முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்மையற்ற பெண்!கல்லூரியின் கடைசி நாள், தோழர்களை தோழிகளை பிரியப் போகிறோமே என்ற சோகத்தில் அனைவரும் இருக்க, நானோ பெரும் தவிப்பில், குழப்பத்தில் இருந்தேன்.

மரத்தடி, அந்த ஸ்டோன் பெஞ்சில் நானும் அவனும் அமர்ந்திருந்தோம், என் கைகளைப் பற்றி அழுதவாறு இருந்தான். கண்ணீர் என் கைகளை நனைத்துக் கொண்டிருந்தது. இதுவரை என் கைகளை அப்படி யாரும் பிடித்ததில்லை, மனம் விட்டு அழுததும் இல்லை, அவனும் என் கையை அன்று தான் முதன் முறையாகப் பிடித்திருந்தான்.

அந்தத் தொடுதல், அந்தப் பிடிப்பில், அன்பு, என் அம்மா என் மீது கொண்ட அன்பு போல பரிசுத்தமான அன்பு. அந்தக் கண்ணீரின் வெது வெதுப்பு, என்னுள் என்னவோ ஒரு உணர்வை உண்டு செய்து கொண்டிருந்தது. அவன் கையைத் தட்டி விடவும் முடியாமல், பிடித்துக் கொள்ளவும் முடியாமல், அப்படியே கீழ் குனிந்து அமர்ந்திருந்தேன். நிறுத்தாமல் அவன் கண்ணீரால் என் கைகளை நனைத்துக் கொண்டு இருந்தான்.

அழகாய் பூக்குதே,
சுகமாய் தாக்குதே,
அடடா காதலில் சொல்லாமல்...”, என் அலைபேசி சிணுங்கி, அமைதியைக் கலைத்தது.

என் கைகளை மெதுவாக விடுவித்தான். அலைபேசியை எடுத்தேன், அழைத்தது என் அம்மா.

அம்மா...”

என்ன சொல்லிட்டியா அவன்ட? என்ன சொல்றான்?

சொல்லிட்டேன், வீட்டுக்கு வந்து பேசிக்கலாம், வைக்கறேன், இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடுவேன்., அடுத்து பேச விருப்பம் இல்லாமல் உடனே தொடர்பைத் துண்டித்தேன்.

என்ன பேசுவது என்று தெரியாமல், அமைதியாக இருந்தேன், பூமியைப் பார்த்தவாறு. எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருந்தாலும், வார்த்தை சிக்கவில்லை எனக்கு.

அவனே பேச்சைத் தொடங்கினான், சோனிக்கா... நீ ஏன் இப்டி சொல்ற... என்ன விட்டுப் போகாத, உன்னத் தவற எனக்கு வேற பிரண்ட் யாருமே இல்ல, உனக்கே தெரியும், எல்லாருக்கும் என் மேல வெறுப்பு தான். யாருக்கும் என்ன அவங்களோட சேத்துக்கரதுல விருப்பம் இல்ல... நீயும் பேசலானா, என் கூட யாருமே இருக்க மாட்டாங்க.., அவனுக்கே உரிய தொனியில் மூக்கை உறிஞ்சி கண்ணீரைத் துடைத்தவாறே பேசினான் பெண் குரலில். அதீத சோகத்திலும், அதீத ஆனந்தத்திலும் மட்டுமே அவனுக்குப் பெண் குரல் வரும். சொல்லிவிட்டு மீண்டும் அழத் தொடங்கிவிட்டான்.

மீண்டும் அமைதி. அவன் பேசுவதைக் கேட்டதும், எனக்குள் ஒரு சோக ரேகை, என் நெஞ்சம் அவனோடு நட்பாகப் பழகிய காலங்களை அசை போட்டுக் கொண்டது. பிள்ளையைக் குப்பைத் தொட்டியில் போடப் போகும் தாய்க்கு எவ்வளவு வலிக்கும்? அவள் விரும்பி அதைச் செய்வதில்லை, எனினும் கட்டாயம், அது தவறு, எனினும் தவிர்க்க முடியாதது! அவனைப் பிரியப் போகிறேன் நானும் அப்படித் தான். என் அன்புத் தோழன், தோழி.. எல்லாமே அவன் தான். எங்களைப் பார்ப்பவர்கள் கேலி பேசுவதுண்டு. என்னையே தவறாகப் பேசுபவர்களும் உண்டு, அது பற்றி எனக்கு வருத்தம் துளியும் இருந்ததில்லை, ஏனென்றால் எங்களது உறவில் தவறு எதுவுமே இல்லை! உண்மையான அன்பு, புரிதல், அது மட்டுமே எங்களுக்குள் இருந்தது.
பெண்மையற்ற பெண் அவன்! அவனுக்குள் இருந்த பெண்மை, அதை முழுவதுமாக அறிந்தவர்கள் என்னைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது.

ரமேஷ், எனக்கும் புரியுது, ஆனா எனக்கு மாப்ள பாக்கறாங்க, நான் உன் கூட பழகுறத இப்பவே என் சொந்தக்காரங்க தப்பாப் பேசறாங்க, எங்கம்மா அழுகறாங்கடா, நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கு வர மாப்ளையும் நம்ம பிரன்ட்ஷிப்ப ஏத்துப்பாருனு சொல்ல முடியாது, எங்கம்மா தினமும் அழறாங்க, என்னால பாக்க முடிலடா... புரிஞ்சுக்கோ.., மிகுந்த வலியோடு தான் நானும் பேசினேன்.

என்னையும் கொஞ்சம் நெனச்சுப் பாரு சோனிக்கா, எனக்கு உன்ன விட்டா சொந்தம்னு யாருமே கிடையாது.., என்கிட்ட பேசமாட்டேனு சொல்லாத சோனிக்கா...”

இல்லடா என்னால எங்கம்மா அழறத, வீட்ல பிரச்சனை வரத பொறுக்க முடில, இனி நம்ம பேசரதுனால பிரச்சன அதிகமாகத் தான் செய்யும், வேணாம்.. எனக்கு கல்யாணம் ஆகரதுல இது பிரச்சனையாகும்.

மீண்டும் மீண்டும் பிரிவதே நல்லது என்று நான் பேசிக்கொண்டு இருக்க, அப்போ நானே உன்னக் கல்யாணம் பண்ணிக்கறேன், நீ எப்பவும் என்னோட இருப்பேல?, வெகுளியாய் ஒரு வேகத்தில் சொல்லிவிட்டான்.

சட்டென்று எழுந்தேன் நான் பதறிப் போய், என்னடா பேசற? தெரிஞ்சு தான் பேசறியா? எல்லாரும் உன்ன ஒதுக்கி வச்சாங்க,
கேலி பேசினாங்க, பொண்ணுங்க எல்லாரும் உன்னப் பாத்தாலே பயந்தாங்க, ஆனா நான் நீ உடலால எங்கள விட வித்யாசமா இருந்தாலும், மனசால எங்களப் போலதான்னு உன்கிட்ட பேசினேன், நல்ல நண்பனாப் பழகினேன், ஆனா நீ.. இப்படி நெனச்சுப் பழகிருக்கேல.. உன்கிட்ட பழகினதே தப்புனு தோன வச்சிட்டேல..., கோபமாக பேசிப் பதிலை எதிர் பாராமல் நடக்க ஆரம்பித்திருந்தேன்..

ஐயோ சோனிக்கா நான் தப்பா நெனச்சு சொல்லல.. இப்போ வரைக்கும் எனக்கு உன் மேல இருக்கிறது உண்மையான நட்பு தான்.. உன்னப் பிரிய விருப்பம் இல்லாம தான் இப்படிப் பேசிட்டேன்.. என்ன மன்னிச்சிடு.. நான் தப்பான அர்த்தத்துல சொல்லல.., என் பின்னே சொல்லியவாறே வந்தான்..

அவன் என்னிடம் என்றும் நல்ல அன்போடு மட்டும் தான் பழகி வந்திருந்தான். அவன் நல்லவன். ஆரம்பத்தில் சற்று தயங்கித் தயங்கி தான் அவனிடம் பழகி வந்தேன் என்றாலும், காலம் கடந்ததில், எங்கள் இதயங்களுக்கு நடுவே இருந்த தூரத்தைக் கடந்திருந்தோம் நாங்கள்.

அப்படிப் பேசியதற்காக இருவருமே வருந்தினோம் மனதிற்குள்.
இருவர் பேசியதுமே தவறு தான். இத்தனை வருடம் பழகியும் அவன் மனதரியாமல் இப்படி நான் கோபித்திருக்கக் கூடாது தான்.
மண்ணில் விழுந்த மழைத் துளியை, அள்ளி எடுத்தாலும், பழைய தன்மை, தூய்மை கிடைக்காது மீண்டும். அப்படித் தான், இருவர் உதிர்த்த வார்த்தைகளும், ஒரு பெரிய தூய்மைக் கேடை உருவாக்கி இருந்தது எங்களது நட்பிற்குள். என்னடி.. என்ன சொன்னான் அவன்..?, வீட்டிற்குள் நுழைந்ததும் கேள்விகள் வீசினாள் அம்மா.

ஒன்னும் சொல்லல..

ஏய், நீ அவன் கிட்ட சொன்னியா இல்லியா?, கடுமையாக இருந்தது அம்மாவின் குரல்.

சொன்னேன்.

என்னடி.. சொன்னேன் னு ஒரு வார்த்தைல பதில் சொல்ற, பதிலுக்கு என்ன சொன்னான் அந்த **** பய?


அம்மா இன்னொரு தடவ இப்படிப் பேசாத, எனக்குத் தெரியும் ரமேஷப் பத்தி, அவன் நல்லவன், இப்பவும் அவன் என் பிரின்ட் தான்... அவன் கிட்ட நான் பேசறதா முடிவு பண்ணிட்டேன், அவன் எப்பவும் என்னோட நல்ல நண்பன் தான்... மறந்து போயிட்டியா அவன் நமக்கு உதவி செஞ்சதெல்லாம்? அப்பா ஆக்சிடென்ட் ஆகி, ஆஸ்பத்ரில இருந்தப்போ, அவருக்கு ரெத்தம் குடுத்தது யாரு? ரமேஷ் மா! அந்நேரம் ரெத்தம் அவன் மட்டும் குடுக்கலேனா என்ன ஆகி இருக்கும்?

ஆமாமா, எதுக்கெடுத்தாலும் அதையே சொல்லி என் வாய அட. எனக்குத் தெரியாது, இனி நீ அந்த ஒ***பயலோட பேசவோ பழகவோ கூடாது. அவ்வளவு தான்.

எனக்கு இப்படி யார் அவனைத் தகாத வார்த்தைகளால் பேசினாலும், எரிச்சல், கோபம் எங்கிருந்து தான் வருமோ, அப்படி வரும். என் அம்மாவிடம் எத்தனை முறை சொன்னாலும், கேட்கமாட்டார். அவனைத் திட்டாவிட்டால் அவருக்குத் தூக்கமே வராது போலும். இப்படி மற்றவர்கள் பேசுவதைக் கேட்கும் போதெல்லாம், ரமேஷுக்கு எப்படி வலிக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். என்னிடம் சொல்லி அழுவான், எங்களப் போல இருக்கறவங்கள ஏன் எல்லாரும் இப்படி ஏளனமாப் பாக்குறாங்க? நாங்க என்ன செஞ்சோம், உங்களைப் போல தான நாங்களும்... எங்க மனச ஏன் யாருமே பாக்க மாட்றாங்க..?, பெண் குரலில் அவன் பேசிடும் அந்த வலி மிகுந்த வார்த்தைகள் என் காதில் எப்போதும் ஒழித்துக் கொண்டிருந்தன. அவனுக்கும், அவன் புலம்பலுக்கும் என்றும் என் கண்ணீர் தான் ஆறுதலாக இருந்திருக்கிறது. அவன் இப்படிப் பேசி அழும் பொழுதெல்லாம், இருவரும் சேர்ந்து அழுவோம். என் அழுகையைப் பார்த்ததும், அவன் அழுகையை நிறுத்திவிட்டு, எனக்கு ஆறுதல் சொல்லத் தொடங்கி விடுவான். அவனுக்கு அத்தனை நல்ல மனசு. பிறர கண்ணீருக்காக வருந்தும் அவனுக்கோ, கடவுள் பரிசாகக் கிடைத்திருந்தது, கண்ணீர் மட்டும் தான். கடவுள் படைப்பில் செய்த பிழைக்காக அழுபவர்கள் இவன் போன்றவர்கள்.

காமப் பார்வை பார்க்கும் சில ஆண்களுக்கும், பொறாமைப் படும் சில பெண்களுக்கும் நடுவே, அன்பான ரமேஷ் எவ்வளவோ நல்லவன் என்று தான் சொல்வேன். அவன், அவன் அப்படிக் கேட்டது கூட அவனது வெகுளித்தனம் தானே அன்றி, வேறேதும் இல்லை.

கதவு தட்டப்பட்டது, அம்மா திறந்தாள், அவன் தான்.

திறந்தவுடன் தகாத வார்த்தைகளால் வசை பாடத் தொடங்கிவிட்டாள் அம்மா, டேய்.. இங்க ஏன்ட வந்த.. கூட சுத்தி என் பொண்ணு பேரக் கெடுத்தது பதலையா..?

கோபமாக வந்தது எனக்கு, இத்தனை வருடங்கள் ரமேஷோடு பழகி இருக்கிறேன், ஒருமுறை கூட தவறாக நடந்து
கொண்டதில்லை அவன். பெண் போல நடப்பான், பெண் போல பேசிச் சிரிப்பான், பெண் போல உணரத்தான், ஆனால் ஆண் போலவே உடுத்திக் கொள்வான். வகுப்பில் கூட ஆண்கள் பக்கம் தான் அமர்ந்து கொள்வான். பெண்ணாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதில் அவனுக்கு என்னவோ அவ்வளவு தயக்கம். ஆனால் ஆண்களோடு பழகுவதும் அவனுக்கு கடினமாகவே இருந்தது, உடன் படித்த பசங்களும் அவனை தங்களோடு சேர்த்துக் கொள்வதே இல்லை.

பழகியவர்களுக்குத் தான் தெரியும் ரமேஷின் இரக்க குணம், அழகிய மனம். அன்று அவன் அப்படிப் பேசியது கூட தெரியாமல் தான் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

அம்மா.. நீ உள்ள போ.. நான் பேசிக்கிறேன்.. ; நீ உள்ள வா ரமேஷ்..

வெடுக்கென உள்ளே சென்றாள் அம்மா.

இல்ல உன் மொபைல மறந்து வச்சிட்டு வந்திட்ட, அதக் குடுத்துட்டுப் போலாம்னு தான் வந்தேன், நான் பேசுனது தப்பு தான், சுயநலமா யோசிச்சுட்டேன், உனக்குக் கல்யாணம் ஆக நான் தடையா இருக்க மாட்டேன் சோனிக்கா, நான் அப்போ தெரியாம ஒரு வேகத்துல நீ கல்யாணம் கல்யாணம்னு
சொல்லவும் அப்டி சொல்லிட்டேன், என்னத் தப்பா நினைக்காத சோனிக்கா... நீ சொன்ன மாதிரியே இனி நாம பேச வேண்டாம்.
என்ன மன்னிச்சிடு.., ஆழ்ந்த காயமான மனதிலிருந்து வந்திருந்தன இந்த வார்த்தைகள், என் பதிலை எதிர்பாராமல் அலைபேசியை என் கையில் கொடுத்துவிட்டு சென்றுவிட்டான் ரமேஷ்.

தூரத்தில் சென்று அவன் மறையும் வரை கண்ணீரோடு பார்த்து நின்றேன். நளினமாக நடந்து சென்றான், அழுதவாறே. அவன் மனது எப்படி நொறுங்கி இருந்தது என்பதை அவன் பேசிய தொனியில் நன்கு உணர முடிந்தது. வலித்தது எனக்கு.

பக்கத்து வீட்டுப் பெரியவர் வந்தார் அந்நேரம். சட்டென்று தோன்றியது எனக்கு அம்மா சொல்வது.
சிறுபிள்ளையாக நான் இருந்த போது, அப்போது நாற்பது வயது கொண்ட அந்தப் பக்கத்து வீட்டுத் தாத்தாவைப் பார்த்து, நான் உங்களைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லி இருக்கிறேனாம், அதற்காக நான் கெட்டவளா? அது அன்பு, அன்பின் வெளிப்பாடாகத் தான், வெகுளியாக அன்று நான் அப்படிப் பேசி இருந்தேன், அது போலவே இன்று ரமேஷ் எனக்குத் தோன்றினான்,சிறு பிள்ளையாக, அன்பிற்கு மட்டுமே ஏங்கும் மழலையாக, யோசித்துப் பார்த்த போது.

இரவெல்லாம் யோசித்தேன். ரமேஷைப் பிரிவேன் என்று நான் சொன்னது அவனுக்கு எவ்வளவு பெரிய காயத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று புரிந்தது! அழுதவாறே எங்களது நட்பை காட்சியாக இரவெல்லாம் ஓட்டிப் பார்த்தேன்.
இதோ இன்று செல்கிறேன் டெல்லியில் இருந்து வரும் ரமேஷைப் பார்க்க என் கணவரோடு. இன்று அவன் பெரிய விஞ்ஞானி. ரமேஷுக்காக இனிப்பு வாங்க வெளியே சென்றிருக்கிறார் என்னவர். இன்று ரமேஷிற்கு இரண்டு நெருங்கிய நண்பர்கள் என் கணவரையும் சேர்த்து!

இன்றும் அவனது தூய்மையான நேசம் புரியாமல், கோணல் பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறார் என் அம்மா, இந்த சமுதாயத்தோடு சேர்ந்து! என்னையும் என் கணவரையும் கூட, கோணலாகவே பார்க்கிறார்கள்! அவனது நேசம், என் அம்மாவுக்குப் புரியாதது போல, பலருக்கும் இங்கு புரியவில்லை, அவர்கள் புரிய முயலுவதுமில்லை. ஊராரின் பேச்சுகளைத் தாங்கிக் கொண்டு, இன்றும் இவன் கண்ணீர்க் கடலில், மூழ்கிவிடாமல் மிதந்து கொண்டிருக்கிறான், காயம் பட்டுப் பட்டு மரத்துப் போன மனதோடு!  


 ----------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

 1. கனமான கதை தொடருங்கள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. அப்படியா... என்ன ஞாபகம் வந்தது...?
   வருகைக்கு நன்றி... :)

   நீக்கு
 3. வரிகளின் முதிர்ச்சி , கதையை நகர்த்தி சென்ற விதம், இதயத்தை வருடும் முடிவு - உங்களிடம் இருந்து இப்படி ஒரு கதையை எதிர்பார்க்கவில்லை ! அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட நீங்க ரொம்ப பாராட்டீட்டிங்க, ரொம்ப நன்றி... :)

   நீக்கு
 4. அருமையான கதை.. சரியான முடிவு.. இதே போன்றஒரு Mime என் கல்லூரி கால இளைஞர் திருவிழாவில் நடத்தினோம்.. கதைக்களம் ஒன்று.. கதை வேறு.. ஆனால் இதே முடிவு தான்.. வாழ்த்துக்கள் :-)

  பதிலளிநீக்கு
 5. மிக அருமையான கதை.நல்ல நடை, அழுத்தமான கரு வாழ்த்துக்கள்.

  -> abiatchennai.blogspot.in

  பதிலளிநீக்கு
 6. நல்ல கதை கண்மணி, நம் சமுதாயம் ரமேஷ் போன்ற நபர்களை அங்கீரகிக்க தவறுகிறது,அசிங்கமாக பார்க்கிறது.கதையை கதை மாந்தரே விவரிக்கும் (Narrating style) வடிவ கதைகள் எனக்கு மிக பிடிக்கும்..உங்கள் பார்வையின் ஆழம் எழுத்தில் தெரிகிறது

  பதிலளிநீக்கு
 7. ரொம்ப ரொம்ப நன்றி... @ விஜயன்

  பதிலளிநீக்கு
 8. திடங்கொண்டு போராடு சீனு கொடுத்த லிங்க் பிடித்து இங்கே வந்தேன். அருமையான உணர்வுப் போராட்டம். அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஸ்ரீராம் சார் :-)

   நீக்கு
  2. எனது கதையை வாசிக்கப் பரிந்துரைத்ததர்க்கு மிக்க நன்றி.. :)

   நீக்கு
  3. மிக்க நன்றி ஸ்ரீ ராம் சார்..

   நீக்கு
 9. இன்று ரமேஷிற்கு இரண்டு நெருங்கிய நண்பர்கள் என் கணவரையும் சேர்த்து!

  சிறப்பான கதைக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்