முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓட ஓட ஓட தூரம் கொறையல!

கொஞ்சம் மூச்சுத் திணறல், இழுத்து சுவாசித்தேன் ஒரு முறை, மற்றொரு முறை, கொஞ்சம் லேசாக இருந்தது மனசுக்கு. எதையும் நினைக்கக் கூடாது, வேண்டாம், நினைக்கவே கூடாது! இப்படி நான் நினைக்க நினைக்க அந்த நினைப்பு அதிகமாகிக் கொண்டே போனது தான் மிச்சம்! என்ன அது? அது இங்கே அவசியமற்ற ஒரு விசயம். சொல்ல அவசியமில்லை.

எதோ ஒரு மனக்குறை, உங்களுக்கு நேற்று இருந்ததே? இல்லை போன வாரம் இருந்ததே? இல்லை, இப்போது இருக்கிறதே? அதே போல ஒரு மனக்குறை.

யாரிடமாவது சொல்லலாம் என்றால், ”இது ஒன்றும் அவ்வளவு பெரிய மனக்குறை எல்லாம் இல்லை”, என்று குரல் கொடுக்கிறது இந்த அறிவு.

எப்போதும் இந்தப் போராட்டம், “இப்படி ஆகிடுச்சே, இது நாம நெனச்ச மாதிரி நடந்து இருக்கலாமே, ச, இப்படி ஆகிடுச்சே??” மனசு அடித்துக் கொள்வதும். 

அது அப்படித் தான் நடக்கும் என்று ஏற்கனவே அறிவு கணித்து வைத்திருந்த ஒன்று தான் இது என்பதால், “இது நான் ஏற்கனவே எதிர்பார்த்தது தானே?”, என்று அறிவு அலட்டிக் கொள்ளாமல் இருப்பதும், வாடிக்கையாகிவிட்டது.

மனசே இல்லமால் இருந்தால் என்ன? அதென்ன மனசு? அறிவு? ரெண்டுக்கும் என்ன தான் வித்தியாசம்?

இதோ, தினமும் என்னை ஓட வைக்கிறது, ”எதாவது செய், நீ பெரியவள் என்று காட்டு, ஓடு, ஓடு, இதோ, இப்படிச் செய்தால் பாராட்டுவார்கள், அப்படிச் செய்தால் கை தட்டுவார்கள், ஓடு ஓடு...”, இப்படி என்னை ஓட வைப்பது எது? அறிவா? ஆம். அது தான். எல்லாவற்றையும் பொருளாகவும், பாராட்டாகவும், வெற்றியாகவுமே பார்க்கத் தெரிந்தது அது. ஒன்றைச் செய்ய என்னை ஓட வைக்கிறது. திட்டம் தீட்டுகிறது, செயல்படுத்தவும் செய்கிறது. 

ஒவ்வொரு முறை ஒரு செயலில் இறங்கும் போதும், இதில் வெற்றி கிடைக்க வாய்ப்பு அதிகமா, தோல்விக்கு வாய்ப்பு அதிகமா, சரியாகச் சொல்லிவிடுகிறது, பல சமயம், ஆம், சரியாகத் தான் சொல்கிறது.

ஓடு ஓடு என்று ஓட வைக்கிறது. 

மனசோ? பாவம் அது, ஓட விருப்பமில்லை அதற்கு, நில், அந்தத் தென்னை மரமும் பூத்தொட்டியும் எத்தனை அழகு பார் என்கிறது. நேற்று வரை ஓடியதில், கிடைத்த வெற்றிகளைக் கொண்டாடுவதும், தோல்விக்கு அழுவதும் என்று, அறிவு செய்யும் அத்தனை வேலைகளின் விளைவையும் பாவம் இந்த மனம் தான் தாங்கிக் கொள்கிறது.

கொஞ்சம் ஓய்வு வேண்டும், வெற்றியோ அது தோல்வியோ, இரண்டையும் கடந்த பிறகு ஒரு சின்ன ஓய்வு வேண்டும் என்கிறது இந்த மனசு.

அறிவோ, இல்லை, இது ஓட வேண்டிய நேரம், ஓடு ஓடு, விரட்டிக் கொண்டே இருக்கிறது.

இரண்டு வருடத்திற்கு முன்பு, என் வீட்டின் பின் அம்மா நட்டு வைத்து, தினமும் தண்ணீர் விட்ட குட்டிச் செடி சற்று பெரிய மரமாக மாறிவிட்டிருக்கிறது.

வீட்டின் முன்னால் தொட்டியில் அப்பா வைத்த ரோஜா எல்லாம் பூவாகப் பூத்து நிற்கிறது!

மாடி விட்டில் ஒரு வருடம் முன் பிறந்த பாப்பாவிற்கு, அழகாக இரண்டு பல் போட்டிருக்கிறது.

எதிர் வீட்டிற்கு "அடிக்கும் ஒரு பின்க் வண்ணத்தில்" பெயிண்ட்  மாறி இருக்கிறது.

வரும் வழியில் இருக்கும் ஒரு வேப்ப மரம், இரண்டு தென்னை மரம் காணாமல் போய் இருக்கிறது.

இப்படி எத்தனையோ மாற்றம், ஒன்றையும் இன்று வரை கவனிக்கவே இல்லை, வேகமாக ஓடிய ஓட்டத்தில்!

இன்று என்னவோ, நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓட்டம் தாங்கவில்லையோ என்னவோ, மனசு ஓட மாட்டேன், போதும், நிறுத்து கொஞ்ச நாட்களுக்கு என்று சொல்லிவிட்டது போலும் இந்த அறிவிடம்.

ஓட்டம் நின்றதால் தென்பட்ட மாற்றங்கள் தான் மேல் சொன்னவை எல்லாம். அட, எதிர் வீட்டைக் கூட சரியாகப் பார்க்காமல் ஓடினோமா???


உண்மை தான், காலையில் சீக்கிரம் கிளம்பி, மாலை இருட்டிய பிறகு வீடு வந்ததில், அது கூட கவனிக்காமல் போனது போல.

”கொஞ்ச நேரம் இனியாவது சற்று நேரம் எதுவுமே நினைக்காமல், வீட்டுப் பக்கத்தில் நடந்துவிட்டு வரலாமா?”

”எப்போதும் வேகமாக வண்டியில் ”சர்” என்று கடந்து போன, என் ஊரின் தெருவெல்லாம், நடந்து போய் ரசிக்கலாமா?”

”மீண்டும் ஒரு முறை தம்பியோடு போய் தெருவில் விளையாடலாமா??”

மனசு இப்படி எல்லாம் கேள்வி கேட்க, ஆசைப்பட...

“லூசா நீ? தெருவுல நடப்பாளாம், வெளையாடுவாளாம், அக்கம் பக்கம் என்ன சொல்லுவாங்க, இவ்வளவு பெரிய எரும, தெருவுல நின்னு சின்னப் பிள்ளைங்க கூட வெளயாடுது பாரு...”, அறிவு சொல்ல, அடங்கிப் போய், ஓரமாக முடங்கிவிட்டேன்!

எல்லாருமே இப்படித் தானா?

கருத்துகள்

 1. //எதோ ஒரு மனக்குறை, உங்களுக்கு நேற்று இருந்ததே? இல்லை போன வாரம் இருந்ததே? இல்லை, இப்போது இருக்கிறதே? அதே போல ஒரு மனக்குறை.//
  :) So cute !!
  //எல்லாருமே இப்படித் தானா?//
  கட்டாயமாக மெஜாரிட்டியானவர்கள் இந்த வகையில் தான் வருகிறார்கள் ! மீ டூ !! வளர்ந்துவிட்ட ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு குழந்தையாகிவிடவேண்டும் என்ற கனவு இருக்கிறது, இந்த பாழாய்ப்போன அறிவு தான் தடையாக நின்று நம்மை பெரியவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது அல்லது பெரியவர்களாக வைத்திருக்கிறது !! :( (அறிவு பண்படும் போது மனமும் பண்படும் என்பது என் எண்ணம், இந்த கட்டுரைகூட அறிவின் வாசல் வழியாக மனதின் சுவடுதான் :) )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) கருத்துக்கு நன்றி... எல்லாருமே அப்படித் தானா? :)

   நீக்கு
 2. ஹாய்.. நான் என் தம்பி பசங்க கூட தெருவில் இப்பவும் விளையாடுறேனே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாய்... :) நானும் என் தம்பி கூட ஷட்டில் காக் வெளயாடுவேன் சில நேரம், ஆனா வேற எந்த வெளையாட்டும் வெளயாடினா பெரிய பொன்னாட்டம் இருனு சொல்லிட்றாங்க :/

   நீக்கு
 3. விளையாடனும்னு தோணும் போதே விளையாடீடுங்க.. அப்புறம் பொறுப்புகள் அதிகமான பின்பு விளையாட நினைத்தாலும் நேரமோ, சூழலோ அனுமதி தராமல் போகலாம்.. இன்னைக்கு ஆசைப்படறத இன்னைக்கே எக்சிக்யூட் பண்ணிடுங்க..:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம், ஆமா, அறிவாவது, ஊராவது, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், அமர்க்களம்னு இருக்க வேண்டியது தான்! நன்றி... :)

   நீக்கு
 4. பல முறை நானும் யோசித்திருக்கிறேன் இது போல.. கடைசியாக செருப்பில்லாமல் தெருவில் ந்டந்தது எப்போது என்று யோசித்தால் அது நிச்சயம் சிறு வயதில் நாம் விளையாடிய காலமாகத்தான் இருக்கும்.. அந்தந்த வயதில் அததை செய்ய வேண்டும். சின்ன வயதிலேயே இருக்க வேண்டும் என்கிற ஆசை, எல்லோருக்கும் இருக்கும்.. அந்த நினைவுகள் அடிக்கடி வந்து “ச்சே இது என்ன வாழ்க்கை” என்கிற எரிச்சல் இருக்கும்.. ஆனால் அடுத்த வேலை ஒன்று நம் முன் வந்து நிற்கும் போது மீண்டும் ஓடத்தான் வேண்டும்.. நம் இஷ்டத்திற்கு வாழ இந்த உலகில் நாம் ஒருவர் மட்டும் வாழவில்லையே? ஆனாலும் முடியும் போதெல்லாம் நமக்கு பிடித்த மாதிரி வாழந்து விட வேண்டும்.. அது எப்போது கிட்டும் என்றால், படித்து முடித்த பிறகு, கல்யாணத்திற்கு முன்பு.. இந்த gapல் நம் ஆசைகள் பலவற்றை நிறைவேற்றிக்கொள்ளலாம்.. உண்மையில் இந்த gapஐ நான் மிகவும் ரசிக்கிறேன்.. நீங்கள் இன்னும் சிறிது காலத்தில் இந்த gapல் நுழையும் போது பிடித்த மாதிரி ரசனையாக வாழப்பழகிக்கொள்ளலாம்..
  பள்ளியில் படித்த
  "What is this life, full of care
  we have no time to stand and stare"
  என்கிற poem ஞாபகம் இருக்கிறதா? முடிந்தால் இந்த சுட்டியில் அதைப்படிக்கவும்.. நம்மைப்போன்ற எண்ணம், ஏக்கம் உள்ள ஆட்களுக்கு ஏற்ற poem அது.. http://www.davidpbrown.co.uk/.../william-henry-davies.html
  என்னவென்று தெரியவில்லை, நான் 8ம் வகுப்பில் படித்த இந்த poem இப்போதும் எனக்கு மனப்பாடமாக அடிக்கடி ஞாபகம் வந்து என்னை ஒரு வித ஏக்கத்தில் விட்டுவிடும் :-(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம், நினைவு இருக்கு படிச்சதா அந்த போயம், ஆனா உங்களப் போல ஞாபகமா எல்லாம் தெரியாது. ம்ம், ஆமா, கொஞ்சம் நேரம் கெடச்சாலும் பயன்படுத்தி என்ஜாய் பண்ணிடனும்... எனக்கு சின்ன வயசுல கூட செருப்பு இல்லாம நடந்ததா நினைவே இல்லயே!!! :(

   நீக்கு
 5. Itha padikum pothu gyabagam vantha oru pala mozhi " nilain arumai veyilil teriumnu" . Athu madiri sornthu ukarum pothu tan nam mulaiki nama yevlo nala visayatha kadanthu vanthurukom yevlo nigalvugala thavara vitrukomnu purium..

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா?
என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள்.
இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது!
சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே காசு கேட்பா…

இருபத்தியாறு (21+4) வயதினிலே!

"என்னடா இந்தப் பொண்ணு கணக்குல கொஞ்சம் வீக்கோ?", என்று நீங்கள் நினைப்பது எனக்குக் கேட்கிறது. உண்மை தான், கொஞ்சம் வீக் தான். ஆனால், இப்போது எனக்கு இருபத்தியாறு வயது துவங்கி இருக்கிறது, அதனால் தான் முடிந்த வயதை கணக்குப் போட்டு இருக்கிறேன். புரிகிறதோ? 
21 வருடம் அம்மா அப்பா கையைப் பிடித்துக் கொண்டு இருந்தேன். 4 வருடம் தனியாக இருந்தேன். இப்போதும் தனியாகத் தான் இருக்கிறேன். (தனிமை தனிமையோ, கொடுமை கொடுமையோ!)
சரி இந்த இருபத்தி ஐந்து வருடங்களில் நான் "இது சரி", "இது தவறு", என்று இப்போது வரை கற்று இருப்பவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். விருப்பம் இருந்தால் வாசித்துப் பாருங்கள். இதில் இருப்பவை எல்லாம் என்னுடைய சுய அனுபவங்கள் கொண்டு நான் எழுதி இருப்பவை. உங்களுக்கும் இது சரியாக இருக்க அவசியம் இல்லை.   
சரி "வளவள" என்று பேசாமல் சொல்ல வந்ததைச் சொல்கிறேன், கேளுங்கள்!
இதில் வெவ்வேறு தலைப்புகளாகப் பிரித்து எழுதி இருக்கிறேன், பின்னாளில் நான் மறுபடி இதைப் படித்துப் பார்க்கையில் எனக்கு எளிதாக இருக்கும் பாருங்களேன்? பெரும்பாலும் நான் எழுதுவதெல்லாம், எனக்காகத் த…

இது ஒரு சிக்கன் கதை!

சிக்கன்! அசைவ விரும்பிகள் எல்லோருக்குமே பிடித்த, மிக மிகப் பிடித்த ஒன்றாக இருக்கும் இந்தச் சிக்கன்!?
எப்போதும் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு மீன் சமைக்கும் வாசம், அற்புதமாகவும், சைவம் சாப்பிடுபவர்களுக்கு அது “அய்யோ... என்ன கருமம்!”, என்பது போலவும் இருக்கும்!
இதில் நான் முதல் வகை, அசைவம் சாப்பிடும் வகை!
என் நண்பர்கள் உறவினர்களிடம் கேட்டால் தெரியும், எனக்கு எவ்வளவு பிடிக்கும் அசைவ உணவு என்பது!
எனக்கு ஒரு அத்தை இருக்கிறார், அவர் வீட்டிற்குச் சிறுவயதில் சென்ற போது, ஒரு முறை, ஒரு அரைக் கிலோ மீனை ஒரே ஆளாகச் சாப்பிட்டேனாம்!
”புரட்டாசி மாதம், அசைவம் சாப்பிடக் கூடாது, வெள்ளி, செவ்வாய் பிறகு சனி, அசைவம் சாப்பிடக் கூடாது”, இப்படி என் அம்மா போடும் விதிகள் எல்லாம், அப்பா... எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது!
அதென்னவொ, அசைவ உணவின் ருசி அத்தனை அருமை! (இதைத் தான் பசிக்கு உண்ணாமல் ருசிக்கு உண்பது என்பார்களோ???)
என் அப்பா அசைவம் சாப்பிடமாட்டார் அதிகம், நானும் அம்மாவும் தான், வற்புறுத்தி சாப்பிட வைப்போம். அவர் உடனே சொல்வார், “ஊன் வளர்க்க ஊன் உண்ணக் கூடாது”, என்றெல்லாம்.
என்னையும் அசைவம் சாப்பிடாதே, விட்டுவிட…