ஞாயிறு, டிசம்பர் 23, 2012

அப்பாக்குட்டிக்கு!

அப்பாக்குட்டி,

சிறுவயதில் இருந்தே, "அம்மா" புடிக்குமா? "அப்பா" புடிக்குமா?, இந்தக் கேள்விக்கு, "நான் அப்பாக் குட்டி" என்றே பதில் சொல்லிப் பழகியவள் நான்.

"குட்டி, அப்பாக்குட்டி, செல்லம்", இப்படித் தான் அழைப்பீர்கள் என்னை நீங்கள்? நினைவிருக்கிறதா? ஆனால், இன்று, என்னை அழைப்பதையே நிறுத்திவிட்டதேனோ?

நீங்கள் என்னை அப்பாக்குட்டி என்று அழைப்பதை நிறுத்திய நாள் தொட்டு, உங்களை நான் அப்பாக் குட்டி என்று அழைத்துத் திரிகிறேன்.

இத்தனை வயது ஆன போதும், சிறுபிள்ளை போல மகிழ்கிறேன், உங்களை அப்படி அழைக்கும் போதெல்லாம்.

நான் என்ன பிழை செய்தேன்? இப்படி பேசாமல் இருக்க? ஒரு வழிப் பாதை போல, நான் மட்டும் உங்கள் முன்னே அமர்ந்து புலம்பிக் கொண்டிருக்கிறேன், தினமும்!

பதிலுக்கு ஒரு "ம்ம்" கொட்டக் கூட உங்களுக்கு விருப்பம் இல்லை!

அன்று ஒரு நாள் நினைவிருக்கிறதா? நான் நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, தட்டில் சட்னி வைத்தேன், "நீ ஒன்றும் வைக்க வேண்டாம்", என்று சொல்லி விட்டீர்கள்.

நான் பரிமாறும் வார்த்தைகள் தான் கேட்க விருப்பம் இல்லை, உணவு கூடவா?

மகள் கையால் சாப்பிட விரும்புவார்கள் எல்லா அப்பாவும், ஆனால், நான் செய்த பாவமா? நான் பரிமாறினால் உண்ண மறுக்கிறீர்கள்!

ஏன் என்று காரணம் கேட்டால், நீங்கள் பெருமைப்படும் படி நான் நடந்து கொள்ளவில்லை! நீங்கள் ஆசைப்பட்டதை நான் செய்யவில்லை!

என்ன செய்யவில்லை, எல்லாப் பெற்றோரும் ஆசைப்படத்தான் செய்வார்கள், பிள்ளை நன்றாகப் படிக்க வேண்டும் என்று.

நீங்களும் அதைத் தான் கேட்கிறீர்கள். நான் மாட்டேன் என்று சொல்லவில்லையே?

நான் என்ன பரிட்சையில் தோல்வியா அடைந்தேன்? இப்போதும் வகுப்பில் முதல் மாணவியாக தானே இருக்கிறேன்?

ஆனால், நீங்கள் சொல்லும் காரணம், பனிரெண்டாம் வகுப்பில், மாநிலத்தில் முதலாவதாக வரவில்லை. ஆம், வரவில்லை. ஆனால், 90 சதவீதத்திற்கு மேல் வாங்கினேனே?

பள்ளியில் என்னை விட அதிக மதிப்பெண் வாங்கியவர்கள் கூட, கல்லூரியில் இப்போது குறைந்த மதிப்பெண் வாங்குகிறார்கள், நான் நன்றாகத் தானே படிக்கிறேன்? :( :(

செய்தித் தாள், நாளிதழ்களில் பெயர் வரும்படி பெரிதாக சாதித்தால் தான் பேசுவேன் என்கிறீர்கள்! நியாயமா?

"என் அப்பா பேசவில்லை", என்று அழும் நான், தோழிகளுக்கு மத்தியில்  கோமாளியாகி நிற்கிறேன்.

யார் இன்றெல்லாம் கவலைப்படுகிறார்கள், அப்பா, அம்மா பேசவில்லை என்று? ஒரு சிலர், என் போன்ற கோமாளிகள் தான் படுகிறார்கள்!

எனக்கு உங்கள் மீது கொள்ளை பிரியம், உங்களுக்கும் தான், ஆனால், என்னோடு ஏன் பேசுவதில்லை?

மதிப்பெண் வாங்கினால் தான் உங்கள் மகளா? அப்போது தான் பேசுவீர்களா?

எதையுமே எதிர்ப்பார்க்காமல் பெற்றோர் அன்பாய் இருப்பார்கள் என்று சொல்வார்கள், நீங்களும் அன்போடு தான் இருக்கிறீர்கள்.

ஒன்று கேட்டால், நான்கு கிடைக்கும் எனக்கு. ஆனால், பொருள், பணம், இவை தந்திடுமா அன்பாய் நீங்கள் பேசும் அந்த நான்கு வார்த்தை தரும் இன்பத்தை?

நேற்று இரவு கூட அழுதேன், மூன்று மணி வரை அழுதேன், அப்பா பேசவில்லையே என்று.

எத்தனை முறை உங்களிடம் அழுதிருக்கிறேன், பேசுங்கப்பா பேசுங்கப்பா என்று... இத்தனை வருடமாக என்னோடு பேசாமல் இருப்பது நியாயமா?

அழுது கொண்டே இருக்கும் போது, என்னென்னவோ தோன்றும், ஆனால், அதெல்லாம் தவறு, அப்பாவிற்கு நம் மீது பாசம் அதிகம் என்று நினைத்துக் கொள்வேன்.

இந்தக் கடிதம் வாசித்த பின்பாவது பேசுங்களேன்? பேசாவிட்டாலும் என்னால், இருக்க முடியும், தனியாக உங்கள் முன் நின்று புலம்பிக்கொண்டே, எப்போதும் போல.

இரவெல்லாம் அழுது, பகலெல்லாம், சிரித்து சிரித்து, குழந்தை போல உங்கள் முன் நடித்து, இன்பமாக இருக்கக் கற்றுக் கொண்டுவிட்டேன்.

எப்படியாவது உங்களை பேச வைக்க வேண்டும் என்று, என்னென்னவோ செய்து பார்க்கிறேன் நானும், ஆனால், ஒரு நாளிதழிலும் என் பெயர் போட யாரும் முன்வருவதில்லை பாருங்கள்! அதென்ன அத்தனை எளிய காரியமா?

என்றாவது பேசுவீர்கள், என் பெயர் ஏதோ ஒரு நாளிதழில், வரும்போது! அன்று, எனக்கு ஆனந்தமாக இருக்கும் என்று நினைக்காதீர்கள், வேதனையாக இருக்கும், இதற்கா இத்தனை நாள் என்னை வேதனைப்படவைத்தீர்கள் என்று.

உங்களுக்கு நினைவிருக்கிறதா? அன்றொரு நாள், ஒரு கல்யாண வீட்டில், உங்கள் நண்பர் ஒருவரிடம் என்னை அறிமுகப்படுத்த, தூரத்தில் நின்ற என்னை, "சுந்தரி...", என்று பெயர் சொல்லி அழைத்தீர்கள்.

அன்று நான் அம்மாவிடம், அக்காவிடம், அத்தையிடம், மாமாவிடம் என்று எல்லோரிடமும், அப்பா என்னை பெயர் சொல்லி அழைத்தார் என்று சொல்லிச் சொல்லி ஆனந்தப்பட்டேன். எல்லோரும், என்னைப் பார்த்து சிரித்தார்கள்!

அப்படி அழைக்க வேண்டும் என்பதற்காகவே, இப்போதெல்லாம், வெளியே சென்றால், தூரமாக உங்களை விட்டு தள்ளி நின்று கொண்டு, அழைப்பீர்களா அழைப்பீர்களா என்று பார்க்கிறேன்! ஆனால், அழைக்கவே இல்லை அதன் பிறகு :( :'(

நீங்கள் பேசாவிட்டாலும் பரவாயில்லை என்று என்னால் இருக்க முடியவில்லை, பேசாமல் இருந்து கொண்டு, உங்கள் பணத்தில் சோறு சாப்பிட, உடை உடுத்தக் கூட, இதயம் வலிக்கிறது. வேறு எங்காவது சென்று நாமே சம்பாதிப்போமா... வேலைக்குச் செல்வோமா... என்றெல்லாம் யோசித்துக் கொள்கிறேன்.

ஆனால், என்னை தான் வீட்டை விட்டு எங்குமே நீங்கள் அனுப்புவதில்லையே!

நேரில் தான் பேசவில்லை என்று, ஒரே வீட்டுக்குள் இருந்து கொண்டு, அலைபேசியில் குறுஞ்செய்தி கூட அனுப்பிப் பார்த்துவிட்டேன். ஆனால், எதுவும் பயனளிக்கவில்லை, நீங்கள் பதிலளிக்கவில்லை!

இதோ, இதைப் படித்தபிறகும் நீங்கள் பேசப்போவதில்லை, நான் அறிந்த ஒன்று தான் அது. இருந்தாலும் ஒரு ஆனந்தம், எப்போதும் போல, தனியாய் உங்கள் முன் புலம்புவதில்!

=======================================================
என்றும் உங்கள் அன்பு மகள்???
சுந்தரி.3 கருத்துகள்:

 1. உங்கள் எழுத்து உண்மையோ, கற்பனையோ அழகு, எனக்கும் இது போன்ற அனுபவம் உண்டு ஆனால் நான் பள்ளிப் படிப்பில் உங்களுக்கு நேர் எதிர்,

  பதிலளிநீக்கு
 2. நீங்கள் எழுதியிருக்கும் இப்பதிவு, கட்டுரையாக இல்லை,பெருங் கவிதையாக இருக்கிறது.... நீங்கள் அப்டித்தான் நினைத்து தான் எழுதினீர்களா? அழகு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதையா? :) இல்லை, கவிதை என்று நினைத்ததெல்லாம் எழுதவில்லை. என்ன கொடும சரவணன் இது, கவிதை எழுதுன கட்டுரைன்னு சொல்றைங்க, கட்டுரை எழுதுனா கவிதைன்னு சொல்றைங்க. என்னமோ போங்க!

   :) மிக்க நன்றி :)

   நீக்கு