ஞாயிறு, டிசம்பர் 02, 2012

மூக்குப் பொடி டப்பா - முருகன் தாத்தா!

"ஏலே பயலே... தாத்தாவுக்கு மூக்குபொடி டப்பாவைத் தேடிக் குடுலே!...", தன் கட்டிலில் துலாவியவாறே கத்தினார் முருகன் தாத்தா!

ஒல்லியான தேகம், சட்டை போடுவதை விட்டு பல நாட்கள் ஆகி இருந்தது. ஏதாவது விசேஷம் என்றால் மட்டும் தான் தாத்தா சட்டை போடுவார். இல்லை என்றால் ஒரு துண்டு தோளில், ஒரு "கைலி", இது தான் அவரது உடுப்பு.
Courtesy: Flickr.com

மூக்குபொடி இல்லாமல் அவரால் ஒரு நாள் கூட இருக்க முடியாது. தீர்ந்து விட்டால், பக்கத்து வீட்டுத்  தாத்தாவிடம்  வாங்கியாவது போட்டு விடுவார். அதே போல, அவரது சிறிய மூக்குப் பொடி டப்பாவைத் தொலைத்துவிட்டுத் தேடுவது அவருக்கு வாடிக்கை. தினமும் மூன்று வேளையும் தேடுவார். தேடினாலும் அவருக்குக் கிடைக்காது. பக்கத்திலேயே இருந்தாலும் கிடைக்காது! வயதாகிறது அல்லவா, அதனால் தான். இப்படி தான் இறுதியில் பேரனைக் கூப்பிடுவார், "ஏலே பயலே..." என்று.

"இந்தத் தாத்தாவுக்கு வேலையே இல்ல, எப்பபாரு, என்னையே கூப்டு மூக்குப்  பொடி தேட விடறது...", அலுத்துக் கொண்டே வருவான் சுந்தரம்.

"ஏலே, இந்த மூக்குப் பொடி டப்பியக் காணோம்.. பாருடா.. எங்கனு பாரு..", தேடிக் கொண்டே சொல்வார்.

"இந்தா தான இருக்கு...", வந்த வேகத்தில் எடுத்து அவர் கையில் கொடுத்து விட்டு, விளையாட ஓடிவிடுவான் சுந்தரம்.

சுந்தரம், முருகன் தாத்தாவின் கடைசிப் பெண்ணின் மகன். படு சுட்டி. கையில் எது கிடைத்தாலும் பிரித்து மேய்ந்து விடுவான், அதாவது உடைத்து விடுவான். அதுவே அவன் பொழுது போக்கு.

"தாத்தா... தாத்தா... சோறு பொங்கி வெளயாடுவோம் தாத்தா.. வாங்க.. வெளயாடுவோம்...", இப்படி சதா தாத்தாவை தொல்லை செய்வாள் குழலி.

குழலி, முருகன் தாத்தாவின் மகனின் பெண். செப்பு விளையாடுவது, அதுவும் தாத்தாவோடு விளையாடுவது அவளுக்கு மிகவும் பிடிக்கும்.

"ம்ம்.. வாடா.. வெளயாடுவோம்.. தாத்தாவுக்கு பொங்கச் சோறு செஞ்சு தா என்ன?", சிறுபிள்ளையாய் விளையாடுவார் குழலியிடம் முருகன் தாத்தா.

"ம்ம் தாத்தா... இந்தா பொங்கச் சோறு... சாப்டுங்க, ரொம்ப சுடுது, பாத்து...", என்று தனது செப்பில் இருக்கும் சிறு தட்டை, காலி தட்டை தாத்தாவிடம் கொடுப்பாள் குழலி.

"பூ பூ... , ரொம்ப சுடுது... ரொம்ப நல்ல இருக்கு பொங்கச் சோறு...", ஊதிக்கொண்டு தனது போக்கை வாயை அசைத்து இல்லாத பொங்கலைச் சாப்பிடுவார் முருகன் தாத்தா.

அதைப் பார்க்கையில் குழலிக்கு அத்தனை ஆனந்தமாக இருக்கும். உண்மையிலேயே தான் சமைத்த பொங்கல் அருமையாய் இருக்கிறது என்று சொன்னார் போல பெருமையாய் நினைப்பாள்.

தாத்தா என்றால் அவளுக்கு அத்தனை பிரியம்.

தாத்தாவுக்கு குழலியைப் பிடிக்கும் அளவுக்கு, மற்ற பேரன் பேத்திகளைப் பிடிக்காது.

குழலியின் தந்தை தான், முருகன் தாத்தாவைப் பார்த்துக் கொண்டார்.

"சோறு போடும் பிள்ளையின் மகள்" என்பதாலோ என்னவோ, குழலியை தான் பிடிக்கும், எப்போதும் அவளைத் தாத்தா திட்டுவது கூட இல்லை. மேலும், சுந்தரம் - பவளத்தின் வீட்டில் அவ்வளவு வசதியும் கிடையாது! இவர்களைத் தாத்தாவுக்கு அவ்வளவாகப் பிடிக்காது. எப்போதும் திட்டிக் கொண்டிருப்பார் அவர்களை.

குழலிக்கும் தாத்தாவை ரொம்பப் பிடிக்கும். எந்நேரமும் விளையாட்டாய் இருக்கும் அவளுக்கு தாத்தாவோடு.

குழலி பெரியவளானாள்,  தாத்தாவை இப்போதெல்லாம் அவளுக்குப் பிடிப்பதில்லை. அவர் அவளோடு "மட்டும்" விளையாடியது அவளுக்குப் பிடிக்கவில்லை!

----------------------------------------------

"குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே! "

இந்தக் கூற்று எவ்வளவு உண்மை? குழந்தை கொண்டாடும் இடத்தில் , கொண்டாடுபவர் எப்படி எண்ணம் கொண்டவர் என்று எண்ணாமலேயே விளையாடிக் கொண்டு இருக்கும், ஆனந்தமாய். இறைவனும் என்ன அப்படியா?

கொண்டாடினால், தீயவருக்கும் துணை செல்வாரா?

இன்றெல்லாம் ஒருவேளை, நல்லவர்களாய் இருந்தும், பலர் துன்பப்படுவது, அதனால் தானோ?

உங்களுக்குத் தெரிந்தால், கொஞ்சம் விளக்கம் சொல்லுங்களேன்?10 கருத்துகள்:

 1. //அவர் அவளோடு "மட்டும்" விளையாடியது அவளுக்குப் பிடிக்கவில்லை!//

  கடவுளும் அப்படிதான் தீதும்,நன்மையையும் கொண்டடுபவரின் எண்ணத்தை பொறுத்தே அமையும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓஒ... அப்போ, கொண்டாடுபவர் தீயவரா இருந்தா, கடவுள் தீயவர் செய்றதுக்கு உதவுவாரோ?!! :O

   கருத்துக்கு நன்றி...

   நீக்கு
  2. சகோதரி நீங்கள் தவறாக புரிந்துகொண்டீர் நன்மை செய்பவரை காப்பதும், தீது செய்பவர் அவரை கொண்டாடினாலும் தக்க தருணத்தில் தண்டிப்பார். எ.கா: நித்தியானந்தா,ஜெயந்திரர்,காஞ்சி தேவநாதன் இப்படி பலபேர். O.K

   நீக்கு
  3. ஒ.. அப்படி சொன்னிங்களா, இப்போ தெளிவா புரிஞ்சது!

   நீக்கு
 2. //கொண்டாடினால், தீயவருக்கும் துணை செல்வாரா?// ரொம்ப அழகா ஒரு கதை எழுதிட்டு இப்படி ஒரு கேள்வி கேக்றீங்க...

  சத்தியமா சொல்றேன் என்னைக்கும் தலைவர் வழி தான் ஆண்டவன் கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான் ஆனா கை விட்ருவான் ... இதுக்கு அடுத்து உங்களுக்கு தெரியும் நீங்களே மீதிய தினக் பண்ணிகோங்க....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்டியா? கடவுள் நெறைய கொடுப்பார் கெட்டவங்களுக்கு? ஆனா? கை விட்டுடுவார்?
   அவர் கை கொடுக்குறதுக்கு முன்னாடி, நல்லவங்க வாழ்க்கை முடிஞ்சிடும் போல இருக்கே?!

   கருத்துக்கு மிக்க நன்றி...

   நீக்கு
  2. ம்ம்ம் "கொஞ்சம்" என்னவோ உண்மை தான்

   நீக்கு
 3. நீண்ட நாட்களாக தமிழ் ஆங்கில அகராதியை குழந்தைகளுக்காக தேடிக் கொண்டு இருந்தேன். மிக்க நன்றி. இன்று தான் ஆங்கில தளத்தையும் பார்த்தேன்.

  அற்புதம்.

  பதிலளிநீக்கு