முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குட்டிக் கண்மணியும் சி.இ.நா.வி யும்!

எனக்கு தற்பொழுது இருபது வயதாகிறது! அதனால், நானே என்னைக் குட்டிக் கண்மணி என்று சொல்லிக் கொண்டாலே ஒழிய, யாரும் சொல்லப் போவதில்லை! (பாவம் சொல்லிக்கிறேனே, விட்டுடுங்க, என் ஆசைய ஏன் கெடுப்பானேன்?)



குட்டிக் கண்மணி எப்படி எல்லாம் இருந்தாள் என்பதை அறிய ஆவல் இருந்தால், இந்தப் பதிவை நீங்கள் படிக்கலாம். (சுய புராணம் :) )

இப்படி அடிக்கடி எனக்குச் சிறுவயதில் நடந்ததை எல்லாம் யாரிடமாவது சொல்வதென்றால் எனக்கு அத்தனை பிரியம், என்னைச் சுற்றி இருக்கும் தோழிகளிடம் கேட்டால் உங்களுக்குப் புரியும்! நான், “சின்ன வயசுல....”, இப்படி வாயைத் திறந்தாலே ஓட்டம் பிடித்துவிடுவார்கள்! :) அத்தனை முறை சொல்லி இருக்கிறேன் என் வாழ்க்கை வரலாற்றை... :)

அதென்னவோ, நான் எப்போதுமே ஆனந்தமாகத் தான் இருந்ததாக நினைவு! இதுவரை பெரிதாய் துன்பம் என்று கண்டதில்லை! அப்படியே துன்பம் என்று தேடிப் பார்த்தால், என் வரலாற்றில் :) :P பள்ளிக் கூடத்திற்கு வீட்டுப் பாடம் எழுத நிறைய இருக்கிறதே என்பதாகத் தான் இருக்கும்!

சிறுவயது என்றாலே பள்ளிக்கூடம் தான் நினைவுக்கு வரும் எனக்கு. பள்ளியில் நான் எத்தனை அழகழகான விளையாட்டெல்லாம் ஆடி இருக்கிறேன் தெரியுமா? நீங்கள் எல்லாம் என்ன விளையாடி இருப்பீர்கள்? ஓடி, கண்ணைக் கட்டி... இப்படித் தானே? ஆனால், நான் என்ன விளையாடுவேன் தெரியுமா?

நான் சிறு வயதில் படித்தது, சி.இ.நா.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (S.H.N.V.Matriculation Higher Secondary School). அடி வெழு வெழு என்று வெழுப்பதற்கு எங்கள் ஊரில் பெயர் போன பள்ளி. நான் நன்றாகப் படித்துவிடுவேன், அதனால், அதிகம் அடி வாங்கிய அனுபவம் இல்லை! :) அதனால், என்னை ஆசிரியர்கள் எல்லாம் அம்மாஞ்சி, வகுப்பில் நன்றாக கவனிக்கும் பெண்  என்று நினைத்துக் கொண்டு இருந்தார்கள்!

ஆனால், என் தோழிகளுக்கு மட்டுமே தெரியும், நான் எத்தனை சேட்டைகள் செய்வேன் என்று.

சரி. விளையாட்டு என்று சொல்லிக் கொண்டு இருந்தேனே? அதற்கு வருவோம்!

நான் வகுப்பு நடந்து கொண்டு இருக்கும் போது, சிறு வயதில் அத்தனை ஆனந்தமாக விளையாடுவேன். :)

என்ன விளையாடுவேன் தெரியுமா? “மாவு அறைப்பது”, “தோசை சுடுவது”, “அக்கா, தங்கை விளையாட்டு”, “ஹோட்டல்”, “டீச்சர் விளையாட்டு”...

இப்படி விளையாடுவேன் நிறைய! என்ன, இதெல்லாம் தெரியாமல், எல்லா ஆசிரியர்களும், ”கண்மணி ரொம்ப நல்லவ”, என்று நம்பி தீவிரமாகப் பாடம் நடத்திக் கொண்டு இருப்பார்கள்.

இதெல்லாமே, ஒரு ஏழாம் வகுப்பு வரை தான். பிறகு எல்லாம், வகுப்பில் விளையாடுவதை விட்டுவிட்டேன்!

சரி, இந்த விளையாட்டுகள் எல்லாம் என்ன என்ன, எப்படி விளையாட வேண்டும் என்று தெரிய வேண்டாமா உங்களுக்கு? சொல்கிறேன், கேளுங்கள்!

மாவு அறைப்பது - தோசை சுடுவது - ஹோட்டல் 

இந்த மூன்று விளையாட்டுகளுமே, தொடர்புடையவை, பெயரிலேயே தெரிந்திருக்குமே?

எங்கள் வகுப்பில் மூன்று பேர் சேர்ந்து அமருவது போல மர பெஞ்சும், டேபிலும் இருக்கும்.

அதில் பெஞ்சில் பின்னால் சாய்வதற்கு ஊடே கட்டை வந்திருக்கும். சரியா?

இப்போது, என் பெஞ்சும் டேபிலும் தான் எனது, ”கடை”. ஆம், கடை, மாவு அறைக்கும் விளையாட்டு என்றால், அது மாவு அறைக்கும் கடை.

எனக்கு பின்னாலும், முன்னாலும் இருக்கும் பெஞ்சுகளில் இருக்கும் எல்லா மாணவிகளும் எனக்குக் கஸ்டமர் :)

மாவா? அது எப்படி அறைப்பேன் என்று சந்தேகம் வருகிறதா? இல்லையா? இல்லை என்றாலும் சொல்வேன் கேளுங்கள்!

அழி ரப்பர் தான் மாவு அறைக்க உதவும். அதுவும், எனது அழி ரப்பர் இல்லை, மாவு அறைக்க வரும் கஸ்டமர்களின் அழி ரப்பர்! (நம்ம ரப்பர் கறஞ்சு போய்டும்ல இல்லனா, வெவரம் :) )

மாவு அறைக்க வருபவர்கள், பெஞ்சிற்கு அடியில் சென்று, என்னை அழைக்க வேண்டும், மெதுவாக, ரப்பரைத் தர வேண்டும். நான் அந்த ரப்பரை வாங்கி, டேபிலில் தேய்ப்பேன், ரப்பர் தூசி வருமா? அது தான் மாவு :)

மாவு கொஞ்சம் அதிகம் வந்ததும், ரப்பரையும், அறைத்த மாவையும், கஸ்டமருக்குத் திருப்பிக் கொடுத்துவிடுவேன். :)

ஆனால், பாருங்கள், என்னைக் கூப்பிடும் போது, பெஞ்சின் அடியில் குனியும் போதும், மற்ற மாணவிகள் சிக்கிவிடுவார்கள், திட்டு வாங்கி, நிற்பார்கள், நான் மட்டும் ஒரு முறை கூட சிக்கியதே இல்லை :)

இந்த விளையாட்டு விளையாட, கொஞ்ச நாட்களிலேயே கஸ்டமர்கள் வர மறுத்துவிட்டார்கள். காரணம், தினமும் ஒரு ரப்பர் கறைகிறது, தொலைகிறது என்று வீட்டில், பெற்றோர் அடி, திட்டு எல்லாம் கொடுத்ததே!

ஆனால், பாருங்கள், வகுப்பில், விளையாடாவிட்டால் எனக்கு என்னவோ போல இருக்கும். ஆக, புதிதாய் இந்த தோசை சுடும், ஹோட்டல் விளையாடைக் கண்டுபிடித்தேன்.

இந்த விளையாட்டில், மாவு இல்லாமலே, தோசை சுடலாம்! ஆம், தேவையான பொருட்கள் பின்வருமாறு :

1) நான்கு அல்லது ஐந்து கர்சீப் (kerchief) (எனது கர்சீப் பிறகு கஸ்டமர்களதும்)
2) ஒரு ஸ்கேல் - சிரியது அல்லது பெரியது, பெரியது என்றால் சிறப்பாக இருக்கும்.
3) நான்கு அல்லது ஐந்து நோட்டுகள் - ஒன் கொயர் என்றால் சிறப்பு! :)

கர்சீப்பை மடித்து, அதை, ஸ்கேலை வைத்து நான்கு அல்லது ஐந்து முறை திருப்பி போட வேண்டும் - டேபிலில், பிறகு, அதை, த(நோ)ட்டில் வைத்து கஸ்டமருக்கு டேபிலின் அடி வழி சப்ளை செய்ய வேண்டும்!

:) எப்படி தோசை? வித விதமான தோசைகள் செய்யலாம், வித விதமான கர்சீப் வைத்து!

அக்கா தங்கை விளையாட்டு!

இந்த விளையாட்டின் படி, என் வகுப்பறை முழுவதும் ஒரு ஊர், எல்லா வகுப்பறைகளும் ஒவ்வொரு ஊர். ஒவ்வொரு கட்டிடமும் ஒரு நாடு, பிறகு பள்ளி தான் உலகம்! :)

எனது வகுப்பில், ஒவ்வொரு ரோவும் (Row) ஒரு தெரு. ஒவ்வொரு பெஞ்சும் ஒரு வீடு. புரிந்ததா?

ஆக, என் பெஞ்சு தான் என் வீடு, என் பெஞ்சில் இருப்பவர்கள் எல்லாம் எனக்கு தங்கச்சி, நான் அக்கா! :) :)

இப்படி வைத்துக் கொண்டு, தங்கசிகள் எல்லோரையும் மிரட்டிக் கொண்டு இருப்பேன். இதில், பெஞ்சின் அடிப்பகுதி அண்டர் க்ரவுண்ட் என்னும் அஸம்ஸனும் உண்டு! :) இதில், பெரிய ஹைலைட் என்ன என்றால், சுவரிற்கும் பெஞ்சிற்கும் நடுவே இருக்கும் இடத்தில், சாக்பீஸ் வைத்து இரண்டு புள்ளி இரண்டு வரிசை கோலம் தினமும் போடுவேன் :) கவலை வேண்டாம், அந்தப் பக்கம் “மிஸ்” வரவேமாட்டாங்க! ;)

இப்படி இந்த விளையாட்டு கொஞ்ச நாட்கள் ஒடியது! :)

டீச்சர் விளையாட்டு!

இந்த விளையாட்டை என்னைத் தவிற வேறு யாருமே என் வகுப்பில் விளையாடக் கூடாது என்று நான் காப்பி ரைட்ஸ் (copy rights) எல்லாம் வாங்கி வைத்திருந்தேன் என்றால் பாருங்களேன்!

இதை விளையாட யாருமே துணைக்குத் தேவை இல்லை! தனி ஆளாகவே விளையாடலாம். தேவை, கொஞ்சம் கற்பனா சக்தி மட்டுமே!

இந்த விளையாட்டு தான் நான் சிறுவயதில் அதிகம் விளையாடுவேன். அப்போது எனக்கு வீட்டில் தம்பி இல்லை, அதாவது பிறக்கவில்லை, ஆக தனியாகத் தான் விளையாட வேண்டும். எனக்கு, எனக்கு இரண்டாம் வகுப்பு எடுத்த ”எழில் மிஸ்” என்றால் மிகவும் பிடிக்கும். அவங்க தான் எவ்ளோ அழகு! அந்த மிஸ் போடும் கம்மல், வளையல் என்று ஒன்று விடாமல் வேடிக்கை பார்ப்பேன். அதுவும் அந்த மிஸ் போட்ல ஸ்கேல் வச்சு அடிச்சு அடிச்சு சொல்லித் தரும் அழகு :) ;) அப்பா... அத்தனை அழகு!

அந்த எழில் மிஸ்ஸைப் பார்த்துப் பார்த்து, ”நானும் அப்படி ஒரு அழகான மிஸ்ஸா வருவேன்”, என்று எத்தனை நாட்கள் கனவு கண்டு இருக்கிறேன் தெரியுமா?

சரி நாம் விளையாட்டிற்கு வருவோம். இந்த விளையாட்டை, நான் வீட்டிலும் விளையாடுவேன், பள்ளியிலும் விளையாடுவேன். எப்படி என்று பார்ப்போம்.

வீட்டில்:

இந்த விளையாட்டு விளையாட என்றே என் அப்பாவிடம் அடம் பிடித்து, வீட்டின் படுக்கை அறையில் ஒரு புறம் சுவரில் கருப்புப் பெயிண்ட் அடிக்க வைத்தேன், போட் (black board) வேண்டும் என்று!

அப்பாவும் எனக்காக பெயிண்ட் அடித்துக் கொடுத்தார்கள். என் அப்பா அந்த சுவரில் பெயிண்ட் அடிக்கும் போது நான் பார்த்து வியந்து கேட்டேன், “அப்பா... உங்களுக்குப் பெயிண்ட் எல்லாம் அடிக்கத் தெரியுமா...?”, என்று. அப்பா சிரித்தார்! :)

அம்மாவோ, ”இவதான் கேக்குறானா, நீங்களும் இப்படி அசிங்கமா சொவத்துல ஒரு பக்கம் கருப்புப் பெயிண்ட அடிக்கிறிங்க..? நாளைக்கு சாக் பீஸ வச்சு கிறுக்கி, அழுச்சி, வீடெல்லாம் தூசியாக்குவா...”, இப்படித் திட்டிக் கொண்டு இருந்தார். ஆனால், நானும் என் அப்பாவும் ஒன்று கூடினால், ஒரு போதும் அம்மாவைக் கண்டுகொள்வதே இல்லை. நாங்கள் வைத்ததே சட்டம் :) ;)

ஆக, போட் தயார். பிறகென்ன தேவை. ”மிஸ்”, என்றால், பிள்ளைகளை அடிக்கவும், போடில் எழுதிய பிறகு சொல்லிக் கொடுக்க, அதாவது ஒவ்வொரு வார்த்தையின் கீழும் ஸ்கேலை வைத்து, அடித்து அடித்துச் சொல்லிக் கொடுக்கவும் ஒரு மர ஸ்கேல் வேண்டும். போடுக்கே பெயிண்ட் அடித்த அப்பா, ஸ்கேல் வாங்கித் தர மாட்டாரா என்ன?

பிறகு, நோட்டு, புத்தகம், அதெல்லாம் தான் இருக்குமே!

சொல்லப் போனால், இந்த விளையாட்டு விளையாடுவது என் அம்மாவிற்கு முதலில் பிடிக்கவில்லை என்றாலும் பிறகு மிகவும் பிடித்துவிட்டது. காரணம், நான் வகுப்பில் எழில் மிஸ் செய்த எல்லாவற்றையும் செய்கிறேன் என்று, அன்றன்று நடத்திய பாடம் முழுவதையும், போடில் எழுதி எழுதி, சொல்லிக் கொடுக்கிறேன் என்று, நானே என் முன்னால் மாணவர்களைக் கற்பனை செய்து கொண்டு, வீடே அதிரும்படி சத்தமாகச் சொல்லிக் கொடுப்பேன்! அதாவது, இதனால், பாடம் எல்லாம் நன்றாக மனதில் பதிய, நிறைய மதிப்பெண் வாங்கிவிட்டேன் பரிட்சையில் :) அதனால் அம்மாவும், சரி ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்று விட்டுவிட்டார்கள்!

பள்ளியில்!

சிறிது நாட்களிலேயே, இந்த விளையாட்டை பள்ளியிலும் விளையாடுவது என்று முடிவு செய்தேன்.

பள்ளியில் எனக்கென்று போட் எல்லாம் இருக்காதே... என்ன செய்ய... யோசித்தேன், ஐடியா! என் டேபில் தான் போட், இப்படி வைத்துக் கொண்டு, டேபிலின் முன் பக்கம், ஒரு ஐந்து செண்டி மீட்டர் இடம் இருக்குமே? அந்த இடத்தில் எழுதுவேன். குட்டி குட்டியாக! சாக் பீஸ் வந்து வகுப்பில் இருந்து சுட்டுவிடுவேன் ;)

இப்படி நான் விளையாடுவதைப் பார்த்த எல்லா மாணவிகளும் விளையாடத் தொடங்கிவிடவே, எனக்குக் கோவம்! அதெப்படி, நான் கண்டுபிடித்த விளையாட்டை மற்றவர்கள் விளையாடலாம்? அதுவும், எனக்கு ராயல்டி கூடத் தராமல்?

“ஏய்.. இது நான் கண்டுபிடிச்ச வெளையாட்டு, ஒழுங்கா இரு, நீ எல்லாம் வெளையாடக் கூடாது..”, இப்படி சண்டை எல்லாம் போட்டு இருக்கிறேன். இப்போது நினைத்தால் அத்தனை சிரிப்பாக இருக்கிறது எனக்கு!

விளையாட்டைக் கண்டுபிடித்தென்னவோ நான் தான், ஆனால், என் தோழிகள் எல்லாம் தீவிரமாக விளையாடினார்கள் என்னை விட! ஆம், அவர்கள், ஒரு படி மேலே சென்று,



அட்டெண்டஸ் ரெஜிஸ்டெர் எல்லாம் தயார் செய்து வைத்து இருந்தார்கள். வகுப்பில், மிஸ் அட்டெண்டண்ஸ் எடுக்கும் போது இவர்களும் எடுப்பார்கள்!
நான் ஆனால், அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டர் போடவில்லை! அதென்ன, அடுத்தவர் செய்வது போல நானும் செய்வது? நான் புதிதாய் எதாவது தான் செய்வேன், என்கிற நினைப்பு.

நல்ல காரியம், நான் அப்படி அட்டெண்டன்ஸ் எழுதவில்லை, ஒரு நாள் அப்படி என் தோழிகள் எழுதிவைத்து இருந்த நோட்டுகள் எல்லாம் மிஸ்ஸிடம் சிக்கி, மொத்தமாக அடி வாங்கினார்கள்! நான் நினைத்துக் கொண்டேன், “நான் கண்டுபுடிச்ச வெளையாட்ட எல்லாரும் வெளையாண்டிங்கல்ல... வேணும்...”, இப்போது நினைத்தால், நான் ஏதோ கொடூரமானவளாக இருந்தேனோ... என்றெல்லாம் தோன்றுகிறது! :/

இப்படி இன்னும் நிறைய விளையாட்டுக்கள் விளையாடி இருக்கிறேன், எல்லாமே வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டு இருக்கும் போதே!

ஆனாலும், ஒரு முறை கூட சிக்கியதே இல்லை! பாவம் என் தோழிகள் தான்!

இப்படி என்னை எப்போதுமே திட்டாத, அடிக்காத, நல்ல நல்ல ஆசிரியர்களுக்கெல்லாம், ஆசிரியர் தின வாழ்த்துக்கள்! ;) :)

கருத்துகள்

  1. ஒரு பள்ளிச்சிறுமியின் பார்வையில்.... வித்தியாசமான பதிவு... வாழ்த்துக்கள் சகோதரி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட, இது என் பார்வைல எழுதுனதுங்க! உண்மைலயே இதெல்லாம் நான் வெளையாடின வெளையாட்டு :)

      நன்றி! :)

      நீக்கு
  2. பள்ளியில் நீங்கள் அடித்த லூட்டியெல்லாம் விளையாட்டா? இந்தப் பதிவு படிக்கும் எல்லோருமே நிச்சயம் தங்கள் பள்ளிக்குப் போய் வருவார்கள் மனத்தால்!

    இப்போது ஆசிரியர் ஆகும் ஆசை இருக்கிறதா?
    காதல் கடிதம் போட்டியில் பரிசு வென்றதற்கு கொடுத்த பரிசு கூப்பன் வந்ததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) ஆமா அம்மா, எல்லாமே வெளையாட்டு தானே! ;)

      ம்ம் இப்போது கொஞ்சம் இருக்கிறது, கல்லூரியில் பேராசிரியர் ஆகலாமா என்று. ஆனால், ஆர்வம் ஆராய்ச்சி செய்வதில் தான் அதிகம்!

      ம்ம், பதிவர் சந்திப்பிற்கு வந்த சிவகாசிக்காரன் வாங்கி வந்துள்ளார்!

      நன்றி அம்மா :)

      நீக்கு
    2. //பதிவர் சந்திப்பிற்கு வந்த சிவகாசிக்காரன்// பட்டப்பெயர் form ஆகிருச்சி.. பட்டய கெளப்புடா சூனா பானா...

      நீக்கு
    3. :) நடக்கட்டும் நடக்கட்டும்!

      நீக்கு
  3. வழக்கம் போல் வித்தியாசமான பதிவு, இன்னமும் குட்டிக் கண்மணிதான்...

    பதிலளிநீக்கு
  4. ஹா ஹா அருமையான அனுபவங்கள்.. சிறு வயதில் இந்த மாதிரியெல்லாம் நாங்கள் விளையாண்டதில்லை.. ஆனால் கொஞ்சம் வளர்ந்த பின் வாத்தியார் மேல் சாக்பீஸ் விட்டு எறிவது, கைக்காடிகாரத்தால் சூரிய ஒளியை பிரதிபலிக்கச்செய்து, வாத்தியாரின் சொட்டையில் விழ வைப்பது, attendance சொல்லிவிட்டு உட்காரும் பையனின் அடியில் அவன் pencil box ஐ வைப்பது என்று கொஞ்சம் டெரரான விளையாட்டுக்கள் தான் எங்களிது.. ஆனால் உங்கள் அனுபவம் உண்மையில் மிகவும் மென்மையான வன்முறையில்லாத யாருக்கும் கஷ்டம் கொடுக்காத விளையாட்டுக்கள்..
    பி.கு: எனக்கும் எழில் மிஸ் தான் ரெண்டாங்கிளாஸ் எடுத்தாங்க.. சின்ன வயசுல அவங்க கண்ணத்த ஒரு நாளாவது கிள்ளிறணும்னே நெனச்சுட்டு இருப்பேன்.. ஒரு நாள் நான் கிளாஸ்ல மயங்கிவிழுந்துட்டேன்.. பியூன லெமன் ஜூஸ் வாங்கிட்டு வர சொல்லி, எனக்கு ஒரு வாட்டர் பாட்டில் மூடியில அத ஊத்தி கொஞ்சம் கொஞ்சமா ஊட்டி விட்டத இப்பயும் மறக்க முடியாது.. மிகவும் நல்ல மிஸ்.. எங்க அம்மாவ பொறுத்தவரைக்கும் அழகுன்னா அது எழில் மிஸ் தான்.. :-)
    நல்ல அனுபவங்கள்.. நன்றி கண்மணி :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட, நீங்களும் எழில் மிஸ்ட படிச்சிஙகளா?? :) பசங்க வெளையாட்டு எல்லாம் அப்டி தானே இருக்கும்...

      நன்றி :)

      நீக்கு
    2. ஹ்ம் இன்னும் நிறைய டெரர் விளையாட்டுக்கள் இருக்கின்றன.. அதையெல்லாம் இங்கு ஓபனாக சொல்ல முடியாது.. அது எங்களுக்குள் மட்டும் இருக்கட்டும்..

      நீக்கு
  5. சூப்பரா விளையாடி இருக்கீங்க.வெவரமா டீச்சர்கிட்ட மாட்டம...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) ;) நாங்க எல்லாம் ரெண்டாம் க்ளாஸ்லயே அப்புடி! :) நன்றி...

      நீக்கு
  6. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்! ;) :)

    பதிலளிநீக்கு
  7. டீச்சர் விளையாட்டுக்கு நீங்க காபி,டீ வாங்கலைனாலும் நாங்கெல்லாம் போட்டிக்கு வரவே மாட்டோம்...

    பதிலளிநீக்கு
  8. அருமையான பதிவு.காட்சிகளை எல்லாம் கண்முன்னே கொண்டு வந்தீர்கள். சுகமான அனுபவங்கள். பகிர்ந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. //“ஏய்.. இது நான் கண்டுபிடிச்ச வெளையாட்டு,....//
    So Nice ஆனால் ...
    இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க !! ,
    //எனக்கு தற்பொழுது இருபது வயதாகிறது! அதனால், நானே என்னைக் குட்டிக் கண்மணி என்று சொல்லிக் கொண்டாலே ஒழிய, யாரும் சொல்லப் போவதில்லை! //
    இந்த பதிவை வாசித்து முடித்தவுடன் எனக்கும் சொல்லத்தோன்றுகிறது. பாராட்டுக்கள் கண்மணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) என்ன செய்றது, நான் கொஞ்சம் ஒவர் தான் :)

      குட்டிக் கண்மணி :) ;) நன்றி நன்றி....

      நீக்கு
  10. Wow amazing writing.... Only a few got this kind of skill to deliver such a wonderful post with all such small memories that even one should have in their childhood

    பதிலளிநீக்கு
  11. சிறு வயதிலே நிறைய உள்-விளயாட்டு(Indoor games) கண்டுபிடித்து விளையாடி..அதை அருமையாக கூறி ஆனந்தம் தழும்பு குட்டி கண்மணிக்கு பாராட்டு.,

    பதிலளிநீக்கு
  12. வெகுவாக ரசித்தேன் குட்டி கண்மணி! அருமையான நினைவுகள்!! :)
    விளையாட்டுகள் ஒவ்வொன்றும் அருமை!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்