வெள்ளி, அக்டோபர் 25, 2013

பழசும் புதுசும்!

எப்போதுமே பழைய பொருட்களுக்கு ஒரு மவுசு உண்டு! அப்படித்தானே? பழைய நாணயங்களை சிலர் விரும்பிச் சேகரிப்பார்கள், சிலர் பழைய கலைப் பொருட்களாக வாங்கிக் குவிப்பார்கள், இன்னும் சிலருக்கு பழைய மாடல் இரு சக்கர வாகனங்கள் வாங்கும் பழக்கம் கூட இருக்கும்! இந்த வரிசையில் சேரும் இன்னும் ஒரு விஷயம் பழைய பாடல்கள். ”பழைய பாடல்கள் போல வருமா இப்போது இருக்கும் பாடல்கள் எல்லாம்”, என்று நிறைய பேர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

பழைய பாடல்களா புதியனவா என்று சண்டை போடுபவர்கள் கூட உண்டு! ஆனால், எனக்கு புதிய பாடல்கள் பிடிக்குமா? பழைய பாடல்களா? இப்படி நான் யோசித்துக் கொண்டு இருந்தேன் நேற்று இரவு படுத்துக் கொண்டே. எனக்கு புதிய பாடல்கள் மீது, “அட, ச, என்ன இது, இப்படி ஒரு பாட்டா!”, என்று ஒரு போதும் தோன்றியதில்லை. சில பாடல்கள் அவ்வளவாக விரும்பிக் கேட்காவிட்டாலும், வெறுத்ததில்லை ஒரு போதும்.

அதே போல, பழைய பாடல்கள், அதிலும் அப்படித் தான், சில பாடல்கள் விரும்பிக் கேட்டாலும், சிலவற்றை விரும்பிக் கேட்காதபோதும், வெறுப்பதில்லை!

பெரும்பாலும், பழைய பாடல் என்றதும், என் நினைவுக்கு வருவது, “காதலிக்கக நேரமில்லை, காதலிப்பார் யாருமில்லை...”, இந்தப் பாட்டு தான், அதுவும், இதை யார் பாடியது என்று கூட எனக்கு சரியாகத் தெரியாது, ஆனால், நான் எனக்கு விவரம் தெரிந்து முதல் முதலில் இந்தப் பாடலைக் கேட்டது என் தந்தை பாடித் தான்.

ஒரு பாட்டுப் போட்டியில் பாடி முதல் பரிசு வாங்கினார், இன்னும் இந்தப் பாடல் என்றால், அது எனக்கு என் தந்தையின் குரலில் தான் நினைவில் நிற்கிறது.

பிறகு இன்னும் ஒரு பாடல் பாடுவார், “யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க...”, என்று. அதுவும் எனக்கு அப்பா குரலில் தான் எப்போதும் நினைவில் இருக்கும் ஒன்று.

பழைய பாடல்களில் எல்லாம் நல்ல கருத்துக்கள் இருக்கிறது, நல்ல மெல்லிசை இருக்கிறது, இப்போதெல்லாம் அப்படி இல்லை என்று பலரும் குறைபட்டுக் கொள்வதுண்டு.

ஆனால், இப்போதும் நிறைய நல்ல பாடல்கள் எல்லாம் இருக்கின்றன, என்ன நிறைய பாடல்கள் சிலருக்குப் புரிவதில்லை, காரணம், கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டும் இப்போது இருக்கும் பாடல்களை எல்லாம்.

சமீபத்தில் என் வகுப்பில் ஒரு பாடல், நல்ல பாடல் என்று ஒரு மாணவன் போட்டுக் காட்டினான். அந்தப் பாடல், எப்படி எல்லாம் இளைஞர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள், அது எவ்வளவு தவறு என்பதை விளக்கும் விதமாக இருந்தது, ஆனால் பாருங்கள், அது இசை அமைக்கப்பட்டு இருந்த விதம், இந்தக் காலத்துப் பாடல்கள் போலவே, கொஞ்சம், வேகமாக, இருந்தது! இந்தப் பாடலைக் கேட்டால், எனக்குப் புரியும் முதல் முறையிலேயே, தெளிவாக, ஆனால், என் அப்பாவுக்கு, அது மற்றுமொறு குத்துப் பாடல், ஏதோ கருத்தே இல்லாத பாடல் என்பது போலத் தான் இருக்கும். காரணம், இசையும் பாடி இருக்கும் விதமும் அப்படி! இது தான் அந்தப் பாடல்!என் தந்தை போன்றவர்கள் கேட்டால், ஒரு இரண்டு அல்லது மூன்றாவது முறையில் தான் இந்தப் பாடலின் அர்த்தம் புரியும்! (என்ன செய்ய?!!!, பாட்டு அப்படித் தான இருக்கு!?) (வீடியோவோடு பார்த்தால் புரியும் எல்லோருக்குமே!)

இதனால், என்ன சொல்ல வருகிறோம் என்றால், இந்தக் காலத்தில் பாட்டு எழுதுபவர்கள் எல்லோருமே மோசம், புதுப் பாடல்கள் எல்லாமே மோசம், என்பது இல்லை! நல்ல புதுப் பாடல்களும் உள்ளன.

என்ன, பெரும்பாலான புதுப் பாடல்கள் கருத்துக்களை விட, உணர்வை மையமாக வைத்தே இருக்கின்றன, அதாவது புதுப் பாடலைக் கேட்டால், ஒன்று உங்களுக்கு, ஆனந்தமாக இருக்கும், எழுந்து ஒரு ஆட்டம் ஆடலாம் போல! இல்லை, அழுகை வரும் சில பாடல்களைக் கேட்கும் போதும், இல்லை, காதல் வரும் ;) ;) சில பாடல்களைக் கேட்டால். இப்படி ஒவ்வொரு பாடலும் ஒரு உணர்வைத் தரும்.

அப்போ, “ஒய் திஸ் கொல வெறி” ல என்ன உணர்வு தரும், என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. அது அவரவரைப் பொறுத்தது! சிலருக்கு, அழுகை வரலாம், சிலருக்கு சிரிப்பு, சிலருக்கு டான்ஸ் ஆடத் தோன்றலாம்!

”கருத்தான பாடல்கள் இல்லையா?”, என்றால், இருக்கின்றன, ஆனால், பழைய பாடல்களைக் காட்டிலும் புதிய பாடல்களில் நீங்கள் அத்தனை கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது! (கருத்து என்றால், இங்கே அறிவுரை, எப்படி இருக்க வேண்டும் என்பது போலப் பாடல்கள் எனக் கொள்ளலாம்)

ஏன் அப்படிப் பாடல்கள் எல்லாம் வருவதில்லை?? அதாவது அறிவுரை சொல்வது போல?

“அட, போங்க பாஸ், இப்போ எல்லாம் அறிவுர சொன்னா யாருக்குப் புடிக்குது?”, இது தான் காரணம். எத்தனை சொன்னாலும், நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித் தான் பெரும்பாலும் இருக்கிறோம், அதனால் தான், எதற்கு வீணாக அறிவுரை சொல்லிக் கொண்டு என்று சொல்வதை விட்டுவிட்டார்கள் போலும்!!!???

நான் புதிய பாடல்களும் கேட்பதுண்டு, பழையதும் ரசிப்பதுண்டு. இரண்டிலுமே ஒரு வித அழகு உண்டு. இரண்டிலும் ரசிக்க விஷயங்கள் உண்டு. சொல்லப் போனால், எனக்குப் பிடிக்காத பாடல் என்றெல்லாம் எதுவும் இல்லை.

“ஒய் திஸ் கொல வெறி, எவண்டி ஒன்னப் பெத்தான்...”, இப்படி பாடல்களுக்கும் என்னால் தாளம் போட்டு ரசிக்க முடியும், “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே, ஆடி அடங்கும் வாழ்க்கையடா...” போன்ற பாடல்களையும் ரசித்துப் பாட முடியும்.

ஆக மொத்தம் இதில் இருந்து நாம் என்ன சொல்ல வருகிறோம் என்றால், “எல்லாத்துலயுமே ஒரு அழகு இருக்கு, ரசிங்க பாஸ்” ;)

இப்போது சமீபமாக எனக்குப் பிடித்த பாடல், அடிக்கடிப் பாடும் பாடல், ”பாக்காத பாக்காத, அய்யய்யோ பாக்காத...” (வருத்தப் படாத வாலிபர் சங்கம் - படம்). ஏன், எதற்கு பிடித்தது? காரணம் இல்லை, ஆனால், பிடிக்கும், ஏதோ அழகு அந்தப் பாடலில். என்னவோ பிடித்திருக்கிறது, வரிகள், இசை, பாடியவர்களின் குரல், காட்சிகள் எல்லாமே! தயவு செய்து யாரும், இதெல்லாம் ஒரு பாடலா என்று சண்டைக்கு வந்துவிடாதீர்கள்! ம்ம்? சரியா?என்ன எனக்கு ஒரு பாடல் பிடித்துவிட்டால் என் அம்மா தான் பாவம், அதை மறுபடி மறுபடி பாடியே காதில் ரத்தம் வந்துவிடும் அவருக்கு. பிறகு என் தோழிகள், அவர்கள் அதற்கு மேல் பாவம், எப்போதும் உடன் இருக்கிறார்களே? பாடியே அழ வைத்துவிடுவது :) :)

சரி, உங்களுக்கு என்ன பாடல் பிடித்திருக்கிறது சமீபமாக?

18 கருத்துகள்:

 1. stop the பாட்டு stop the பாட்டு இந்த பாட்டு வேண்டாம் தலைவா
  1st love நினைப்பு வருது, இந்த பாட்டு வேணாம் தலைவா...
  from 3 பேர் 3 காதல்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிடிச்ச பாட்டா!! நான் கூட என்ன தான் ”Stop" சொல்றிங்களோனு ஒரு நிமிஷம் நெனச்சுட்டேன்! :)

   நீக்கு
 2. “ஒய் திஸ் கொல வெறி”.................................................................................?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்குக் கொல வெறி பாட்டுப் புடிக்குமா??? நம்பவே முடியலயே! :)

   நீக்கு
 3. புதுப்பாடல்களில் வரிகளை சத்தங்கள் விழுங்கி விடுகிறது! அதுதான் கொடுமையே! நன்றி!

  பதிலளிநீக்கு
 4. பழைய பாடல்கள் என்றும் இனிமை.... பிடித்த பாடல் ஒன்றில்லை... அது சீசன் போல், திடீரென்று கேட்கும் ஒரு நல்ல பாடல் இரண்டு மூன்று மாதங்களுக்கு மனதில் ஓடிக்கொண்டிருக்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) எல்லோருக்குமே அப்படித் தானே!

   நீக்கு
 5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 6. :) //எல்லாத்துலயுமே ஒரு அழகு இருக்கு, ரசிங்க பாஸ் ;)// சூப்பர்ப் !
  அட "எவன்டி உன்ன பெத்தான் " பாட்டெல்லாம் உங்களுக்கு பிடிக்குமா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன் புடிக்கக் கூடாதா? :) புடிக்கும், எல்லாத்துலையும் ஒரு அழகு இருக்குல :) நன்றி விஜயன்.

   நீக்கு
 7. //சரி, உங்களுக்கு என்ன பாடல் பிடித்திருக்கிறது சமீபமாக?//
  இந்த கேள்விய நீங்க கேட்பதால் எனக்கு இந்த பாட்டு நியாபகம் வருது...
  "கண்மணியே... கண்மணியே சொல்லுவத கேளு ,என் பொன்மணிக்கு கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு..." (இது பழைய பாடல் தான் ஆனால் சமீபமாய் தான் கேட்டேன்) இப்பாடலில் ஆண் குரல் பாடும் பாட்டுக்கு பெண் (ரோஹினி) அடிக்கும் கமென்ட்கள் செமயா இருக்கும்.. அப்புறம் "இது சங்கீத திருநாளா..." னு காதலுக்கு மரியாதை படத்தில் "என்னை தாலாட்ட வருவாளா" பாட்டு ராகத்திலேயே வரும் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய் என் பேருல இருக்க பாட்டு :) கேட்டதே இல்ல இது நான், அறிமுகத்திற்கு நன்றி

   நீக்கு
 8. வணக்கம் தோழி!...
  இன்றைய வலைசர அறிமுகத்தில் உங்களைக் கண்டேன்!
  இனிய வாழ்த்துக்கள்!

  இங்கு வந்ததும் எத்தனை விடயங்களை இங்கு பதிந்துள்ளீர்கள் என்று கண்டு வியந்தேன்.. மகிழ்ந்தேன்!

  வாழ்த்துக்களுடன் தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
 9. பாட்டுக்கு பழசு புதுசு பேதம் இல்லையென்றாலும், அது நம்முள் என்ன விதமான தாக்கத்தை கொண்டு வருகிறது என்பது முக்கியம். அந்தகால பாடல்களை கேட்டாலே மனம் அமைதியாகிவிடும். டென்சன் குறைந்துவிடும். அதற்காக இன்று வரும் பாடல்கள் அப்படி இல்லையா என்று கேட்காதீர்கள்.. இன்றைய பாடல்களில் அந்த அமைதி, மனதை லேசாகும் வசியம் எல்லாம் மிக கம்மி.. அப்படிப்பட்ட பாடல்களை தேடிப்பிடிக்க வேண்டும். எனக்கு பழைய பாடல்கள் தான் மிகப்பிடிக்கும், அடிக்கடி முனுமுனுப்பவைகளும் அவை தான். சின்ன வயசில் இருந்து அம்மா தன் அருகில் ரேடியோவை வைத்துக்கொண்டு அதில் வரும் பாடல்களை மிக மிக அழகாக அந்த பாடகர்களை விட அற்புதமாக பாடுவார் :) (நம்ம அம்மா ஏன் சினிமால பாட மாட்றாங்க?’னு சின்ன வயசுல அடிக்கடி யோசிச்சிருக்கேன் :P ).. அதுவும் ஒரு காரணம் எனக்கு பழைய பாடல்கள் பிடிக்க.. அதே போல் ஏ.ஆர்.ரெஹ்மானுக்கும் நான் அடிமை.. சமீபத்தில் ’மரியான்’ படத்தில் வரும் “இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன?” பாட்டு என்னை கட்டிப்போட்ட பாட்டு.. எடுத்த விதமும், பாடகர்களும், நடிப்பும், பாடல் வரிகளும் எல்லாம் சூப்பர்.. :-)
  எப்படி இருந்தாலும், comparatively பழைய பாடல்கள் தான் பெட்டர்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம், மரியான் ல அந்தப் பாட்டு நல்லா இருக்கும். புதுசு பழசு ரெண்டும் ஒரு விதத்துல அழகு தான், என்னால, இது தான் ரொம்ப நல்லா இருக்குனு சொல்லத் தெரியல, ரெண்டயும் ஒரே மாதிரி தான் கேக்கறேன். நன்றி.

   நீக்கு