிறது.. எனக்கு இப்போது கூட கோயிலில் கூட்டமாக பாட்டு பாடும் போது கண்கள் கலங்கும்.. ஏன்? தெரியாது.. ஆனால் கலங்கும்.. என் ஆச்சி ஒவ்வொரு பிரதோசத்திற்கும் சென்று விடுவார்.. ஒவ்வொரு தமிழ் மாத முதல் தேதியிலும் எங்கள் (அவர்கள்) குல தெய்வ கோயிலுக்கும் சென்றுவிடுவார்.. பயங்கர கூட்டம் இருக்கும்.. அந்த அதிர்வை அவர்கள் உணர்வதால் தான் கூட்டமாக கோயிலுக்கு செல்கிறார்கள்.. சரி பிரசாதத்திற்கு ஏன் இவ்வளவு அக்கப்போர்? என் ஆச்சியும் அடித்து பிடித்து பிரசாதம் வாங்குவார். கடவுள் நம்பிக்கை இருக்கும் அவர் அதை முழுதாக தின்று விடாமல், ஒரே ஒரு பருக்கையை மட்டும் உண்டு, மிச்சத்தை வீட்டுக்கு எடுத்து வந்து பாதி நாத்திகர்களான எனக்கும் என் தாத்தாவுக்கும் கொடுப்பார். என் தாத்தா அதை திண்பண்டமாக உண்பார். நான் சாப்பிட முடியாது என்று சொன்னால் என் தலையில் ஒரு தட்டு தட்டிவிட்டு ஒழுங்கா சாப்பிடு என்பார். திருநீரு வாசத்தில் இருக்கும் அந்த பொங்கலோ புளியோதரையோ அவ்வளவு ருசியாக இருக்கும். இது தான் இந்த அன்பு தான் எனக்கு தெரிந்த பக்தி. அதே போல் ஆண்களை விட பெண்களுக்கு கூட்டமாக சாமி கும்பிட பிடிக்கும்.. எங்கம்மா நம்ம ஊரு மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கலுக்கும், பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கலுக்கும் என்னை டார்ச்சர் செய்து விடுவார்.. 4,5 முறையாவது கோயிலுக்கு போய் அவருக்கு அந்த கூட்டத்தில் சாமி கும்பிட வேண்டும்.. என் அப்பா ஒரு பக்திப்பழம் என்றாலும் அவருக்கும் இந்த கூட்டமெல்லாம் கொஞ்சம் அலர்ஜி.. கடவுள் நம்பிக்கை என்பது கை ரேகை போல்.. ஒருவருக்கு ஒருவர் வேறு படும்.. கோயிலில் கும்பலில் லட்சம் பேர் இருந்தாலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் பக்தியில் ஒரு procedure இருக்கும். ஆனால் எல்லோரின் ஒரே தேவை அன்பு மட்டும் தான்..அந்த அன்பை நோக்கி தான் கடவுள் இட்டுச்செல்கிறார். இந்த மறுமொழி மூலம் நான் கடவுள் நம்பிக்கையில் இன்னும் குழப்பமான நிலைக்கு செல்கிறேன்.. எவ்வளவு குழம்புகிறோமோ அவ்வளவு pass ஆகிறோம் பக்தியில்.. நல்ல பதிவு கண்மணி.. வாழ்த்துக்கள்.. ஓம் அல்லாஹூ அக்பர்.. ஆமென்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் சரி தான் நீங்கள் சொல்வதும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடுகிறது கடவுள் நம்பிக்கை! உங்கள் பாட்டி அவர் சாப்பிடாமல் அந்தப் பொங்கலை உங்களுக்கும் தாத்தாவிற்கும் கொடுத்தாரே, அது தான் கடவுள் எனக்கு. உண்மை, நேற்று ஒன்றாக எல்லோரும் சேர்ந்து பாடிய அந்தப் பாடல், எனக்கு உள்ளே என்னவோ செய்தது, சிலிர்ப்பது போல இருந்தது. ஏதோ ஒரு வித உணர்வு, உறுதியாக நல்ல உணர்வு தான் அது. ஆனால், அந்தக் கூட்டத்தில் சிக்கி இடிபடுவது தான் எனக்கு சுத்தமாகப் பிடிக்காத ஒன்று.

      கூட்டமாக வழிபடலாம் தவறில்லை, ஆனால் ஒரு ஒழுங்கு இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்! இல்லையா?

      நான் வேண்டிக்கொள்வேன் தினமும், கடவுளிடம், என் கடவுளுக்கு பெயர் கிடையாது, எங்கிருக்கிறார் தெரியாது, ஆனால் அவரிடம் நான் இன்பமோ துன்பமோ பேசிக்கொள்வேன், தனியாக பேசிக்கொள்வேன்! இது தான் என் கடவுள். என் அம்மாவிற்காக கோவிலுக்குச் செல்வேன்.

      நீண்ட கருத்துரைக்கு நன்றி!

      நீக்கு
    2. //நான் வேண்டிக்கொள்வேன் தினமும், கடவுளிடம், என் கடவுளுக்கு பெயர் கிடையாது, எங்கிருக்கிறார் தெரியாது, ஆனால் அவரிடம் நான் இன்பமோ துன்பமோ பேசிக்கொள்வேன், தனியாக பேசிக்கொள்வேன்! இது தான் என் கடவுள்.// கிட்டத்தட்ட என் கடவுளும் இது தான் :-)
      //நீண்ட கருத்துரைக்கு நன்றி!// :-( என்னால் ஒரு கருத்துரை கூட சிறியதாக போட முடியவில்லைனு சொல்றீங்களா? சோ சேட்...

      நீக்கு
    3. சின்னதா போட முடியலன்னு எல்லாம் சொல்லல! நல்லா தெளிவா இருக்கு உங்க கருத்து,ஒரு சிலர் தான் இவ்வளவு பொறுமையா நீளமா போடுவாங்க, நீங்களும் அதுல ஒருத்தர். :)

      நீக்கு
  4. பெயரில்லா3/13/2013 6:15 AM

    பக்தனை இறைவன் நாடுவான்
    அவன் பக்தியில்!
    கலைஞனை..
    அவன் கலையில்!
    பக்தி என்பது மெய்,
    அது உங்களுள்ளும் இருக்கிறது..
    இறைவனும்!
    :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) பெரியவங்க சொன்னா சரியா தானே இருக்கும். :) நன்றி...

      நீக்கு
  5. "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை " என்பார்கள், அதனை முறையின்றி செயல்படுத்துகிறோம் , அதனைத் தான் நாம் இன்று பொது இடங்களில் காண்கின்றோம். எனக்கு கிடைத்தால் போதும், நான் முன்னிலை பெறவேண்டும் என்ற அகங்காரம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் இருக்கலாம். அகங்காரம் என்று சொல்லலாமா என்று எனக்குத் தெரியவில்லை! கருத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்