”ஏம்பி, ஏம்பி, கொண்ட போட்டுவிடு...”, இப்படித் தான் அடம்பிடித்துக் கொண்டு இருப்பேன் சிறு வயதில். என் அம்மாவை நான் ஏம்பி, அதாவது, "எலும்பி" என்று தான் அழைப்பேன், காரணம், அவர் மிகவும் ஒல்லியாக இருந்த்தார் (ஆனா, இப்போ இல்ல :) ) கொஞ்சம் கூட மரியாதையாகவே அழைக்கமாட்டேன் என் அம்மாவை அப்போதெல்லாம், இப்பொழுது தான் “அம்மா வாங்க, போங்க..” என்று. வா போ, நீ தான், சிறு வயதில். இப்போதும் சில சமயம்..., இல்லை, பல சமயம் அம்மாவை “குண்டு பேபி”, என்று அழைப்பதுண்டு. ஆனால், அப்பாவை மட்டும் சிறு வயதில் இருந்தே “வாங்க, போங்க” என்று தான் அழைத்ததாய் ஞாபகம், பிறகு, “அப்பாக்குட்டி” என்று சொல்வேன் என் அப்பாவை ஆசையாய்!
![]() |
cute |
அப்போது, எனக்கு ஆண் பிள்ளைகளைப் போல, “பாய் கட்” செய்துவிட்டு இருந்தார்கள் என் வீட்டில்! ஐந்து, ஆறு வயது இருக்கும்! ஆனாலும், குளித்து முடித்தவுடம் எனக்கு ஈரத் தலையில் கொண்டை போட வேண்டும். என் அம்மாவிடம் அழுவேன், என் அம்மாவும் துண்டை வைத்து தலையில் கொண்டை போட்டுவிடுவார்.
அந்தக் கொண்டை போட்டவுடன் எனக்கு வருமே ஒரு ஆனந்தம்! ஓடுவேன், என் அவ்வாவிடம் (பாட்டியை நான் அவ்வா என்று தான் அழைப்பேன் - தெலுங்கு), அவரும் கொண்டை போட்டு இருப்பார், அவர் கொண்டை சிறியதாக இருக்கும், நான் அவரிடம் இப்படிச் சொல்வேன், “பாத்தியா அவ்வா, உன் கொண்டைய விட என் கொண்ட பெருசு...”, இப்படிச் சொல்லி, சிரிப்பதில் எனக்கு அத்தனை இன்பம்!
என் தாத்தாவிடம் ஓடுவேன், “தாத்தா... எனக்கு அவ்வாவவிட பெரிய கொண்ட...”, சொல்லிவிட்டு என் கொண்டையை ஆட்டிக் காட்டுவேன்! அவர் தன் பொக்கை வாய் எழுர் தெரிய என்னைப் பார்த்துப் பாசமாய் சிரிப்பார்!
கண்ணாடி முன் நின்று என் கொண்டையைப் பார்த்துப் பார்த்து சிரித்துக் கொள்வேன். நீளமான முடி என்று துண்டை தலையில் தொங்கவிட்டு, முன்னும் பின்னும் போட்டுப் பார்த்துக் கொள்வேன்! (ஆனால், இப்போது என்னவோ நீளமான முடி மீது இருந்த்த ஆசை போய்விட்டது!)
இத்தனை சேட்டைகளும் செய்து சிரித்துக் கொண்டு இருக்கும் போது, என் அப்பா வருவார். “அப்பா.... பாத்திங்களா... நான் கொண்ட போட்ருக்கேன்...”, கத்திக் கொண்டே சென்று அப்பா மீது ஏறிக் கொள்வேன்.
என் அப்பா என்னைக் கொஞ்சிவிட்டு, “சென்னம்மாக் கெழவி” மாதிரியே இருக்கு”, என்று சொல்வார். என்னை பல முறை அவர் அப்படிச் சொல்வதுண்டு. சென்னம்மா என்பது என் அப்பாவின் பாட்டி, நான் அவரைப் பார்த்ததில்லை!
“கெழவி”, என்று சொன்னதும், நான் என் கொண்டையை அவிழ்த்துவிடுவேன். என்னைக் ”கெழவி” என்று சொன்னால் எனக்குப் பிடிக்காது, யாருக்குத் தான் பிடிக்கும்? ஆனாலும் என் அப்பா, ஒவ்வொரு முறை நான் கொண்டை போட்டு, தலையில் ஈரத் துண்டைப் போட்டு அழகு பார்க்கும் போதும், என் ஆனந்தத்தைக் கெடுப்பது போல, என்னை, “சென்னம்மாக் கெழவி”, என்று சொல்லி வெறுப்பேற்றி, கொண்டையைக் கழற்ற வைத்துவிடுவார்!
அப்போதெல்லாம் எனக்கு அப்பா மீது கோபமாக தான் வரும்! ஆனால், இப்போது தான் என் அம்மா சொன்னார் ஒரு நாள், ”ஏம்மா, அப்பா என்ன கொண்ட போட்டு சந்தோஷமா இருந்தப்போலாம், இப்டி செஞ்சாங்க?” என்று கேட்டபோது.
”உனக்கு சளி அடிக்கடி புடிச்சுக்கும், அதான் ஈரத் துண்ட வச்சு வெளையாண்டா சேராதுனு...”, அப்போது தான் புரிந்த்தது, ”எந்த ஒரு சின்ன விஷயமாக இருந்த்தாலும் அதில் அப்பா எனக்கு இருக்கும் நல்லது கெட்டது எல்லாமே யோசிப்பார்”, என்று! அப்பாவுக்குத் தெரியாதா என்ன?
இன்றும் சில நேரம் காலையிலேயே நான் குளிக்கவில்லை என்றால் என் அப்பா சொல்வார், “குளிக்காம சென்னம்மாக் கெழவி மாதிரி இருக்க”, என்று. நான் சிரித்துக் கொண்டே குளிக்கச் சென்றுவிடுவேன்!
நான் பிறந்த போது, ஒரு கிலோ 900 கிராம் தான் இருந்தேனாம். மிகவும் ஒல்லியாக இருந்தேனாம். மருத்துவர்கள் எல்லாம், மூளை வளர்ச்சி இல்லையோ என சந்தேகப்பட்டார்களாம்! குறை மாதக் குழந்தை போல பிறந்த என்னை யாரும் தூக்கிக் கொஞ்சக் கூடத் தயங்குவார்களாம். பார்க்கவே சகிக்காதது போல இருந்தேனாம்! ஆனாலும், அப்போதும், என் அப்பாவிற்கு நான் இளவரசியாகத் தான் இருந்திருக்கிறேன்! நான் சிறுவயதில் பேசியதை எல்லாம் பதிவு செய்து வைத்து இருக்கிறார்! :)
இப்போதும் இளவரசியாகத் தான் இருக்கிறேன் அவருக்கு. “நிலா அரசனின் மகள் நான்”, என்று பெருமையாக சொல்லிக் கொள்வேன். ஆம், நான் நிலா அரசனின் மகள் தான்! என் அப்பாவின் பெயர், ”சந்திர ராஜன்”, அதாவது நிலாவின் அரசன்!
![]() |
Dad's girl! |
இப்போது நான் நன்றாகப் படிக்கும் போது, போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்கி வரும் போது, என் அப்பாவோடு செல்லமாக சண்டை இடும் போதெல்லாம் என் அப்பா என்னைப் பார்த்து சொல்வார், “நல்லா, 1.900 பொறந்துட்டு, இப்போ இது போடுற போடப் பாரேன்..”, என்று என் அம்மாவிடம்! அந்த வார்த்தைகளில் என்னால் எப்போதும் சந்தோஷத்தைப் பார்க்க முடியும்!
எப்போதும் இந்த சந்தோஷம் வேண்டும்!
-------------------------
இந்தப் பதிவு எப்போதும் என் பிரியம், என் அப்பாக் குட்டிக்காக! இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்! :) :) :)
ரசித்தேன்...
பதிலளிநீக்குதந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...
நன்றி... :)
நீக்குஇனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்! :) :) :)
பதிலளிநீக்குநன்றி! :)
நீக்கு//நான் பிறந்த போது, ஒரு கிலோ 900 கிராம் தான் இருந்தேனாம். மிகவும் ஒல்லியாக இருந்தேனாம்.//
பதிலளிநீக்குஇப்போதும் அவ்வளவு தானோ என்று தோன்றுகிறது.
அப்பாவின் செல்ல மகளுக்கு வாழ்த்துக்கள்.
உங்கள் தந்தைக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்!
:) அம்மா அப்படி எல்லாம் இல்லை, இப்போது நான் நிறைய வெயிட் இருக்கேன் :) நன்றி...!
நீக்குமிக நல்ல நினைவுகள்.. இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்.. இன்னைக்கு எங்க அப்பாட்ட, “எப்பா ஹேப்பி ஃபாதர்ஸ் டே” என்றேன்.. “டேய் லீவு அன்னைக்காவது தூங்க விட்றா” என்று திரும்பி படுத்துக்கொண்டார்.. பெற்றவர்களுக்கு வார்த்தை அலங்காரங்கள் எல்லாம் தேவையில்லை.. அவர்கள் கஷ்டப்பட்டதால் தான் நாம் கஷ்டப்படாமல் இருக்கிறோம்..
பதிலளிநீக்குஇனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்...
:) இந்தப் பதிவை நான் என் அப்பாவுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் :) உண்மை தான் அப்பாவுக்கு எப்போதும் வார்த்தை அலங்காரங்கள் தேவை இல்லை!
நீக்குHappy father's day
பதிலளிநீக்கு:) நன்றி...!
நீக்குஅருமையான நினைவுகள்..வாழ்த்துகள்
பதிலளிநீக்கு:) நன்றி...
நீக்குநீங்க, கி.ரா எழுதின கோபல்ல கிராமம் கதை படித்ததுண்டா, அதில கதை சென்னம்மா என்ற பெண் பற்றிய கதை தான், வைரமுத்துவின் கருவாச்சி காவியம் மாதிரி இங்கே சென்னம்மா தெய்வமாய் வணங்குவார்கள்... படித்துப் பாருங்கள், உணர்ச்சி மிக்க நாவல்.
பதிலளிநீக்கு