முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அப்பா -அம்மா - மகளின் பார்வையில்! #1

இனி நான் எழுத இருக்கும் எல்லாப் பதிவுகளோடும் ஒரு ஒலி இணைப்பைத் தரப்போகிறேன். அந்த ஒலி இணைப்பில் நீங்கள் அந்தப் பதிவை, என் குரலில் கேட்கலாம். வாசிக்க உங்களுக்கு நேரம் இல்லை என்றால், இது மிகவும் உதவும் என்று நினைக்கிறேன். எனக்கும் வாசிப்பது நல்ல பயிற்சியாக இருக்கும்.

எங்கள் வீட்டில் இருக்கும் ஒரு அறையில் நிறைய புத்தகங்கள் இருக்கும், பொழுது போகவில்லை என்று சொல்லவே அவசியம் இல்லை, அத்தனை புத்தகங்களை என் அப்பா வாங்கி வைத்திருக்கிறார், உட்கார்ந்து படித்தால் படித்துக் கொண்டே இருக்கலாம்.

அந்த அறைக்குள் போன என் தம்பி, நேற்று புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு ஓடி வந்தான், என் அம்மாவிடம் அந்தப் புத்தகத்தைக் கொடுத்து, இந்தாங்க நல்லாப் படிங்க, என்று கொடுத்தான்.

அந்தப் புத்தகத்தின் விபரங்கள் கீழ்வருமாறு:

தலைப்பு: நல்ல மனைவியாக இருப்பது எப்படி?
ஆசிரியர்: மு.முத்துக்காளத்தி எம்.ஏ.
பதிப்பகம்: கண்ணம்மாள் பதிப்பகம்.
முதற்பதிப்பு: 1984
விலை: ஒன்பது ரூபாய் (வெறும் ஒன்பது ரூபாயா? என்று நினைத்துக் கொண்டேன் நான், முன்பெல்லாம் சம்பளமும் குறைவு, விலையும் குறைவு தானே, அதான் போலும் என்று நினைத்துக் கொண்டேன்)

என் அம்மா, போடா இதெல்லாம் படிக்கணும்னு அவசியம் இல்ல எனக்கு, என்று சொல்லிவிட்டார், என் தம்பியிடம். நான் தான் விடுமுறையில் இருக்கிறேனே, ஏதாவது படிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, இந்தப் புத்தகத்தைப் படிப்போமே என்று தோன்றியது, சரி, என்று படிக்கத் தொடங்கினேன்.

என் அப்பா அந்தப் புத்தகத்தைப் படித்திருப்பார் போலும், (அப்பா எதற்கு இந்தப் புத்தகம் படித்தார் என்று தெரியவில்லை, ஒருவேளை என் அம்மா அதில் சொன்னது போலெல்லாம் இருக்கிறாரா என்று பார்பதற்காக இருக்குமோ? - என்று நினைத்துக் கொண்டேன்) நிறைய இடங்களில் பிடித்த வரிகளை எல்லாம் அடிக்கோடிட்டிருந்தார், "முத்துக்காளத்தியின்  ஐம்பது முத்துக்கள்" என்று புத்தகத்தின் முதல் பக்கத்தில் எழுதி இருந்தார்,  உள்ளே, ஐம்பது முக்கிய, அவருக்குப் பிடித்த விஷயங்களை அடிக்கோடிட்டு ஒன்று, இரண்டு என்று ஐம்பது வரை குறித்து வைத்திருந்தார். ஆங்காங்கே, அருமை, உண்மை என்றெல்லாம் கருத்து எழுதி வைத்திருந்தார்.

நான் முழு புத்தகத்தையும் படிக்காமல், அப்பா அடிக்கோடிட்டிருந்த வரிகளை மட்டுமே படித்தேன். நன்றாகத் தான் இருந்தது, அதில் குறிப்பிட்டது போல் மனைவி இருந்தால், உறுதியாக குடும்பத்தில் சண்டையே வராது தான், ஆனால், மனைவி பெரிய தியாகியாக இருக்க வேண்டும் அப்படியெல்லாம் நடக்கவேண்டும் என்றால்.

மனைவி தனது உணர்வுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட வேண்டும். இப்படித் தான் பட்டது எனக்கு, அந்தப் புத்தகத்தை வாசித்த போது.

நமக்குப் பிடித்தவருக்காக எதையும் செய்யலாம் தான். கணவனுக்கு அடிமையாய் மனைவி இருக்க வேண்டும். ஆம், அப்படித்தான் இருக்க வேண்டும். அவருக்காக, குழந்தைகளுக்காக தன் வாழ்வை வாழ வேண்டும், தனக்காக அல்ல.

இப்படி ஒரு மனைவி இருந்துவிட்டால், அதை விட என்ன வேண்டும் ஒரு கணவனுக்கு?

நீங்கள் கேட்கலாம், என்னமா, மனைவி, பெண் அடிமையாக இருக்க வேண்டும் என்கிறாய் என்று.

உண்மை, அடிமையாகத் தான் இருக்க வேண்டும். அன்பானவருக்கு, நமக்கு விருப்பமானவருக்கு அடிமையாய் இருப்பதில் ஒரு பெரும் இன்பம் இருக்கும், அது உணர்ந்தால் உங்களுக்குப் புரியும்.

ஒரு பெண் - கணவருக்காக, குழந்தைகளுக்காக தன் வாழ்வை வாழ வேண்டும், தனக்காக அல்ல.
இது தான் அந்தப் புத்தகத்தின் கருவாக எனக்குப்பட்டது, ஆனால், அந்தப் புத்தகத்தில், கணவன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லவே இல்லை. நிறைய விஷயங்கள் எனக்கு சரியாகவும் படவில்லை. என் அம்மாவுக்கு வாசித்துக் காட்டினேன் அந்த ஐம்பது அடிக்கோடிட்ட வரிகளையும், என் அம்மாவும் ஒப்புக் கொண்டார் அந்தக் கருத்துக்களை.

என் அம்மாவிற்கு ஏன் வாசித்துக் காட்டினேன் என்றால், அந்த ஐம்பது வரிகளும் அப்பாவின் ஆசைகள் அல்லவா? அவற்றை அம்மா அறிந்தே தீர வேண்டும் தானே? அதனால் தான்.

என் அம்மா, "அடிமையாய் நான் இருப்பேன்" என்றார். நான் ஆச்சரியமாகப் பார்த்தேன், ஏன் அப்படி? என்று கேட்டேன், அதில் இன்பம் இருக்கிறது என்றார்.

அதுவும் உண்மை தானே?

ஆனாலும், அந்த ஐம்பது வரிகளோடு, என் அம்மா தனது சில ஆசைகளையும் சொன்னார். அதை ஒரு தொடர்பதிவாக எழுதலாம் என்று இருக்கிறேன். இது அதன் தொடக்கம். இன்னும் எப்படியும் ஒரு ஐந்து பதிவுகள் எழுதுவேன், ஒவ்வொரு பதிவுக்கும் - என் அப்பா அடிக்கோடிட்ட பத்து முத்துக்கள், பிறகு அதோடு என் அம்மாவின் விருப்பங்கள் என்று இணைத்துத் தொகுத்து.

இது அவசியம் என்று எனக்குப்படுகிறது, ஏனென்றால், இப்போது நானே பார்க்கிறேன், நிறைய பேர், என் அக்கம் பக்கத்தில், திருமணம் ஆகி இரண்டு மூன்று வருடங்களில், ஏன், சில மாதங்களில், ஏன் சில நாட்களில் விவாகரத்து என்று செல்கிறார்கள். அப்படி நான் பார்த்த ஒரு வீட்டில், இரு சிறு பிள்ளைகள், பாவம் அந்தப் பிள்ளைகள் ஒவ்வொரு முறை தன் அம்மா அப்பா சண்டையிடும் போது, செய்வதறியாது அழுவதைப் பார்த்தால், அத்தனை பாவமாக இருக்கும். அப்பா அம்மாவை அடிக்கிறார், நடுவே சென்றால், பிள்ளைகளையும் அடிக்கிறார், பிள்ளைகள் என்ன செய்வார்கள் பாவம்? அப்பாவும் அம்மாவும் பேசுவதே கிடையாது! அப்படி ஒரு வீட்டில், பிள்ளைகள் எவ்வளவு பாவம்?

கொஞ்சம் வயதுக்கு மீறி இந்தப் பதிவு எழுதுகிறேனோ என்று படுகிறது எனக்கு, ஆனாலும், எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.

இந்தப் பதிவு ஒரு மகள், அம்மா, அப்பா. இவர்களின் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் கலந்ததாக இருக்கும்.

இருபது வருடங்களாக ஒன்றாய் இருந்த, ஒரு குடும்பத்தின் எதிர்பார்ப்புகள், எண்ணங்களாக இருக்கும், முத்துக்காளத்தியின் முத்துக்களையும் உள்ளே இணைத்து.

இது பெரும்பாலும், ஒரு மகளின் பார்வையில் அமையும்.

முத்துக்காளத்தியின் முத்துக்களோடு வாசிக்கலாம் நீங்கள், அடுத்த பதிவில் இருந்து.

கருத்துகள்

  1. நமது அடையாளத்தை இழக்காமல் நம் அன்பிற்கு உரியவருக்கு அடிமையாக இருக்கலாம். அது நடைமுறையில் சாத்தியமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் இருக்கலாம், நம் அன்பிற்கு உரியவரும் நம்மை நேசிக்கும் போது!

      இல்லையா அம்மா?

      நன்றி.

      நீக்கு
  2. மறைந்த திரு முத்துக்காளத்தி அவர்களைப் பற்றி நினைவூட்டியதற்கு நன்றி.பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன், தாண்டவராய முதலியார் எழுதிய பஞ்ச தந்திரக்கதை என்ற நூலினை மறு பதிப்பு செய்வது சம்மந்தமாக எங்கள் அலுவலகத்திற்கு வருவார். ஓய்வு பெற்ற அரசு அதிகாரி அவர்.மிகவும் அன்பாக பழகக் கூடியவர்.நல்ல ஆரோக்கியமான உடலும் கம்பீரமான தோற்றமும்,சிரித்த முகமும் கொண்டவர்.அவர் திடீரென மாரடைப்பில் காலமானது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவர்கள் என்றுமே மறைவதில்லை தானே, ஐயா. இதோ இன்றும் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். நம் பேச்சில் வாழ்கிறார் தானே?

      நன்றி...

      நீக்கு
  3. i need newly married wife charactor you says amma charactor she is god no dought

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்