முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் காதல் காலியானதே! நன்றி - 2012!

விதை எழுதுவதற்காகவே இந்தக் "கண்மணி அன்போடு" துவக்கிய நான், சில பத்திகள் எழுதவும் கற்றுக் கொண்டேன்.

எழுதிய கவிதை எல்லாம், கவிதை என்று சொல்லும்படி இருக்காது, உரைநடையில் கொஞ்சம் எதுகை மோனை சேர்த்த, உடைத்துப் போட்ட வாக்கியங்கள் என்று சொல்லலாம்.

முதலில் நான் நினைத்ததுண்டு, காதல் கவிதைகள், கதைகள் மட்டும் தான் எழுத முடியும் என்று. யோசித்து யோசித்து படங்களில் பார்த்ததெல்லாம், தெருவில் பார்த்ததெல்லாம், கற்பனையில் எட்டியதை எல்லாம், பிறகு எனக்குத் தோன்றியதெல்லாம் (வயதுப் பெண் ஆயிற்றே) சேர்த்து எழுதிப் பார்த்தேன் காதலோடு கவிதைகளும் கதைகளும், ஒரு கட்டத்துக்கு மேல் இதற்கு மேலும் என்னடா எழுதுவது என்றாகிப் போனது! காதல் காலியாகிப் போனது! நீங்கள் முதலில் இருந்து என் வலைப்பூவைப் பார்த்தால் புரியும், ஒரு கட்டத்துக்கு மேல் என் காதல் வற்றிப் போனதை!

சிறுபிள்ளை பாருங்கள், தெரியவில்லை எனக்கு காதலையும்  தாண்டி எழுத கோடி இருக்கிறதென்று, அந்தக் கோடியில் சிறு துளியை, காட்டிக் கொடுத்த இந்த ஆண்டிற்கு நன்றி!

ப்போது படிக்கிறோம், தொழில்நுட்பக் கல்வி (உயிரியல் தொழில்நுட்பம்) நான்கு ஆண்டு முடிந்த பிறகு, என்ன செய்யப் போகிறேன்? மேலும் நிறையப் படிக்கலாம், ஆராய்ச்சி செய்யலாம், என்றெல்லாம், படிப்பில் ஒரு பிடிப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஆண்டு இது! நன்றிகள்!

ஏதாவது செய்து அப்பாவின் ஆசையை, நான் நன்றாக வர வேண்டும் என்கிற ஆசையை நிறைவேற்றி, "நல்ல பிள்ளை" பெயரெடுக்க மாட்டோமா? ஏங்கவைத்த ஆண்டிற்கு நன்றிகள்!

வீட்டில் இருந்தால் நிறைய விளையாடுவோம், கல்லூரி விடுதியில் கட்டுப்பாடு அதிகம் -

 • இரண்டு மணிநேரம் கண்டிப்பாக தினமும் இரவு படிக்க வேண்டும், அலைபேசி பயன்படுத்தக் கூடாது, 
 • நேரத்திற்கு சரியாக எல்லாம் செய்ய வேண்டும், 
 • நேரம் கழித்து சென்றால் சோறு கூடக் கிடைக்காது! 
 • அம்மாவிடம் தொலைபேசியில் பேசக் கூட, ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள் ஏதோ தொலைபேசியிலேயே என்னைக் கடத்திக் கொண்டு போய்விடுவது போல! 
 • வரிசையில் நின்று தான் குளிக்க வேண்டும், ஆக வரிசைக்கு பயந்தே அதிகாலை எழுந்தாக வேண்டும், எழுந்து குளித்துவிட்டால், பிறகு என்ன செய்வது? படிக்கத் தான் வேண்டும், 
 • விடுதியை விட்டு கல்லூரி வளாகத்திற்குள் மட்டும் தான் செல்ல அனுமதி, அதுவும் ஆயிரம் கேள்விகள், எங்கே செல்கிறாய், எதற்குச் செல்கிறாய் என்று... 
 • இத்தனை விதிகளையும் தாண்டி, அம்மா அருகில் இருக்க மாட்டார் என்கிற பெரிய கொடுமை!

உள்ளூரில் இருக்கும் கல்லூரியில் விடுதியில் தங்கிப் படிக்கும் கிறுக்கு நானாகத் தான் இருக்கும். ஆனந்தமாக இருக்கலாம் என்று கல்லூரி விடுதியில் சேர்ந்திருந்தாலும் பரவாயில்லை, இத்தனை கொடுமை என்று தெரிந்தும் விடுதியில் சேர்ந்தேன்! தோழிகள் எல்லாம் "லூசு" என்றார்கள். எனக்கே தெரிந்தது, புரிந்தது, நான் லூசு என்று. மகிழ்ச்சியை எல்லாம் முழுவதுமாய்ப் பறிக்கும் இடம் தான் என் கல்லூரி விடுதி, தோழிகளோடு இருக்கும் இன்பத்தைத் தவிர. ஆனால், அதையும் கூட படிக்கும் நேரத்தில் அறைத் தோழியிடம் பேசினால் தண்டனை என்று கொடூரமாக்கினார்கள்! அருகில் இருக்கும் தோழியிடம் பேசினால் தண்டனை, படிக்கும் நேரம் படுத்தால் தண்டனை, வருகைப் பதிவில் கையொப்பமிட மறந்தால் தண்டனை! தண்டனை தண்டனை தண்டனை! இப்படி ஒரு விடுதியில் நானாக சென்று சேர்ந்தால், என்னை லூசு என்று தான் நானே சொல்லிக் கொள்ள வேண்டும்!

ஆனால் நான் சேர்ந்ததன் காரணம், நன்றாகப் படிக்கலாம், ஆம்,  விடுதியில் இருந்தால் நன்றாகப் படிக்கலாம், கவனம் சிதறாது! 

அப்படி ஏன் நன்றாகப் படிக்க வேண்டும்? அப்பா... காரணம் அப்பா... நான் எப்படியாவது மிக மிக மிக மிக மிக.... நன்றாகப் படிக்க வேண்டும் என்று பேராசைப் படும் என் அப்பா! நான் சாதாரணமாக 90 சதவீதம் வாங்குவேன். ஆனால், அப்பாவுக்கோ நூறு தான் வேண்டும்! அதற்காக விடுதியில் சேர்ந்தேன்! 

என்ன விடுதி, அம்மா இல்லாத நரகம் அந்த விடுதி! அழுதேவிட்டேன் பிறந்த நாள் அன்று அம்மா அருகே இல்லை என்று! :( அம்மா சொல்லிவிட்டார், நீ வீட்டில் இருந்து படித்த மட்டும் போதும், அடுத்த ஆண்டு விடுதி வேண்டாம் என்று. என்னைப் பிரிந்து சோகமாக இருக்கிறதாம் அவருக்கும்.

னக்கு நீளமான கூந்தல் :) :) ஆனால் எனக்கே என் கூந்தலை பின்னிக் கொள்ளத் தெரியாது (அத்தனை செல்லம்) அம்மா தான் பின்னி விடுவார். விடுதிக்குச் சென்ற பிறகு தான், நானே பின்னல் போடக் கற்றுக் கொண்டேன், என் வேலைகளை ஓரளவு நானே செய்யக் கற்றுக் கொண்டேன், அம்மா இல்லாமலே! (இந்தப் பொண்ணுக்கு ஒன்ற மீடருக்கு முடி இருக்கு, இப்டி இப்டி சீவி கெளம்ப ஒரு மணி நேரம் ஆகும் - உண்மை தான் ஒரு திரைப்படத்தில் சொன்னது, பின்னல் போட கற்றுக் கொள்வதற்குள் நான் பட்ட பாடு இருக்கே! அப்பப்பா! )

வீட்டைப் பிரிந்து, அப்பா அம்மா தம்பி, பாசம் புரிய வைத்த ஆண்டுக்கு நன்றிகள்!

விளையாட்டாய் எழுதத் தொடங்கி, நேற்று ஒரு விழாவையே , அதுவும் நேர்மையான ஒரு பெரிய மனிதர் - திரு சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களின் முன்னிலையில் தொகுத்து வழங்கும் அளவுக்கு எனக்கு வாய்ப்புகளை அள்ளித் தந்த ஆண்டு!

விழாவில் வாய்ப்புத் தந்த தொழிற்களம் சீனிவாசன் ஐயாவிற்கும், அருணேஷ்வரன் அண்ணாவிற்கும் என் நன்றிகள்; என்னைப் பாராட்டி ஊக்கம் தந்த ஜோதி கணேசன் ஐயாவிற்கும் என் நன்றிகள்!

எனக்கு ஊக்கம் தந்த என் அம்மாவிற்கும், என்னிடம் அதிகம் எதிர்பார்த்து எதிர்பார்த்து வளர்த்து வரும் அப்பாவிற்கும், எப்போதும் வலைப்பதிவு எழுத வேண்டும் என்று கணினியில் உட்கார்ந்தாலே, அவனை விளையாட விடவில்லை என்று சண்டையிடும் அன்புத் தம்பிக்கும் என் நன்றிகள்!வருக 2013! ஆங்கிலப் புத்தாண்டு தான், அதனால் என்ன? இன்று அதைத் தான் பின்பற்றுகிறோம், பொதுவாக உலகமெங்கும்! ஒரே நாளில் உலகமே கொண்டாடும் நல்ல நாள் தானே அது? ஒரே நாளில் நல்ல எண்ணங்கள் எல்லா இடத்திலும் வாழ்த்துக்களாக சுற்றி வரும்போது, உறுதியாக நல்லது நடக்கும், அதைமொழியின் பெயரில், கொண்டாட மறுப்பது நியாமில்லை! 

வாழ்த்துக்கள்! உங்களது நாட்கள் இனி வரும் நாட்கள், இனிமையாக அமையட்டும்!

கருத்துகள்

 1. உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.. நீங்கள் இன்னும் பல உயரங்கள் தொடுவீர்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) :) மிக்க நன்றி, புத்தாண்டு வாழ்த்துக்கள்!

   நீக்கு
 2. தங்களை விழாவில் சந்தித்ததில் மகிழ்ச்சி புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் மகிழ்ச்சி. புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

   நீக்கு
 3. அறியாப் பிள்ளையாக இருந்த அன்புக் கண்மணி இப்போது ஒரு விழாவை தொகுத்து வழங்கும் அளவிற்கு அவளிடம் உள்ள திறமையை - அவளுக்கு அவளையே புரிய வைத்த இந்த ஆண்டிற்கு நன்றி!

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மா. உங்களைப் போன்றோரின் வழிகாட்டுதல் இருக்கும் வரை, என்னால் சிறப்பாகச் செயல் பட முடியும்.

   இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்மா.

   நீக்கு
  2. இந்த வருடத்தில் அசரடித்த பெண் நீயம்மா,

   நீக்கு
  3. மிக்க நன்றி ஐயா. உங்களது ஊக்கம் எல்லாம் இருக்கும் வரை, கண்மணிக்கு கவலை இல்லை.

   நன்றி...

   நீக்கு
 4. பதில்கள்
  1. நன்றி ஐயா. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

   நீக்கு
 5. உன் கனவுகளும், கற்பனைகளும் நிச்சயம் நினைவாகும் கண்மணி,,,

  அளப்பறியாத ஆற்றல் இன்னும் அதிகமாக உன்னுள் இருக்கிறது..

  காலங்கள் உன் பெயரை நிச்சயம் ஒரு நாள் ''பதிவு ( பதிவும்)'' செய்யும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) மிக்க நன்றி. தொழிற்களம் தான் இந்த ஆண்டில் எனக்கு மிகப் பெரிய வாய்ப்புகளைத் தந்தது.

   நன்றி...

   நீக்கு
 6. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி... :) உங்களது குடும்பத்துக்கும் எனது வாழ்த்துக்கள்.

   நீக்கு
 7. கண்மணிக்கு ...அந்த

  நிகழ்ச்சியில் நீ தொகுத்த உரைகளில் துள்ளி குதித்த தமிழை ரசிப்பதிலே என் உரை மறந்துபோனது பெண்ணே அளப்பரிய ஆற்றலை வைத்திருகிறாய் நாளைய உலகம் உன்னை போற்ற இந்த அக்காவின் ஆசிகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அக்கா. உங்களது உரையும் நீங்கள் பேசிய கருத்துக்களும் அருமையாக இருந்தன!

   நட்புக்கு நன்றி :)

   நீக்கு
 8. // ஒரே நாளில் உலகமே கொண்டாடும் நல்ல நாள் தானே அது? ஒரே நாளில் நல்ல எண்ணங்கள் எல்லா இடத்திலும் வாழ்த்துக்களாக சுற்றி வரும்போது, உறுதியாக நல்லது நடக்கும், அதைமொழியின் பெயரில், கொண்டாட மறுப்பது நியாமில்லை! //

  அழகாக மட்டுமல்ல,
  அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறீர்கள்.
  அன்பின் வலியது எது?
  மொழி சொல்லாத காதலை
  மௌனம் சொல்லிடுமே !!

  சுப்பு ரத்தினம்.
  www.vazhvuneri.blogspot.in

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி :) புத்தாண்டு வாழ்த்துக்கள்!

   நீக்கு
 9. Congratulations Kanmani for meeting Mr. Sagayam IAS!. and for hosting an event! Keep scaling new heights. Happy New Year!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

   நீக்கு
 10. உடல் நலமின்மையின் காரணமாக அன்று சொல்ல மறந்து விட்டேன். ஒருவருக்கு உற்சாகமே பிறரின் கை தட்டல் , அதனை அக் குழந்தைகட்கு பெற்றுத் தந்த உங்களுக்கு எனது கை தட்டல். கை தட்டும் பொழுது சோர்ந்திருக்கும் நமது மூளை சுறுசுறுப்பாகுமாம், நல்ல சக்திகள் கொண்ட அலைகள் நல்ல அதிர்வலைகளை உண்டாக்கி விடுமாம்... எல்லாப் புகழும் கண்மணிக்குதான்... பல உயரம் தொடுங்கள் சகோ. நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி செழியன் :) ரொம்ப புகழ்றீங்க நீங்க.

   மிக்க நன்றி. உடல் நலமா இப்போது?

   கல்லூரி விடுதியில் இணையம் மெதுவாக இருந்தது, அதனால் தான் உடனே பதில் உரை போட இயலவில்லை!

   நீக்கு
 11. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி, உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்! :)

   நீக்கு
 12. நலம் தான் கண்மணி, இன்னும் உள்ளுரில் இருந்து கொண்டு விடுதியிலா இருக்கிறீர்கள் ? அச்சோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், விடுதியில் தான் இருக்கிறேன். மாலை வீடு செல்ல நேரம் ஆகிறது வகுப்புகள் முடிந்து, அதனால் தான்.

   நீக்கு
 13. காலியாகிப்போன காதல் என்றவுடன் ஒரு கதையை எதிர்பார்த்து வந்தேன். ஹா ஹா நல்ல வேலை அந்த மாதிரி எல்லாம் இல்லை.

  விடுதி வாழ்க்கை நம்மை உணர வைக்கும். "Take it for granted" என்று நினைத்த அம்மா அப்பாவின் அன்பு அப்போதுதான் புரியும். எதிரியாக நினைத்த தம்பிமேல் தங்கைமேல் பாசம் பிறக்கும். அவனுக்கு/அவளுக்கு பிடித்தது என்று வாங்கி கொண்டு வருவோம். ( வந்த ரெண்டாம் நாள் திரும்ப சண்டை போடுவது வேறு விஷயம் :D ).

  நான் என் கல்லூரி வாழ்க்கை முழுவதும் (6 வருடம்) விடுதியிலேயே களித்தேன். மதுரை S . வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியிலும் , M .C .A விருதுநகர் செந்த்தில் குமார நாடார் கல்லூரியிலும் படித்தேன். என் விடுதி வாழ்க்கை சுகமாகவே இருந்தது.

  நன்றாக எழுதுகிறீர்கள். என் வலைப்பூ உங்கள ஊரில் இருக்கும் லயன் காமிக்ஸ்சை சுற்றியே இயங்குகிறது. :D என் அனுபவங்கள், என் பார்வைகளையும் எழுதுவேன்.

  என் வலைப் பூவுக்கும் (www .comicsda .com ) வருகை தாருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) உண்மை தான், விடுதிக்குச் சென்ற பிறகு தான் வீட்டின் அருமை புரியும்!

   மிக்க நன்றி :) காமிக்ஸ்??? நான் படிச்சதே இல்லையே!!!

   நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா?
என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள்.
இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது!
சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே காசு கேட்பா…

இருபத்தியாறு (21+4) வயதினிலே!

"என்னடா இந்தப் பொண்ணு கணக்குல கொஞ்சம் வீக்கோ?", என்று நீங்கள் நினைப்பது எனக்குக் கேட்கிறது. உண்மை தான், கொஞ்சம் வீக் தான். ஆனால், இப்போது எனக்கு இருபத்தியாறு வயது துவங்கி இருக்கிறது, அதனால் தான் முடிந்த வயதை கணக்குப் போட்டு இருக்கிறேன். புரிகிறதோ? 
21 வருடம் அம்மா அப்பா கையைப் பிடித்துக் கொண்டு இருந்தேன். 4 வருடம் தனியாக இருந்தேன். இப்போதும் தனியாகத் தான் இருக்கிறேன். (தனிமை தனிமையோ, கொடுமை கொடுமையோ!)
சரி இந்த இருபத்தி ஐந்து வருடங்களில் நான் "இது சரி", "இது தவறு", என்று இப்போது வரை கற்று இருப்பவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். விருப்பம் இருந்தால் வாசித்துப் பாருங்கள். இதில் இருப்பவை எல்லாம் என்னுடைய சுய அனுபவங்கள் கொண்டு நான் எழுதி இருப்பவை. உங்களுக்கும் இது சரியாக இருக்க அவசியம் இல்லை.   
சரி "வளவள" என்று பேசாமல் சொல்ல வந்ததைச் சொல்கிறேன், கேளுங்கள்!
இதில் வெவ்வேறு தலைப்புகளாகப் பிரித்து எழுதி இருக்கிறேன், பின்னாளில் நான் மறுபடி இதைப் படித்துப் பார்க்கையில் எனக்கு எளிதாக இருக்கும் பாருங்களேன்? பெரும்பாலும் நான் எழுதுவதெல்லாம், எனக்காகத் த…

இது ஒரு சிக்கன் கதை!

சிக்கன்! அசைவ விரும்பிகள் எல்லோருக்குமே பிடித்த, மிக மிகப் பிடித்த ஒன்றாக இருக்கும் இந்தச் சிக்கன்!?
எப்போதும் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு மீன் சமைக்கும் வாசம், அற்புதமாகவும், சைவம் சாப்பிடுபவர்களுக்கு அது “அய்யோ... என்ன கருமம்!”, என்பது போலவும் இருக்கும்!
இதில் நான் முதல் வகை, அசைவம் சாப்பிடும் வகை!
என் நண்பர்கள் உறவினர்களிடம் கேட்டால் தெரியும், எனக்கு எவ்வளவு பிடிக்கும் அசைவ உணவு என்பது!
எனக்கு ஒரு அத்தை இருக்கிறார், அவர் வீட்டிற்குச் சிறுவயதில் சென்ற போது, ஒரு முறை, ஒரு அரைக் கிலோ மீனை ஒரே ஆளாகச் சாப்பிட்டேனாம்!
”புரட்டாசி மாதம், அசைவம் சாப்பிடக் கூடாது, வெள்ளி, செவ்வாய் பிறகு சனி, அசைவம் சாப்பிடக் கூடாது”, இப்படி என் அம்மா போடும் விதிகள் எல்லாம், அப்பா... எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது!
அதென்னவொ, அசைவ உணவின் ருசி அத்தனை அருமை! (இதைத் தான் பசிக்கு உண்ணாமல் ருசிக்கு உண்பது என்பார்களோ???)
என் அப்பா அசைவம் சாப்பிடமாட்டார் அதிகம், நானும் அம்மாவும் தான், வற்புறுத்தி சாப்பிட வைப்போம். அவர் உடனே சொல்வார், “ஊன் வளர்க்க ஊன் உண்ணக் கூடாது”, என்றெல்லாம்.
என்னையும் அசைவம் சாப்பிடாதே, விட்டுவிட…