புதன், ஜூன் 20, 2012

ஓவம்மா #4 (தொடர்கதை)

முந்தைய பகுதிகள்:

ஓவம்மா! #1 | #2 | #3

அக்கா அன்னிக்கு ஊருக்குப் போய்ட்டா, ஏதோ கல்யாண வீடுன்னு சொல்லி. சோறு பொங்கச் சொன்னா என்ன. வீட்டப் பாத்துக்கோ, மாமா இருப்பாரு தொணைக்குனு சொல்லிட்டு.


எனக்கு அவ்வளவு சந்தோஷம் அக்கா ஊருக்குப் போனது. என் விருப்பம் போல அன்னிக்கி பொழுதக் கழிக்கலாம்னு நெனச்சேன்.

ஆனாலும் அப்படி முடியாது, கண்டிப்பா வேலைக்கு போயே தீரனும். போனேன். ஆனா, வேலைக்கு நடுவுல அக்கா முதுகுல ஓங்கி எத்துவாலேன்ற கவல இல்லாம, நிம்மதியா கத பேசிக்கிட்டே வேல பாத்தேன்.

சாயந்தரம் வீட்டுக்குப் போனேன், காலேல பொங்குன சோறு தான் இருந்துச்சி, எனக்கு முட்ட சாப்டனும்னு ஆசையா இருக்க, அன்னிக்கி சம்பளக் காசுல, ஒரு முட்ட வாங்கி, பொரிச்சுத் தின்னேன். கொஞ்சம் கருப்பட்டி மிட்டாயும் வாங்கித் தின்னேன்.

தெரியும் எனக்கு, ஊருக்குப் போன அக்கா வந்தா, "ஏண்டி சம்பளக் காச வாங்கித் தின்ன"னு அடிப்பானு. ஆனாலும், அடி தானனு வாங்கித் தின்னுட்டேன்.

அடி வாங்கி வாங்கி, பன்னெண்டு வயசுல, எனக்கு மரத்துப் போய் இருந்தது.
அடிக்கு பயமே இல்லாமப் போய் இருந்தது. எங்கக்கா பொம்பள தான், ஆனா என்ன அடிக்கிறப்போ, மிதிக்கிறப்போ, அவளுக்கு பொம்பளப் பிள்ளைய அடிக்கிறோமேன்னு தோனவே தோனாது. கண்ணா மூடிட்டு எங்க வேணாலும் மிதிப்பா.

அன்னிக்கி ராத்திரி, தூங்கிட்டு இருந்தேன், திடிர்னு ஏதோ யாரோ கிட்ட வராப்ள தோன, டக்குனு முழிச்சிட்டேன்.

என் மாமா... தொணையா இருப்பாரு னு சொல்லிட்டுப் போனா எங்கக்கா, ஆனா அவரே தான் அன்னைக்கு வெனையாப் போனாரு.


எனக்கு அப்போ வெவரம் தெரியாது, ஆனாலும் எங்க மாமா, சீ, அவனுக்கு என்ன மரியாத, நாய், அப்படிச் சொன்னாக் கூட தப்பு, நாய் நன்றி உள்ளது! ஓநாய்.. . சின்னப் பிள்ளையைக் கூட, காமத்தோட பாக்குற ஓநாய், எனக்கு பன்னெண்டு வயசு தான், ஆனாலும் உணர முடிஞ்சுது, ஏதோ இது தப்புன்னு. அந்தத் தொடுதல் தப்புன்னு.

அந்த ஓநாய் கிட்ட வரும் போதே, தள்ளிப் போனேன், விடல, மேல மேல தப்பா நடக்க முயற்சி பண்ணுச்சு, போட்டேன், ஒரே போடாப் போட்டேன், பக்கத்துல இருந்த படிக்கல்லத் தூக்கி, ரெத்தம் கொட்டுச்சு, அலறுச்சு, இருட்டுல கத்துச்சு, ஏதோ தப்பிச்சோம்னு, ஓடிட்டேன், வீட்ட விட்டு ஓடிட்டேன்.

இனியும் வீட்ல இருந்தா, என்னால இருக்க முடியாது, நல்லது இல்லன்னு தோனுச்சு, கைல அன்னிக்கு வாங்குன சம்பளக் காசு இருந்துச்சு, அத தூக்கிட்டு ஓடிட்டேன் எங்க அக்கா வீட்ட விட்டு.

வெளிய வந்துட்டேன், இருட்டு, ராத்திரி நேரம், என்ன செய்ய, எங்க போகனு தெரியாம, நடந்தேன், நடந்து போயிட்டே இருந்தேன், எங்க போறதுனே தெரியாம.

அன்னிக்கு தெருவுல நடந்து போனப்போ, பேசுனேன், " அப்பா.. ஏன்பா என்ன விட்டுப் போனீங்க...? எனக்கு இங்க யாருமே இல்லப்பா.. எங்கப்பா போவேன்... யாரப்பா பாப்பேன்.." நடு ரோட்ல ராத்திரி இருட்டுல அன்னிக்கி நான் பயந்து பயந்து, சோகத்தோட அழுது பொலம்புனது, யாருமே இல்ல னு நெனைக்கிறப்போ இருந்த அந்த வலி, அது கொடுமையானது.

என்ன நானே தான் காப்பாத்திக்கணும், ஓடுனேன், எங்க போறதுன்னு தெரியாம.

நடந்துக்கிட்டே இருந்தேன், ஒரு கோயில் இருந்தது, சின்னக் கோயில், யாரும் அத மூட்றது இல்ல போல, எனக்கும் தெரு நாய்களுக்கும் அது தான் அடைக்கலமா இருந்தது! உள்ள போனேன், ஒரு ஓரமா உக்காந்தேன், நடந்து நடந்து கால அப்படி வலிச்சது. தூக்கம் வந்தது அசதியில, ஆனா, பயமா இருந்தது, இங்கயும் யாராவது வந்துடுவாங்கலோனு, பயமா இருந்தது.

எங்க போறதுன்னு தெரியாம, தூங்காம, ராத்திரி முழுக்க அழுதேன், அழுதுக்கிட்டே இருந்தேன், நான் அழுத அளவு, யாரும் அழுதிருப்பாங்கலானு தெரியல.

அப்பா அம்மா இல்லாம, ஒரு பொண்ணு வளர்றது, சாபம்!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக