முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பழைய சாதமும் பாயாசமும்!

உங்களுக்கு நல்ல பசி! காலையில் இருந்து சாப்பிடவே இல்லை! நல்ல வேலை, நேரம் இப்போது மதியம் மூன்று மணி என்று வைத்துக் கொள்ளுங்கள்!

சாப்பிட, பழைய சாதம் வேண்டுமா? அல்லது, பாயாசம் சேர்த்து இருக்கும் அறுசுவை சாப்பாடு வேண்டுமா என்று கேட்டால், எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

பெரும்பாலானோர் அறுசுவை உணவு தான் என்பார்கள், ஆனால், என்னைக் கேட்டால், பழைய சாதம் தான் வேண்டும் என்பேன்!!

ஆனால், ஒரே ஒரு நிபந்தனை, அந்த பழைய சாதம் என் அம்மா கையால் செய்ததாக இருக்க வேண்டும்!

இப்படி எல்லாம் நான் சமீப காலமாக யோசிக்கத் தொடங்கிவிட்டேன், அதுவும், அதிகம் சாப்பாடு குறித்தே இருக்கின்றன யோசனைகள் எல்லாம்!

அடடே என்ன ஆயிற்று கண்மணிக்கு? பயப்படாதீர்கள், "வெயில் அதிகமானதால் ஒருவேளை மூளை கலங்கிவிட்டதோ எனக்கு?", என்று!

காரணம், விடுதியில் இருந்தது தான்! வீடு, அம்மா அப்பா தம்பி இவர்களைப் பிரிந்து இருப்பது எவ்வளவு கடினம் என்று புரிந்தது விடுதிக்குச் சென்ற பிறகு தான்!

இதுவரை வீட்டை விட்டு பிரிந்து சென்றதே கிடையாது நான்! சொல்லிக் கொண்டிருப்பேன் முன்பெல்லாம், "இந்த வீட்ட விட்டு வேற எங்கயாவது போக சொன்னா, வேகமா போய்டுவேன்", என்றெல்லாம்!

அப்படிச் சொல்லிக் கொண்டு தான், என் அப்பா எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், நன்றாகப் படிக்கப் போகிறேன், பட்டம் விடப்போகிறேன் என்று வசனம் எல்லாம் பேசி, உள்ளூரில் இருக்கும் கல்லூரிக்கே, விடுதியில் சென்று சேர்ந்தேன்!

தோழிகள் எல்லாம் சொன்னார்கள், வேண்டாம், வேண்டாம், என்று! ஆனால், நான் கேட்டேனோ? இல்லவே இல்லை!

போன புதிதில் ஒன்றுமே தோன்றவில்லை, ஆனால், ஒரு மாதம் போனதும் தான் தெரிந்தது, இது கொஞ்சம் கடினம் தான் என்று, ஒரு மாதம் வரை ஏதோ சுமாராகத் தோன்றிய விடுதி உணவு, உள்ளே  இறங்கப் போர் செய்யத் தொடங்கியது ஒரே மாதத்தில். எப்போதுடா வீட்டிற்குப் போவோம், அம்மா கையால் சாப்பிடுவோம் என்று காத்துக் கொண்டு கிடப்பேன்!

அது என்ன தான் மாயமோ அம்மாவின் சாப்பாடு மட்டும் இருபது வருடமாக சாப்பிட்டும், அதே தித்திப்போடு இருக்கிறது இன்றும், சலிக்கவே இல்லை!

காரணம், அதில் அவர் ரகசியமாய் கலந்துவிடும் அன்பு தான் என்பது இப்போது தெளிவாகப் புரிகிறது.

ஒரு வருடம் விடுதியில் இருந்த பிறகு இப்போது என்னிடம் கேட்டால், "வீட்டிலேயே இருக்கிறேன்", என்று தான் சொல்வேன்!

ஒரு வருடம் விடுதியில் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன், துணி துவைப்பதில் இருந்து, தலை பின்னுவது வரை கற்றுக் கொண்டேன்! சோகம் என்றோ, ஆனந்தம் என்றோ ஒரு தோழி சொல்லும் போது, அதை எப்படிப் பகிர்ந்து கொள்ள வேண்டும், கற்றுக் கொண்டேன்.

வகுப்பறையில் தோழிகளைப் பற்றி அதிகம் அறியாத விஷயங்கள் எல்லாம், விடுதி அறைகளில் புரிந்து கொண்டேன்!

எத்தனை தான் இருந்தாலும், இனியும் வேண்டாமடா என்று, இறுதியில் வீட்டிற்கே வந்துவிட்டேன், அம்மா அப்பாவோடு இருக்க!

இப்போ சொல்லுங்க? பழைய சாதமா? பாயாசமா? எது வேணும்?


கருத்துகள்

  1. எதுவும் வேண்டாம்... புரிந்து கொண்ட அன்பு என்றும்... என்றென்றும்... தொடர வேண்டும்...

    வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதுவுமே வேண்டாமா? :) அது தான் அன்பு இருந்தால் போதுமே, எல்லாம் கிடைத்தது போல தானே? நன்றி :)

      நீக்கு
  2. எனக்கும் பழைய சாதமே மிகவும் பிடிக்கும், அதுவும் இந்த வேளையில் பழைய சாதத்து நீர்த்த தண்ணீர் தேவாமிர்தம்...

    விடுதி வாழ்க்கை வாழ்ந்தது இல்லை, ஆனால் எனக்கு மிகவும் பிடித்த வாழ்க்கை, ஆட்டம் பட்டம் கொண்டாட்டமாக இருக்கலாம், சென்னையில் சிலமாத பேச்சிலர் ரூம் வாழ்க்கை மூலம் கிடைத்தது, மிஸ் செய்தது அம்மா செய்த சாப்பாட்டை மட்டுமே, எத்தனை பேர் கையால் விருந்து சாப்பிட்டாலும் அம்மா புளித்தண்ணி செய்தால் கூட அமிர்தம் தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) உண்மை தான். என் தோழி ஒருத்தி விடுதியில் இருக்கும் போது என்னை வீட்டு சாப்பாடு எடுத்து வர சொன்னாள், என்ன சாப்பாடு வேண்டும், சைவமா? அசைவமா?என்று கேட்டேன், அதற்கு அவள், வீட்ல இருந்து ஒரு பிடி மண் எடுத்துட்டு வந்தாலும் போதும் என்றாள். வீட்டு சமையல் வீட்டு சமையல் தான்!

      நீக்கு
  3. நல்ல கருத்து.. மூன்று வேளையும் பழைய சோறு+மாங்காய் ஊறுகாய்+பக்கோடா தூள்+சின்ன வெங்காயம்.. ஒரு மரத்தடி.. ஒரு நார்க்கட்டில்.. இது போதும் எனக்கு.. காலம் பூர அபப்டியே கெடப்பேன்.. பிரிவு என்பதே உறவை பலப்படுத்தத்தான்.. அந்த வகையில் விடுதி நம் குடும்பத்தின் மீது இன்னும் அன்பை செலுத்த வைக்கின்றன.. உண்மை தான்.. ஆனால் ஒற்றுமையும், தைரியமும் ஒரு day scholarஐ விட விடுதியில் தங்கி படிப்பவனிடம் அதிகமாக இருக்கும்.. இருந்தாலும் தைரியத்தை விட வீடு தான் முக்கியம் என நினைக்கும் கேஸ் நான்.. நமக்கு வீடு தான் சொர்க்கம்..
    நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைக் கேட்டதும் எனக்கு "மார்கழியில் குளிச்சுப் பாரு..." பாடல் நினைவிற்கு வருகிறது. அருமையான பாடல் அது, எனக்கு மிகவும் பிடிக்கும். எளிமையான வாழ்க்கையில் அத்தனை சுகம்!

      நீக்கு
    2. ஆனால் அந்த எளிய வாழ்க்கையை அனுபவிக்க நம்மில் எத்தனை பேருக்கு கொடுத்து வைத்திருக்கிறது? எதிலும் அவசரம்.. நிம்மதியாக பாத்ரூம் கூட போக முடியாது.. ஆனால் இந்த அவசர வாழ்க்கையை விட்டும் வர முடியாது.. So sad..

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்