செவ்வாய், அக்டோபர் 01, 2013

நானும் நார்த் இந்தியனும் #4

இது ஒரு தொடர் பதிவு! முந்தைய பதிவை இங்கே படிக்கலாம் - நானும் நார்த் இந்தியனும்! #1 #2 #3

[ நீண்ட நாட்களாக எழுத நேரமே அமையவில்லை, கல்லூரி இறுதி ஆண்டு என்பதால், அதிகம் படிக்க வேண்டி இருந்துவிட்டது. இருந்தாலும் எழுதாமல் இருக்க மனமே இல்லை. சரி இன்றாவது எழுதிவிட வேண்டும் என்று உட்கார்ந்துவிட்டேன், இதோ ஆரம்பித்தும்விட்டேன்! முந்தைய பதிவுகள் எல்லாம் படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன், இல்லை என்றால் மேல் உள்ள இணைப்பில் சென்று படித்துவிட்டுத் தொடருங்கள், அப்போது தான் புரியும் :) ]


என்ன சொல்லிக் கொண்டு இருந்தேன் சென்ற பதிவில்.... ஆ, காதல் கல்யாணம் பற்றி எல்லாம் நாங்கள் பேசியதைச் சொல்லிக் கொண்டு இருந்தேன் அல்லவா? தொடரலாம்.


என் தோழியும் நானும் நிறைய பேசியதுண்டு, நான் சொன்னது போல, ஆராய்ச்சி குறித்து, கலாச்சாரம் குறித்து, குடும்பம் பற்றி இப்படி என்னெனவோ! அதில் அடக்கம், இந்தக் காதலும் கல்யாணமும், இதை இறுதியாகச் சொல்லி இந்தத் தொடர்பதிவை முடிக்கலாம் என்று நினைத்தேன்! ஆக, இது தான் இறுதி அத்யாயம். (இதுக்கு மேல இந்த மொக்கைய நீங்க படிக்க வேண்டியதில்ல, அய் ஜாலி! :) :) )

இங்கு நாங்கள் பேசிக்கொண்டதைப் பற்றிச் சொல்லவதற்கு முன், ஒரு குட்டி Flash back :P

"ஏய் அவ பசங்க கூட எல்லாம் பேசுவாளாம், ரொம்ப மோசம்! இப்டி தான் இருப்பாங்க போல, அந்த ஊர் பொண்ணுங்க எல்லாம்!", இது நான் எட்டாம் வகுப்புப் படிக்கும் போது, என் வகுப்பிற்கு புதிதாக சென்னையில் இருந்து வந்த ஒரு பெண்ணைப் பார்த்து சொன்ன டயலாக் (dialogue).

ஆம், அப்போது நான் அப்படித் தான் இருந்தேன், என் வீட்டில் என்னை அப்படித் தான் வளர்த்து இருந்தார்கள்! "ஆண்கள் எல்லாருமே மோசம், அவர்களிடம் எல்லாம் அதிகம் பேசவே கூடாது, அதை மீறி சகஜமாக ஆண்களிடம் யாராவது பேசினால் அது பெரும் குற்றம்!", இப்படித் தான் நினைத்துக் கொண்டு இருந்தேன், இல்லை, நினைத்துக் கொண்டு இருந்தேன் என்பதைவிட என்னை என் வீட்டில் அன் அப்பா அம்மா அப்படிச் சொல்லித் தான் வளர்த்து, நினைக்க வைத்து இருந்தார்கள்!

அம்மா, சரி, "ஆண்கள் மோசம்" என்று அவர் சொன்னால், ஒப்புக்கொள்ளலாம்! ஆனால் அப்பா???? அவரும் ஆண் தானே? (எங்கயோ லாஜிக் இடிக்குதுல?) எனக்கு அப்படித் தான் தோன்றியது கொஞ்சம் விபரம் தெரிய ஆரம்பித்தபோது!

ஆனால், இப்போது தெளிவாக இருக்கிறேன் கொஞ்சம், எப்படி? என்ன? அதாவது, சொல்லப் போனால் யாருமே நல்லவர்கள் இல்லை! (என்னையும் சேத்தி தாங்க, சண்டைக்கு வந்துராதிங்க, நீங்க மட்டும் நல்லவங்க தான் :D :P )

""ஏய் அவ பசங்க கூட எல்லாம் பேசுவாளாம், ரொம்ப மோசம்...", இப்போது இந்த வசனத்தை யாராவது பேசினால், எனக்குச் சிரிப்பு அப்படி வருகிறது, "நாமும் இப்படித் தானே இருந்தோம் ஒரு காலத்தில் தப்பு தப்பாக எல்லோரையும் நினைத்துக் கொண்டு...", என்று!

இன்றெல்லாம் அப்படி இல்லை, பெரிய புரட்சிக்காரியைப் (???!!! அப்படியா? :P சொல்லிவைப்போம் சும்மா) போல "இதுல எல்லாம் தப்பு இல்லப்பா, யார் கிட்ட எப்டி பேசணும்னு தெரிஞ்சு பேசலாம் அதெல்லாம், நாம நடத்துறதுல தான் இருக்கு அடுத்தவங்க நம்ம கிட்ட எப்டி நடந்துக்குறாங்கன்றது, அது பையனோ, பொண்ணோ, பெரியவங்களோ, சின்ன பிள்ளையோ...", என்று என் அப்பாவிடமே வசனம் எல்லாம் பேசுகிறேன், அவர் தான் பாவம், என்ன செய்ய, என் மொக்கையை எல்லாம் கேட்டுத் தானே ஆக வேண்டும், என்ன செய்ய என் அப்பாவாகப் பிறந்துவிட்டாரே!

சரி, இப்போது நாம் நம் கதைக்கு வருவோமா? நானும் என் தோழியும், என்ன பேசினோம் என்று.

அவர்கள் வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்தார்கள் என்றாள் ஒரு நாள், அன்று தான், இந்தப் பேச்சே துவங்கியது! நம் ஊர் கல்யாணத்துக்கும் அவர்களது ஊர் கல்யாணத்துக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்கத் தொடங்கினோம்.

அவர்களது ஊரில் (dhehradun), கல்யாணத்தில் பெரிய மூக்குத்தி போடுவார்களாம், கண்டிப்பாகப் போட வேண்டுமாம்! கூகுளில் தேடி நிறைய படங்கள் எல்லாம் காட்டினாள்! தலையில் முக்காடு (தொப்பி போல எனவும் சொல்லலாம்) போல அணிந்து இருந்தார்கள், பிறகு, பெரிய மூக்குத்தி! நாம் அணிவதைப் போல அல்லாமல், அத்தனை பெரிய வளையமாக இருந்தது!


நான் நம் தமிழக மணப்பெண்கள் புகைப்படங்களைக் காட்டினேன், அவள், "அட, நீங்க இவ்ளோ அழகா கல்யாணம் பண்றீங்க", என்றாள்.


பிறகு, கல்யாணத்தில் நடனம் ஆடுவது பற்றிச் சொன்னாள். "எங்க ஊர்ல எல்லாம் நாங்க ஆட மாட்டோம்", என்று நான் சொல்ல, "என்னது ஆட மாட்டிங்களா?", என்று அத்தனை ஆச்சரியமாகக் கேட்டாள்.

"என்ன இது, சந்தோஷமா கல்யாணத்துல ஆடக் கூட மாட்டிங்களா?", என்று கேட்டாள்.

"ஆமா, ஆட மாட்டோம், இங்க தமிழ் நாட்லயே, ஒவ்வொருத்தரும் ஒரு ஒரு விதமா கல்யாணம் செய்வாங்க...", என்று விளக்கிக் கொண்டு இருந்தேன், கல்யாணத்துக்குப் பிறகு விளையாடும் விளையாட்டு (இந்த தேங்காய் வச்சு, அப்பளம் ஒடச்சு?) பற்றி எல்லாம்!

பிறகு, காதல் திருமணம் பற்றிப் பேச்சு வந்தது! அவர்களது ஊரில் எல்லாம் பெரும்பாலும் காதல் திருமணங்கள் தான் என்றாள், நானும், முன்பை விட இப்போது தமிழகத்திலும் கூட இப்போதெல்லாம் காதல் திருமணங்கள் அதிகமாக நடப்பதாகச் சொன்னேன்”

அவள் சொன்ன வரை, காதல் திருமணங்களுக்கு பெற்றோர் அத்தனை எதிர்ப்புத் தெரிவிப்பது போலத் தோன்றவில்லை. காதல் என்றால் ”குற்றம்”, உண்மையில் இப்படிப் பட்ட ஒரு உணர்வு தான் என் மனதில் இருக்கிறது இன்று வரை, ”குற்றம் இல்லை” என்று தெரிந்தாலும், நான் வளர்க்கப்பட்ட விதம், அப்படித் தான் என்னை எண்ண வைக்கிறது.

அவள் சொன்னாள், “எனக்குப் புடிச்சு இருக்குனு சொன்னா, நல்ல பையனா இருந்தா கண்டிப்பா எங்க அப்பா கல்யாணம் பண்ணி வைப்பாங்க!”

நம் வீட்டில் என்ன அப்படியா? காதல் என்று படத்தில் வந்தாலே, அப்பாவும் அம்மாவும் கொடுக்கும் ரியாக்‌ஷன் இருக்கிறதே!!! அப்பபா, பயங்கரம் தான் போங்க!

காதல் என்றாலே ஊர் சுற்றுவது, உருப்படாமல் போவது! இப்படித் தான் ஆகிவிட்டது இப்போதெல்லாம்! அதனால் தானோ என்னவோ, எல்லாக் காதலும் அப்படியே என்று பொத்தாம் பொதுவாக மாறிவிட்டது!

நான் சொன்னேன் அவளிடம், “எங்க அப்பாக்கிட்ட போய் நான் மட்டும் லவ் பண்றேன்னு சொன்னேன்னு வை, என்ன நடக்கும்னு எனக்கே தெரில!” என்று.

அவள், “என்ன?!!??”, என்று கொஞ்சம் புரியாமல் கேட்டாள்!

பிறகு புளி வைத்து விளக்கினேன் அவளுக்கு!

என்ன கேட்டாலும் ஒன்றுக்கு இரண்டாய் வாங்கித் தருவார் என் அப்பா! சிறுவயதில் இது எனக்கு சந்தோஷம் தருவதாகவே இருந்தாலும், இப்போதெல்லாம் “ஏன்பா, இப்டி காச வீணாக்குறீங்க!”, என்றே கேட்கத் தோன்றுகிறது. இப்படிச் சின்ன விஷயங்களில் எல்லாம் நமக்கு (எனக்கு) என்ன கேட்டேனோ அதை இரண்டாய்த் தந்தவர், பெரிய விஷயங்களில் ஒரு போதும் அப்படி நடந்து கொண்டதே இல்லை! 

”அப்பாவுக்குத் தெரியாதா”, இப்படி நானும், அவர் சொல்வதைக் கேட்கப் பழகிக் கொண்டுவிட்டேன்! நல்லதாகத் தான் இருக்கும் என்று நம்பிவிட்டேன். ஆனால், உண்மை தான், அப்பா எனக்காக தேர்ந்தெடுத்த படிப்பு, உயிரியல் தொழில்நுட்பம், பிடிக்காமல் தான் சேர்ந்தேன்! பொறியியலே வேண்டாம் என்று இருந்த என்னை, பொறியியல் சேர்த்துவிட்டார்கள்! பிடிக்கவில்லை தான்!

அதற்காக? படிக்காமல் இருக்க முடியுமா??? இன்று என்னைப் பார்ப்பவர்கள் யாரும், நான் பிடிக்காமல் இந்த உயிரியல் தொழில்நுட்பம் படிக்கச் சேர்ந்தேன் என்று சொன்னால், நம்பவேமாட்டார்கள்!

காரணம், ஆரம்பத்தில் பிடிக்கவே இல்லை என்றாலும், என்னை நானே தேற்றிக் கொண்டு படிக்கத் தொடங்கிவிட்டேன்! என்ன அதிசயம், என்ன படித்தாலும் எனக்கு மண்டையில் நன்றாக ஏறுகிறது! முதல் மாணவியாக எல்லாம் வந்துவிடுகிறேன்! இப்போது, எனக்கு இந்தத் துறை மிகவும் பிடித்துவிட்டது! இதில் தான் இறுதி வரை என்றெல்லாம் முடிவு செய்துவிட்டேன், ஆனாலும் இது நான் விரும்பியது இல்லை, விரும்பப் பழக்கிக் கொண்டு, பழகி பழகி, நிறைய விரும்ப ஆரம்பித்தது!

இதே கதை தான், நாளை நான் என் அப்பாவிடம் காதல் என்று சொன்னாலும் நடக்கும், இது தான் நல்லது என்று சொல்லிவிடுவார்கள்! நானும், என் பக்கம் சரியாக இருக்க வேண்டும் என்று, விரும்பப் பழகிக் கொள்வேன், வழக்கம் போல! (என்ன இருந்தாலும் நான் அப்பாவின் பெண் அல்லவா?)

இதே போல, என் தோழிக்கும் நடந்தது! நிறைய மதிப்பெண் வாங்கி இருந்தாள் பனிரெண்டாம் வகுப்பில், பொறியியல் படிக்க விருப்பம் இல்லை அவளுக்கும் என்னைப் போலவே! ஆனால், வீட்டில் சேர்த்துவிட்டார்கள் பொறியியலில் தான்! முதல் மாணவியாக இருந்தவள், கடைசியாகிப் போனாள். நான்கு ஆண்டு படிக்க வேண்டிய படிப்பை, மூன்று ஆண்டுகள் முடிந்ததுமே, முடியாது படிக்கவே முடியாது என்று சொல்லி, இப்போது, வீட்டில் இருக்கிறாள். என்னைப் போல, சமத்தாக (???!!) அவளும் படித்து இருக்கலாம் நான்கு ஆண்டுகளையும், என்ன செய்ய? இல்லையே? இதில் அவளைக் குறை சொல்வதா? அவளது வீட்டில் குறை சொல்வதா?

இதை நினைக்கும் போதெல்லாம், நான் நினைத்துக் கொள்வேன், நல்ல காலம், எனக்குப் பிடித்துவிட்டது இந்தப் பொறியியல்! ஆனால், என்னையும் உயிரியல் தொழில் நுட்பம் தவிர்த்து வேறேதாவது பொறியியல் துறையில் படிக்க வைத்து இருந்தால், இந்நேரம் நானும் உறுதியாக வீட்டில் தான் இருந்திருப்பேன்! அதுவும் இந்த கம்ப்யூட்டர் சய்ன்ஸ் மட்டும் சேர்த்துவிட்டு இருந்தால்! அம்மா, நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை! (எப்டி தான் ப்ரோக்ராம் எழுதறாங்களோ? எனக்கு வரவே இல்ல!)

ஆனால், அவள் (அவள் என்றால், என் நார்த் தோழி) கதை முற்றிலும் மாறுபட்டது, எந்த ஒரு முடிவாக இருந்தாலும், அவளே எடுத்து, அதைச் செய்கிறேன் என்று சொல்வாளாம் அப்பாவிடம், படிப்போ, விளையாட்டோ, வெளியில் நண்பர்களோடு செல்வதோ, எதுவாக இருந்தாலும்.

தவறு என்றுபட்டால் சொல்வார்களாம் அவள் வீட்டில் பார்த்து என்று, பிறகு கலந்து பேசி, என்ன செய்யலாம் என்று முடிவி எடுப்பார்களாம். 

இப்படி எல்லம் ஒரு போதும் என் வீட்டில் நடந்ததே இல்லை! ஆனாலும், என் அப்பா போல வருமா! இப்படித் தான் எப்போதும் நான் சொல்வதுண்டு.

என்ன தான், ”எனக்கு இது தான் சரி”, என்று அப்பா சொன்னதைக் கேட்டுக் கொண்டாலும், பல சமயங்களிலும், நாம் நினைத்தது போலவே படித்து இருந்தால், இப்போது எப்படி இருந்திருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்காமல் இல்லை!

இதே போலத் தான் பல விஷயங்களிலும்! இது வரை பெரிய முடிவுகள் எதுவும் நான் எடுத்ததில்லை! அப்படி நான் எடுத்தாலும், அது அப்பாவுக்கு ஏதோ நான் எதிர்த்துப் பேசுவது போலவே தோன்றுகிறது! 

”என் அனுபவம்...”, என்று சொல்லிவிடுகிறார்! நன்றாகப் படித்து பெரிய கல்லூரியில் ஸ்காலர்ஷிப்போடு படிக்கிறேன் என்று சொன்னால் கூட, வேண்டாம், பெண் பிள்ளை, வெளியே சென்றெல்லாம் படிக்க வேண்டாம் என்கிறார்கள். இது என் மீது இருக்கும் பாசமா? வெளியே செல், எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி என்னை நானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டுமா? இல்லை, வீட்டில் இருந்து கொள், அருகில் இருக்கும் கல்லூரியில் படித்தால் போதும் என்று சொல்வது சரியா?

சமயத்தில் பெண்ணாக ஏன்டா பிறந்தோம் என்று கூடத் தோன்றுகிறது! ஆனால், ஒரு போதும், என்னோடு இருந்த அந்த நார்த் தோழி அப்படி வருந்தியதாகத் தெரியவில்லை!

ஆனால், நார்த் என்றதும், எல்லா வீட்டிலும் நான் சொன்ன பெண்ணின் வீடு போல தான் இருக்கும், இப்படித் தான் இருப்பார்கள் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட முடியாது! 

அதே போல, இங்கு, நம் ஊர் பக்கமும் எல்லா வீடுகளும் ஒரே போலத் தான் என்றும் சொல்லிவிட முடியாது! 

ஆனால், நான் குறிப்பிட்ட இந்த இரண்டு வகையான வீடுகளும் இருக்கின்றன! இரண்டும் நல்ல குடும்பம் தான். இருவருமே நல்ல பெண்கள் தான்! ஆனாலும்... இக்கரைக்கு அக்கரை பச்சை என்று எனக்குத் தோன்றியது! அவளுக்குத் தோன்றவில்லையே? 

எனக்குத் தோன்றியதற்குக் காரணம், வாழ்க்கையின் எல்லா சூழலிலும், “நீ பெண். இப்படித் தான் இருக்கனும்!”, “நீ பெண், நீ பெண்...”, என்று சொல்லிக் கொண்டே இருந்ததே! 

இப்போதெல்லாம், அதிகம் தோன்றுகிறது! “அய்யோ, நான் பெண்!....” :( :(

*********
முற்றும்
*********

7 கருத்துகள்:

 1. நம் கருத்தின் மீது நமக்கு முழு நம்பிக்கை இருக்கும் போது தான் நம்மால் மற்றவர்களை நம் கருத்தை ஒத்துக்கொள்ள வைக்க முடியும். 12 முடித்தவுடன் உங்களுக்கு மருத்துவத்தில் ஆர்வம் இருந்திருந்தாலும் அதை முழு மனதோடு படிக்க வேண்டும் என விரும்பியிருந்தால் எப்படியாவது படித்திருப்பீர்கள்.. அது ஒரு ஆசை தானே தவிர, அதை தாண்டி உங்களுக்கு மருத்துவத்தை பற்றியோ, அது ஏன் பிடித்திருக்கிறது என்பது பற்றியோ தெரியாமல் இருந்திருக்கலாம்.. அதனால் அப்பா சொன்னதை ஏற்று bio-tech படித்திருக்கலாம்.. ஒவ்வொரு விசயத்திலும் நமக்கு முழு நம்பிக்கை இல்லாத வரை, அந்த விசயத்தில் நம் முடிவு பிறரால் தான் தீர்மானிக்கப்படும் அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி.. சந்தோஷ் சுப்ரமணியம் படத்துல ஒரு வசனம் வரும் நாயகன் அவன் அப்பாவிடம் பேசுவது போல், “இது அவனுக்கு நல்லாருக்குமா இருக்காதானு தான் பாப்பீங்களே தவிர, இது அவனுக்கு பிடிச்சிருக்குமா இல்லையானு நீங்க யோசிச்சதே இல்ல’னு... உங்கள் பதிவும் அதை தான் கூறுகிறது.. பெற்றவர்கள் என்றும் நம் நல்லதுக்கு தான் யோசிப்பார்கள்.. ஆனால் 25 வருடம் நான் நானாக வாழ்கிறேன். என் வாழ்க்கை இப்போது என்ன வேண்டும் வேண்டாம் என என்னால் மட்டும் தான் முடிவு செய்ய முடியும்.. அது எந்த விசயமாக இருந்தாலும்.. ஆனால் ஒன்றே ஒன்று தான், என்னை இத்தனை வருடம் வளர்த்து ஆளாக்கிய அவர்களுக்கு நான் மரியாதை கொடுக்க வேண்டும்.. அதனால் என் மனதை கட்டுப்பத்தலாம், விருப்பத்தை மறைக்கலாம்.. ஆனால் அதையும் தாண்டி ஒரு விருப்பம் வரும் போது, அது சரி என்று தெரியும் போது என் பெற்றவர்களுக்கு நான் புரிய வைக்க வேண்டும்.. அம்மா என்ன சொல்லுவாங்க, அப்பா எப்படி வருத்தப்படுவார்னு நாம யோசிக்கிற மாதிரி தான் நாம என்ன நினைக்கிறோம்னு அவங்களும் யோசிப்பாங்க.. நம் நல்வாழ்க்கைக்கு நம்மை விட அதிகம் மெனக்கடுபவர்கள் அவர்கள் தான்.. அப்படிப்பட்ட நல்ல அம்மா அப்பாவிடமே கூட நம் ஆசையை சொல்லி அனுமதி பெறமுடியவில்லை என்றால் நம் ஆசையில் தப்பு இருக்க வேண்டும், ஆசை பட்டது தப்பாக இருக்க வேண்டும், அல்லது ஆசை பட்டதை நாம் முழு மனதோடு ஆசைப்படவில்லை என அர்த்தம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஒவ்வொரு விசயத்திலும் நமக்கு முழு நம்பிக்கை இல்லாத வரை, அந்த விசயத்தில் நம் முடிவு பிறரால் தான் தீர்மானிக்கப்படும் அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி..//

   எனக்கே தெரிஞ்சு நெறைய பேர் இருக்காங்க, கேம்பஸ்ல நல்ல வேலை கெடச்சு, ஆனா ”வேற ஊரு, பொண்ணு”, இந்த ரெண்டு காரணத்த வச்சு வீட்ல விடாம, வேலைக்குப் போகாதவங்க! “பொண்ணு, இப்படி தான் இருக்கணும்னு” ஒரு முடிவோட இருக்கவங்கட்ட போய், என்னனு சொல்லி புரிய வைப்பிங்க? அதுக்கு மேலயும் நான் வேலைக்குப் போவேன்னு போனா, வீட்ல ஒதுக்கலன்னாலும், சண்ட போட்டுட்டு தான் போக முடியும்! போனதுக்கு அப்பறமா வேணா புரிஞ்சுபாங்க வீட்ல!

   ஏன், என்னையே கூட எங்க அப்பா, திருவனந்தபுரம் அனுப்ப மாட்டேன்னு தான் சொன்னாங்க! சண்ட தான் போட்டேன்! அத்தன சண்டைக்கு அப்றம் அழுகைக்கு அப்றம் தான் சரினு சொன்னாங்க! இதே என் தம்பினா ஒரு வார்த்த சொல்லி இருக்கமாட்டாங்க! என்ன காரணம்? நான் பொண்ணு? அது தான? கேட்டா, பொண்ணுக்கு வெளில பாதுக்காப்பு இல்லனு சொல்லிடுவிங்க, ஒரே போடா! எல்லாம் நாம நடந்துக்கறதுல தான் இருக்கு, பாதுகாப்பா இருக்கதும், இல்லாததும்!

   //அப்படிப்பட்ட நல்ல அம்மா அப்பாவிடமே கூட நம் ஆசையை சொல்லி அனுமதி பெறமுடியவில்லை என்றால் நம் ஆசையில் தப்பு இருக்க வேண்டும், ஆசை பட்டது தப்பாக இருக்க வேண்டும், அல்லது ஆசை பட்டதை நாம் முழு மனதோடு ஆசைப்படவில்லை என அர்த்தம்..//

   நல்ல அப்பா அம்மா தான், யார் இல்லைனு சொன்னது! என் அப்பா போல ஊர்ல யாரும் இல்ல தான். ஆனாலும், ”பெண்”, “பெண்” னு எவ்வளவு பெண் பிள்ளை மேல பாசம் வைக்கிறாங்களோ, அவ்வளவு தூரம் அவங்க, “இது தான் பொண்ணுன்னா லிமிட்...” அப்டினு வைக்க தான் செய்றாங்க.

   அதுக்கும் மீறி, என் ஆசை உறுதியா இருக்கேன்னு இருந்தா, நிறைய விவாதம், எல்லாம் நடந்து மனக்கசப்போட தான் அந்த செயல செய்யமுடியும்.

   எல்லாத்துக்கும், புரிய வைக்கிறேன்னு சொல்லி, பெரிய விவாதம் தினமும் நடந்தா??? நல்லாவா இருக்கும்?

   இப்போ உதாரணமா, வெளிநாட்ல என் தம்பிக்கு வேல கெடைக்குதுனு வைங்க, சந்தோசமா அனுப்பி வைப்பாங்க! ஆனா, இதே எனக்குக் கெடச்சா? நான் புரிய வைக்க, பேசனும், பேச்சுல ஆரம்பிச்சு, கடசில சண்டையா முடியும்!

   நான் போகவே கூடாதுனு நெனைகிறவங்க, எப்டி அனுப்புவாங்க? புரிஞ்சுப்பாங்க? நானா போய் தான் தீருவேன்னு சொல்லி போய், சரியா வேலைய முடிச்சா வேணும்னா மாறுவாங்க!

   சரி போயிட்டு வாம்மானு அனுப்புறதுக்கும், என்னமும் செய்னு அனுப்புறதுக்கும் எவ்ளோ வித்யாசம் இருக்குனு உங்களுக்குத் தெரியுமா???

   எனக்கு ஒவ்வொரு முறையும், “என்னமும் செய்” தான் நடக்குது! ஆனா, செஞ்சு முடிச்சு நாலு பேர் பாராட்டினதுக்கு அப்றம், அப்பா அம்மா சந்தோசபட்டுக்குறது!

   ஏன்? ஏன் இப்படி? இப்படியே ஒவ்வொரு தடவையும் நடந்தா, தோன தான் செய்யும், ஏண்டா பொண்ணா பொறந்தோம்னு!

   அப்றம் போகப் போகப் பழகிடும்! :)

   நீக்கு
 2. ஹ்ம் 10000000% உண்மை இப்போது நீங்கள் கூறியிருப்பது.. ஆனால் ஒவ்வொரு முறையும் விவாதம் செய்து தான் ஆக வேண்டும்.. அல்லது அவர்கள் சொன்னதை முழு மனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்..

  நீங்கள் சொல்லியபடி பார்த்தால், உங்களுக்கு பிடிக்காததை அவர்கள் செய்தாலும், முதலில் பிடிக்காமல் பின் அதை ஏற்றுக்கொண்டு ரசிக்க கற்றுக்கொள்கிறீர்கள்.. அல்லது நீங்கள் அடம்பிடித்து சாதித்து பிறர் பாராட்டும் போது உங்கள் அம்மா அப்பாவுக்கு நீங்கள் எடுத்த முடிவு சரி என்று படுகிறது..

  அப்பாவின் முடிவு சரி தான் என நீங்கள் நினைப்பதற்கும், மகளின் முடிவு சரி தான் என்று அப்பா நினைப்பதற்கும் கொஞ்ச காலம் பிடிக்கிறது.. அந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக கம்மியாக வேண்டும்.. நம் அப்பா சொன்னால் சரி தான் என நீங்களோ, நம்ம பொண்ணு தப்பா எந்த முடிவும் எடுத்திற மாட்டா என உங்கள் அப்பாவோ முழுதாக எப்போது நினைக்கிறீர்களோ அப்போது எல்லாம் சரி ஆகும்.. ஆனால் அது ஒரு ideal parent-child relationship.. மிக மிக வாய்ப்பு கம்மி..

  நீங்கள் தான் சொல்கிறீர்களே, உங்கள் முடிவை பெற்றோர்கள் கொஞ்ச காலத்தில் புரிந்து கொள்கிறார்கள் என்று... பின் என்ன தயக்கம்? ஆரம்ப கால சண்டையை நினைத்து எதிர்கால சந்தோசத்தை இழக்க வேண்டுமா? அல்லது ஆரம்பத்தில் சண்டை போட்டு எதிர்கால வெற்றியில் சண்டையை மறந்து சந்தோசமாக இருக்க வேண்டுமா என்று முடிவு செய்து கொள்ளுங்கள்..

  நானும் உங்களை மாதிரி கேப் விட்டு டைப் பண்ண கற்றுக்கொண்டேன் நீங்களும் என்னை மாதிரி நீ...............................ளமாக டைப் பண்ண கற்றுக்கொண்டீர்கள்.. சூப்பர்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுக்குனு ஒவ்வொரு தடவையும் அதே மாதிரி situation வருது, ஒவ்வொரு தடவையும் ஒத்துக்கல! என்ன அர்த்தம் இது? ரொம்ப வருத்தமா இருக்கே!

   //நம் அப்பா சொன்னால் சரி தான் என நீங்களோ, நம்ம பொண்ணு தப்பா எந்த முடிவும் எடுத்திற மாட்டா என உங்கள் அப்பாவோ முழுதாக எப்போது நினைக்கிறீர்களோ அப்போது எல்லாம் சரி ஆகும்..//

   இங்க ப்ரச்சனையே நான் “மகள்” அப்டிங்கறது தானே! என்கிட்டயே சொல்லி இருக்காங்க, இதே நீ பையனா இருந்தா ஒடனே “சரி”னு சொல்லி இருப்பேன்னு! நீ பையனா இருந்து இருக்கலாம்னு!

   நீக்கு
 3. வெளியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று உங்கள் அப்பா உங்கள் மீது காட்டும் அக்கறை முற்றிலும் சரியானதே !! உங்க அப்பா "எல்லோரும் நல்லவரே " என்று ஒரு பிலாக் எழுதனாங்க தானே , அவரிடம் சொல்லுங்க எல்லாரும் நல்லவங்க கிடையாது என்று !!,
  நேரம் இருந்தால் இந்த டாகுமென்டரிய பாருங்க: India Most Dangerous place To be a Women... இந்த டாகுமென்டரி பத்தின பதிவு.,கண்டிப்பா பாருங்க !!
  wordsofpriya.blogspot.com/2013/09/blog-post_26.html
  அப்புறம் இன்னொரு விசயம் எல்லா நார்த் பெண்களும் நீங்க சந்திச்ச உங்க தோழி மாதிரி சுதந்திரமானவங்க கிடையாது,,இங்கயும் கட்டுப்பெட்டியான அப்பாக்களும் ,கட்டுப்பாடான பொண்ணுங்களும் இருக்காங்க !! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //வெளியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று உங்கள் அப்பா உங்கள் மீது காட்டும் அக்கறை முற்றிலும் சரியானதே//

   அப்போ நான் அடுத்து மேல படிக்காம, வீட்ல இருக்க போறேன் :)

   //அப்புறம் இன்னொரு விசயம் எல்லா நார்த் பெண்களும் நீங்க சந்திச்ச உங்க தோழி மாதிரி சுதந்திரமானவங்க கிடையாது,,இங்கயும் கட்டுப்பெட்டியான அப்பாக்களும் ,கட்டுப்பாடான பொண்ணுங்களும் இருக்காங்க !! :)//

   இது நான் மேல பதிவுலயே சொல்லிட்டனே??

   --
   ஆனால், நார்த் என்றதும், எல்லா வீட்டிலும் நான் சொன்ன பெண்ணின் வீடு போல தான் இருக்கும், இப்படித் தான் இருப்பார்கள் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட முடியாது!

   அதே போல, இங்கு, நம் ஊர் பக்கமும் எல்லா வீடுகளும் ஒரே போலத் தான் என்றும் சொல்லிவிட முடியாது!

   ஆனால், நான் குறிப்பிட்ட இந்த இரண்டு வகையான வீடுகளும் இருக்கின்றன! இரண்டும் நல்ல குடும்பம் தான். இருவருமே நல்ல பெண்கள் தான்! ஆனாலும்... இக்கரைக்கு அக்கரை பச்சை என்று எனக்குத் தோன்றியது.

   --
   முழுசா படிச்சிங்களா?

   மிக்க நன்றி உங்க கருத்துக்கு :)


   நீக்கு