முந்தைய பகுதிகள்:
ஓவம்மா! #1
கட்ட அடுக்குரதுல எல்லாரும் போட்டி போட்டு
அடுக்குவோம், யாரு நெறைய கட்ட அடுக்குறது சாயுங்காலத்துக்குள்ளனு, நெறைய கட்ட அடுக்கரவங்களுக்கு
பரிசு குடுப்பாங்க, சோப்பு டப்பா, கண்ணாடி, ரப்பர் பேண்ட்னு.
ஓவம்மா! #1
“ஏய் எந்திரி எந்திரி.. எந்திரி ஓவம்மா.. கணக்குப் பிள்ள வந்துட்டாருடி.. எந்திரிக்கியா இல்லையா..?”, ஓங்கி எத்துவா எங்கக்கா..
எங்கக்கா தான் எழுப்புவா தினமும் காலைல மூனு மணிக்கெல்லாம் கணக்குப்பிள்ள வந்து கூப்ட
உடனே. தினமும் வேலைக்கு எல்லாரையும் எழுப்ப அங்க பக்கத்திலயே இருந்த கணக்குப்பிள்ள
வருவாரு. எனக்கு ஒரு பத்து வயசு கிட்ட இருக்கும் அப்போ. எங்கக்காக்கு இருவது வயசு,
கல்யாணமாகி ரெண்டு பொம்பளப் பிள்ளை வச்சிருந்தா.
அவ பிள்ளைங்க ரெண்டும் பள்ளிக்கூடம் போவும்,
நான் எங்க ஊருக்கே ரொம்ப பிரபலமான, தீப்பெட்டி ஆபீசுக்கு (தொழிற்சாலை) வேலைக்குப் போவேன்.
வேலைக்குப் போகத்தான் எங்கக்கா எழுப்புவா மூனு மணிக்கெல்லாம்.
மூனு மணிக்கி எந்திச்சி வீட்டுப் பக்கத்துல
ஒரு அடி கொழாய் இருக்கும், அதுல தண்ணி அடிச்சு, அங்கனயே குளிப்பேன். குளிக்கிறது ரொம்ப
நேரம் குளிச்சா, பின்னாடி கூடி வந்து எங்கக்கா நடு முதுகுல ஓங்கி எத்துவா. அதுக்கு
பயந்துக்கிட்டே ரெண்டு நிமிஷம் தான் குளிப்பேன்.
அவசரமாக் குளிச்சு, ஆபீசுக்குப் போவேன். கட்ட
அடுக்குவேன் நான் நல்லா. காலைல போனதும் என்ன தான் கட்ட கலைக்க சொல்லுவாங்க, நான் கலாச்சா
அன்னைக்கு நெறையா கட்ட ஓடும், மூவாயிரம் கட்ட கூட ஓடும். என்ன எல்லாரும் ராசிக்காரின்னு
சொல்லுவாங்க எங்க ஆபீசுல.

கட்ட அடுக்கும்போதே கத பேசுரதுனா எனக்கு ரொம்பப்
பிடிக்கும். முந்துன நாள் பாத்த எம்.ஜி.ஆர். படம் கதைய சொல்லிக்கிட்டே அடுக்குவேன்
என் பக்கத்துல இருக்க அக்கா கிட்ட.
சிலநேரம் கத பேசிக்கிட்டு அடுக்காம உக்காந்திருவேன்,
எங்கக்கா, அந்நேரம்னு பாத்து எங்க இருந்து தான் வருவாளோ. வந்துருவா.
“ஏண்டி கழுத, கட்ட அடுக்காம சொகமா கத கேக்குதோ, உனக்கு தெண்டச்சோறு
போடச் சொல்லுறியா வேல பாக்காம, ஒழுங்கா சாயங்காலம் காசு வீடு வந்து சேரனும், எங்கயாவது
வாங்கித் திங்கப் போன.. அவ்வளவு தான், வீட்ல சேக்க மாட்டேன். பன்னெண்டு ரூவாய்க்கு கொறச்சலா இருக்கக் குடாது..”, முதுகுல ஓங்கி எத்திட்டு, கத்திட்டுப் போவா.
அவளும் என்கூட அதே ஆபீசுல தான் வேல பாத்தா,
நான் கட்ட அடுக்குவேன், அவ அடப்பா.
ஒரு நாளைக்கு முப்பது கட்ட அடுக்குனா, எனக்கு
பன்னெண்டு ரூவா தருவாங்க, அப்போ ஒரு கட்டைக்கு எவ்வளவுன்னு கணக்குப் பாத்துக்கோங்க.
வேகமா நல்லா அடுக்குற பெரியவங்கன்னா ஒருநாளைக்கு அம்பது கட்ட கூட அடுக்குவாங்க. நானு
முப்பது தான் அடுக்குவேன் என் வயசுக்கு.
------------------------------------
ஓவம்மாவின் கதை நீளும் அடுத்த பாகத்தில்.
கருத்துகள்
கருத்துரையிடுக