வியாழன், அக்டோபர் 03, 2013

ரெட்டை ஜடை வயசு!அப்போது ஒரு எட்டு அல்லது பத்து வயது இருந்ததாக நினைவு! இப்போதெல்லாம் இந்த வயதில் எல்லா பெண் பிள்ளைகளும் அழகாக ”பாப் கட்” வைத்துவிடுகிறார்கள். ஆனால், அப்போது எனக்கு நீளமான முடி!

அழகாக ரெட்டை ஜடை - ”ரிப்பன்” (ஊதா கலர் இல்ல! ;) :) ) வைத்துப் பிண்ணி போட்டு விடுவார் என் அம்மா! ஆனால், அது எப்படியும் பள்ளியில் இருந்து சாயங்காலம் வீடு வருவதற்குள், பாதி பிரிந்துவிடும் பின்னல்.

“அம்மா, ஒழுங்கா ஜட போட்டு விடுங்கம்மா, ”தீபா” எல்லாம் ஜட போட்டு வர்றா, அவளுக்கு மட்டும் பிரியவே மாட்டேங்குது! என் ஜட மட்டும் பிரிஞ்சு போகுது”. இப்படி தினமும் காலையில் கிளம்பும் போது என் வீட்டின் பின் வாசலில் உட்கார்ந்து, அம்மாவிடம் ஒரு அதட்டல் போடுவேன்!

அம்மா சொல்வார், “இரு ஒரு நாள் முடிய வெட்டி விடறேன்”, என்று!

உடனே நான், “பொறாம உங்களுக்கு, இப்டி நீளமா முடி இல்லனு!”.

அந்த ரெட்டை ஜடை என்றால் அத்தனை பிடிக்கும் எனக்கு! எல்லாருக்குமே பிடிக்கும் தானே நீளமான முடி என்றால்!

ஆனால், என் அம்மாவுக்கோ, என் முடியை எப்படியாவது வெட்டிவிட வேண்டும்!

என்னடா? எந்த அம்மாவுக்காவது நீளமாக இருக்கும் முடியை வெட்ட மனம் வருமா? அதுவும் அழகாக இருக்கும் முடியை??? வராது தானே???

ஆனால், என் அம்மாவுக்கோ, எப்படியாவது வெட்டிவிட வேண்டும் என் முடியை என்கிற நினைப்பு! அதுவும் எனக்கு அந்த முடி பிடிக்கும் என்று தெரிந்தும்! என் அதட்டலுக்காக, விளையாட்டுக்கு சொல்கிறார் என்று இல்லை. உண்மையில், அந்த முடியை வெட்ட வேண்டும் என்பதே அவரது நினைப்பு!

காரணம்? நீளமான முடி! பத்து வயது! பள்ளிக்குப் போகும் பெண்!

சொல்லவே தேவை இல்லை! என்ன? புரியலையோ?

”பேன்!!”

அப்போது என் வகுப்பில் தலையில் பேன் இல்லாத பெண்ணே இல்லை எனலாம்!

எனக்கு வேறு நீளமான முடி! சொல்லவே வேண்டாமே! என் தலை தான் பேன்களின் உல்லாச விடுதி!

அப்போது, என் அம்மா என்னென்னவோ செய்து பார்த்தார்! மிளகு அறைத்துப் போடுங்க - இப்படி ஒரு பக்கத்து வீட்டு அக்கா சொல்ல, என் தலையில் மிளகு கூட அறைத்துப் போட்டுவிட்டார்! ஒரே எரிச்சல் எனக்கு தானே தவிற, ஒரு பேன் கூட,சாகவே இல்லை, சாக என்ன, மயங்கக் கூட இல்லை!

மிளகாய் அறைத்துக் கூட போடலாம் என்று திட்டம் போட்டார் அம்மா ஒரு நாள்! ம்ம்ஹ்ம், ஒடியே ஒடிவிட்டேனே!

“தலையும் தலையும் சேரம்மா...”, இப்படி ஒரு விளம்பரம் வரும் அல்லவா, அதெல்லாம் வாங்கிப் போட்டார்கள்! ம்ம்ஹ்ம், ஒன்னும் ஆகலையே! என் அப்பா பாவம், நிறைய மருந்து வாங்கி வந்து தருவார்.

“பிள்ளையே ஒல்லியாக் கெடக்கு, இதுல சாப்பட்றதெல்லாம் இந்த பேனுக்கே போயிரும் போல!”, இப்படி ஒரே வருத்தம் என் வீட்டில்!

கடையில் கிடைத்த அத்தனை மருந்தும் வாங்கிப் போட்டார்கள்! ஆனால், இந்தப் பேன்கள், “சூப்பர் பக்ஸ்” போல, எதற்கும் அசையவே இல்லை!

அப்போது பேன் ஏன் வருகிறது என்று பி.ஹெச்.டி. செய்தது போல, பலரும் பல காரணம் சொன்னார்கள்.  ”அடிக்கடி தலைக்கு குளிக்கனும், இல்லனா பேன் வரும்!”, “ஸ்கூலுக்குப் போறா, அதான், பக்கத்துப் பிள்ள கிட்ட இருந்து வரும்”, “அழுக்கு! அதான்”, “வாசமான ஷாம்ப்பூ போடாதிங்க, பேனுக்கு மல்லிகைப்பூ ஷம்ப்பூனா புடிக்கும், நெறைய வரும்!”, இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்று சொல்ல! என் தலையில் என் அம்மா ரிசர்ச் செய்து கொண்டு இருந்தார் எல்லா தியரிகளையும்! என் பாடு கொடூரமாகிப் போனது பரிசோதனை எலியைப் போல!!!

அழுக்கு என்றார்களே! தினமும் தலைக்குக் குளிப்பாட்டினார் என் அம்மா! ஐய்யோ, தெனமும் தலைக்குக் குளிக்கனுமா??! இப்படி அழுவேன் நான்!

அட்வைஸ் சொல்வார் தினமும், “ஏய், அந்த பரணி பிள்ள பக்கத்துல இடிச்சிக்கிட்டு உக்காராத, அவ கிட்ட இருந்து தான் வருது!”

வாசமான ஷாம்ப்புவும் கட் :( அப்போதெல்லாம் வாசமான ஷாம்ப்பூ எவ்வளவு புடிக்கும் தெரியுமா?

தினமும் ஒரு மணி நேரம் என் தலையில் பேன் வேட்டை நடக்கும்! அதான், தேடுவார்கள், சீப்பை வைத்து முடியெல்லாம் கொட்டுவது போல சீவுவார்கள்! :( :(

பேன் பார்க்க வா, என்று யாராவது சொன்னாலே ஓடுவேன் நான், ஒளிந்து கொள்வேன்!

என் அவ்வா(பாட்டி) தான் எனக்குப் பேன் பார்ப்பார் பல நேரம், அவருக்கு அது ஒன்று மட்டும் தான் வீட்டில் இருக்கும் வேலையே!

அவர் “ஏ கண்ணுமணி... பேன் இழுக்க வா...”, இப்படி சவுண்டு கொடுத்தாலே, ஓடிப் போய் ஒளிந்து கொள்வேன் நான்.

ஆனாலும், என் அத்தை பையன் ஒருவன் இருக்கிறானே, பிடித்துக் கொடுத்து விடுவான் என்னை! அவனுக்கு அது ஒன்று தான் வேலை! முக்கியமான வேலை!

பிடித்தாகிவிட்டதா! ஆகிவிட்டது! அடுத்து உட்கார வைத்து எனக்கு தூக்கம் வருவது போல மெதுவாகத் தலையில் சீவுவார் பேன் சீப்பை வைத்து, என் அவ்வா! என் அம்மா என்றால் சீவும் சீவில் ரத்தமே வந்துவிடும், அதற்கு அவ்வாவே மேல் என்று நானும் விட்டுவிடுவேன்!

இப்படி என்னென்னவோ செய்தும் போகாத அந்தப் பேன், இறுதியாகப் போய்விட்டது நான் கொஞ்சம் பெரியவள் ஆனதுமே! ஆனால், எப்படி என்று மாயம் இன்னும் தெரியவே இல்லை!

இன்றென்னவோ, பேனும் இல்லை, அதைச் சீவ என் அவ்வாவும் உடன் இல்லை! :( ஏன் என்று தெரியவில்லை, உடன் இருந்தவரை அவ்வா, தாத்தாவின் அருமை எல்லாம் தெரியவே இல்லை! இன்று என்னவோ திடீர் என்று அவ்வா நினைவு!

இன்று ஒரே ஏக்கம், அவ்வா இருந்தால், பேன் சீவி இருப்பாரே, கதை சொல்வாறே, தாத்தா இருந்தால், தோளில் தூக்கிக் கொண்டு முக்குக் கடையில் முள்ளு முறுக்கும் அல்வாவும் வாங்கிக் கொடுத்து இருப்பாரே என்றெல்லாம்!

பி.கு. - இப்போ என் தலைல பேன் எல்லாம் இல்ல, அது சின்ன வயசுல, ஒடன கலாய்ச்சிடாதிங்க இப்போ! :)

7 கருத்துகள்:

 1. ஐயோ சாமீ ...! இந்த விளையாட்டிற்கு வர்ரலே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) கவல படாதிங்க, உங்களுக்கு பேன் வராது! :P :D

   நீக்கு
 2. ஹா ஹா ஹா... இந்த மாதிரி ஒரு விஷயத்தை யாரும் சொன்னதே இல்லை.... ரொம்பவே சுவாரஸ்யம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாரும் சொல்லி இருக்கமாட்டாங்க, ஆனா எல்லா பொண்ணு இருக்குற வீட்லயும் நடந்து இருக்கும்! :) நன்றி :)

   நீக்கு
 3. One of the irritating jobs done by mothers to their school going daughters!!!!

  பதிலளிநீக்கு
 4. ஈறைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்கி என்று ஒரு சொலவடை உண்டு. நீ இங்கு பேனை விஷயமாக வைத்து ஒரு பதிவை எழுதிவிட்டாய்! பேனைப் பதிவாக்கிய கண்மணி வாழ்க!

  பதிலளிநீக்கு