முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இது ஒரு சிக்கன் கதை!

சிக்கன்! அசைவ விரும்பிகள் எல்லோருக்குமே பிடித்த, மிக மிகப் பிடித்த ஒன்றாக இருக்கும் இந்தச் சிக்கன்!?

எப்போதும் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு மீன் சமைக்கும் வாசம், அற்புதமாகவும், சைவம் சாப்பிடுபவர்களுக்கு அது “அய்யோ... என்ன கருமம்!”, என்பது போலவும் இருக்கும்!

இதில் நான் முதல் வகை, அசைவம் சாப்பிடும் வகை!

என் நண்பர்கள் உறவினர்களிடம் கேட்டால் தெரியும், எனக்கு எவ்வளவு பிடிக்கும் அசைவ உணவு என்பது!

எனக்கு ஒரு அத்தை இருக்கிறார், அவர் வீட்டிற்குச் சிறுவயதில் சென்ற போது, ஒரு முறை, ஒரு அரைக் கிலோ மீனை ஒரே ஆளாகச் சாப்பிட்டேனாம்!

”புரட்டாசி மாதம், அசைவம் சாப்பிடக் கூடாது, வெள்ளி, செவ்வாய் பிறகு சனி, அசைவம் சாப்பிடக் கூடாது”, இப்படி என் அம்மா போடும் விதிகள் எல்லாம், அப்பா... எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது!

அதென்னவொ, அசைவ உணவின் ருசி அத்தனை அருமை! (இதைத் தான் பசிக்கு உண்ணாமல் ருசிக்கு உண்பது என்பார்களோ???)

என் அப்பா அசைவம் சாப்பிடமாட்டார் அதிகம், நானும் அம்மாவும் தான், வற்புறுத்தி சாப்பிட வைப்போம். அவர் உடனே சொல்வார், “ஊன் வளர்க்க ஊன் உண்ணக் கூடாது”, என்றெல்லாம்.

என்னையும் அசைவம் சாப்பிடாதே, விட்டுவிடு என்றெல்லாம் சொல்லுவார். ஆனால் நான் கேட்டதில்லையே! பதிலுக்கு, “நீங்க வேணும்னா சாப்டாம இருங்கப்பா, என்ன சொல்லாதிங்க!” என்று சொல்லிவிடுவேன்.

நீங்கள் ஒரு அசைவப் பிரியராக இருப்பின், இது வரை நான் சொன்னதெல்லாம் புரிந்திருக்கும், சுவை, மனம், ருசி எல்லாம்!

அதே சைவமாக இருந்தால், “ச, எவ்வளவு கொடூரமான புத்தி, ஒரு உயிர கொன்னு சாப்டுட்டு, சுவை, மனம், ருசினு...”, இப்படி என் மீது ஒரு வெறுப்பு வந்திருக்கும். ஏதோ நான் கொடூரமானவள் போலத் தோன்றி இருக்கும்!

இதுவரை எத்தனையொ சைவம் சாப்பிடுபவர்கள், சைவம் மட்டும் சாப்பிடுவது பற்றிப் பேசி இருக்கிறார்கள், என் அப்பா சொல்லி இருக்கிறார். ஆனால், ஒரு போதும் அசைவம் சாப்பிடுவதை விடாத நான், இன்று விட்டுவிட்டேன்!

யார் என்ன சொன்னாலும், எனக்காக என் மனதில் எப்போது ஒரு விஷயம் படுகிறதோ, அப்போது தான் செய்வேன் நான். இது நல்ல பழக்கமா, கெட்ட பழக்கமா என்றெல்லாம் தெரியாதெனக்கு.

சரி, எப்படி விட்டேன்? அசைவம் சாப்பிடுவதை? ஏன் இந்த திடீர் மாற்றம்? யார் சொல்லியும் வராத மாற்றம்????

காரணம், இது வரை நான் சிக்கன் சமைக்க முயற்சி செய்ததே இல்லை! சமீபமாக முயன்றேன், “அம்மா, இன்னைக்கு நீங்க உக்காருங்க, ஒரு தடவ கூட நான் ”நான்வெஜ்” சமச்சது இல்லைல, இன்னிக்கு சமைக்கிறேன்.”, இப்படி வீர வசனம் பேசி சமைக்க சமயலறையில் நுழைந்தேன்.

இதுவரையிலும், சமைத்த நிலையில் தான் சிக்கனை கைகளால் தொட்டிருக்கிறேன். சமைக்காத சிக்கனைத் தொட்டதில்லை! சமைக்காத சிக்கன் துண்டுகளைப் பார்த்திருக்கிறேனே தவிற, கையில் தொட்டதில்லை! 

அன்று கைகளால், சிக்கன் துண்டுகள், சமைக்காத சிக்கன் துண்டுகளைத் தொட்டேன்!

பார்க்கும் போது இல்லாத ஒரு உணர்வு, தொடும் போது வந்தது!

“ஐயோ, இது சதை, நம்ம ஒடம்புல இருக்கறது மாதிரி சதை... இதையா நாம சாப்பட்றோம்???”, இப்படி ஒரு எண்ணம்.

அது வரைக்கும் எனக்கு தெரிந்த ஒன்று தான் அது. சதை, அதைத் தான் சாப்பிடுகிறோம் என்று, ஆனால், நான் அதை அறிந்திருந்தேனே தவிர்த்து, உணர்ந்திருக்கவில்லை!!!

அன்று கையில் தொட்டதும் தான் உணர்ந்தது! 

அப்போது முடிவு செய்தேன், இனி அசைவம் சாப்பிட வேண்டாம் என்று, அந்த சதை, ரத்தம், இரவெல்லாம் எனக்கு என்னவோ பயங்கர குற்ற உணர்வை உண்டு செய்துவிட்டது. 

இப்போது நினைத்துப் பார்த்தால், எனக்கு என்னையே ஒரு அரக்கி போலத் தோன்றுகிறது! :( ஒரு உயிரின் சதையையா இத்தனை நாளாக...

பிறகு திடீரென ஒரு சந்தேகம் வந்தது. இத்தனை நாட்களாக அம்மாவும் தான் சிக்கன் சமைக்கிறார். அவருக்கு இப்படி எல்லாம் தோன்றாத போது? எனக்கு மட்டும் ஏன்????

அவரிடமே கேட்டேன், எனக்குத் தோன்றியது போல அவருக்குத் தோன்றவில்லையா என்று...

”இல்லையே? நான் அப்படி எல்லாம் ஒரு நாளும் நெனச்சதில்லையே?”, என்று சொல்லிவிட்டார். 

ஆனால், எனக்கு மட்டும் ஏன் இப்படித் தோன்றியது????

இந்தப் பதிவினால், எல்லோரும் சைவம் சாப்பிடுங்கள் என்று நான் சொல்ல வரவில்லை, ஆனால், சிக்கன் சமைக்கும் போது, யாருக்குமே தோன்றாத ஒன்று எனக்கு மட்டும் ஏன் தோன்றியது???????

கேள்விப் பட்டு இருக்கிறேன், நிறைய பேர் அசைவமாக இருந்து பின் சைவமாக மாறியது, இப்படித் தான் மாறி இருப்பார்களோ???? 

பிறகு கொஞ்சம் புரிந்தது, மது அருந்துபவர்கள் புகை பிடிப்பவர்களுக்குக் கூட, தாங்கள் செய்வது கெடுதல் என்று தெரியும், ஆனாலும் விட முடியாது! ஒரு வேளை அவர்களுக்கும் தெரிந்து இருக்கிறது, ஆனால், உணரவில்லையோ? 

ஒரு நாள் உடல் நிலை மோசமானதும் கைவிடுவார்களே, மது, புகை எல்லாம், உணர்ந்த பிறகு? அது போலவா இப்போது நான் அசைவம் வேண்டாம் என்று நினைத்தது???

தெரியவில்லை, ஆனால், ஒன்று, இனி அசைவம் சாப்பிடுவதாக இல்லை.

இதில் இன்னும் ஒரு பிரச்சனை வேறு, “பால், முட்டை”, எல்லாம் அசைவமா சைவமா என்று...??? சரி அப்படி பால் முட்டையும் அசைவம் என்றால், அதையும் சாப்பிடக் கூடாதா???

அப்படி பால் முட்டை சாப்பிடக் கூடாது என்றால், ”கேக், ஐஸ்கிரீம், சாக்லேட்...”, இப்படி ஒரு பெரும் பட்டியல் வருகிறதே????

சரி, நமக்கு தான் பால் காய்ச்சும் போதும், ஆம்லேட் போடும் போதும் ஒன்றும் தோன்றவில்லையே சிக்கன் சமைக்கும்போது தோன்றியது போல, அதனால், பாலும் முட்டையும் சாப்பிட்டுக் கொள்வோம் ;)

சரி இது மாதிரி யாருக்காவது தோனிருக்கா??? 

எனக்குத் தோனுச்சு சாப்ட வேண்டாம்னு, அதுக்குனு உங்களையும் சாப்ட வேண்டாம்னு எல்லாம் சொல்லமாட்டேன், என்சாய் ஈட்டிங், சிக்கன் 65, 75,2000, 20013 ;) ;) 

கருத்துகள்

 1. ஷெண்பக ராஜன்.11/10/2013 9:44 PM

  வாழ்த்துக்கள். இது மிக நல்ல மாற்றம். என் கதை கிட்டத் தட்ட இப்படித்தான். நான் 10வது படிக்கும் போது NCC முகாமில் தினமும் 40 ஆடுகள் அறுக்கப் படுவதை கண்ணால் பார்த்த போது எனக்குள் இந்த மாற்றம் உண்டானது. ஆனால் அப்போது அம்மாவின் கட்டாயத்தால் தொடர்ந்து அசைவம் சாப்பிட நேர்ந்தது (அம்மா, சின்ன வயசிலே இருந்து சைவம்; ஆனால் அதை சமைப்பதில் கில்லாடி). ஒரு வழியாக கொஞ்சம் மீசை எல்லாம் முளைத்த பிறகு, கல்லூரி 3ம் ஆண்டு படிக்கும் போது, 1-1-77ல் இருந்து முட்டை கூட சாப்பிடாத சைவமாக மாறிவிட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி... மனசு கேக்கலையோ உங்களுக்கும்... :)

   நீக்கு
 2. நாம ஏன் சிக்கனுக்கு பருப்பு போட்டு ஒரு புது விதமா சாம்பார்/கொழம்பு முயற்கிக்கக் கூடாது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே, நீங்க முயற்சி செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க, நான் இந்த ஆட்டைக்கு வரல! :)

   நீக்கு
 3. அட என்னங்க நீங்க.. சிக்கன்னு டைட்டில பார்த்ததும் போக இருந்த மீட்டிங்க கேன்சல் பண்ணீட்டு படிக்க உற்காந்துட்டேன்.. அசைவம் அவ்வளவு பிடிக்கும் எனக்கு. அமர்க்களமா ஆரம்பிச்சு சோகமா முடிச்சிட்டீங்க..

  மனிதர்களும் சரி, உயிரனங்களும் சரி, ஒரு நாள் இறக்கத்தான் போகிறது.. ஆனால் அதன் பெருமை அதனால் எவ்வளவு பெருமை சேர்ந்தது என்பதில் தான். சிக்கன் பிரியாணியாகவோ, சிக்கன் 65 வாகவோ நாம் உண்ணும் போது அது ஜென்ம சாபல்யம் அடைகிறது.. ஒரு உயிருக்கு முக்தி கொடுக்கும் புண்ணிய காரியம் எத்தனை பேருக்கு வாய்க்கும்? சைவத்துக்கு மாறிட்டேன்னு சொல்றீங்களே "Plants" மட்டும் உயுருள்ளது இல்லையா.. ரத்தம் கண்ணுக்கு தெரிஞ்சா தான் கொலையா.. நீங்க சிக்கன விட எடுத்த முடிவ எங்க சங்கம் ஏத்துக்கறதா இல்லீங்க.. நீங்க மறுபடியும் சாப்பிடற வரைக்கும் "உண்ணும் விரதப்" போராட்டம் இருக்க முடிவு செஞ்சுட்டோம்..அப்புறம் உங்க இஷ்டம்..

  http://www.kovaiaavee.com/2010/07/blog-post_16.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னே ஒரு சிந்தனை, நீங்க சொல்றது மாதிரி கூட யோசிக்கலாமோ?? ஆனா என்ன பண்றது, எனக்கு வேற மாதிரி தோனிடுச்சு! அதானால சாப்பிடாம இருக்க தான் போறேன் அசைவம். போராட்டம் செஞ்சு நல்லா ஒடம்பத் தேத்துங்க! :) ;)

   நீக்கு
  2. அசைவ உணவு சாப்பிடாத குடும்பத்தில் பிறந்த நான் சைவம், அசைவம் என்பது பற்றி பெரிதாக யோசித்ததே இல்லை. எல்லாம் படிப்பதற்காக தைவான் நாட்டிற்கு வரும் வரை தான். இங்கு பெரும்பாலானோர் அசைவ உணவு சாப்பிடுபவர்களே. நம் ஊரில் "நான் சைவம்" என்றால், "ஓ அப்படியா, சரி" என்று போய்விடுவார்கள். இங்கு என் நண்பர்கள் ஏன், எதற்கு என்று ஆயிரம் கேள்விகள் கேட்டு துளைக்க ஆரம்பித்து விட்டார்கள். "மாமிசம் சாப்பிடாவிட்டால் உனக்கு எப்படி உடலுக்குத் தேவையான புரதங்கள் கிடைக்கும்?", "மாமிசம் சாப்பிடாமல் எப்படி நீ பார்க்க இவ்வளவு ஊட்டமாக இருக்கிறாய்?", "தாவரங்களுக்கு மட்டும் உயிர் இல்லையா?" (நண்பர் கோவை ஆவி கூட இதே கேள்வியைக் கேட்டிருக்கிறார்), இப்படிப் பல கேள்விகள்.

   முதலில் சற்று கடுப்பாக இருந்தாலும், இவர்களுக்கு பதில் சொல்வதற்காகவே சைவ உணவு பற்றி படிக்க ஆரம்பித்தேன். என் தேடல்களுக்குப் பின், பழக்கத்தினால் சைவ உணவு சாப்பிடுவது போய் இப்பொழுது தெளிவான ஒரு கொள்கையோடு செய்கிறேன். நான் இருக்கும் நாட்டில் சைவ உணவு கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். வேலை அதிகம் இருக்கும் நாட்களில் சமைத்து சாபிடுவது என்பது இயலாத காரியம். இங்கு வந்தது முதல் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு எனக்குத் தெரிந்த ஒரே சைவ சிற்றுண்டிக் கடையில் நாள்தோறும் இரண்டு வேளை உணவு சாப்பிட்டு இருக்கிறேன். இருப்பினும், ஒரு நாளும் அசைவம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்ததில்லை.

   சைவமாக மாற வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனை அப்படியே தொடர வாழ்த்துக்கள்.

   நீக்கு
  3. தாவரங்களுக்கு மட்டும் உயிர் இல்லையா?: நண்பர் "கோவை ஆவி" அவர்களே, உங்கள் கேள்வி மிகச்சரி. எனக்குத் தெரிந்த அளவு இதற்கு பதில் தர முயற்சிக்கிறேன். தாவரங்களில் இருந்து நாம் காய், கனி அல்லது வேறு பாகங்களை வெட்டி/பறித்து எடுக்கும் பொது கண்டிப்பாக தாவரங்களுக்கு வலிக்கும். மிருகங்களைக் கொல்லும் போது இதை எளிதாக உணரும் நாம் காய்கறிகளைப் பறிக்கும் போது உணர்வதில்லை. பல சித்தர்களும் முனிவர்களும் மரம் செடிகளில் இருந்து தானாக விழும் காய் கனிகளை மட்டுமே உண்டு வாழ்ந்தனர் என்று படித்ததாக ஞாபகம். இன்னும் சிலர், காற்றை மட்டுமே உணவாகக் கொண்டு வாழ்ந்ததாகவும் படித்திருக்கிறேன்.

   சரி, நம்மால் அவ்வளவு எல்லாம் செய்ய முடியாது. காய் கனிகளைப் பறிப்பது தவிர்க்க முடியாதது. ஆனால், ஒன்றை கவனிக்க வேண்டும். காய் கனிகளைப் பறித்த பிறகும் தாவரங்கள் உயிரோடு தான் இருக்கின்றன. காய் கனிகளைப் பறிப்பது நம் கையில் சிறிது அடிபட்டுக் கொள்வது போல் தான். சிறிது நாட்களுக்குப் பிறகு எப்படி காயம் ஆரிவிடுமோ, அப்படிதான். மீண்டும் பூக்கள் பூக்கும், காய்கள் முளைக்கும். ஆனால், கையையே வெட்டிவிட்டால்? மிருகங்களைக் கொல்வது அப்படிதான், உயிர் போனால் போனதுதான். எனக்குத் தெரிந்து ஜைன மதம் மற்றும் புத்த மதத்தினர் சிலர் இதன் காரணமாக வேரில் முளைக்கும் காய்களை (உதாரணம்: உருளைக்கிழங்கு) சாப்பிடமாட்டார்கள். ஏனென்றால் வேரோடு பிடுங்கும் போது அந்த உயிர் மொத்தமாக பறிக்கப் படுகிறது.

   கோழியையும் ஆட்டிறைச்சியும் சாப்பிடும் நம்மவர்கள் பலர் மாட்டிறைச்சி சாப்பிட சொன்னால் மாட்டார்கள், பழக்கம் அப்படி (நான் இருக்கும் நாட்டில் "கிரிக்கெட்" என்ற பூச்சியை வறுத்து சாப்பிடுவார்கள், நம்மால் முடியுமா? ;) ). ஆட்டுக்குட்டியை அடித்து சாப்பிடுவதை ஏற்றுக்கொள்ளும் மனம் எங்கோ சீனாவில், பிறக்காத மனிதக்கருக்களை சாப்பிட்டனர் என்ற செய்தி கேட்டு பதறியதல்லவா? மரமோ, செடியோ, ஆடோ, கோழியோ, மனிதனோ, எதுவாக இருந்தாலும் நம்மால் முடிந்த வரை துன்பம் இழைக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது.


   (நான் சொல்வதெல்லாம் சரி என்றில்லை, உங்களுக்கு என் கருத்துக்களில் உடன்பாடில்லாமல் இருக்கலாம் அல்லது மாற்றுக்கருத்து இருக்க்கலாம், இருப்பின் பகிர்ந்து கொள்ளவும்).

   நீக்கு
  4. நன்றி ராம் வெங்கட் :)

   நீக்கு
 4. உங்களோட அனுபவத்தை எழுதியிருக்கீங்க.. நானும் சிறு வயதில் நான் வளர்த்த கோழிகளை அறுத்துச் சமைத்த அன்றிலிருந்து சிக்கன் சாப்பிடுவதை விட்டிருந்தேன்..மனதில் ஏற்பட்ட வலி.. மட்டன் சாப்பிடுவேன்...சிக்கனை எப்படி ஏமாற்றி கொடுத்தாலும் கண்டுபிடித்து ஒதுக்கிடுவேன்..அதே திருமணத்திற்கு பின் கணவரின் கிராமத்தில் உன் ஒருத்திக்காக மட்டன் எடுக்க வெளியூர் செல்லணும், நீ சாப்பிடலைன்னு யாருமே வேண்டாம்கறாங்க, அதனால் பழகிக்கொள் என்றபோது பத்து வருடங்களாக விட்டிருந்த சிக்கனை பழகிக் கொண்டேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம் :) ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சூழ்நிலை!

   நீக்கு
 5. முன்னாடி போட்ட கருத்து பதிவாச்சான்னு தெரியல. மிவெட்டு காரணமாக.

  அப்படி வாங்க நம்ம கட்சிக்கும். உங்களுக்கு உளப்பூர்வமான பாராட்டுக்கள். நானும் அதே குற்ற உணர்வின் காரணமாகத்தான் சைவத்துக்கு மாறினேன். Veg - என்றபோதிலும் Vegan- என்பதே உண்மையான விலங்கு நேயமாகும். இறைச்சி மட்டுமன்றி பால், முட்டை போனற உணவு, உடை, இருப்பிடம், காலணிகள் என எவ்வகையிலும் விலங்குகளின் பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் எனபதே என் பேராசை. கசாப்புக் கடையில் கோழியோ ஆடோ கொல்லப்படுவதைப் பார்க்கும் யாருக்குமே இதயம் பதறும். நாவின் ருசியே அதனை மறக்கச் செய்கிறது. இதை எல்லாருக்கும் புரியவைக்கவோ விவாதிக்கவோ இயலாது. பால் மெக்கார்ட்டினி சொன்னது "கசாப்புக்கடைகளின் சுவர்கள் மட்டும் கண்ணாடியில் இருந்திருந்தால் பாதிபேர் சைவ உணவுக்கு மாறியிருப்பார்கள்"

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான், எல்லாருக்குமே பதறத் தான் செய்யும். அட, நெறைய பேர் இப்படி மாறி இருப்பாங்க போல இருக்கே! ச்சீர்ஸ் ;)

   நீக்கு
 6. நான் ஜீவகாருண்யம் எல்லாம் பார்க்கும் ஆள் இல்லை.. ஆட்டையும், கோழியையும் கறிக்கடையில் வெட்டும் போதும், அறுக்கும் போதும் பாவமாக இருக்கும்.. ஆனால் குக்கரில் இருந்து வாசம் வரும் போது எல்லாம் சரியாகிவிடும்.. அதற்காக அசைவ பிரியன் எல்லாம் இல்லை நான்.

  அம்மா வைக்கும் சாம்பாரும், அதை சுடு சோறில் ஊற்றி கொஞ்சம் எண்ணெய் சேர்த்து, பொறித்த கத்திரிக்காயோடு சாப்பிடும் சுவை எந்த அசைவ உணவும் தந்ததில்லை எனக்கு. அதையும் விட பால் சோறு, பக்கோடா - எதிலும் கிடைக்காத திருப்தி தருபவை இவை.

  MBA படித்த கல்லூரியில் அசைவம் துப்புறவாக கிடையாது.. கொஞ்ச நஞ்சம் சாப்பிட்ட அசைவமும் அதில் இருந்து முற்றிலும் குறைந்தது. அப்பாவுக்கு நான் MBA படித்த கல்லூரி பிடிக்காது, அதில் அசைவம் இல்லாத காரணத்தால். இப்போதும் உடல் எடை/ஆரோக்கியம் பற்றிய கவலை வரும் போது ஸ்ட்ரிக்ட் டயட்டில் அசைவம் தவிர்ப்பேன். மற்றபடி வாரத்தில் ஒரு நாள் வீட்டிற்கு வரும் போது அப்பாவின் கட்டளைப்படி அசைவம், அதுவும் முடிந்த வரை தவிர்த்துவிடுகிறேன் இப்போதெல்லாம்.. ஆனாலும் நண்பர்களோடு இருக்கும் போது மட்டும் அசைவம் தவிர்க்கமுடியாதது.

  ஏன் என்று புரியவில்லை.. சிறு வயதில் இருந்தே அசைவத்தில் பெரிய நாட்டம் இருந்தது இல்லை. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் முற்றிலும் அசைவத்தை நிறுத்துவதாக எண்ணம்.. உங்களைப்போல் காரணம் எல்லாம் இல்லை. Health conscious என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.. என் அம்மாவும் அப்படித்தான், அசைவம் பிடிக்காது.. ஆனால் அப்பாவுக்கு கறி அதிலும் ஆட்டுக்கறி இல்லையென்றால் எதையோ இழந்த மாதிரி ஆகிவிடும்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டேஸ்ட் & ஃபீல்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா, எப்பவும் அம்மா செய்யற சாப்பாடுனா சுவை தான! ஆமாம், ஒருவருக்கும் ஒரு ஒரு எண்ணம் நெறைய பேர் உடல் எடை போடக் கூடாது என்று தான் அசைவத்தை விடுகிறார்கள். அதுவும் நல்லது தானே!

   நீக்கு
 7. கிச்சன் பத்தி.... ஸாரி, சிக்கன் பத்தி இவ்வளவு சுவாரஸ்யமா சொல்லிட்டீங்க. படிக்கும் போது இங்க நான் சொல்லணும்னு மனசுல நினைச்சதெல்லாம் எனக்கு முன்னாலயே கோவை ஆவி சொல்லியிருக்காரு. அதனால... உங்க எழுத்து நடையை மிக ரசிச்சேன்ங்கறத மட்டும் சொல்லிக்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி :) ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரும் கருத்து இருக்கும். அவங்க அவங்களுக்கு புடிச்ச மாதிரி இருக்கலாம் எல்லாருமே! தப்பில்லயே அதுல! சிக்கன் பிடிச்சா சாப்டலாம், இல்லையா வேண்டாம்! என்ன நான் சொல்றது? :)

   நீக்கு
 8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 9. உலகத்துல எல்லோரும் சைவமா மாறிட்டா சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டம் ஆகிடுமாம் !,அவ்ளோ பேருக்கும் காய்கறிகளை விளைச்சல் செய்வது என்பது சிரமமான விசயம் என்று ஒரு Fact இருக்கு, நீங்க சொல்றது Perfect Sense ,உங்களுக்கு வேணாம்னு தோனுனா விட்டுடுங்க என்று! எனக்கு ஒரு விசயம் நினைவுக்கு வருகிறது "உலகில் மனிதர்கள் ஜனத்தொகையைவிட கோழிகளின் ஜனத்தொகை அதிகமாம்" , BTW "கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி" :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம்.. எல்லாரும் எல்லாம் மாற அவசியம் இல்லையே! ஏதோ எனக்கு தோனிச்சு மாறினே! சாப்டுங்க சாப்டுங்க! சிக்கன் 65! :)

   நீக்கு
 10. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_5.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 11. வணக்கம், தங்களது தளம் "மின்னல்வரிகள்" பாலகணேஷ் அவர்களால் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான சுட்டி:

  http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_5.html

  பதிலளிநீக்கு
 12. இன்னும் சிறப்பாய் எழுத வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்