ஞாயிறு, ஜூன் 17, 2012

அன்புள்ள அப்பா!

அப்பா,

எல்லாருக்குமே உலகத்துல அப்பாவ ரொம்பப் பிடிக்கும், நானும் அதே போல தான். உங்களப் பாத்துப் பேசச் சொன்னா நாள் முழுக்க பேசுவேன். எல்லாருக்கும் கெடச்சிட மாட்டாங்க நல்ல அப்பா, என் அப்பா போல நல்ல அப்பா.

என்ன தேவதையா தான் பாத்திங்க, அப்படித் தான் வளத்திங்க. ஒன்னு கேட்டா பத்து வாங்கித் தருவிங்க. ஏன், எனக்குப் பேரு கூட எவ்வளவு அழகா வச்சிருக்கிங்க...

சின்ன வயசுல என் காலுக்கு கீழ படுத்து ஒறங்கலனா உங்களுக்குத் தூக்கமே வராது. "இது யாரு செல்லம்... அப்பாச் செல்லம்..." இப்படி நீங்களே சொல்லிச் சொல்லிக் கொஞ்சிப்பீங்க.
"நீ யாரு செல்லம் டா?", நீங்க கேக்குறப்போலாம், "அப்பாச் செல்லம்..", இப்படி நான் சொல்லலேனா, எவ்வளவு வாடிப் போவிங்க! சின்ன விசயம் தான், ஆனாலும் அது உங்களுக்கு அவ்வளவு வருத்தமா இருந்ததே, ஏன்பா?

அம்மா அப்போ ரொம்ப ஒல்லியா இருப்பாங்க, அம்மா இடுப்புல என்னத் தூக்குனா எலும்பு குத்தும்னு அம்மாகிட்ட நான் போகவே மாட்டேன்.. நீங்க தான் என்னத் தூக்கிச் சொமப்பீங்க.

நானும், சொகுசா உங்க கைல உக்காந்துக்கிட்டு, "அப்பா தான் பஞ்சு மாதிரி, அம்மா குத்துறா எலும்பா.."னு சிரிச்சிக்கிட்டு வருவேன்.

சின்ன வயசுல தெருவுல போற காய் வண்டி, பழ வண்டிக்காரங்கள எல்லாம் நான் கேலி பேசுவேன்னு, அத எல்லாத்தையும் கேசெட்ல* பதிஞ்சு வச்சு, நான் பெருசானதுக்கு அப்புறமும் போட்டுக் கேட்டு ரசிச்சிருக்கிங்க.

நான் மொத மொத "அ ஆ இ ஈ.." சொன்னது தொடங்கி, கெழவி மாதிரி கத பேசுறது வரைக்கும் எல்லாத்தையும் பதிஞ்சு வச்சிருக்கீங்க கேசட்ல*

இதோ, இவற காதலிக்கிறேன்னு சொன்னேனே.. அன்னிக்கு உங்களுக்கு எவ்வளவு கோவம் வந்துச்சி. அன்னிக்கி தான் என்ன ரெண்டாவது தடவையா நீங்க அடிச்சிங்க.

மொத தடவ அடிச்சது நெனவிருக்காப்பா? நான் ரெண்டாவது படிச்சப்போ? அன்னிக்கி எனக்கு சயின்ஸ் எக்சாம்*, இளநி எப்புடி தென்ன மரத்துல இருந்து கீழ விழுந்து, தண்ணீல அடிச்சிட்டுப் போய், தென்ன மரமாகுதுனு சொல்லிக் குடுத்திங்க. அது தான் பெரிய கேள்வி, எனக்குப் புரியாத கேள்வி. நீங்க சொல்லிக் குடுத்தது இன்னிக்கும் நெனவுல இருக்கு. ஆனா அன்னிக்குப் பரிட்சையில தான் நெனவுல இல்லாமப் போச்சு. அப்போ எனக்கு, மனப்பாடம் பண்ணி எழுதி தான் பழக்கம், அர்த்தம் தெரிஞ்சாலும், மனப்பாடம் பண்ணினது மறந்து போக, எழுதாம வந்துட்டேன் அந்தக் கேள்விய.

ரொம்பக் கம்மியா மார்க்* வாங்கி இருந்தேன். அன்னிக்கு சாயங்காலம் நீங்க அடிச்சிங்கலே ஒரு அடி. அப்பா... மறக்கவே முடியாது. ஆயுசுக்கும் மறக்காது. நடுவீட்டுல அப்படியே நான் யூரின் போய்டேன். :D :D :P
நெனைவிருக்காப்பா?

அதுக்கு அடுத்து நீங்க எனக்கு சொல்லிக் குடுக்ரதயே விட்டுடிங்க, நானா தான் படிச்சேன். ஆனாலும் அட்வைஸ்* பண்றது மட்டும் நல்லா பண்ணுவிங்க :P
"அத இப்டி எழுதணும், இப்படி படிக்கணும்.."னு.

இன்னிக்கு, எனக்கும் ஒரு மகன் இருக்கான். பத்தாவது படிக்கிறான். ஆனாலும் உங்கள நெனச்சுப் பாக்குறப்போலாம், அந்த அஞ்சு வயசுப் பிள்ளையாவே ஆகிட்றேன். சந்தோசமா உணர்றேன். உங்களைப் பாக்கணும், பேசனும்னு நெனைக்கிறேன்.

அப்பா, இங்க என் பக்கத்துல இருக்கிங்கலாப்பா ? என்னப் பாத்துட்டு இருக்கிங்கலாப்பா? :'( நீங்க என்ன விட்டுப் போன அந்த நாள், நான் எப்படி நொறுங்கி போனேன்னு எனக்கு தான் தெரியும். எத்தன பேர் பாசம் காட்டினாலும், அது உங்களைப்போல வராதுப்பா.

இதோ, இந்த லெட்டெர* மடிச்சு உங்க படத்துக்கு முன்னாடி வைக்கப் போறேன் , எப்பவும் போல, படிச்சிட்டு, பதில் சொல்லுங்கப்பா..! பதில் சொல்லுங்கப்பா...!


என்றும் உங்கள் மகள்,
ராஜ குமாரி.


*கேசட் - cassette - ஒலிப்பேழை
சயின்ஸ் எக்சாம் - Science Exam - அறிவியல் தேர்வு
யூரின் - Urine- சிறுநீர்
அட்வைஸ் - Advice - அறிவுரை
லெட்டர் - Letter- கடிதம்
மார்க் - marks- மதிப்பெண்

2 கருத்துகள்: