முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான் கோழை தான்!

புலி
என்னை யாரும் எதிர்பார்க்க வேண்டாம்!
அதோ, அங்கே போராடுகிறீர்களே,
நீங்கள் யாரும் என்னை அழைக்க வேண்டாம்!

"எழுவோம், போராடுவோம்...", என்றெல்லாம்,
என்னை உங்களோடு சேர்க்க முயல வேண்டாம்!

கல்யாணம் செய்து வைப்பேனென்று,
ஒரு தங்கையும்,
"பள்ளிக் கட்டணம் கட்டுவான் அண்ணன்"
இப்படி நினைத்தபடி ஒரு தம்பியும்,
மருந்து வாங்க காசு வேண்டும்,
இருந்தும் கேட்டால், "எங்கே பையன்
சிரமப்படுவானோ" - வருந்தும்
தாய் தந்தையும் உண்டு!

வீதியில் இறங்க விருப்பமுண்டு,
உங்களோடு இணைந்து கொள்ள வேகமுண்டு,
ஆனால் மன்னியுங்கள் என்னை,
சுயநலக்காரன் நான்!

இரண்டு நாள் காய்ச்சல்
இப்படிச் சொல்லி விடுப்புப் போட,
இயலாது என் அலுவலகத்தில்,
மீறிப் போட்டால்,
வேலை இருக்காது
இன்றில் இருந்து!

வீரமாய் வந்து, புலிகளுக்கு கை கொடுக்க,
 இதோ என் உடம்பில் வீரமுண்டு,
ஆனால், மன்னியுங்கள் என்னை,
கோழை தான் நான்!

என் தலையில் அடிக்கும் வரையில்,
என் தங்கையை யாரும் தீண்டும் வரை,
என் தாய் தந்தை பாதிக்கப்படும்  வரை,
என் தம்பி தாக்கப்படும் வரை,
மன்னியுங்கள் என்னை,
கோழை தான் நான்!

என்னை மன்னியுங்கள்,
கோழை தான் நான்,
என்னைக் கொலை செய்ய யாரும்,
எத்தனிக்காத வரையில்,
கோழை தான் நான்!

என் முகத்தில்,
அவர்களது கோழையை,
 உமிழ்ந்து விடாத வரையில்,
நான் கோழை தான்!
மன்னியுங்கள்,
நான் கோழை தான்!

:( :( :( :'( :(

கருத்துகள்

  1. போராட ஆயிரம் விசயங்கள் இருக்கின்றன கண்மணி.. முதலில் நாம் 100% உண்மையான குடிமகனாக இருந்தால் எதற்கும் போராட வேண்டிய அவசியமே இருக்காது.. நாம் அபப்டி இருக்கும் போது தான் அரசியல்வாதிகளுக்கு நம் மீது பயம் இருக்கும்.. நமக்கு நன்மையை மட்டும் அவர்கள் செய்வார்கள்.. நம் பக்கம் இருந்து எதுவுமே செய்யாமல், சும்மா உண்ணாவிரதம், போராட்டம் என்று இருப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது என் கருத்து. அப்படியே போராட வேண்டும் என்றாலும் இங்கு நம் நாட்டில், மாநிலத்தில், ஊரில் நடக்கும் எத்தனையோ வன்முறைகளுக்கு எதிராக போராட ஆரம்பிக்கட்டும்.. எதில் போராடினால் எளிதாக விளம்பரம் கிடைக்குமோ அதை தேர்ந்தெடுத்து போராடுவதற்கு பெயர் போராட்டம் அல்ல..
    ஈழ தமிழர் விசயத்தில் அவர்களுக்கு ஞாயம் கிடைக்க வேண்டும் என்பது தான் என் ஆசையும் என் வேண்டுதலும்.. அதற்காக இங்கு நடக்கும் நாடகங்களையும் விளம்பரங்களையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்.. உங்க அளவுக்கு எனக்கு யோசிக்க தெரியல! ஆனாலும், இதுக்கு போராடுறது விளம்பரத்துக்காகவா? ஆயிரகணக்குல போராடுராங்கன்னா அதுல எல்லாருக்குமா விளம்பரம் கிடைக்க போகுது?

      இப்படி ஒரே வரில, விளம்பரத்துக்காகனும் சொல்லிடக் கூடாதுன்னு எனக்கு தோணுது.

      நீக்கு
    2. விளம்பரம்னு சொல்றத விட ஒரு வித ‘கிக்’ என்று வேண்டுமானால் சொல்லலாம்.. இவர்களின் போராட்ட உணர்வு ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்த போது எங்கே போனது? எப்போதோ இறந்த ஒரு சிறுவனின் படத்தை இப்போது டிவியில் பார்த்தவுடன் போராட்டமா? பல கல்லூரிகளில் தாளாளரையும் முதல்வரையும் திட்டி கோசம் போட்டுக்கொண்டிருக்கிறார்களாம்.. தினம் தினம் இங்கு மீனவன் இலங்கை கடற்படையால் செத்துக்கொண்டிருப்பதற்கு ஏன் யாரும் போராடவில்லை? அவனுக்கு உயிர் இல்லையா? குறிப்பிட்டு ஈழத்துக்கு மட்டும் ஏன் போராட வேண்டும்? இது ஒரு மிகப்பெரிய அரசியல்.. மாணவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்கிறார்கள் 60களின் மொழிப்போர் போல.. அப்போது அதில் ஈடுபட்ட பலரும் வாழ்க்கையை உயிரை இழந்தது தான் மிச்சம்... இன்று வரை அதில் ஈடு பட்டவர்களின் குடும்பங்கள் சோற்றுக்கு கூட வழி இல்லாமல் இருக்கிறார்கள்.. ஆனால் அந்த மொழிப்போரால் என்ன பிரயோஜனம் நடந்தது? இந்த போராட்டமும் அபப்டி ஒரு நிலையை ஏறப்டுத்தி விடுமோ என்று தான் எனக்கு அச்சம்..

      நீக்கு
    3. கிக்கா? எனக்கு என்னவோ அப்படி எல்லாம் ஏற்க மனம் வரவில்லை. போராடுபவர்களும் கொஞ்சம் வளர்ந்த, யோசிக்கத் தெரிந்த இளைஞர்கள் தானே? குடும்பத்தைப் பற்றி அக்கறை அவர்களுக்கும் இருக்கத் தானே செய்யும்? கொஞ்சம் கூடவா யோசித்திருக்கமாட்டார்கள்? இதனால் பின்னால் தங்களுக்கு என்ன விளைவுகள் எல்லாம் வரும் என்று?

      இன்று வரை போராடாமல் இருந்திருக்கலாம், அதனால் இப்போது போராடும் போது, இவர்கள் கிக்குக்காக செய்கிறார்கள் என்று சொல்வது சரியாக இருக்காது.

      ஒரு சிலர் வேண்டுமானால் அப்படி இருக்கலாம், "இருக்கலாம்" தான். ஏதோ ஒரு நல்ல நோக்கத்திற்காக நடக்கும் இந்த போராட்டத்தைப் பற்றி இப்படி தவறாக பேச எனக்கு மனம் வரவில்லை!

      உங்களுக்குத் தெரியுமா? இது வரை தமிழ் ஈழம், இலங்கையில் என்ன நடக்கிறது, இது எதுவுமே தெரியாமல், எனக்குத் தெரிந்தே நிறைய மாணவிகள் இருக்கிறார்கள்.

      மாணவர்கள் எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. இந்த போராட்டம் இதெல்லாம் தொடங்கிய பிறகு தான் நிறைய மாணவிகளுக்கு இது என்ன என்றே தெரிந்திருக்கும், அல்லது தெளிவாகப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

      போராடுபவர்கள் பாதிக்கப்படுவார்கள் தான், அதனால் போராடாமலே இருந்துவிட்டால்?
      முயன்று தான் பார்ப்போமே?

      அரசியல்... இருக்கலாம்! ஆனாலும் இந்த நோக்கம் சரியானது தானே?

      உங்களை விட இளையவள் நான், விபரம் உங்களை விட குறைவாகத் தெரிந்திருக்கலாம் எனக்கு. ஏதோ எனக்குத் தோன்றியதை சொல்லிவிட்டேன்.

      நீக்கு
    4. நீங்கள் அந்த போராட்டத்தில் இருக்கும் நன்மையை பார்க்கிறீர்கள்.. நான் அதனால் ஏற்படப்போகும் மோசமான விளைவுகளை சொல்கிறேன்.. உண்மையில் அங்கு போராடும் மாணவர்களுக்கு அதை பற்றி தெரிந்திருக்கிறதோ இல்லையோ, ஆனால் பல பொது மக்களுக்கு இது விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மை.. அந்த போராட்டக்காரர்களின் நிலையில் அவர்களின் குடும்ப சூழலில் இருந்து யோசித்து பாருங்கள்.. எவ்வளவோ மனித உரிமை மீறல்களும், அட்டூழியங்களும் இங்கும் நடக்கின்றன.. நாம் முதலில் இங்கு ஒற்றுமையாக இருந்தால் தான் வெளி நாட்டில் கூட நம்மை தொட பய்ப்படுவான் அவன்.. ஈழத்திற்காக மட்டும், புகழை எதிர்பார்த்து போராடுவது ஒன்றையும் பெற்றுத்தராது.. நம் ஒரு சரியான குடிமகனாக இருந்தால் எந்த அரசியல்வாதியும் நமக்கு தீங்க இழைக்க அஞ்சுவான் என்பது தான் உண்மை.. நம் பக்கமும் எல்லா பிரச்சனையையும் வைத்துக்கொண்டு நம்மூர் அரசியல்வாதிகளையும் வெளிநாட்டு ஆட்களையும் இப்போது மட்டும் எதிர்ப்பதால் ஒன்றும் நடக்காது.. இதற்கு போராடும் ஆட்கள் சிலரிடம் பெர்சனலாக பேசியதில் இருந்து தெரிவது ஒன்றே ஒன்று தான்... அவர்கள் ஒரு சிலரால் தூண்டி விடப்படுகிறார்கள்.. அரசியல் கட்சிகளின் ஆதரவும் இருக்கிறது சிலபல வாக்குறிதிகளினால். உண்மையாக போராடுவது, அங்கு என்ன நடக்கிறது என தெரிந்து போராடுபவர்கள் மிக மிக மிக கம்மி தான்.. என் ஒரே ஆதங்கம் ஈழத்திற்கு போராடுபவர்கள் இங்கு நம் ஊரில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போராடட்டும்.. அவனவன் வீட்டில் பெண்களை மட்டம் தட்டுவதை நிறுத்தட்டும்.. எந்த ஒரு ஆரம்பமும் நம்மில் இருந்து தான் இருக்க வேண்டும்..
      //உங்களை விட இளையவள் நான், விபரம் உங்களை விட குறைவாகத் தெரிந்திருக்கலாம் எனக்கு. ஏதோ எனக்குத் தோன்றியதை சொல்லிவிட்டேன்.// இல்லை நீங்கள் சொன்ன எல்லாமே ஒரு விதத்தில் சரி தான். நீங்கள் காசின் தலை பகுதியை பார்க்கிறீர்கள்... நான் பூ பகுதியை பார்க்கிறேன்... அவ்வளவு தான்.. அதற்காக என்னை பொசுக்கென்று அங்கிள் ஆக்கிவிட்டீர்களே?!!!! ஆவ்வ்வ்வ்வ்வ்.. நானும் காலெஜ் லீவுல தாங்க வீட்ல இருக்கேன்..

      நீக்கு
    5. ம்ம், நீங்கள் குறிப்பிடும் சுய மாற்றமும் தேவை தான், நீங்கள் சொல்வதும் நான் சொல்வதும் சேர்ந்து நடந்தால், சிறப்பாக இருக்கும். அதாவது நீங்கள் சொன்ன உதாரணம் போல, பூவும் தலையும் சேர்ந்து இருந்தால் தான் நாணயம் முழுமையடையும்?

      உங்கள நான் அங்கிள்னு சொல்லவே இல்லையே?

      நன்றி...

      நீக்கு
    6. //அதாவது நீங்கள் சொன்ன உதாரணம் போல, பூவும் தலையும் சேர்ந்து இருந்தால் தான் நாணயம் முழுமையடையும்?// good...
      //உங்கள நான் அங்கிள்னு சொல்லவே இல்லையே? // ஏங்க, சீரியஸா விவாதம் போகுதேனு நக்கலுக்கு எதாவது பேசுனா, அதுக்கும் சீரியஸா தான் ரிப்ளை பண்ணுவிங்களா? வாட் எ பிட்டி?

      நீக்கு
    7. :) :) நானும் சும்மா வெளையாட்டுக்கு தான் சொன்னேன் :P :D வாட் எ பிட்டி?

      நீக்கு
  2. உங்கள் வரிகள் நன்றாக இருக்கிறது,
    அருமையான எழுத்து நடை...
    ஆனால் கருத்து?
    இப்போதைய நிலையில் இது வேண்டாமே...?
    நண்பர் கூறுவது போல் யாரும் விளம்பரத்திற்காகவும், கிக்கிற்காகவும் தங்கள் உடலை வருத்திக் கொள்ள மாட்டார்கள்.
    இரண்டு நாள் தாண்டி பசி உயிர் போகும் வேளையில் கிக் தேவைப்படாது...
    நாமெல்லாம் கோழைகள், தவறு என்று தெரிந்தும் நாம் பாதிக்காத வரையில் போராடாத கோழைகள்.....
    ஆனால் களத்தில் இறங்கியிருக்கும் நண்பர்கள் தங்கள் எதிர்காலத்தை பணயம் வைத்து இறங்கி இருப்பவர்கள்....
    கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களும் போராட தயாராகும் இத்தருணத்தில் அவர்களை தயங்க செய்யும் வகையிலான உங்கள் எழுத்தை இப்போது வெளியிட்டது பிசகு எனப் படுகிறது எனக்கு...
    எதுவாயினும் உங்கள் திறமை நாளுக்கு நாள் வளர்கிறது...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது ஊக்கத்திற்கு மிக்க நன்றி. ஆனால், இந்தக் கவி தயாராகும் மாணவர்களை தயங்கச் செய்யும் என்று சொல்வது தான் எனக்குப் புரியவில்லை.

      எனக்குத் தெரிந்து இந்தக் கவியை வாசித்தால், நாம் கோழையாக இருக்கக் கூடாது, சுயநலமாக இருக்கக் கூடாது என்று தான் ஒருவருக்குத் தோன்றும் என்று நினைக்கிறேன்.

      உங்களுக்கு எப்படிப் புரிந்தது என்று எனக்குத் தெரியவில்லை!

      மிக்க நன்றி தங்களது கருத்தைப் பகிர்ந்தமைக்கு.

      நீக்கு
  3. உண்மைதான் கண்மணி, என் தோழர்களும் , தோழியரும் சிறிதும் அதைப் பற்றி எண்ணம் இன்றி இருக்கின்றனர். ராம் அண்ணா சொல்வதும் சரிதான் , ஆனால் ஒட்டுமொத்தமாக பழித்து விடக் கூடாது. கண்மணி உங்கள் கவிதையின் பார்வையும் சரிதான். என் வியூகம் என்னவென்றால் நாம் வளர்க்கப்பட்ட முறையும் ஒரு காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம், வளர்க்கப்பட்ட விதம்... ஆம், நாம் என்ன செய்கிறோம் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறோம் என்பதற்கு அது தானே பெரிய காரணம்.

      நன்றி...

      நீக்கு
    2. // ராம் அண்ணா சொல்வதும் சரிதான்// ஹலோ செழியன் உங்க மேல மான நஷ்ட வழக்கு போடப்போறேன்..
      வளார்க்கப்பட்ட விதம் என்பது நாம் படித்து முடிக்கும் வரை தான்.. படித்து முடித்து வெளியுலகுக்கு போன பின் நாம் இந்த வாழ்க்கையை எப்படி அணுகுகிறோம் என்பதில் தான் இருக்கிறது.. அப்போது உங்கள் செயல்பாடுகளில் வளர்க்கப்பட்ட விதத்தின் பங்கு மிகவும் குறைந்து விடும்.. கல்லூரி வரை ஒவ்வொருவருக்கும் இருக்கும் மனநிலை/தைரியம்/நிலைப்பாடு எல்லாமே பெரும்பாலும் கல்லூரி முடித்து நிஜ உலகுக்கு வந்தபின் தலைகீழாக மாறிவிடும்.. நான் வளர்க்கப்பட்ட விதம் என்று பார்த்தால், இன்று நான் செய்வது எதுவும் நான் வளர்க்கப்பட்ட விதத்திற்கு சம்பந்தம் இல்லை.. ஆனால் 4ஆண்டுகளுக்கு முன்பு வரை, நான் என் வீட்டு பழக்க வழக்கத்தின், கட்டுக்கோப்பின் 100% ஜெராக்ஸ்.. உங்களுக்கு இது ஒன்றிரண்டு ஆண்டுகளின் புரியும் கண்மணி..

      நீக்கு
    3. நாங்க ரெண்டு பேரும் இன்னும் வேலைக்கு போகலேல, ஒருவேள அதனால இன்னும் வீட்ல சொல்ற மாதிரி இருக்குறோம் போல!

      நீக்கு
  4. வெளிச்சத்தை தேடும்
    விட்டில் பூச்சி!!!
    கவி பாடி கதை சொல்லுது!!
    = நிலாஅரசனின் மகள்

    \\\\\\\\\\\\\\\\\


    பதிலளிநீக்கு
  5. அருமையான கவிதை! மாணவர்களின் போராட்டம் வரவேற்கக் கூடியதுதான்! அதில் அரசியல் கலப்பதால் சங்கடமாகிறது!

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள் :) மிகச் சிறப்பான வரிகள்...

    கடைசிப் பத்தியில் "என் முகத்தில், அவர்களது கோளையை" என்று இருக்கிறதே!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி...

      ஆம், கோளை என்றால் "சளி"அல்லது "உமிழ் நீர்" என்று பொருள் கொள்ளலாம்.

      நீக்கு
  7. @ கண்மணி : அதற்கும் ழகரம் தான் வரவேண்டும் என்று நினைத்து தான் கேட்டேன். தமிழ் விக்சனரியிலும் ழகரம் தான் உள்ளது. நீங்கள் எழுதியது தவறு என்று வாதாடுவதாக நினைக்க வேண்டாம். எனக்குத் தெரியாததை தெரிந்து கொள்ளத் தான். :D

    http://ta.wiktionary.org/wiki/கோழை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் நீங்கள் சொல்வது சரி தான், "ழ" தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். அனால், ஒரு சில இடங்களில் தமிழ் "wikitionary" - அதிலும் கூட கோளை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலும் சில அகராதிகளிலும் கோளை என்பதை சளி என்று சில இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

      ஆனால், பெரும்பாலான இடங்களில் "கோழை" என்று தான் உள்ளது.

      நான் நிறைய தேடித் பார்த்தேன், "கோளை" என்றால் என்ன என்றும், எலி என்று கூட பொருள் போட்டிருக்கிறார்கள், சில இடங்களில் "சளி" என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

      :) நன்றாக குழம்பிவிட்டேன். ஆனாலும், நீங்கள் சொல்வது தான் நிறைய இடங்களில் இருப்பதால், இறுதியாக "ழ" தான் வரும் என்று நாம் "conclusion" சொல்லிவிடலாம்.

      :P :D :)

      மிக்க நன்றி :)

      இப்டி அடிக்கடி ஏதாவது வாசிச்சு பிழை இருந்தா சொல்லுங்க :) நன்றி.

      நீக்கு
    2. ஆன்லைன் அகராதிகளில் நிறைய பிழைகள் இருக்கின்றன என்று நான் ஆராய்ச்சி செய்ததில் கண்டுபிடித்து இருக்கிறேன் :)

      க்ரியாவின் தமிழ் அகராதி என் வீட்டின் பரணில் இருந்தது, அதை தேடி எடுத்து, தூசி தட்டி, தேடியதில், தாங்கள் சொன்னது சரி என்று கண்டுபிடிக்கப்பட்டது!

      கோளை என்று ஒரு வார்த்தை இல்லை, கோழை என்றால் "மன உறுதி இல்லாதவர்; சளி" இரண்டு பொருள் . "கோளை" என்ற வார்த்தை நானே உருவாக்கி இருக்கிறேன்.
      (இதுக்கெலாம் பட்டம் குடுக்க மாட்டாங்களா???)

      மிக்க நன்றி @ராம்வெங்கட்

      நீக்கு
  8. நன்றி !! பல வருடங்களாக வெளிநாட்டில் இருப்பதால் ஒருவேளை நான் தமிழ் வார்த்தைகளை மறக்க ஆரம்பித்து விட்டேனோ என்று பயந்துவிட்டேன். :D ஊரில் இருந்திருந்தால் நானும் தமிழ் அகராதியை நாடியிருப்பேன். இங்கே என்னால் உடனடியாக நாட முடிந்தது இணைய அகராதியை மட்டுமே. இருப்பினும் நீங்கள் சொல்வது சரிதான். இணையத்தில் இருக்கும் எல்லாவற்றையும் அப்படியே நம்பி எடுத்துக் கொள்ள முடிவதில்லை. தக்க சரிபார்ப்பு இல்லாததே காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழகத்திலேயே இருந்து கொண்டு நான் தான் வெளிநாட்டில் இருக்கும் உங்களையும் குழப்பிவிட்டேன் :P

      நன்றி :)

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்