செவ்வாய், அக்டோபர் 29, 2013

பட்டணம் போனேனா....

அது ஒரு பெரிய ”கடை”, கடை என்று சொல்வது பொருத்தமாக இருக்காது தான், ஆனால் பாருங்களேன், “மால்” என்பதற்குத் தமிழில் எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை எனக்கு! அதனால், கடை என்றே வைத்துக் கொள்வோம்.

வெளியில் இருந்து பார்த்தாலே ஒரு பாதி நாள் பார்க்கலாம் போல, அவ்வளவு பெரி....ய கடை! வெளியே வந்து நின்றது ஒரு பெரிய கார், உள்ளே இருவர் மட்டும் தான் இருந்தார்கள். ஓட்டுனரையும் சேர்த்தால், மூன்று பேர்!

“கார பார்க்கிங்ல விட்டுடுங்க”, சொல்லியவாரே இறங்கினான் அவன். வயது ஒரு முப்பதிற்கு உள் தான் இருக்கும்.

இறங்கியவன், கையைப் பிடித்து உடன் வந்த தன் வயதான அம்மாவை இறக்கிவிட்டான். இருவரும் கை பிடித்தவாறு அந்தப் பெரிய கடையினுள் நுழைய நடந்தார்கள்.

அந்த அம்மா இது தான் முதல் முறை பட்டணம் வந்திருப்பார் போலும், ஒவ்வொரு ”இன்ச்சை”யும் சற்று வியப்பாகவே பார்த்துக் கொண்டு இருந்தார்.

”இது என்ன, அது என்ன..”, என்று தன் மகனிடம் குழந்தையைப் போலவே கேட்டுக் கொண்டு இருந்தார்.

அவனும், “அதுவாமா, அது வந்து...” என்று சிறுவயதில் தன் அம்மா தனக்குச் சொல்லித் தந்ததைப் போலவே மிகவும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டு இருந்தான்.

அங்கு வேகமாக ஓடிக் கொண்டு இருந்த யாரும் இவர்களைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. ஓடிக் கொண்டே இருந்தார்கள். ஆனால், இந்த மகனும் அம்மாவும் மாத்திரம் மெதுவாக ஒவ்வொன்றையும் ரசித்துக் கொண்டு இருந்தார்கள் அங்கே.

”அட, இந்தப் பூ எல்லாம் எத்தன அழகா இருக்கு இல்லப்பா?”, அந்தக் கடையின் ஓரமாக அழகுக்கு வைக்கப்பட்டிருந்த அந்தத் தொட்டிகளைக் காட்டினார் அவர் தன் மகனுக்கு. பல முறை இதே மாலுக்கு அவனும் வந்திருக்கிறான், ஆனால், அந்தப் பூத்தொட்டியை நின்று பார்த்ததும் இல்லை, ரசித்ததும் இல்லை!

இன்றுதான் அம்மா காட்டியதால் அதைப் பார்த்திருந்தான். “ஆமாம்மா... நல்லா இருக்கு, பாத்து வாம்மா, தர இங்க கொஞ்சம் வழுக்கும்...”, பூக்களை ரசித்துவிட்டு, பூக்கையை இன்னும் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டான், எங்கே அம்மா விழுந்துவிடுவாளோ என்ற பாசத்தில்.


”ரசிப்பதற்காக, ரகம் ரகமாகப் பூக்கள் -
அங்கே அடுக்கி வைக்கப்பட்டு இருந்து என்ன பயன்?
இருவரைத் தவிர ஒருவரும் ரசிக்கவில்லை!”

மெதுவாக நடந்து வந்து கொண்டே இருந்தார்கள் இருவரும் ஒவ்வொன்றாக வேடிக்கை பார்த்தவாறே, ”சேல வாங்கலாம்மா உனக்கு, ரெண்டாவது மாடில இருக்கு...”, என்றவாரு அந்த எஸ்கலேட்டர் பக்கம் அழைத்துச் சென்றான் அம்மாவை.

இது வரை படிக்கட்டில் மட்டுமே ஏறிப் பழக்கம் அம்மாவிற்கு, அதுவும் சமீபமாக மூட்டு வழி வந்துவிடுகிறதென்று ஏறுவதே இல்லை.

”என்ன இது... படி ஓடுது???”, இப்படி வாய்விட்டே சொல்லிவிட்டார் அந்த அம்மா. பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஏதோ போல ஏளனமாக அம்மாவையும் மகனையும் பார்த்தார்கள், என்னவொ இவர்கள் எல்லாம் பிறக்கும் போதே நான்கு லிஃப்ட், ஐந்து எஸ்கலேட்டர் என்று கட்டிக் கொண்டு பிறந்தவர்கள் போல.

ஆனால், அவர்கள் யாரையும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை இந்த அம்மாவும் பையனும், “அம்மா, இதுல மெதுவ்வ்வா ஏறி நின்னுக்கிட்டா போதும்மா, அதுவே நகந்து மேல போய்விட்டுடும்...”, கையைப் பிடித்து மெதுவாக அருகில் அழைத்துச் சென்றான் அவன்.

“பயமா இருக்குய்யா..”, என்று மகனின் கையை அழுந்தப் பிடித்துக் கொண்டு, ஒரு வழியாக ஏறிவிட்டார் அம்மா.

ஏறியதும் பயம் கொஞ்சம் குறைய, லேசாகப் புன்னகைத்தவாறே, “இது நம்ம ஊரு ராட்னம் கணக்கா நல்லா இருக்கே...”, என்றார் மகனைப் பார்த்தவாறே.

அவனும் அம்மாவோடு சேர்ந்து, ”ஆமாம்மா”, என்று புன்னகைத்துக் கொண்டான்.

மறுபடி சேலை வாங்கிக் கொண்டு இறங்கையில், “நானா எறங்கறேன்...”, என்று தனியாக இறங்கி வந்தார் அந்த அம்மா, முகத்தில் ஆயிரம் வாட்ஸ் புன்னகையோடு அந்த எஸ்கலேட்டரில்.

பின்னால், அதை விட அதிக மகிழ்ச்சியோடு மகன்!

----------------------------------------

இந்த நிகழ்வு என் தோழி ஒருத்தி பார்த்ததாகச் சொன்னதை வைத்து எழுதியது.

இந்த நிகழ்வை அவள் சொன்னதும் எனக்கு நான் முதல் முறையாக சென்னையில் எஸ்கலேட்டரில் ஏறியது நினைவுக்கு வந்துவிட்டது.

ரயில் நிலையம் என்று நினைக்கிறேன். கல்லூரி முதல் ஆண்டு படிக்கையில் ஒரு முறை என் அப்பாவோடு சென்னைப் ”பட்டணம் போனேனா....”

அது வரை இந்த எஸ்கலேட்டரில் நான் ஏறியதே கிடையாது, எங்க ஊரில் அது கிடையவே கிடையாது, ஏன் லிஃப்ட்டில் கூட நான் ஏறியதில்லை அது வரை. அதுவும் லிஃப்ட் என்றால் ஒரு பயம், எங்கே நடுவில் நின்றுவிடுமோ? என்றெல்லாம்.

சரி, கதைக்கு வருவோம். எஸ்கலேட்டர்!

ம்ம், இந்தக் கதையிலாவது மகனுக்குத் தெரிந்து இருந்தது எப்படி ஏற வேண்டும் என்று, ஆனால், என் கதையோ காமெடிக் கதை, எனக்கும் தெரியாது, என் அப்பாவுக்கும் தெரியாது.

இருவரும் ரயில் நிலையத்தில் ஒரு எஸ்கலேட்டர் முன் நின்று பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு இருந்தோம்.

பின்னால் பெரிய கூட்டமே கூடிவிட்டது. “சார், ஏறிப் போங்க சார், பயப்படாதிங்க...”, ”ஏறு பாப்பா... பயப்படாத”, இப்படிப் பின்னால் இருந்து ஆளாலுக்குக் குரல் கொடுத்தார்கள் (நல்ல வேள, எங்கள யாரும் திட்டவோ அடிக்கவோ வரல), ம்ம்ஹ்ம், நாங்கள் இருவரும் ஏறிய பாடில்லையே!

இரண்டு நிமிடம் யோசித்த பிறகு எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. அப்பாவும் நானும் கையைப் பிடித்துக் கொண்டு எப்படியாவது ஏறிவிடலாம் என்று. (எவ்ளோ பெரிய ஐடியா, தோனுமா வேற யாருக்காவது? ம்ம்ஹ்ம் தோனாது, எனக்கு மட்டும் தான் தோனும் ;) )

”அப்பா, கையப் பிடிங்க..”, என்று, அப்பாவின் கையைப் ப்டித்துக் கொண்டு ஏறிவிட்டேன், மேலே செல்லச் செல்ல பயம்! (எறங்கனுமே மறுபடியும் கீழ?)

அதுவும் எப்படியோ கையைப் பிடித்தவாறு இறங்கிவிட்டோம்.

இப்போது நானும் சர்வ சாதாரணமாக லிஃப்ட், எஸ்கலேட்டர் எல்லம் பயன் படுத்துகிறேன், என் அப்பாவும் ஓரளவு கற்றுக் கொண்டுவிட்டார்.

இன்று வரை, எப்போது எஸ்கலேட்டரில் ஏறினாலும், முதலில் என் அப்பாவோடு கை பிடித்து ஏறியதை நினைத்துக் கொள்வேன். அத்தனை ஆனந்தமாக இருக்கும் நினைத்தாலே!

என்ன, உங்களுக்கும் இப்படி அனுபவம் இருக்கா? சொல்லிட்டுப் போங்களேன், முதல் எஸ்கலேட்டர் அனுபவத்த?

7 கருத்துகள்:

 1. நான் மொத மொத பெங்களூர்ல எஸ்கலேட்டர்ல ஏறிருக்கேன்.. எங்க மாமா விறு விறுனு அதுல ஏறி முன்னாடி போயிட்டாரு.. நானும் என் தம்பியும் கீழ எங்களுக்கு பின்னாடி வந்தவங்களுக்கு வழி விட்டுட்டு அந்த நகரும் படிக்கட்டை பயத்துடனேயே பார்த்துக்கொண்டே இருந்தோம். மேலே ஏறிய எங்கள் மாமா கோவமாக எங்களைப்பார்த்து, “ஆம்பள பயலுக தானடா நீங்க? ஒழுங்கா ஏறி வாங்க” என்று கத்தினார்.. மொத்த கூட்டமும் எங்களையே பார்ப்பது போன்ற உணர்வு.. சாமியின் மீது பாரத்தை போட்டுவிட்டு எப்படியோ மேலே ஏறிவிட்டோம்.. என் தம்பி என் கையை இறுக்கி பிடித்துக்கொண்டான்.
  ஏறிய பின் ஒரே குஷி.. அன்று மட்டுமே பல முறை மாறி மாறி ஏறி இறங்கினோம்.. அன்றில் இருந்து இன்று வரை எனக்கும் என் தம்பிக்கும் எஸ்கலேட்டர் மிகவும் பிடித்த இடமாகிப்போனது. இப்போதும் அதில் ஏறும் போது எனக்கு அந்த பெங்களூர் ஞாபகம் நிச்சயம் வரும்.. எஸ்கலேட்டர் எல்லோருக்குமே இது போன்றே முதலில் திகில், அவமானம் & அடுத்தடுத்த அனுபவங்களில் சந்தோசத்தையும் தான் பலருக்கும் எஸ்கலேட்டர் கொடுத்திருந்தது என்று பலர் மூலம் அறிந்து கொண்டேன்..
  எங்க ஆச்சி அப்ப கூட பெங்களூர்ல மேல ஏறாம நாங்க போயிட்டு திரும்ப வர வரைக்கும் காத்துட்டு இருந்தாங்க.. அதே மாதிரி எங்க அம்மாவயும் எவ்வளவோ முயற்சி செய்தும் இது வரை எஸ்கலேட்டரில் ஏற்றவே முடிந்ததில்லை.. போன மாசம் கூட ஒரு துணிக்கடைக்கு போய் படியில் ஏறியிருக்கிறார் எங்க அம்மா.. “ஏம்மா அப்படி?”னு கேட்டதுக்கு, “அது மேல போகும் போதே ஒடஞ்சு கீழ விழுந்திருமோனு பயமா இருகுப்பா”னு சமாளிப்பு வேற...
  நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம் ஆமா எல்லாருக்குமே இப்படி ஒரு அனுபவம் இருக்கும். என் தம்பியும் இப்படித் தான் முதல் தடவையா ஏறினப்போ மேலயும் கீழயும் போய் விளையாடிட்டே இருந்தான், நாங்க எல்லாம் அவன பாத்துட்டே இருந்தோம், அவ்ளோ சந்தோசமா வெளையாடுனான் அதுல, எறங்குற வழில ஏறி சுத்தி இருக்க எல்லாரையும் சிரிக்க வச்சுட்டு இருந்தான்... நன்றி..

   நீக்கு
 2. ம்ம்ம்ம்ம்... எங்கம்மாவும் இப்படித்தான்... உங்க தோழி விருது நகர் அல்லது திருநெல்வேலி மாவட்டமாய் இருக்கவேண்டும்.. ஸ்லங் காட்டிக் கொடுக்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) என் தோழி டயலாக் எல்லாம் சொல்லல, அவ லைட்டா ரயில்வே ஸ்டேசன்ல பாத்ததா சொன்னத வச்சு நான் தான் கதவிட்ருக்கேன் இங்க. சரியாச் சொன்னிங்க, நான் சிவகாசி, விருதுநகர் மாவட்டம் தான், அதான் நான் எழுதுனது அப்டி இருக்கு. நன்றி :)

   நீக்கு
 3. அருமையான பதிவு! மூளையைத் தட்டி தட்டிப்பார்க்கிறேன்..நினைவு வர மாட்டேன்கிறது என் முதல் எஸ்கலேடர் அனுபவம். படியாக இல்லாமல் நடக்காமல் நின்று கொண்டு செல்லும் எஸ்கலேடர் 2008ல்
  அமெரிக்காவிலிருந்து வரும்போது விமான நிலையத்தில் முதன் முதலில் போனேன் என்று நினைக்கிறேன்..நான் என்ன நினைத்தேன் என்பதை விடவும் அதில் முன்னே ஓடி பின்னர் எங்களிடம் மீண்டும் வந்து விளையாடிக்கொண்டிருந்த 3 வயது மகனின் மகிழ்ச்சிதான் நினைவில்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) மிக்க நன்றி. ம்ம், என் மனதில் அப்பா கை பிடித்து ஏறியது பதிந்தது போல, உங்களுக்கு மகனின் சிரிப்பு! :)

   நீக்கு
 4. அம்மாவை கூட்டிச் செல்லும் வாய்ப்பு அமையவில்லை... இருந்தாலும் அந்த மகனாக என்னை நினைத்துக் கொண்டேன்...

  பதிலளிநீக்கு