வெள்ளி, ஆகஸ்ட் 10, 2012

லட்சியம் வேண்டாம்! லட்சியம் வேண்டாம்!


குழம்பிவிட்டீர்களா? லட்சியம் வேண்டாமா? ஆம். லட்சியமே வேண்டாம் உங்களுக்கு. மிகப்  பெரிய அறிஞர்கள், சாதனையாளர்கள் சொல்வதுண்டு 
லட்சியம் கொள்ளுங்கள், அதை நோக்கிப் பயணியுங்கள் என்று. நீங்கள் மாணவரா? வியாபாரியா? தொழிலதிபரா? விளையாட்டு வீரரா? பாடகரா? இதில் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், லட்சியம் வேண்டாம் உங்களுக்கு!

லட்சியம் கொள்ள வேண்டும். எதற்காக? லட்சியம் இருப்பின் அதை நோக்கி உழைப்பீர்கள், அதை அடைய முயற்சி செய்வீர்கள்.
ஆனால், அது வேண்டாம் உங்களுக்கு. முதலில் எதற்காக லட்சியம் வேண்டாம் என்பதை யோசிப்பதற்கு முன்பாக, லட்சியம் இல்லாமல்,
வேறு என்ன செய்வது? இதோ சொல்கிறேன்.

உங்களது துறையில் முன்னேற!
  • நான் உயரத்தை அடைய வேண்டும், என்று நினைக்காதீர்கள்!
  • வெற்றி, புகழ், பெருமை கிடைக்க வேண்டும் என்று, எண்ணாதீர்கள்!
  • பணம் ஈட்ட வேண்டும் நிறைய, துளியும் யோசிக்காதீர்கள்!
"என்னாடா இது, இது எதுவுமே இல்லாமல், எப்படி முன்னேறுவது?", நினைக்கிறீர்களா? வழி இருக்கிறது.
வெற்றி நிச்சயம்!

பணம் தேடி அழியாதே தோழா.,
பயணித்திடு விருப்பத்தோடு!
பெருமை விரும்பாதே தோழா,
பிரியமாக உழைத்திடு!

இதற்கு ஒரு குட்டிக் கதை சொல்லட்டுமா?

அவர்கள் இருவரும் ஒரே ஊரில் வசித்து வந்தார்கள். இருவரும் விவசாயம் செய்து வந்தார்கள். ஒருவர் பெரிய லட்சியத்தோடு வாழ்ந்து வந்தார்.
" கடினமாக உழைத்து, அந்த சுத்து வட்டாரத்திலேயே பெரிய பணக்காரனாக வரவேண்டும். பெரிதாக விவசாயத்தைப் பெருக்க வேண்டும்", என்று லட்சியத்தோடு இருந்தார்.அவர் தினமும் "கடினமாக" உழைத்தார். "ச்ச, எவ்வளவு கடினமாக உள்ளது நமது லட்சியத்தை அடைவது..", என்று நடு நடுவே நினைத்துக் கொண்டிருந்தார். மற்றொருவர், லட்சியம் என்று பெரிதாக இல்லாதவர். ஆனால், அவருக்கு விவசாயம் என்றால் ரொம்பப் பிடிக்கும். தினமும் உற்சாகமாக தனது நிலத்தில், பாடல் பாடியவாறு, பயிர்களையும், இயற்கையையும் ரசித்தவாறு உழைத்து வந்தார். அவர் சில நேரம் அந்தப் பயிர்களோடு பேசுவது கூட உண்டு. அந்த நிலத்தில் உழைப்பது, அவருக்கு அத்தனை ஆனந்தம் தந்தது. இருவரும் உழைத்துக் கொண்டே இருந்தார்கள், நாட்கள் நகர்ந்தன.

ஒரு கட்டத்தில், முதலாம் நபர் சோர்ந்து விட்டார். "என்னடா இது.. இத்தனை கடினமாக உழைக்கிறோம், ஆயினும் பெரிதாக ஏதும் ஈட்ட இயலவில்லையே..",
என்று சோர்ந்து விட்டார். ஆனால் , நமது இரண்டாவது தோழரோ, என்றும் போல உற்சாகமாக, பயிர்களோடு உறவாடியவாறு உழைத்து வந்தார்.

இறுதியில், பெரிய ஆளாக வந்தவர் யார் என்று நினைக்கிறீர்கள்? ஆம், நீங்கள் நினைப்பது போல, இரண்டாம் நபர் தான். 

புரிகிறதா? எந்தத் தொழில் செய்தாலும், எந்தத் துறையில் நீங்கள் இருந்தாலும், அதில் முழு மனதோடு ஈடுபடுங்கள்.
பணம், புகழ் வேண்டும் என்று உழைப்பதற்கு மாறாக, எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும், லட்சியமும் இல்லாமல், முழு மனதோடு ஈடுபடுங்கள்.
செய்யும் தொழில் சிறியதோ, பெரியதோ, "விருப்பம், ஈடுபாடு" இவை இருந்தால் போதும். பெருமை, பணம், வெற்றி இவற்றை நோக்கி நீங்கள் பயணிக்க வேண்டாம். அவை உங்களைத் தேடி வரும்.

லட்சியம் வைத்துக் கொண்டு அதை நோக்கிப் பயணிக்கும் வேளையில், "சில" சமயங்களில் தோல்வியில் நீங்கள் முடியலாம். துவண்டு போக வாய்ப்புகள் உண்டு. "ஏமாற்றம்" அடையலாம் நீங்கள். ஆனால், முழு மனதோடு, ஈடுபாடோடு உழைக்கும் வேலையில், உறுதியாக வெற்றி கிடைக்கும். எதையும் எதிர்பார்த்து உழைக்காததால், ஏமாற்றம் அடைய வழி இல்லை. வெற்றியோ தொழ்வியோ, அதை ஏற்றுக்கொள்வோம். விருப்பம் இருக்கும் சமயத்தில், ஒரு வேளை தோல்வி ஏற்பட்டாலும் கூட நீங்கள் உழைக்கத் தயங்க மாட்டீர்கள், ஏனென்றால், நீங்கள் ஏயும் பணியை விருப்பம் இருக்கும் பொழுது, வேலையாக நினைக்க மாட்டீர்கள், விருப்பமாக நினைப்பீர்கள். 

லட்சியம் இருப்பது தவறல்ல, செய்யும் தொழிலை விருப்பதோடு செய்யுங்கள்! முன்னேறிவிடலாம்.
ஏற்கனவே உள்ள துறையில் விருப்பத்தோடு உழையுங்கள், அதை விடச் சிறந்த வழி ஒன்றும் உள்ளது. விருப்பம் எதுவோ, விரும்பிய துறை எதுவோ, அதையே தொழிலாக அமைத்துக் கொள்ளுங்கள்.

தங்களது நேரம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்!

கண்மணி அன்போடு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக