முந்தைய பதிவு :
அம்மாவிற்கு பதவி உயர்வு கிடைக்கிறது, அப்பாவை விட பெரிய இடம், மதிப்பு அந்த வேலையில் என்றால், அப்பா என்ன செய்ய வேண்டும்? மகிழ்ச்சி அடைய வேண்டும்! ஆனால், மனைவி தன்னை விட பெரியவளாக வந்துவிட்டால், தனக்கு என்ன மரியாதை என்று நினைத்தால்? அங்கு தான் பிரச்சனை! அதே போல, அம்மாவும், தான் பெரிய வேலை பார்க்கிறேன் என்று அப்பாவை மதிக்காமல் இருக்கக் கூடாது தானே?
மன்னிக்கவும், ஒலிப் பதிவு இணைக்க இயலவில்லை. என் வீட்டில் எனக்கு ஒரு குட்டி தம்பி இருக்கிறான், அவன் அமைதியாக இருக்க மாட்டேன் என்கிறான், அரையாண்டுத் தேர்வு விடுமுறை அவனுக்கு. பதிகிறேன் என்று உட்கார்ந்தாலே கத்துகிறான் :) படு சுட்டி.
இனி நான் ஒலி இணைப்பு, முடியும் போதெல்லாம் இணைக்கிறேன்.
அப்பா - அம்மா - மகளின் பார்வையில்! #1
"முத்துக்காளத்தியின் முத்துக்கள்" என்று என் அப்பா அந்தப் புத்தகத்தில் ( எந்தப் புத்தகம் என்று தெரிய நீங்கள் முந்தைய பதிவை படித்திருக்க வேண்டும்) எழுதி வைத்திருந்தார், மொத்தம் ஐம்பது முத்துக்கள் இருந்தன, இந்தப் பதிவில் முதல் ஐந்து முத்துக்களையும், அதற்கு என் அம்மாவின் ஆசை, எனது ஆசை என்று பார்க்கலாம்.
முத்துக்கள் ஐந்து!
- முத்து ஒன்று : கணவனை மனைவி நேசிக்க வேண்டும். அன்பால் அரவணைக்க வேண்டும். அவனுக்குத் தன்னையே "அர்ப்பணிக்க" வேண்டும்.
அப்பாவின் ஆசை நியாயமானது தான். மனைவி அன்பாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் நினைக்கத் தானே செய்வார்கள்! ஆனால், அம்மா பதிலுக்கு கொஞ்சம் அன்பை எதிர்பார்க்கத் தானே செய்வார்? அதை அப்பா தரவேண்டும்! அது அவரது கடமை தானே? (அன்பை கடமை என்று சொல்வது சரியாக இருக்காது, ஆயினும், இன்று பல இடங்களில் நிலை அப்படித் தான் இருக்கிறது!)
என் அம்மாவும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். இந்தப் புத்தகத்தில் போட்டிருந்த ஒரு வரியை வாசித்துக் காட்டி, அம்மா, மனைவி தான் கணவனுக்கு காலையில் காப்பி போட்டுத் தர வேண்டுமாம். கணவருக்கு முன்பு எழுந்து விட வேண்டுமாம். உடல் நிலை சரி இல்லாத போது மட்டும் கணவர் காப்பி போட்டுத் தந்தால் போதுமாம் மனைவிக்கு, என்றேன்.
என் அம்மாவிற்கும் ஆசையாம், அப்பா அன்பாக வாரத்திற்கு ஒரு நாள், இல்லை, மாதத்திற்கு ஒரு நாள், இல்லை, வருடத்திற்கு ஒரு நாள், காப்பி போட்டு எழுப்ப வேண்டும் என்று! வாரத்தில் ஆரம்பித்து, வருடத்திற்குக் குறைத்து, பிறகு, இதெல்லாம் நடக்கற காரியமா...? என்று பெருமூச்சு விட்டுக் கொண்டார்! அப்பா பாசக் காரர் தான், ஆனா இத எல்லாம் செய்ய மாட்டாரு, ஏக்கத்தோடு சொன்னார். சொல்லிக் கொண்டு, அவர் வந்துடுவார், சமைக்கணும் என்று ஓடிவிட்டார். நினைத்துக் கொண்டேன் நான், உண்மையில் அம்மா கிடைக்க, அப்பா கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று!
- முத்து இரண்டு: திருமணம் வெற்றி அடைய கணவனும் மனைவியும் சம முயற்சி செய்ய வேண்டும்.
இது முற்றிலும் உண்மை, எல்லாம் அம்மாவின் பொறுப்பு என்று அப்பா இருந்துவிட்டாலோ, இல்லை, எல்லாம் அப்பாவின் பொறுப்பு இருந்துவிட்டாலோ, குடும்பம் சிறப்பாக இருக்காது.
யார் பொறுப்புகளை, வீட்டை அதிக அக்கறையோடு பார்த்துக் கொள்கிறார்களோ அவர்கள் மீது தான் பிள்ளைகளுக்கும் பாசம் அதிகம் இருக்கும். வீட்டை கவனிக்காமல் அம்மா இருக்கிறார், அப்போது அப்பாவை தான் பிடிக்கும், அப்பா வீட்டை கவனிப்பதே இல்லை, பணம் மட்டும் தான் தருகிறார், அப்போது, அம்மாவைத் தானே பிடிக்கும்? ஆக, இருவரும் ஒன்று சேர்ந்து இருந்தால் தான், பிள்ளைகளுக்கும் ஆனந்தம்.
- முத்து மூன்று: ஒரு மனிதன் ஈடுபட்டுள்ள பணியில் அல்லது தொழிலில் அவனுக்கு நிம்மதி, புகழ், பணம், செல்வாக்கு, மனநிறைவு இருக்க வேண்டும். அத்துடன் அவனது குடும்ப வாழ்க்கை அவனுக்கும் அவனுடைய மனைவி மக்களுக்கும் இடையே நிலவும் உறவு மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும்.
அப்பொழுதுதான் அவனது வாழ்க்கையை வெற்றிகரமான வாழ்க்கை என்று சொல்வோம். இதைச் சாதித்துக் கொடுப்பது சகதர்மிணி கையில் தான் இருக்கிறது.
இன்று கணவன் மனைவி இருவருமே பெரும்பாலான குடும்பங்களில் வேலைக்குச் செல்கிறார்கள். என் வீட்டில் அம்மா வேலைக்குச் செல்வதில்லை, அதனால் தந்தைக்கு எல்லாம் செய்யலாம். ஆனால், அம்மாவும் வேலைக்குச் செல்கிறார் என்றால், இது அனைத்தும் அம்மாவிற்கும் பொருந்தும். அம்மாவும் தனது வேலையில் புகழ் பெற வேண்டும் என்று விரும்பலாம். அதற்கு அப்பாவும் உதவ வேண்டும் தானே?

இதை அம்மா அப்பா இருவருமே புரிந்து கொண்டு நடந்தால், நன்றாக இருக்கும். இல்லை, கணவர் போதுமான அளவு சம்பாதிக்கிறார் என்றால், மனைவி குடும்ப நிர்வாகத்தை மட்டும் சிறப்பாய்ச் செய்யலாம். அதில் ஒன்றும் தவறில்லை, ஆனால், நீ என்ன வீட்டில் சும்மா தானே இருக்கிறாய் போன்ற வசனங்களை கோபத்திலும் அப்பா சொல்லாமல் இருக்க வேண்டும். வீட்டில் சும்மா இருக்கிறாரா அம்மா?
- முத்து நான்கு: மனைவியின் முதல் கடமை கணவனின் மனதில் உள்ளதை அறிந்து கொள்வது தான்.
மற்றொருவர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை நூறு சதவீதம் யாராலும் சரியாக புரிந்து கொள்ள இயலாது. ஆனால், புரிந்து கொள்ளலாம் ஓரளவு. உதாரணமாக, நான் பிறந்ததில் இருந்து என் அம்மா அப்பாவோடு தான் இருக்கிறேன், எந்த செயல் எல்லாம் நான் செய்தால் அவர்களுக்குப் பிடிக்கும், பிடிக்காது என்று எனக்குத் தெரியும். தோழிகளோடு வெளியே செல்கிறேன் என்றால் என் வீட்டில் பெரும்பாலும், பெரும்பாலும் என்ன, முற்றிலும் என்றே சொல்லலாம், அனுமதிக்கவே மாட்டார்கள்.
அது எனக்கு நன்றாகவே தெரியும் எனக்கு. தோழிகள் ஒரு முறை வெளியே செல்வோம், ஏதேனும் உணவகம் சென்று சாப்பிட்டு வருவோம் என்றபோது, என் அம்மாவும், தம்பியும் உடன் வந்தார்கள்!!! தோழிகள் எல்லோரும் தனியாக வந்திருக்க, நான் குடும்பத்தோடு சென்றேன்! அன்றிலிருந்து நான் வெளியே செல்ல வீட்டில் அனுமதி கேட்பதே இல்லை!
இப்படி, ஒரு குடும்பமாக இருக்கும் போது, குடும்பத்தில் அனைவருக்கும், எது பிடிக்கும் பிடிக்காது என்று இயல்பாகவே அறிந்து கொள்ளலாம். அதை நாம் எவ்வளவு தூரம் மதிக்கிறோம், அதாவது, மற்றவர்களின் உணர்வுகளை எவ்வளவு தூரம் மதிக்கிறோம் என்பதில் தான் ஒற்றுமை இருக்கிறது.
நான் சண்டை இட்டிருக்கலாம், என்னை தனியாக தோழிகளோடு வெளியே அனுப்புங்கள் என்று, ஆனால் நான் செய்யவில்லை. கேட்டுப் பார்த்தேன், விடவில்லை! விட்டுவிட்டேன்! ஆனாலும் வேதனையாகத் தான் இருக்கும்.
இது அம்மா அப்பாவிற்கும் பொருந்தும், அம்மா ஏதாவது ஆசை வைத்திருக்கலாம், ஆனால், அப்பாவிற்குப் பிடிக்காது என்ற காரணத்திற்காக அதை விட்டிருக்கலாம். இப்படிச் செய்வதால், அப்பாவிற்கு ஆனந்தம், ஆனால் அம்மாவிற்கு என்ன இருந்தாலும் உள்ளே ஒரு வருத்தம் இருக்கும் தானே?
அப்பாவும் அதைப் புரிந்து கொண்டு "சரி" என்று சொல்லிவிட்டால்? அது தானே ஆனந்தம்? அம்மாவுக்காக அப்பாவும், அப்பாவுக்காக அம்மாவும், புரிந்து கொண்டு, மனமறிந்து விட்டுக் கொடுத்தால் தானே ஆனந்தம்?
- முத்து ஐந்து: கருத்தொற்றுமை இல்லாத கல்யாண வாழ்க்கை குடும்பத்தையே கலகலக்கச் செய்துவிடும்.
கருத்து ஒற்றுமை, இது மிகவும் முக்கியம். அப்பா வரும் சம்பளத்தில் ஒரு பகுதியை தானம் செய்து விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம், அம்மா வீட்டில் இப்படிச் செய்யாதீர்கள் என்று சொன்னால், சண்டை தான் வரும்.
இருவருமே, மனம் ஒத்து, பிறருக்கு, சொந்தங்களுக்கு, நண்பர்களுக்கு, தெரிந்தவர்களுக்கு, தெரியாதவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் மட்டுமே, ஒரே கருத்து உடையவர்களாய் இருந்தால் மட்டுமே நல்ல ஒரு சூழ்நிலை நிலவும் குடும்பத்தில்.
பெண் பிள்ளை வைத்திருக்கிறோம், திருமணம் செய்ய வேண்டும், நகை சேர்த்து வையுங்கள் என்று அம்மா சொல்ல. நான் வரதட்சணையே வாங்காமல் தான் திருமணம் செய்து வைப்பேன் என்று அப்பா சொல்கிறார். இறுதியில் சண்டை வந்துவிடத்தான் செய்யும்.
இருவரும் ஒன்று சேர்ந்து, ஒரே கருத்து உள்ளவராக இருந்தால் தான் நிம்மதி இருக்கும். அல்லது, ஒருவர் சொல்லும் கருத்து நியாயமாக இருப்பின், அதை மற்றொருவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலே சொன்ன உதாரணத்தில், அப்பாவின் கருத்தை அம்மா ஏற்றுக் கொண்டுவிட்டால், பிரச்சனை இருக்காது தானே?
=================================================
முத்துக்கள் அடுத்த பகுதியில் தொடரும்!
(பத்து முத்துகளை ஒரு பதிவாக இடலாம் என்று தான் இருந்தேன், ஆனால், ஐந்தே மிகவும் நீளமாக வந்துவிட்டது! அதானால், ஐந்து, ஐந்து முத்துக்களாக வெளியிட முடிவு செய்துள்ளேன்)
மன்னிக்கவும், ஒலிப் பதிவு இணைக்க இயலவில்லை. என் வீட்டில் எனக்கு ஒரு குட்டி தம்பி இருக்கிறான், அவன் அமைதியாக இருக்க மாட்டேன் என்கிறான், அரையாண்டுத் தேர்வு விடுமுறை அவனுக்கு. பதிகிறேன் என்று உட்கார்ந்தாலே கத்துகிறான் :) படு சுட்டி.
இனி நான் ஒலி இணைப்பு, முடியும் போதெல்லாம் இணைக்கிறேன்.
பதிவினைப் படிக்கையில் நீங்களும் செல்லப் பிள்ளை என்பது தெரிகின்றது. தம்பிக்கும் எனது வாழ்த்துக்கள் சகோ
பதிலளிநீக்குஇவ்வாக்கியத்தில் உள்ள பிழையை கண்டு பிடிக்கவும்
"இனி நான் ஒழி இணைப்பு, முடியும் போதெல்லாம் இணைக்கிறேன்."
மிக்க நன்றி :)
நீக்குமாற்றிவிட்டேன், தட்டச்சுப் பிழை.
கண்மணி, நீங்க, " மேலும் படிக்க" " READ MORE" வசதியை உங்கள் வலைப் பதிவில் இணையுங்கள், இப்பொழுது நீங்கள் பின் பற்றும் முறை படிப்போரை சலிப்படைய செய்யலாம்(இணையத்தின் வேகம் காரணமாக...)
பதிலளிநீக்குநீங்க "JUSTIFY" என்ற வசதியை பயன் படுத்துவதில்லை என்பது பதிவைப் பார்கையில் தெர்கின்றது. பயன் படுத்துங்கள் பதிவு அழகாக இருக்கும் படிக்க....
பதிலளிநீக்குஇது எல்லாம் எப்படி செய்வது? :( எனக்கு தெரியல!!!
நீக்குநீங்க எதையோ மாற்ற முயற்சித்து இருக்குறீர்கள், உங்கள் பக்கம் திரைக்குள் அடங்க மறுக்கிறது. சரி செய்யவும், தெரியவில்லை என்றால் கேளுங்கள் சொல்கிறேன்
பதிலளிநீக்குதங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பி உள்ளேன் பார்க்கவும், கிடைக்கவில்லை எனில் என்னை மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்
பதிலளிநீக்கு