எனது முதல் இரண்டு தொடர்கதைகள் சிக்ன(க)ல், காதலி காதலி!வாசித்திருப்பீர்கள்! இது எனது அடுத்த கதை. தங்களது ஆதரவு கிட்டும் என்ற நம்பிக்கையில் தொடங்குகிறேன். எனது கதையை பகிர்ந்து, தொடர்ந்து ஊக்கம் தந்த, தமிழ் விழி வானலைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.
இது என் மண்ணின் கதை, இன்றும் ஏதோ ஒரு மூலையில் அழுது கொண்டிருக்கும் ஏழைப் பெண்ணின் கதை. தீக்குச்சியாய் இருக்கும் பெண்மையின் கதை. ஆயிரம் விளக்குகளை ஒளி ஏற்றிவிட்டு, அமைதியாய் அணைந்து போகும், பெண்மைக்கு இது சமர்ப்பணம்.
---------------------------------------------------------------------------------------
எனக்கு அப்போ மூனு வயசு இருக்கும், எங்கம்மா எறந்து போய்ட்டாங்களாம். நான் பெருசானதும் சொன்னாங்க என்ன வளத்தவங்க எல்லாரும். வெவெரம் தெரியாத வயசுல எங்கப்பா தான் என்னப் பாத்துக்கிட்டாங்க. எனக்கு இன்னும் எங்க அம்மா மொகம் தெரியாது. எங்கம்மாவ நான் பாத்ததே கெடையாது.
சின்ன வயசு, சோகம் எதுவுமே பெரிசாத் தெரியாதுன்னு சொல்லுவாங்க. அப்படி தான் இருந்தேன். எனக்கு சோகமே தெரிஞ்சதில்ல.
பள்ளிக்கூடம் போனேன் நானும் எல்லாரையும் போல. காக்கிளாசு (L.K.G) சேத்துவிட்டார் எங்கப்பா. பள்ளிக்கூடம் போறதுனாலே எனக்குப் பிடிக்காது. போகவே மாட்டேன்னு நான் அழுவேன். அப்படியே என்னக் கட்டாயப்படுத்தி ரெண்டாம் கிளாசு (வகுப்பு) வரைக்கும் படிக்க வச்சார் எங்கப்பா.
எனக்கு நல்லா நெனவிருக்கு, எங்கப்பா செத்துப் போன நாள். நான் தூங்கிக்கிட்டு இருந்தேன். எங்க அக்கா தான் எழுப்பினா என்ன.
"எந்திரி ஓவம்மா எந்திரி.."
![]() |
தீக்குச்சி! |
"எனக்கா.. தூங்க்ரேன்ல.. இந்நேரமே ஏன் எழுப்புற.."
"எந்திரிடி, அப்பா செத்துப் போயிட்டாரு.."
சடாருன்னு எந்திச்சேன். யாருமே தன் அப்பா செத்ததுக்கு சந்தோசப் பட்ருக்க மாட்டாங்க, ஆனா நான். சந்தோசப்பட்டேன். எட்டு வயசுல எனக்குப் பெருசாப் பாசமும் தெரியல, அப்பா செத்தா அடுத்து என் வாழ்க்க என்ன ஆகும்னும் புரியல.
"எந்திரிடி, அப்பா செத்துப் போயிட்டாரு.."
அப்போ எனக்கு தோனினது ஒன்னே ஒன்னு தான், அப்பா செத்துட்டா பள்ளிக்கூடம் போகவேனாமில்ல?
என்மேல அக்கறையா இருந்த கடைசி உசுரு மண்ணுக்குள்ள போகப் போகுதுன்னு எனக்கு வருத்தமா இல்ல.
பள்ளிக்கூடம் போக வேணாமேன்னு நெனச்சு சந்தோசப்பட்டேன். ஆனா, இப்போ தான் தெரியுது, அப்பா அம்மா இல்லன்னா எவ்வளவு பெரிய சாபம் அதுன்னு.
எங்கப்பா ஏன் செத்தாரு, எப்படி செத்தாருனு எனக்கு அப்போ வெவரம் தெரியாது. நான் வளந்ததுக்கு அப்பறமா தான் எங்க அக்கா சொல்லிச்சு.
அப்பாவுக்கு பொறக்கும் போதே பெடதியில (கழுத்தின் நடுப் பகுதி), சின்னதா ஒரு மச்சம் மாதிரி இருந்ததாம். அது வளர வளர அப்பா கூடவே சேந்து, பெரிய கட்டியா வளந்திருக்கு, எனக்கு அப்பாக்குக் கட்டி இருந்ததுன்னு தெரியும், ஆனா, அவருகிட்ட நான் கேட்டப்போ எல்லாம், "அது ஒன்னும்மில்லம்மா, சும்மா புன்னு..", சொல்லி அப்பா சமாளிச்சிருவார். அந்தக் கட்டி என்னனு ஆஸ்பத்திரிக்கி போனப்போ, வெட்டி எடுக்கணும் இல்லனா கொஞ்ச நாள்ல செத்துப் போய்டுவிங்கன்னு சொன்னாங்களாம், காசு அதிகம் கேட்டாங்களாம்.
கூலிக்கு மாரடிக்கிற எங்கப்பாகிட்ட காசு ஏது..? அப்படியே விட்ருக்காரு. செத்தும் போயிட்டாரு.
நெனச்சுப் பாரு, போட்டுக்க துணி இருக்காது, ஒரு வேளக் கஞ்சி தான். எத்தனையோ நாள் இருந்திருக்கேன் முழு வேளப் பட்டினியா.
எங்கப்பா செத்தனைக்கு, சடங்கெல்லாம் செஞ்சாங்க, எனக்கு அதெலாம் அப்போ வேடிக்கையா இருந்தது. துளி கண்ணீரும் வரல. ஆனா இப்போ, எங்கம்மாவ நான் பாத்ததே இல்ல, கண்ண மூடுற முன்னாடி என்ன ஓரளவாவது படிக்க வைக்கணும்னு நெனச்ச அந்த மனுசன் தான் எனக்கு அம்மாவாவும் தெரியறாரு. அவரு மொகம் எனக்கு மனசுல ஆழமா இருக்கு. அவரு மட்டும் தான் எனக்காகவே இருந்த ஒரே சொந்தம். ஒரே உசுரு. அவரு செத்ததுக்குக் கூட அழுகாத என்ன நெனச்சா, எனக்கே வெக்கமா இருக்கு. ஆனா, அது என் தப்பும் இல்ல. சின்ன வயசு, சாவுனா என்னன்னே தெரியல எனக்கு அப்போ.
இப்போப் புரியுது, அழுவுறேன் அவர நெனச்சு. எனக்கு உள்ள அவரு என்ன கையப் புடிச்சுப் பேசுனதேலாம் கேக்குது.
"ஓவம்மா.. நல்லாப் படி தாயி.. உன்னக் கடைசி வர, கூட இருந்து இந்த அப்பனால பாதுகாக்க முடியாதும்மா.. நல்லாப் படிமா.. பிற்காலத்துல உனக்கு படிப்பு ஒன்னு தான் நிரந்தரத் தொணையா இருக்கும்.."
எனக்கு நெனவிருக்கு அவரு வாசம், நாளெல்லாம் வேல பாத்து வேர்வ படிஞ்ச அந்த வாசம்... "அப்பா... ", கத்தி ஆழனும் போல இருக்கு இன்னிக்கு எனக்கு..
உண்மையிலயே அப்பா அம்மா இல்லாம வளர்றத விட வேற ஒரு கொடுமையான சாபம் இருக்கவே முடியாது இந்த ஒலகத்துல ஒரு பொண்ணுக்கு.-----------------------------------------------------------------------------------
ஓவம்மாவின் கதை கேட்கலாம் அடுத்த பாகத்தில்.
குறை நிறைகளைப் பகிருங்கள். வாசித்தமைக்கு மிக்க நன்றி.
கருத்துகள்
கருத்துரையிடுக