சனி, ஜூலை 14, 2012

ஓவம்மா #7 (தொடர்கதை)

முந்தைய பாகங்கள்:

ஓவம்மா! #1 | #2 | #3 | 4 | 5 | 6

அன்னைக்கு நான் வேலைல இருந்து வீட்டுக்கு வந்தேன். எங்க வீடே ரொம்பச் சிறுசு, அதுல அத்தன பேர் இருந்தத பாத்தப்போ, அப்பா, எனக்கு உள்ள நாளைய எடமும் இல்ல, மனசும் இல்ல.

எதுக்கு இத்தன பேர் இருக்காங்க... புரியாம நின்னுட்டு இருந்த என்ன, பின்னாடி கூடி வந்து அடிச்சு "ஏய்.. ஓவம்மா உன்ன பொண்ணு கேட்டு இந்தக் கடி நாய்ப் பயலோட அம்மா, சொந்தக்காரங்கள எல்லாம் கூட்டிட்டு வந்திருக்குடி.... உங்க அத்த பேசுறதப் பாத்தா, அவனுக்கே உன்னக் கட்டி வச்சிரும் போலடி.. உன் கனவெல்லாம் கனவு தான் இனி, என்னைக்கும் நெசமாகாது..", இப்படிப் பக்கத்து வீட்டுக்காரி சொன்னதும், எனக்கு "அய்யோ"னு ஆகிடுச்சு.

வேகமா வந்துச்சு எங்க அத்த, "வாமா ராசாத்தி.. என்னடா மெலிஞ்சு போயிருக்க.. நம்ம வீட்டுக்கு வந்தப்பரம் பாரு, உன்ன எப்படிப் பாத்துக்கறேன்னு. சும்மா கொலு கொலு னு கொண்டு வந்துருவேன் பாரு..", என் கன்னத்தக் கில்லி கொஞ்சித் தள்ளிடுச்சு அந்த அத்த, அதாவது கடிநாயோட அம்மா...

அந்தத்த என் கன்னத்த விட்டதும், வீட்ட சுத்தி பாத்தேன், ஒரே கூட்டம், இருந்த ஒரு ரூமையும்(அறை) முழுசா அடைச்சு உக்காந்திருந்தாங்க. நடுவுல ஒரு சேரப்(நாற்காலி)  போட்டு உக்காந்திருந்தான் அவன். என்னப் பாத்ததும் என்னைக்கும் இல்லாம அன்னைக்கு அப்படி ஒரு சிரிப்பு சிரிச்சான் என்னப் பாத்து...

ஒரு நிமிஷம் எனக்கே என்னவோ செஞ்சுச்சு அந்த சிரிப்புல. கள்ளப் பய, எப்படி சண்டை புடிப்பான், இன்னிக்கி இப்படிச் சிரிக்கிறானேனு நெனச்சேன்.

எங்க அத்த என்கிட்டக் கேட்டுச்சு, என்னம்மா சேகரக் கட்டிகிரியா? னு.

எனக்கு விருப்பம் இல்ல, யோசிச்சுக்கிட்டு நின்னேன்.

என்னம்மா, விருப்பம் இல்லியா?

என்னோட கனவா சொல்ல முடியும், அப்படிச் சொன்னாலும் தான், ஊர் என்ன பேசும், "கஞ்சிக்கு வழி இல்லாத கழுத, ராசா வேணுமாம்ல" னு பேசுவாங்க.

மனச மறச்சிக்கிட்டு "அப்படி இல்லத்தே.." சொன்னது தான் தாமதம், எங்காத்த ஓடிருச்சி, "ஓவம்மாவுக்கு சம்மதமாம்.." சொல்லிடுச்சு அங்க கூடி இருந்த அத்தன பேருக்கும்.

எனக்கு பக்குன்னு இருந்தது, "புடிகாதுனு இல்ல அவன.. அதுக்குன்னு எனக்கு அவனப் புடிக்கும்னும் இல்ல..."

தோ, அந்நில இருந்து, அவன் என் பின்னாடியே வரதும், சண்டைய விட்டுட்டு சிரிக்கிறதுமா இருந்தான்.

எனக்கு என்ன செய்றதுனே தெரில.

ஆனா, நான் நெனச்ச மாதிரியே எனக்கு ராச குமாரனோட கல்யாணம் நடந்தது.

------------------------

ஓவம்மா பேசுவாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக