முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்மை!!!

எப்படியேனும் முகம் சுளிக்காமல்., மனிதர்களை ஏய்க்காமல் , நட்போடு வாழும் ஆசையோடு தான், என் நாள் ஒவ்வொன்றையும் தொடங்குகிறேன்! 
இருட்டு அறையில் கூட முளை விடும் செடியாய், முட்டி மோதி வெளிவர நினைக்கிறேன்!
வளரும் விருட்சமாய், வளர்ந்த சில விருட்சங்களைக் கண்டு வியக்கிறேன்! வளர்ந்தும் மதி இன்றி , மனதளவில் மக்கிப் போய்க் கிடக்கும், சில விருட்சங்களை வேதனையோடு காண்கிறேன்!
"ஏக்கங்கள், ஏமாற்றங்கள், துன்பங்கள், இப்படித் தீயவையும் தகாதவையும் தேடி வரும், தேடாத நேரங்களில்", என்ற உண்மையை சிறிது சிறிதாய் அறியத் தொடங்கி இருக்கிறேன்!
எங்கும் எதிலும், பாகுபாடுகள்!
பெண் பிள்ளை என்றும் ஆண் பிள்ளை என்றும், ஒரு வித பாகுபாடும், சலுகைகளும் இருக்கத் தான் செய்கிறது!
" சாம்பல் நிறமொரு குட்டி,
கருஞ் சாந்து நிறமொரு குட்டி",
நிறங்கள் "ஆண் பெண்" என வரும் பொழுது, அன்னையும் சில நேரம் பாகுபாடு காட்டத்தான் செய்கிறாள்!

முளைவிடும் பொழுதே, "பெண் பிள்ளையடி நீ, பொறுத்துக் கொண்டு தான் போக வேண்டும்", சொல்லி சொல்லியே வளர்த்தெடுத்தார்கள் என்னையும் கூட!

பொறுமை, நாணம், விட்டுக் கொடுக்கும் பண்பு, நேசம், இப்படி நற்குணங்கள் நிரம்ப வளர்த்தெடுக்கப்பட வேண்டும் , பெண்பிள்ளைகள்! ஆம், ஆண் எப்படியும் இருக்கலாம், உலகம் உற்று நோக்குவதில்லை! பெண் ஒவ்வொரு கட்டத்திலும் கொண்டாடப்படுகிறாள், உற்று நோக்கப்படுகிறாள்!
இவளைப் போல இன்பமும் யாருக்கும் இல்லை! துன்பமும் இல்லை!
"பெண்ணாய்ப் பிறக்க, மாதவம் செய்திடல் வேண்டுமோ???" ஆம் நிச்சயம், தவங்கள் செய்து முந்தைய பிறவியிலேயே கற்றுக் கொண்டு வர வேண்டும் , பொறுமை, விட்டுக் கொடுத்தல் இவை அனைத்தையும்!
பெண்கள் நாணத்தின் உருவமாய்! நேசத்தின் பிறப்பிடமாய் உருவாகப் படுவது, பெருமையே! அடிமைத்தனம் அன்று!

நேசிப்பவருக்காய் விட்டுக் கொடுத்தல் அடிமைத்தனம் அன்று, அன்பு!
இது பெண்மைக்கு மட்டும் அதிகம் இருக்கக் காரணங்கள் இயற்கையிலேயே பல உண்டு! அன்னையாய் அவள் உணரும் , அவள் பகிரும் அன்பு, உலகில் எவராலும் இயலாது!

------------------
பெண்களில் ஒருத்தி!
கண்மணி அன்போடு!


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....