வெள்ளி, நவம்பர் 09, 2012

கடவுளும் கண்மணியும்!

கந்த ஷஷ்டி கவசம், காயத்ரி மந்திரம்! இது இரண்டும் சொல்லாமல், எனக்கு தூக்கமே வராது. காலையில் பூஜை செய்து, முழுவதுமாக கந்த ஷஷ்டி கவசம் பாடுவேன். வாசிக்க மாட்டேன், பாடுவேன். மாலை, நூற்றி எட்டு முறை காயத்ரி மந்திரம் பாடுவேன்!

இது தவிர, இதர தெய்வங்களுக்கும் பாடல்கள் பாடுவேன். பாடல் புத்தகம் இருக்கும், நானே ஒரு ராகம் போட்டுப் பாடுவேன்! பக்கத்து வீட்டு பாட்டி முதல் பியூட்டி வரை எல்லோருக்கும் எனது பாடல் பிடிக்கும்.
உண்மையாகவே, நன்றாகவே பாடுவேன். இன்று நான் கல்லூரியில் மேடையில் பாடுவதுண்டு, காரணம் சிறுவயதில் தினமும் கந்த சஷ்டிக் கவசம் பாடிப் பழகியது தானோ என்னவோ! நம்பித்தான் ஆக வேண்டும் நீங்கள், நான் நன்றாகவே பாடுவேன்!

உடனே "கண்மணி அத்தனை பெரிய பக்தி நிறைந்த பெண்ணா?", என்று நினைத்து விடாதீர்கள். இது நான் ஐந்து, ஆறாம் வகுப்புப் படிக்கும் போது!

இப்போது???

இப்போது, நான் பூஜை செய்வதே கிடையாது! சிறுவயதில் அத்தனை பெரிய பக்தி கொண்டிருந்த நான், இப்போது ஏன் அப்படி இல்லை???

காரணம்? உள்ளது! என்ன?

காரணம், ஒரு ஆசிரியர்!!!

ஆம், நான் எட்டாம் வகுப்புப் படிக்கும் போது எனக்கு அவர் சரித்திரம் சொல்லிக் கொடுத்தார். அவரது பெயர் - ரெங்கநாதன்.

இன்று நான் இப்படி சாமி கும்பிடுவதில் அத்தனை நாட்டம் இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அவர் தான்.

பாடம் நடத்துவதைத் தாண்டி, நிறைய பேசுவார். அவர் பேசுவதைக் கேட்பதென்றாலே எனக்கு அத்தனை பிரியம். ஆர்வமாகக் கேட்பேன்.

அவர் மீது அத்தனை பெரிய மரியாதை! அவர் சொன்னால், எதுவும் "மிகச்" சரியாக இருக்கும் என்று எனக்கு நம்பிக்கை.

அவர் ஒரு நாள் வகுப்பில் சொன்னார்.

" நாம் இன்று பால் அபிஷேகம், தேன் அபிஷேகம் என்று இறைவனுக்கு செய்கிறோம், ஆனால், இன்னும் எத்தனை பேர் பசியால் வாடுகிறார்கள்? அவர்களுக்கு உதவ ஏன் இந்த பாலையும் தேனையும் பயன்படுத்தக் கூடாது?
இங்கு இறை வழிபாடு செய்யும் எத்தனை பேர் பிறருக்கு உதவும் மனதோடு இருக்கிறார்கள்? நிறைய நேரம் உருகி உருகி இறைவழிபாடு செய்வதை விட, நாலு பேருக்கு உதவினாலே, மனம் அமைதி அடையும்..."

இப்படி அவர் பேசியதைக் கேட்டது முதல், நிறுத்தினேன். இன்று வரை நான் கந்த ஷஷ்டி கவசத்தை மீண்டும் பாடவில்லை!

பெரிய முற்போக்குவாதி போல, வீட்டில் அம்மாவிடம் சண்டை எல்லாம் போட்டதுண்டு. "இப்டி சாமி கும்பிடாதிங்கம்மா...", அது இது என்று என் ஆசிரியர் வகுப்பில் சொன்னதை எல்லாம் சொல்லி சண்டை இடுவேன், சாமி கும்பிடவே மாட்டேன் என்பேன்! 

அம்மா அடிப்பார். :( நிறைய அடி வாங்கி இருக்கிறேன். ஆனாலும் சாமி கும்பிடமாட்டேன் என்பதில் அத்தனை பிடிவாதமாய் இருந்தேன்.

அம்மா எனது ஆசிரியரை பயங்கரமாக திட்டுவார், "நல்லா இருந்த புள்ளைய, இப்டி கெடுத்து வச்சுட்டாரே கண்டதையும் சொல்லி..", இப்படி அந்த ஆசிரியருக்கு வேறு திட்டு வாங்கிக் கொடுத்திருக்கிறேன்!

"பிறருக்கு உதவ வேண்டும், இறை வழிபாடு செய்வதை விட, ஏழைக்கு உதவுவது சிறந்தது!", இது இந்நாள் வரை எனக்கு மனதில் ஆழமாய் பதிந்துள்ளது!

ஏதோ என்னால் இயன்ற அளவு உதவி வருகிறேன் வீட்டில் செலவுக்குக் கொடுக்கும் பணத்தை வைத்து.


இன்று நான் சாமி கும்பிடுவதுண்டு. ஆனால், முன்பு போலக் கிடையாது.
"இறைவன் இருக்கிறார்", இதையும் நம்புகிறேன். ஆனால், இந்த அபிஷேகம் ஆராதனை இதில் நம்பிக்கை இல்லை.


ஆனால், கோவிலுக்குச் செல்வதுண்டு, இன்றும் என் அம்மா ஆசையாகக் கேட்டால், சரஸ்வதி துதி பாடுவதுண்டு.

முன்பு அம்மாவிடம் சண்டை போட்டது போல இப்போது போடுவதில்லை, சாமி கும்பிடச் சொன்னால் கும்பிடுவேன்.

கற்றுக் கொண்டேன், நான் எனது நம்பிக்கைக்காக பிறரை வற்புறுத்துவது சரியாக இருக்காது! #அம்மாவை வற்புறுத்துவது இல்லை.

கற்றுக் கொண்டேன், எனக்கு பிடித்தார் போல நான் இருக்கலாம், ஆனால், அது என் அன்பானவர்களுக்கு வருத்தம் தந்தாள், சற்று மாற்றிக் கொள்வதில் தவறில்லையே? # நானும் சாமி கும்பிடுகிறேன், என் அம்மாவிற்காக!

கற்றுக் கொண்டேன், ஒரு ஆசிரியரால் எத்தனை பெரிய மாற்றத்தையும் கொண்டு வர முடியும், ஒரே ஒரு மணிநேரத்தில்! இதோ இன்று மாலை கூட பூஜை செய்து, குங்குமம் வைத்துள்ளேன் நெற்றியில், என் அம்மாவின் அன்பிற்காக!

அன்பே சிவம்! இல்லையா?
18 கருத்துகள்:

 1. பல நூல் படித்து நீயறியும் கல்வி...
  பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்...
  பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்...
  இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்...

  தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை...
  கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை...
  அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்...
  அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்...
  பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்-அவன்
  கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்...

  படம் : பாபு, முதல் வரி : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இறைவன் எங்கும் இருக்கிறான், நல்ல விஷயங்களில் எல்லாம்.
   மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 2. எதையும் ஆட்டுவிக்கும் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது, மந்திரங்கள் (அதாவது ஒலி சப்தம் இவற்றிற்கு) வலிமை உண்டு. இருந்தும் மனதின் வலிமைக்கு தான் மிகுந்த சக்தி உண்டு. உங்கள் மனம் என்ன சொல்கிறதோ அதைக் கேளுங்கள், நினைத்தது நடக்க வாழ்த்துக்கள். ( உங்கள் அம்மாவை சமாதனம் செய்யும் உங்கள் பாங்கு மகிழ்ச்சி)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான்,
   "நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்"
   எண்ணங்களுக்கு வலிமை அதிகம் உண்டு.
   "Attitude decides one's altitude"

   மிக்க நன்றி :)

   நீக்கு
 3. கடவுளையும் துதித்துக் கொண்டு, நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்கும் உதவலாம் கண்மணி, அது வேறு, இது வேறு!
  வித்தியாசம் புரிய இன்னும் கொஞ்ச காலம் ஆகும் கண்மணி!

  மனதில் இருப்பதை அப்படியே சொல்லியிருக்கிறாய்.
  அது பிடித்து இருக்கிறது.

  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அம்மா, இருக்கலாம், புரிந்து கொள்ளலாம் வரும் காலத்தில்.

   நீக்கு
 4. உங்களுக்கு ஒரு ஆசிரியர் , எனக்கு என் தாத்தா, பின்புலம் அறியாமல் நாம் எடுக்கும் முடிவு சரியாக இருக்காது என்பதனை தான் ரஞ்சனி அம்மா சுட்டுகிறார் சகோதரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம், கருத்துரைக்கு நன்றி...

   நீக்கு
 5. They say God is everywhere.. Its true..God is among every human everywhere. Bible ssys, "You don give anything for God. Give it to poor. when you give him it reaches God". (though I don share bible quotes, to comment here I searched and found the verse. BTW nice post

  பதிலளிநீக்கு
 6. நீங்கள் சொல்லும் கந்த சஷ்டி கவசத்தை ஒரு பிச்சைக்காரனுக்கு அர்பணிக்க முடிந்தால் அது எவ்வளவு பெரிய விஷயம் ! பிறருக்காகச் செய்யும் பிரார்த்தனை என்றும் மகத்தானது !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான்... அடுத்தவருக்காக வேண்டுவது சிறந்தது தான்,மறுப்பில்லை! அது இப்படித் தான் இருக்க வேண்டும் என்றில்லை என்பதே இங்கே கருத்து!

   நீக்கு
 7. கடவுள் (எல்லாவற்றையும் கடந்து எல்லாவற்றின் உள்ளும் இருக்கும் பொருள்).இங்குள்ள அனுபவ தொகுப்பு உங்கள் அறிவின் பரிணாம வளர்ச்சியை காட்டுகிறது.கடவுள் பற்றி என் வலைப்பூவில் ஒரு கவிதை:
  கடவுள் கவிதை

  நேரம் இருந்தால் வாசித்து பாருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி விஜயன்,உங்கள் கவிதை வாசித்தேன், அருமை. இதனாலே நான் கூட்டம் இருக்கும் கோயில்களுக்கு வரமாட்டேன் என்பேன் என் அம்மாவிடம், திட்டு விழும் அதற்கும்...

   "அமிதி" என்றால் என்ன? உங்கள் கவிதையில் குறிப்பிட்டிருக்கிறீர்களே?

   நீக்கு