முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆங்கில வழிக் கல்வியா? இல்லை தமிழா? எது சிறந்தது?

இன்று ஒரு பதிவு படித்தேன். ஆங்கில வழிக் கல்வியா இல்லை தமிழ் வழிக் கல்வியா எது சிறந்தது என்று. இதோ "இங்கு".


ஆங்கிலம் படிக்க விருப்பம் இருப்பவர்கள் மட்டும் படிக்கட்டும். உண்மை, நான் பொறியியல் மாணவி. சிறுவயதில் இருந்து ஆங்கில வழிக் கல்வி தான் கற்றேன். மூன்று பள்ளிகளில் படித்திருக்கிறேன். அதில் சிறுவயதில் படித்த பள்ளி ஆங்கில வழிக் கல்வி தரும் பள்ளி தான் என்ற போதிலும், அங்கு படித்தவரை எனக்கு ஆங்கிலம் பேச வராது! படித்து பரிட்சையில் எழுதி முதல் மதிப்பெண் வாங்கி விடுவேன் ஆனால். பிறகு ஒரு பள்ளிக்கு மாற்றினார்கள் அப்பாவிற்கு வேலை மாற்றம் ஆனபோது. அந்தப் பள்ளியில் ஆங்கிலத்தில் மட்டும் தான் பேச வேண்டும். அங்கு சென்று ஒரு மாதம் கடினமாக இருந்தது. பிறகு ஆங்கிலம் பேசப் பழகிவிட்டேன். அடுத்து பயின்ற பள்ளியும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளி, அங்கும் ஆங்கிலம் தான் பேசினார்கள். அங்கும் என்னால் பேச முடிந்தது. நான் ஆங்கில வழிக் கல்வியே சிறுவயதில் இருந்து படித்ததால், எனக்கு சிறுவயதில் ஆங்கிலம் பேச வராத போதிலும், நடுவில் பேசியே ஆக வேண்டும் என்ற நிபந்தனை வந்த போது, கொஞ்சம் கடினமாக இருந்த போதிலும், பேசிவிட்டேன், அடிப்படையில் நிறைய ஆங்கிலத்தில் எழுதி பழக்கம் இருந்ததால்.


ஆனால், இன்று நான் பொறியியல் படிக்கிறேன். என்னுடன் நிறைய பிள்ளைகள் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி கற்றவர்கள் படிக்கிறார்கள், அவர்களில் பலர் ஆங்கில வழியில் படிக்க மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதில் வெகு சிலரே ஆங்கிலத்தில் பயில பழகி இருக்கிறார்கள். 


என் தோழி ஒருத்தி, பள்ளியில் நிறைய மதிப்பெண்கள் பெற்று பொறியியல் சேர்ந்தவள், சிறுவயதில் இருந்து அவளது பள்ளியில் அவள் தான் முதல் மதிப்பெண். ஆனால், தமிழ் வழிக் கல்வி பயின்றவள். இப்போது கல்லூரியில் வந்து எல்லாம் ஆங்கிலம் என்றதும், அவளுக்குக் கடினமாக இருக்கிறது. இதுவரை முதல் மதிப்பெண் மட்டுமே வாங்கிப் பழகியவளுக்கு, இங்கு வந்து ஆங்கிலம் என்ற காரணத்தால் அவளது மதிப்பெண் குறைந்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 


அவளது தன்னம்பிக்கை சுத்தமாக இப்போது அடிபட்டுவிட்டது. அவள் படிப்பதற்கே தகுதி அற்றவள் என்பது போல நினைக்கத் தொடங்கிவிட்டாள். மேல் படிப்புப் படிக்கலாம், வேலைக்குச் செல்லலாம் என்று பள்ளியில் படிக்கும் போது நம்பிக்கையோடு இருந்தவள், இப்போது இந்த நான்கு ஆண்டுகள் மட்டும் போதும், எனக்கு படிப்பே வரவில்லை என்று சொல்கிறாள்.


காரணம், ஆங்கிலம், இதே பாடத்தைத் அவள் இப்போது தமிழில் படித்திருந்தால், உறுதியாகச் சொல்ல முடியும் என்னால், அவள் முதல் மதிப்பெண் இப்போதும் பெறமுடியும் என்று. 


இங்கு எனக்குத் தெரிந்து, ஆங்கில வழிக் கல்வி, தமிழ் வழிக் கல்வி எது வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், சிறுவயதில் இருந்தே ஆங்கில வழிக் கல்வி என்றால் ஆங்கில வழிக் கல்வி. தமிழ் என்றால் இறுதி வரை தமிழிலேயே படிக்கலாம். நடுவில் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கோ, ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கோ மாறும் போது தான் பிரச்சனை வருகிறது என்பது எனது கருத்து. 


உதாரணமாக இப்போது என்னை தமிழில் பொறியியல் படிக்கச் சொன்னால், எனக்குக் கடினமாக இருக்கும். ஆனால், என்னால் படிக்க முடியும், காரணம் தமிழ் என் தாய் மொழி. இதுவே, தமிழ் வழிக் கல்வி பயின்ற ஒரு மாணவரால், இதே போல ஆங்கிலவழியில் படிக்க இயலுமா என்பது சிறிது சந்தேகம் தான். ஆனால், பழகப் பழக வந்துவிடும். ஆனால், பழகும் வரை பலரும் தாக்குப் பிடிப்பதில்லை என்பது தான் இங்கு பிரச்சனை.


நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

கருத்துகள்

  1. /// நடுவில் தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கோ, ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கோ மாறும் போது தான் பிரச்சனை வருகிறது ///

    100 % உண்மை...

    சிறுவயதில் இருந்து ஆங்கில வழிக் கல்வி தான் கற்றதால் உங்களுக்கு பிரச்சனையில்லை...

    தமிழோ, ஆங்கிலமோ, ஹிந்தியோ, எந்த மொழியானாலும் முதலில் முழுவதும் கற்றுக் கொள்கிறோமா....? என்றால் கிடையாது... எல்லாவற்றையும் தமிழில் புரிந்து கொண்டு கற்கிறோம்... கற்க வைக்கிறோம்... கற்க வைக்கிறார்கள்... அப்படியானால் முதலில் தமிழில் முழு தேர்ச்சி பெற்று உள்ளோமா...? சந்தேகம் தான்... சரி, அது இருக்கட்டும்...

    எந்த மொழியானால் என்ன..? ஐந்து மொழி கற்றுக் கொண்டால், அவர் ஐந்து பேருக்கு சமம்... உலகில் எந்த மூலைக்கும் செல்லலாம்-யாருடைய துணையுமின்றி....!
    - (இது எனது சேமிப்பு கருத்துப் பெட்டகத்திலிருந்து)

    /// 1. தமிழ் வழிக் கல்வி பயின்ற ஒரு மாணவரால், ஆங்கிலவழியில் படிக்க இயலுமா என்பது சிறிது சந்தேகம் தான். ///

    /// 2. ஆனால், பழகப் பழக வந்துவிடும். ஆனால், பழகும் வரை பலரும் தாக்குப் பிடிப்பதில்லை என்பது தான் இங்கு பிரச்சனை. ///

    1 & 2 ஆர்வம் இருந்தால் படிக்க இயலும், எதையும் தாக்குப் பிடிக்கவும் முடியும்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆர்வம் இருந்தால் கற்றுக் கொள்ளலாம் எதையும். உண்மை! நன்றி!

      நீக்கு
  2. அன்புள்ள கண்மணி திரு தனபாலனின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்ளுகிறேன்.
    எதுவுமே சுலபம் மனமிருந்தால்.
    நானும் முழுக்க முழுக்க தமிழ் வழிக் கல்வி பயின்றவள் தான். ஆங்கிலத்தில் முதுகலை பயின்றவள் அல்ல. ஆனாலும் ஆங்கிலம் சொல்லித் தரும் ஆசிரியை ஆக வேலை பார்த்தேன். எந்தச் சூழ்நிலை நமக்குக் கிடைக்கிறதோ அதற்கு நாம் நம்மை - குற்றம் குறை சொல்லாமல் - தயார் செய்து கொள்ள முன் வரவேண்டும்.

    இன்னொன்று: நம் பள்ளிகளில் ஆங்கிலத்தை வெறும் மதிப்பெண்கள் பெற மட்டுமே சொல்லித் தருகிறார்கள், நாம் கற்கிறோம். இந்த மனப்பான்மை மாற வேண்டும். தமிழ் வழிக்கல்வியானாலும் ஆங்கிலம் ஒரு பாடமாக ஒன்றாம் வகுப்பிலிருந்து படிக்கிறோமே. சுமார் 12 ஆண்டுகள் அந்த மொழியைப் படித்துவிட்டு பிறகு அது வரவில்லை என்றால் நம்மிடம்தான் தவறு, இல்லையா?
    முதலில் மதிப்பெண்களுக்காக படிப்பது என்ற எண்ணத்தை மாணவர்களின் மனதிலிருந்து அகற்ற வேண்டும். வேலைக்காக என்றில்லாமல் மனமுவந்து படிக்க வேண்டும்.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் சரி தான் அம்மா. தமிழ் வழிக் கல்வி என்றாலும் சிறுவயதில் இருந்து ஆங்கிலமும் கற்றுத் தருகிறார்கள் தானே. ஆனால் என்ன செய்வது, இன்று பெரும்பாலானோர் மதிப்பெண் வாங்கத் தானே படிக்கிறார்கள்! முதல் பெண் வாங்குபவர்களைத் தானே பெருமையாகச் சொல்கிறார்கள். இன்றும் கல்லூரியில் என் உடன் படிக்கும் சிலர் அப்படியே புரியாவிட்டாலும் மனப்பாடம் செய்து முதல் மாணவர்களாய் இருக்கிறார்கள்!

      உண்மை தான், மாணவர்களிடம் ஆர்வம் இருந்தால், எதுவும் முடியும்! என்ன மாதிரி :P :) :D

      நீக்கு
  3. தமிழ் வழியா ஆங்கில வழியா என்பது முக்கியம் இல்லை.. அந்தப்பெண் (உங்கள் தோழி) பள்ளியில் ஆங்கிலத்தையும் ஒரு பாடமாக படித்திருக்கிறாரே? பின் என்ன பிரச்சனை? படிக்கும் காலத்தில் அவர் ஆங்கிலத்தையும், மற்ற தமிழ்ப்பாடங்களை (கணிதம், அறிவியல் போன்றவை) புரிந்து படித்திருந்தால், இன்று அவருக்கு பிரச்சனையே வந்திருக்காது.. புரிந்து படிக்க வேண்டும்.. பள்ளிகளில் புரிவது போல் சொல்லித்தர வேண்டும்.. இப்போதெல்லாம் பல அரசு/தனியார் பள்ளிகளில் யார் ஒழுங்காக சொல்லித்தருகிறார்கள்? வெறும் மனப்பாடம் மட்டும் தானே?
    என் நண்பன் ஒருத்தன் ஃபாரின்ல ரிசர்ச் பண்ணிட்டு இருக்கானே, அவன் ஆரம்ப காலக்கல்வி முழுக்க முழுக்க தமிழில் படித்தான் என்றால் நம்ப முடியுமா? அவன் தமிழும் சரி ஆங்கிலமும் சரி புரிந்து படித்தான்.. ஆங்கில மீடியம் வந்த பிறகும் கஷ்டப்படாமல் படித்து முன்னேறினான்.. படிப்பதை புரிந்து படித்தால் தமிழ் ஆங்கில பேதம் இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். புரிந்து படிப்பதில்லை பெரும்பாலானோர். பள்ளியில் பெரும்பாலும் இவர்கள் தெரிவிட்டஆம் கலூரியில் வந்து சற்று தடுமாறிவிடுகிறார்கள். எனக்குத் தெரிந்தும் நிறைய பேர் தமிழில் பயின்றவர்கள் சிறப்பாக ஆங்கில வழியில் மேற்படிப்பை முடித்து இருக்கிறார்கள்.

      ஆக, நாம் இப்போது ஒரு முடிவுக்கு வருகிறோம், ஆங்கிலம் தமிழ் இரண்டும் படிக்கலாம், ஆர்வம் இருக்க வேண்டும் ஆனால். :) நன்றி. தெளிவாகிவிட்டேன்.

      நீக்கு
    2. மொழிகளை கற்பதில் தவறில்லை.. அதை அரசியலாக்குவது தான் தவறு.. ஒவ்வொருவரும் தன் தாய் மொழியை படிக்க வேண்டும் என்பது பெற்றோர் கையில் தான் இருக்கிறது.. அரசையே எல்லாவற்றிலும் இழுக்க கூடாது..

      நீக்கு
  4. நான் தமிழ் வழியில் தான் கல்வி பயின்றேன், இளங்கலை படிக்கும் பொழுது முதல் வருடம் சற்றே தடுமாற்றம் . பின்னர் பயிற்சியில் பழகிவிட்டது. எங்கள் கல்லூரி விடுதியில் தினமும் ஹிந்து நாளிதழ் இலவமாக ஒவ்வொரு அறைக்கும் கொடுக்கிறார்கள் ஆனால் படிக்கப் படுவது சிலரால் மட்டுமே.
    சிலர், புரியாமல் மனப்பாடம் செய்வதில் வித்தகர்களாய் இருக்கிறார்கள்.!!!!
    " விதை விரும்பினால் தானே விருட்சம் ஆக முடியும். நாம் தண்ணீர் விட்டு என்ன பயன் ?"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். முயற்சி செய்தால் தான் எதுவும் முடியும்.

      நீக்கு
  5. கண்மணி . உங்களுக்கு ஒரு செய்தியை சாட் மூலம் தெரிவித்தேன். பார்த்தீர்களா ? ஒரு ஆங்கில ப்ளாக் ஒன்று இந்த வார இறுதிக்குள் ஆரம்பிக்கிறேன். உங்களுக்கும் துணை ஆசிரியர் இணைப்பினை அனுப்பி வைக்கிறேன். நீங்கள் அதில் விரும்பிய தலைப்பில் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்தி? ம்ம் எழுதலாமே! நன்றி :)

      நீக்கு
  6. Good post ! well said. I completely agree with you every words u said. I appreciate you for being a college student still blogging. Keep it up. Since you are a student u can judge easily than anyone else about the realities and problems faced by Tamil medium students. All Tamil medium students can not switch over successfully to English medium when they enter college, only few can succeed. Their voice are unheard. I too suffered in my college like your friend mentioned in this post. I won't support for Tamil medium in school and English medium in higher studies. Need uniform system for all. I too wrote a post last year regarding this issue.

    தற்கொலையை நோக்கித் தள்ளப்படும் தமிழ்வழி மாணவர்கள் - ஆங்கில வழியில் படிப்பது தவறா ?

    sorry i don't have tamil fonts right now. so i typed in English

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி :) தங்களது பதிவையும் வாசிக்க இதோ வருகிறேன்.

      நீக்கு
  7. உண்மைதாங்க ... நானெல்லாம் ரெம்பவே சிரமப்பட்டேன் , பட்டுக்கொண்டிருக்கிறேன் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் சிறிது காலத்தில் உங்களுக்கும் ஆங்கில சிறப்பாக சரளமாகப் வந்துவிடும், கவலை வேண்டாம்.

      நீக்கு
  8. நமக்கு எந்த மொழியில் சிந்தனைகளும், எண்ணங்களும் எழுகின்றனவோ அந்த மொழியில் ஆரம்ப கல்வி படிப்பது தான் சிறந்தது, ஆங்கிலம் பள்ளிகளில் மொழியாக பயிற்றுவிக்கப்படவேண்டும் பாடமாக அல்ல, நான் 5 ம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வியில் படித்தவன், அப்போது எங்கள் பள்ளியில் பாடம் நடத்துவது என்பது, ஆங்கிலத்தில் வாசித்து தமிழில் அர்த்தம் சொல்வது, இப்படியாகத்தான் ஆரம்ப கல்வி எனக்கு அறிமுகமானது. அத்ற்கு பேசாமல் தமிழிலேயே படிப்பது நல்லது.(பாடம் சொல்லி தருவதற்கும் தமிழர்த்தம் சொல்லித்தருவதற்கும் வித்தியாசம் உண்டு என்பதை அறிய எனக்கு காலம் பல ஆகியிருக்கிறது).என்னை பொறுத்த வரையில் தமிழ் வழி ஆரம்ப கல்விதான் சிறந்தது.ஆங்கிலத்தை மொழியாக கற்றுகொள்ள 6 மாதம் முதல் 1 வருடம் போதும்...பல வருடம் நமக்கு ஆங்கிலத்தோடு பரிச்சயம் இருந்தும் பேச முடியாததும்,புரிந்து கொள்ள முடியாததற்கும் ஒரே காரணம் ஆங்கிலம் நமக்கு மொழியாக சொல்லித்தரப்படாமல் பாடமாக மதிப்பெண் நோக்கத்தில் சொல்லித்தரப்படுவதே !!.நம் வசதிக்கும் தேவைக்கும் ஏற்ப மொழிகள் பல கற்று,பல விசயங்களை பல மொழிகள் வாயிலாக அறிந்து கொள்ள முடியும். பயிற்று மொழி எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்.,பயில்வதற்கு அந்த மொழி நமக்கு தெரிய வேண்டும்,அப்போது தான் மொழி வழியாக விசயங்களையும்,பாடங்களையும் புரிந்து கொள்ள முடியும்... (அதிகமா கருத்து சொல்லிட்டேன் என்று நினைக்கிறேன் !! கருத்து சொல்லனும்னு தோனிச்சு ...) :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) நீளமான கருத்து தான். உண்மை, மொழியை மொழியாகக் கற்க வேண்டும். எனக்கு எல்லாம் சிறுவயதில் நான் எப்படிப் படித்தேன் என்பதே நினைவில் இல்லை!

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்