திங்கள், ஜூன் 04, 2012

கறை படிந்த கைகள்!

கண்களால் ஆசையாய் நீ,
காதல் வலை வீசும் பொழுதுகளில்,
கனல் வீசுகிறது எனக்கு- இதயம்
கொதிக்கிறது, இமைகள் மறுக்கிறது!

கால்களைப் பிடித்து நீ,
கதகதப்பூட்டிய நேரங்களில்,
பயத்தில் வியர்க்கிறது எனக்கு - உள்ளே
வலிக்கிறது, வெளியே எரிகிறது!

காதலோடு காமம் கலந்து நீ,
கட்டி அணைக்கும் இரவுகளில்,
குற்றம் உறுத்துகிறது எனக்கு - நெஞ்சம்
மறுக்கிறது உடலோ நடிக்கிறது!

என்னோடு வா என்று நீ,
கைகள் நீட்டும் பயணங்களில்,
கரம் நீள மறுக்கிறது எனக்கு - கறையை
மறைக்கிறது அவனை நினைக்கிறது!

காரணம் தெரியாத என் கணவன் நீ,
குழம்பி நிற்கும் நொடிகளில்,
பழைய காதலைப் பிரிந்த எனக்கு - கூசிப்
போகிறது, சுயமே வெறுக்கிறது!

பண்டிகை நாட்களில் நீ,
பிறந்த வீடு கூட்டிப்போகும் தருணங்களில்,
வெறுப்பாய் இருக்கிறது எனக்கு - கோபம்
வருகிறது, கட்டாயக் கல்யாணத்தை நினைக்கிறது!

1 கருத்து: