முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குண்டு!

குண்டா? அட, இது நீங்கள் நினைப்பது போல உடல் பருமன் குறித்த பதிவு அல்ல!.

இது தத்துவம் அல்லது, உண்மை, அல்லது, ஒருவரின் கருத்து என்று கூட வைத்துக் கொள்ளலாம்! ஆம், இது ஒருவரின் கருத்து தான்.

ஒருவர் என்றால் யாராக இருக்கும்? வழக்கம் போல, என் அப்பாக்குட்டி (அப்பா) தான். என்னிடம் அவரைத் தவிர்த்து வேறு யார் கருத்து சொல்வார்கள்?

ஏதோ ஆர்வமாக என் அப்பாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தேன். திடீரென்று ஏதேதோ பேசி, எனக்கும் என் தம்பிக்கும் இருக்கும் சுதந்திரம், அதில் இருக்கும் வேறுபாடு என்று பேச்சு வந்தது.

"எப்பவும் அவன் தான் சுதந்திரமா இருக்கான், என்ன சுதந்திரமா விடவே மாட்டிக்கிறீங்க", இப்படி நான் எப்போதும் போலவே குறைபட்டுக் கொள்ள, என் அப்பா அப்போது தான், இந்த "குண்டு" கருத்தை, கதையைச்  சொன்னார்.

குண்டா? ஆம் குண்டு! சரி, என்னவென்று அதிகம் யோசிக்காதீர்கள், நானே சொல்கிறேன்.

என் அப்பாவுக்கு நான் ஆண் பிள்ளையாகப் பிறக்கவில்லையே என்று வருத்தமாம். உடனே தவறாக நினைக்காதீர்கள், நான் பெண் பிள்ளை என்பதால் வெளியே என்னைத் தனியே அனுப்ப அப்பாவுக்குக் கொஞ்சம் பயம், கொஞ்சம் என்ன, நிறையவே எனலாம்.

நான் வேறு சும்மா இருக்கமாட்டேன், அந்தக் கல்லூரியில் அது நடக்கிறது, இந்தக் கல்லூரியில் இது நடக்கிறது என்று ஏதாவது போட்டியில் கலந்து கொள்ள போயே தீருவேன் என்று நிற்பேன்.

அது ஏனோ, வெளியே தனியே அனுப்பினால், என்னை காக்கா தூக்கிச் சென்று விடுமோ, என்று ஒரு பயம் அவருக்கு! ஆனாலும், இப்போதெல்லாம் கொஞ்சம் அனுப்புகிறார், நான் கொஞ்சம் பெரிய பெண் ஆனதால், என்னால் எதையும் சமாளிக்க முடியும் என்று தோன்றிவிட்டது போலும்! :)

என்ன தான் அப்பா நான் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் சொல்கிறார்கள் என்றாலும், எனக்கு ஒரே வருத்தாம், இல்லை, கோபம் என்றே சொல்லலாம்.

"அதென்னப்பா, நான் பொண்ணா இருக்கதால இப்போ என்னவாம்? என்னாலையும் வெளில தனியா பத்ரமா போயிட்டு வர முடியும், நாலு எடத்துக்கு போனா தான் நெறைய தெரிஞ்சுக்க முடியும், பையன்னா என்ன, பொண்ணுனா என்ன?", இப்படி நான் அப்பாவிடம் பேசும் போது கொஞ்சம் குரலை உயர்த்தியே கேட்டுவிட்டேன்.

அப்பா உடனே "இரு சொல்றேன்", என்று ஒரு கதை சொன்னார்கள்! இல்லை தத்துவம் எனலாம் அதை.

ஆண் பிள்ளை இரும்பு குண்டு போல, எங்கு போனாலும் எதில் இடித்தாலும் தாங்கிக் கொள்ளும். பெண் பிள்ளை கண்ணாடி குண்டு போல, எளிதில் உடைந்துவிடும் - இப்படிச் சொன்னார்.

நான் எப்படிப் பட்ட ஆள், அதெப்படி ஒத்துக்கொள்ள முடியும்? உடனே நான் சொன்னேன், "போங்கப்பா எப்பபாரு என்னால தனியா போக முடியாது, வர முடியாதுனே சொல்றது, அதுக்கு ஒரு குண்டு வேற" இப்படிச் சொன்னேன்.

ஏன், பொண்ணு இரும்பு, பையன் கண்ணாடினு சொல்ல வேண்டியது தான. இப்படி என்னென்னவோ பேசினேன்.

உடனே அப்பா சொன்னார், "சரி நைட் ஒரு மணிக்கு அந்த பிள்ளையார் கோவில்ல இருந்து வீட்டுக்குத் தனியா வந்துடுவியா?" இப்படிக் கேட்டார்.

"ம்ம் வந்துடுவேனே, நீங்க தான் விடமாட்டிங்க", இப்படிச் சொன்னேன் நான்.

நீ வருவேன்னு தான் சொல்லுவ, ஆனா, அங்க அந்த ரெட்டப் பாலத்தத் தாண்டுறப்போ நாலு பேரு வந்து வழி மறச்சா என்ன செய்வ? - இப்படிக் கேட்டார் அப்பா.

"ரெட்டப் பாலமா...?", அப்போது தான் புரிந்தது, அப்பா வீட்டை விட்டு தூரமாக இருக்கும் பிள்ளையார் கோவிலை சொல்லி இருந்தார் என்பது, நான் பிள்ளையார் கோவில் என்றதும் என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் மரத்தடிப் பிள்ளையாரை நினைத்துவிட்டேன் :P

"ஒ.. அந்தப் பிள்ளையார் கோவில சொன்னிங்களா.. நான் நம்ம காலனி பிள்ளையார நெனச்சுட்டேன். அது, அதெல்லாம் எந்தப் பிள்ளையார் கோவில்னாலும் நான் வந்துடுவேன்." என்று சொன்னேன், ஆனால் உண்மையில் வர முடியுமா, யாராவது வழி மறித்தால் என்ன செய்வேன் என்பதெல்லாம் யாருக்கு வெளிச்சமோ!

உடனே அப்பா சொன்னார் இப்படி.

அதே இரவு ஒரு மணிக்கு என் தம்பி அந்தப் பாலத்தைக் கடந்து வந்தால், அங்கு அமர்ந்திருக்கும் சாமியார் அவனைப் பார்த்து புன்னகைத்துவிட்டு தியானத்தைத் தொடர்வாராம்.

அதே, நான் அந்த வழியில் வந்தால், சாமியார் பெரிய கொள்ளைக் காரனாக தீயவனாக மாறி வந்து என்னை மிரட்டுவாராம்! காரணம் நான் பெண்ணாம்!

இப்படிச் சொன்னதும், "சரிப்பா நான் எங்கயும் போகல தனியா, நீங்க வாங்க கூட", என்று சொல்லி பேச்சை முடித்துவிட்டேன்.

அப்பா சொல்வதெல்லாம் உண்மை தான். ஆனாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. யாரால் தான் ஏற்றுக் கொள்ள முடியும், "நீ வலிமை இல்லாதவன்" என்று சொன்னால்? உங்களால் முடியுமா என்ன?

உண்மை சில சமயம் அதிகம் கசக்கும் தான் போல! நான் பெண்! பல வகையிலும் நான் பெண் என்பதற்கு பெருமைப்பட்டாலும், சில நேரங்களில் வருத்தம் தான்!

பெண்மை போற்றுவோம்! :P :P


கருத்துகள்

  1. பெண்களுக்கு எதையும் செய்ய சுதந்திரம் உண்டு, இந்த சமூகம் அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு வரும் போது.. ஆனால் இப்போதைக்கு அதெல்லாம் நடக்காது.. அதனால் கொஞ்சம் சூதானமாக இருப்பது தான் அவர்களுக்கு நல்லது.. அப்பா சொன்னது சரி தான்.. ஆனால் நான் ஒரு முறை சொன்னது போல், சாதாரண விசயங்களுக்கு பெண்கள் அழுதுவிடுவார்கள், ஆண்கள் பெரிய இவர்கள் போல் சீன் போடுவார்கள்.. மிகப்பெரிய பிரச்சனைகளுக்கு ஆண்கள் ஒடிந்து விடுவார்கள், ஆனால் பெண்கள் பொறுமையாக நின்று சாதிப்பார்கள்.. உடலளவில் வேண்டுமானால் பெண்கள் வீக்காக இருக்கலாம், ஆனால் மனதளவில் நாங்க தான் ரொமப் வீக்... :-(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், மனதளவில் பெண்கள் வலிமையானவர்கள் என்று தான் சொல்கிறார்கள். நான் எப்படி என்று எனக்கே தெரியவில்லை! கடினமான நேரம் எதுவும் எனக்கு இதுவரை வந்ததில்லை!
      நன்றி.

      நீக்கு
  2. எது எப்படி இருந்தாலும் உங்க நேர்மைய நான் பாராட்டறேன்...
    அப்புறம் இன்னொரு விஷயம் நைட் 1 மணிக்கு பசங்க கழுத்துல செயின் போட்டுகிட்டு தனியா போறதும் ஆபத்துதான்...
    கவரிங் ஆ இருந்தாலும் கழுத்தை அறுத்துட்டு எடுத்துட்டு போய்தான் உரசியே பார்க்கறாங்க...
    நண்பன் கல்யாணத்துக்கு வெளியூர் போனப்ப நைட் 9 மணிக்கு ஈரோடு பஸ் ஸ்டான்ட் பக்கத்துல திட்டம் போட்டு வம்பிழுத்து அடிதடி நடக்கற மாதிரி என் நண்பனோட தங்க சங்கிலிய பறிச்சுட்டு போயிருக்காங்க...
    அதுலருந்து கொஞ்ச நாளைக்கு எங்க எல்லாருக்குமே நைட் தனியா வெளியா போக பயமாதான் இருந்தது...
    நான் சொல்ல வர்ரது நீங்க மட்டுமில்லை நாங்களும் வீக்தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) நன்றி! நீங்களும் வீக்?அதுவும் சரி தான்.

      நீக்கு
  3. இன்னுமா அந்தக் காலத்திலேயே இருக்கிறீர்கள்...?

    குண்டு - கண்ணாடி : இப்போது நிலைமை தலைகீழ்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலை கீழா? நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க? எனக்குத் தெரிந்து நிறைய நகரங்களிலும் கூட பெரும்பாலான இடங்களில் இப்படித் தான் இருக்கிறது. என்ன தான் வெளியே சென்றாலும், பெற்றோருக்கு கொஞ்சம் பயம் இருக்கத் தான் செய்யும் பெண் பிள்ளை வீடு வந்து சேரும் வரை? என் உடன் படிக்கும் எல்லாப் பெண்களையும் அவர்களது பெற்றோர்கள் கண்ணாடி போல தான் பார்த்துக் கொள்கிறார்கள். ஏன், என்னையுமே என் அப்பா கல்லூரிக்கு, கடைக்கு என்று தனியே வெளியே அனுப்பினாலும், வேறு ஊருக்கு தனியே அனுப்ப கொஞ்சம் யோசிக்கத் தான் செய்வார். அனுப்பிவிடுவார் என்றாலும், கொஞ்சம் யோசித்துதான் அனுப்புவார். ஆனால், என் தம்பியை அனுப்பும் போது அந்தத் தயக்கம் இருப்பதில்லை. அதுவும் எங்கள் ஊரில் எல்லாம் பெண்கள் கண்ணாடி தான்.

      நீக்கு
  4. உங்கள் அப்பா சொல்வது சரிதான் கண்மணி. நாம் நம் நிலை உணர்ந்து இருந்துவிட்டால், நமக்கும் வருத்தமில்லை. பிறருக்கும் வருத்தமில்லை. பெண்கள் தனியான நடு இரவில் பயமில்லாமல் நடந்து போகும் நிலை நம் நாட்டில் இன்னும் வரவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் அந்த நிலை வந்தால் நன்றாக இருக்கும்!

      நீக்கு
  5. சரிதான் கண்மணி.... எனவேதான் பெண்களுக்கும் தற்காப்புக்கலை கற்றுக்கொடுக்கவேண்டும் என்றார் பெரியார்... என்னைப் பொறுத்த வரை அந்தக் கலையெல்லாம் கற்காத ஆணின் துணை மட்டும் என்ன பாதுகாப்பைத் தந்துவிட முடியும்...மனதளவில் உறுதியானவர்கள் பெண்களே...பெண்மையைப் போற்றுவோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தற்காப்புக் கலை கற்றுக் கொள்ளவில்லையே :(

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்