செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013

நானும் நார்த் இந்தியனும்! #2

இது ஒரு தொடர் பதிவு! முந்தைய பதிவை இங்கே படிக்கலாம் - நானும் நார்த் இந்தியனும்! #1 

இப்படிக் கேட்டாள் அவள், “உங்களுக்கு எல்லாம் எங்களப் பிடிக்காதோ?”, என்று ஆங்கிலத்தில். நான் கொஞ்சம் யோசித்தவாறே, “அப்படி எல்லாம் இல்ல” என்றேன். 

”இல்ல, நான் ஊர்ல இருந்து கெளம்புனப்போ என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சொன்னாங்க, அதான் கேட்டேன்”

இப்படி அடிக்கடி இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டுக் கொண்டே இருந்தாள், அந்தப் பெண். நானும் ஒவ்வொரு முறையும், அப்படி எல்லாம் இல்லை, அப்படி எல்லாம் இல்லை, என்று  சொல்லிக் கொண்டிருந்தேன் ஒவ்வொரு முறையும்!ஆனாலும், நம் ஊர் பக்கம் இருக்கும் பழக்கங்களும், அவர்களது பழக்கமும் சுத்தமாக வேறு வேறு!

சரி, இப்போது, நான் முக்கியமான ஒரு விஷயம் சொல்லப் போகிறேன். கேளுங்கள்!

அன்று நான் திருவனந்தபுரம் சென்று, விடுதியில் என் அறையின் சாவி எல்லாம் வாங்கிக் கொண்டு போய், அறையைத் திறந்தேன்! அப்போது தான் தெரிந்தது அந்த அறையில் ஏற்கனவே யாரோ இருக்கிறார்கள் என்று. தனி அறை கிடைத்தால் நல்லது என்று தான் நான் நினைத்தேன், இது சற்று ஏமாற்றமாகத் தான் இருந்தது!

அந்த அறையில் இரண்டு கட்டில்கள், இரண்டிலுமே நிறைய பொருட்கள் இருந்தன! ஒன்றில் படுக்கை விரிப்பு இருந்தது, மற்றொன்றில் இல்லை, ஆக, விரிப்பு இல்லாதது என்னுடையது! அறை ஒரு ஐம்பது சதவிகிதம் சுத்தமாக இருந்தது எனலாம்!

சுற்றி முற்றிப் பார்த்தேன்! நிறைய புத்தகங்கள் இருந்தன. மெதுவாக என் கட்டிலில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து, அருகில் இருந்த மேசையில் வைத்தேன் அடுக்கி! பிறகு, ஒரு புத்தகத்தை எடுத்து முதல் பக்கத்தில் என்ன பெயர் எழுதி இருக்கிறது என்று பார்த்து, அந்த அறையில் என்னோடு தங்க இருக்கும் பெண்ணின் பெயரைத் தெரிந்து கொண்டேன், அவள் நார்த் என்பதும் கூடப் புரிந்தது!

மெதுவாக, நான் கொண்டு வந்த பெட்டியை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, படுக்கையை எல்லாம் உதறி விரித்தேன்! பிறகு, பாட்டுக் கேட்டவாறு அறையை நூறு சதம் சுத்தம் செய்ய முயற்சி செய்தேன்!

அப்போது கதவை யாரோ வெளியில் இருந்து திறக்க முயற்சிக்க, நான் திறந்தேன், நான் எதிர் பார்த்தது போலவே, அது என்னோடு தங்க இருக்கும் பெண் தான். கருப்பு ஜீன்ஸ், பின்க் டாப்ஸ், சற்று தடிமனான ஃப்ரேம் கொண்ட கண்ணாடி! படிப்பாளி போலத் தோன்றியது! :) (என்னையே என் கூட இருக்கவங்க படிப்பாளினு தான் சொல்லுவாங்க, அது வேற விஷயம்)

காலையில் அவள் பூட்டிச் சென்ற அறையை யாரோ உள்ளிருந்து திறக்கவும் சற்று அதிர்ந்து தான் போனாள்! நான் பிறகு விவரித்ததும் அமைதியானாள்.

பிறகு ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டோம். அவள் இத்தனை நாள் தனியாக இருந்ததாகவும், நான் வந்ததால் மகிழ்ச்சி என்றும் சொன்னாள். நானும் மகிழ்ச்சி என்றேன். ஆனால், உண்மையில் எனக்கு மகிழ்சியாகவும் இல்லை, வருத்தமாகவும் இல்லை!

பிறகு குளிக்கச் சென்றாள். இரண்டு வேளை குளிப்பாள் போல ஒரு நாளைக்கு என்று நினைத்துக் கொண்டேன் நான்!

பிறகு என்னை இரவு சாப்பிட அழைத்துச் சென்றாள், ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டி இருந்தது, அதனால், அம்மா அருகில் இல்லாதது போல உணர்ந்தேன்!

அடுத்த நாள் காலை, ஒரு எட்டு மணி இருக்கும், எழுந்து, குளிக்கச் சென்றேன். குளித்துக் கிளம்ப ஒரு நாற்பது நிமிடங்கள் ஆகும் எனக்கு எப்போதுமே!

ஆனால், அந்தப் பெண்ணோ, பத்து நிமிடத்தில் தயாராகிவிட்டாள்! என்ன, அவள் குளிக்கவில்லை அவ்வளவு தான் வித்தியாசம்!

ஆம், நான் எல்லாம் தினமும் குளித்துவிடுவேன் (நீங்களும் தான?), எத்தனை குளிராக இருந்தாலும்! ஆனால், நான் ஒன்றும் குளிர் பிரதேசத்தில் வசிக்கவில்லை பாருங்களேன்! சிவகாசியில் வெயில் தான் பட்டாசுக்கு அடுத்த படியாக ஃபேமஸ்! ஆதலால், குளிக்காமல் எல்லாம் இருக்கவே முடியாது நாம் எவ்வளவு பெரிய சோம்பேரியாக இருந்தாலும். 

ஆனால், நான் குளிப்பதே குற்றம் என்பது போல அவள் சொன்னாளே ஒரு நாள், அதை தான் என்னால் தாங்கவே முடியவில்லை!

ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பால் போல என்று நான் வந்த அன்று நினைத்தது எவ்வளவு தவறு என்று போகப் போகத் தான் புரிந்தது! அவள், உண்மையில் வாரம் ஒரே ஒரு முறை தான் குளித்தாள்!!!!

அந்த ஒருமுறை தான், நான் வந்த தினம் போல, அந்த வாரம்! நான் தினமும் குளிப்பதைக் குற்றம் போல அவள் சொல்லத் தொடங்கிவிட்டாள், நாட்கள் செல்லச் செல்ல! இத்தனைக்கும் நான் ஒரு பத்து நிமிடம் தான் குளிப்பேன்! அதற்கே இப்படி! 

அவளுடைய சொந்த ஊர் இமய மலைக்கு அருகில் போல, ஆக, அங்கு இருக்கும் குளிரில் குளிக்காமல் பழகி பழகி (நமக்கெல்லாம் குளித்துப் பழகியது போல), இங்கு வந்தும் அவள் குளிக்கவில்லை தினமும்!

எனக்கு அவளைப் பார்த்து, ”ஐயோ, குளிக்கல!”, என்று தோன்றியது போல, அவளுக்கு, ஐயோ, குளிக்கறாங்க”, என்று தோன்றியது போல!

பிறகு உடை, நான் சுடிதார் மட்டுமே அணிந்து பழகியவள், சட்டை, பேண்ட் எல்லாம் அணிந்ததில்லை! ஆனால், பாவம் அவளிடம் சுடிதாரே இல்லை! மிகவும் ஆசையாக, எனக்கும் ஒரு சுடிதார் வாங்க ஆசையா இருக்கு, என்று என்னோடு கடைக்கு வந்து ஒன்று வாங்கிக் கொண்டாள், நான் குர்த்தா ஒன்று வாங்கிக் கொண்டேன்!

பிறகு அவள் சொன்னாள், நான் இங்கு வந்ததால் என்னுடைய, சிறிய உடைகள் எல்லாம் எடுத்து வரவில்லை, இவை இங்கு அணிய என்று எடுத்து வந்தேன் நீளமான குர்த்தா, ஜீன்ஸ் என்றாள், ஓ... என்று கேட்டுக் கொண்டேன்.

ஜீன்ஸ், இதைத் துவைக்கவே தேவை இல்லையோ? ஒரு மாதம் ஒரே ஜீன்ஸ் அணியலாம் போலவே? அறிக்காதா???

பெரும்பாலும், எனக்குத் தெரிந்தவரை, எங்க ஊரையும், சென்னையையும் பார்த்தால், சென்னை மாடர்ன், ஆனால், இந்தப் பெண் சொல்வதைக் கேட்டதில், தில்லி தான் பயங்கர மாடர்ன் போல!

கிட்டத்தட்ட இவள் சொன்ன அனைத்தும் இது வரை நான் அமெரிக்காவில் நடப்பவை என்று கற்பனை செய்தவையாக இருந்தன!

அடக் கடவுளே, நம்ம நாட்டுல உண்மைல இப்படி எல்லாம் நடக்குமா, என்ற உணர்வு பல முறை வந்தது அவளோடு பேசும் போது!

---------------

தொடரும் அடுத்த பதிவில்!

12 கருத்துகள்:

 1. //எனக்கு அவளைப் பார்த்து, ”ஐயோ, குளிக்கல!”, என்று தோன்றியது போல, அவளுக்கு, ஐயோ, குளிக்கறாங்க”, என்று தோன்றியது போல!// ஹா ஹா..
  மாடர்ன் என்பது உடையில் மட்டும் தான்.. மற்றபடி எல்லா பக்கமும் மக்களின் நல்லியல்புகள் மாறிக்கொண்டு தான் வருகின்றன.. நாம் அதை வெளிப்படையாக சொல்வதில்லை.. அவர்கள் சொல்வதால் வித்தியாசமாகப்படுகிறது..
  உண்மையில் உங்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்திருக்கிறது.. வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், ஆம், ஏன் நான் கூட கொஞ்சம் மாறித்தான்விட்டேன்! நன்றி :)

   நீக்கு
  2. மாற்றம் என்பது நல்லதுக்காக இருக்கட்டும்.. வாழ்த்துக்கள் :-)

   நீக்கு
 2. நார்த் போகும் போதெல்லாம் ஆற்றில் இவ்ளோ தண்ணீ ஓடுதே ஊரையே கழுவி விடலாம் ஏன் தான் இந்த மக்கள் இப்படி அழுக்காய் ஊரை வைத்து இருக்கிறார்களோ என்று நினைப்பேன்.நிஜமா ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒரு முறை தான் குளியல் போல்.பழைய டில்லி ரயில்வே ஸ்டேஷன் அய்யோ அப்படி ஒரு குப்பை. வெயில் அடித்தாலும் அப்படி ஒரு வெயில் அங்கே அப்புறம் எப்படி குளிக்காமல் இருக்க முடியுதோ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) அவர்களுக்கு அது பழகி இருக்குமா இருக்கும். அதும் இல்லாம, எனக்கு தெரிஞ்சு நம்ம ஊரும் குப்பையா தானே இருக்கு! :(

   மிக்க நன்றி!

   நீக்கு
  2. //எனக்கு தெரிஞ்சு நம்ம ஊரும் குப்பையா தானே இருக்கு!// பழைய தில்லியின் ரயில் நிலையம் ஒரு தேசத்தலைநகர் போலவே இருக்காது.. நம்ம ஊர் ரயில் நிலையத்திற்கு கோவில் கட்டி கும்பிடலாம்.. தில்லி ரயில் நிலையம், ஒரு மிகப்பெரிய குப்பைத்தொட்டியின் நடுவில் அமைந்திருப்பது போல் இருக்கும்..

   நீக்கு
 3. ஆம், நான் எல்லாம் தினமும் குளித்துவிடுவேன் (நீங்களும் தான?), எத்தனை குளிராக இருந்தாலும்..
  சிறிது நாட்கள் அவளது மானிலத்தில் தங்கியிருந்து பாருங்களேன்!!! அதுவும் டிசம்பர்,ஜனவரி மாதத்தில்.

  பதிலளிநீக்கு
 4. //எனக்கு அவளைப் பார்த்து, ”ஐயோ, குளிக்கல!”, என்று தோன்றியது போல, அவளுக்கு, ஐயோ, குளிக்கறாங்க”, என்று தோன்றியது போல!
  // :)
  //ஜீன்ஸ், இதைத் துவைக்கவே தேவை இல்லையோ? ஒரு மாதம் ஒரே ஜீன்ஸ் அணியலாம் போலவே? அறிக்காதா???// அதுவும் கூட பழகிப்போயிருக்கலாம் !!

  பதிலளிநீக்கு
 5. இந்தியர்கள் நடுவிலேயே எத்தனை விஷயங்கள் வித்தியாசமாக இருக்கிறது,இல்லையா? நமக்கெல்லாம் காலையில் எழுந்தவுடன் குளிக்க வேண்டும். அவர்களுக்கு மாலையில் தூங்குவதற்கு முன் குளிக்க வேண்டும் போலிருக்கிறது.

  அடுத்த பகுதி படிக்கச் செல்கிறேன்.

  பதிலளிநீக்கு