உங்கள் வீட்டிலும், என் வீட்டிலும் அம்மா தான் சமைக்கிறார் இல்லையா? இருக்கலாம், சில வீடுகளில் ஆண்கள் சமைப்பதுண்டு. ஆனால், பெரும்பாலான வீடுகளில் பெண்கள் தான் சமைக்கிறார்கள்.
சிறுவயதில் இருந்தே, என் அம்மா சொல்வார், "பொம்பளப் பிள்ள, சமையல், வீட்டு வேலை எல்லாம் செய்யக் கத்துக்கணும்..."
இது அடிக்கடி என் அம்மா சொல்லும் "டயலாக்". அப்போது எனக்கு கேள்வி கேட்கத் தோன்றியதில்லை! "பெண்கள் தான் இதெல்லாம் செய்ய வேண்டுமா? ஆண்கள் செய்யக் கூடாதா?" என்று.
அந்த வயதில் என் அம்மா சொன்னாரே என்று, வீடு பெருக்குவது, தோசை சுடுவது, இப்படியாக சின்னச் சின்ன வேலைகள் எல்லாம் கற்கத் தொடங்கினேன். வீட்டில் மூன்று அறைகள் எனது தொகுதி. பள்ளியில் சென்று பாடம் படித்துவிட்டு வீட்டிற்கு வந்ததும், தினமும் என் தொகுதியை நான் தான் பெருக்க வேண்டும். மற்ற இரண்டு அறைகளை அம்மா பெருக்கிக் கொள்வார்.
இப்படி எனக்கு விவரம் தெரிந்து, ஐந்தாம் வகுப்பில் இருந்து வீட்டு வேலை சொல்லித் தருகிறார்கள் எனக்கு. வீடு பெருக்குவதில் தொடங்கி, இன்று, பாத்திரம் துலக்குவது, துணி துவைப்பது, என்று வீட்டு வேலைகள் எல்லாமே ஓரளவு சொல்லிக் கொடுத்துவிட்டார் என் அம்மா.
சமையல் செய்வதற்குக் கூட பயிற்சி தருகிறார்கள், இதோ இன்றும் விடுமுறையில் எனக்குத் தனியாக சமையல் பயிற்சி வகுப்பு எடுக்கிறார் என் அம்மா. ஆனால், என் தம்பிக்கு எந்த வேலையும் சொல்லித் தருவதில்லை!!!! :(
சிறு வயதில் தான் விவரம் இல்லை. இப்போது இருபது வயது ஆகப் போகிறது, பெரிய ஆள் ஆகிவிட்டேனே! விவரம் வந்து விட்டது எனக்கு. :)
எப்படி என்கிறீர்களா? என் அம்மாவிடம் கேட்டேன், "ஏம்மா, என்னையே எல்லா வேலையும் செய்ய சொல்றீங்க, இந்த தம்பி இருக்கானே (அவனுக்கு பனிரெண்டு வயதாகிறது) அவன ஏம்மா ஒரு வேலையும் செய்ய சொல்ல மாட்றிங்க? பொண்ணு தான் எல்லா வேலையும் செய்யணுமோ?"
அம்மா சொன்னார், பெண்களால் தான் இந்த வேலைகள் எல்லாம் சிறப்பாய் செய்ய முடியுமாம். பிள்ளைக்கு என்ன தேவை என்று அம்மாவால் தான் எப்போதும் சரியாகப் புரிந்து கொள்ள முடியுமாம். பெண்களால் தான், அம்மாவால் தான் அன்பாகச் சமைக்க முடியுமாம். வீட்டு வேலைகள் எல்லாம் பெண்களின் கடமையாம். இன்று நான் இந்த வேலைகள் எல்லாம் கற்றுக்கொள்ளாவிட்டால், பிற்காலத்தில் அவதிப் பட நேருமாம்!
இப்படி பெண்களால் மட்டும், இந்த வேலைகளை எல்லாம், சிறப்பாக, அழகுணர்வோடு, நுணுக்கமாக எப்படி செய்ய முடிகிறது?
"சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்"
இப்படி சொல்வார்களே, அது தான் காரணமோ? இதோ, என் அம்மா சொல்வது போல், செய்வது போல், இன்னும் எத்தனையோ அம்மாக்கள் சிறு வயது முதலே தங்களது மகளுக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள், பயிற்சி தருகிறார்கள்.
ஒருவேளை, இப்படி பழகுவதால் தான், சிறப்பாகச் செய்கிறார்களோ? பெண்கள்?
சிறப்பாக சமைக்கும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், அவர்களும், மீண்டும் மீண்டும் சமைத்துப் பழகியதால் தான் சிறப்பாகச் செய்கிறார்கள், என்று கூட சொல்லலாம்.
அது சரி, இப்போது, நான் ஏன் சமையல் என்று பேசிக்கொண்டிருக்கிறேன்? காரணம்?
இருக்கிறது, பெண்கள் தான் சமைக்கிறார்கள் சரி, ஆனால், சமைப்பது பெண்களுக்கு மட்டும் தான் தெரியவேண்டும், என்று அவசியம் இல்லையே?
ஆண்களும் கூட சமைக்கக் கற்றுக்கொள்ளலாம். நீங்கள் ஒரு ஆண் என்றால், இந்தக் கேள்வி உங்களுக்கு,
"உங்களுக்கு, சமைக்கத் தெரியுமா? உங்கள் அம்மாவிற்கோ, மனைவிக்கோ, உடல் நிலை சரி இல்லாத போது, நீங்கள் சமைத்ததுண்டா?"
இல்லையா? அப்படி என்றால், நீங்கள் பாவம்! ஆம், உங்களுக்குப் பிடித்தவருக்கு சமைத்துக் கொடுப்பதில் இருக்கும் ஆனந்தம் எவ்வளவு பெரியது தெரியுமா?
இந்தக் கேள்விக்கு பதில் "ஆம்" என்றால், உண்மையில் நீங்கள் அந்த ஆனந்தத்தை உணர்திருக்கக் கூடும். ஆம் தானே?
ஆண்கள் பொதுவாக வெளியே வேலைக்குச் செல்வார்கள், அதனால், வீட்டில் வேலை செய்வது இயலாது. ஆண்களும் வீட்டில் பாதி வேலைகளைப் பார்க்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை.
ஆனால், உங்கள் வீட்டுப் பெண்ணுக்கு உடல் நிலை சரி இல்லாத போது, நீங்கள் வெளியே உணவு வாங்கி வந்து கொடுப்பதைக் காட்டிலும், நீங்களே அன்பாய் சமைத்துக் கொடுத்துப் பாருங்களேன்?
உறுதியாகச் சொல்கிறேன், நீங்கள் இப்படிச் செய்தால், பெண்கள் மீது பொறாமைப் படுவீர்கள்!
ஏன்? அதில் கிடைக்கும் ஆனந்தம், வேறு எதிலும் கிடைக்காது. உங்களுக்குப் பிடித்தவருக்கு, அன்பைக் கலந்து சமைத்துக் கொடுப்பதில் அத்தனை ஆனந்தம் இருக்கிறது!
ஆண்கள் (என் அப்பா, அண்ணா, தம்பி, மாமா, சித்தப்பா, பெரியப்பா இப்படி பெரும்பாலும் இதுவரை நான் பார்த்தவர்கள் எல்லோருமே ஒரு சிலரைத் தவிர) பொதுவாக சமைப்பது, வீட்டு வேலை செய்வது என்றால், ஏதோ, கௌரவக் குறைச்சல் என்று நினைக்கிறார்கள்.
திருமணம் ஆவதற்கு முன்பாக, வெளியூரில் தங்கி படிக்கும் போதோ, வேலை செய்யும் போதோ, சமைத்துச் சாப்பிட்டவர்கள், பெரும்பாலும் அதன் பிறகு சமைப்பதே கௌரவக் குறைச்சல் என்றே நினைக்கிறார்கள்.
ஆனால், என்னைக் கேட்டால், நான் சொல்வேன், அப்படி நினைப்பவர்கள் எல்லோருமே, வாழ்வில் ஒரு பெரும் ஆனந்தமான தருணத்தை இழந்துவிட்டவர்கள்!
பாவம் அவர்கள்.
ஒரு பெண்ணிடம் கேட்டுப் பாருங்கள், தான் வைத்த ரசம், அருமை என்று தன் கணவரோ, அப்பாவோ ஆசையாய் கையில் ஊற்றிக் குடித்தால், அவளுக்கு அப்போது எப்படி இருக்கும் என்று!
நன்றாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என்று கூட இல்லை, ஒரு கை அதிகம் சாப்பிட்டாலே போதும், அது அத்தனை ஆனந்தமாக இருக்கும் அவளுக்கு!
இந்த ஆனந்தத்தை உணர்ந்ததில்லையா? நீங்களும் சமைத்து, இந்த ஆனந்தத்தை உணர்ந்து பாருங்கள்! புரியும்!
என்னடா... சோறு... அதுக்கு இவ்வளவு பெரிய பதிவா, ஆனந்தம், பேரானந்ததம்னு நெனைக்கிறீங்களா?
.jpg)
அதனால் தான் இந்தப் பதிவு, மிக முக்கியமான பதிவு :) :) :)
(குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்தப் பதிவு, நான் சமைக்கக் கற்றுக் கொண்டதன் விழைவு :P :) :D )
Pinitinga madam :)
பதிலளிநீக்குunmai unmai....
enga amma samayal mudichuttu ethirpaakra ore vishayam,
"saapadu epdi irunthuchu nu yaaravathu soningala?"
intha maari chinna china vishyagal periya santhosshatha tharum.
Arumaya soninga, konja varusham kalichu intha pathiva naa padikanum, padiche theerven :D
:) படிங்க படிங்க நல்லா படிங்க :)
நீக்குநன்றி :)
ரொம்ப சரி! பெண்கள் பன்முகத்திறமை கொண்டவர்கள்; அதேபோல ஆண்களும் திறமைகளை வளர்த்துக் கொள்ளட்டுமே! என்ன தப்பு!
பதிலளிநீக்குநல்ல சிந்தனை கண்மணி!
நன்றி மா :)
நீக்கு//"உங்களுக்கு, சமைக்கத் தெரியுமா? உங்கள் அம்மாவிற்கோ, மனைவிக்கோ, உடல் நிலை சரி இல்லாத போது, நீங்கள் சமைத்ததுண்டா?"//
பதிலளிநீக்கு//இல்லையா? அப்படி என்றால், நீங்கள் பாவம்!//
ஆம் என்றால் அதை சாப்பிடுபவர்கள் பாவம் பரவாயில்லையா?
ஏன் இந்த கொலைவெறி Madam????????
:D :D :D
நீக்குஅட, நீங்க சமைக்கத் தெரியாம சமைச்சா தான் அப்படி ஆகும், அதுக்கு தான் கத்துக்கோங்கனு சொல்றேன் :)
நீங்க ஓரளவு சமைச்சாக் கூட, உங்க அம்மா அந்த சாப்பாட "சூப்பர்"னு சொல்வாங்க பாருங்க.
சாமர்த்தியமான கட்டுரை :) உண்மையும் கூட. நானும் வீடு வேலைகள் செய்து பழகியவன் அல்ல. சிறு வயதில் அதை கற்றுக்கொள்ளும் நிர்பந்தத்திற்கு உள்ளாகவும் இல்லை. விடுதிகளில் தங்கி படிக்க, வாடகை வீட்டில் தங்கி வேலை செல்ல நேரிடும் வரை. சமைபது ஒரு கலை, அதை சிறப்பாய் செய்ய தெரிந்தவர்கள் உடன் இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான் :D
பதிலளிநீக்குஇப்பொழுதெல்லாம்,
அன்னை தங்கை தோழிகளிடம் இடம்
சமையல் குறிப்புகள் வாங்கி வைத்து
தொலைபேசியில் தொல்லையாய் பேசி
திட்டும் கொட்டும் வாங்கி
சமைய்ப்பதை ரசிக்க துடங்கி விட்டேன் :)
பெண்களும் வேலைக்கு செல்ல வேண்டும் என எதிர்பார்க்க துடங்கிவிட்ட இந்த கால கட்டத்தில் ஆண்களும் சமைக்க தெரிந்துக்கொள்வதில் தவறு இல்லை (சமையத்தில் கை கொடுக்கும்). நம்மை நேசிப்பவர்களுக்காக எதையும் கற்றுவைத்துக்கொள்ளலாம்.
அப்போ, நீங்க "நல்லா" சமைக்கக் கத்துக்கப் போறீங்க...
நீக்குஎன்னோட வாழ்த்துக்கள், உங்கள் சமையல் பயிற்சி சிறப்பா அமைய!
கருத்துரைக்கு நன்றி :)
மெல்லிய நகைச்சுவையோடு எழுதுவது கடினம். வாழ்வை இயல்பாக அனுபவிக்கும் மனோநிலையில் இருப்பவர்களுக்குத்தான் அது கைகூடும். உங்களுக்கு அது இயல்பாக எழுத்து நடையில் வருகின்றது. நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஜோதிஜி திருப்பூர்
:) உண்மையாகவா? மிக்க நன்றி ஜோதிஜி!
நீக்குநானும், கொஞ்சம் கொஞ்சம் செய்வேன், எல்லாம் அம்மா சொல்லி கொடுத்தது. நன்றாக எழுதுகிறீர்கள் சகோ
பதிலளிநீக்கும்ம் நிறைய செய்ய கற்றுக்கொள்ளுங்கள்! :)
பதிலளிநீக்குநன்றி!
எனக்கு சமைக்க தெரிந்தாலும் என் அம்மா என்னை அடுப்படிக்குள் விடுவதில்லை.. ஆண் பிள்ளைகளை வீட்டு வேலையே செய்யாமல் கெடுப்பது அம்மாக்கள் தான்.. சென்னையின் தனிமை எனக்கு சமைக்க கற்றுக்கொடுத்தது.. இப்போதும் வீட்டில் சின்ன சின்ன சமையல் வேலைகள் நான் செய்தாலும் கத்தி கூப்பாடு போட்டு என்னை அடுப்படியில் இருந்து முதலில் வெளியில் அனுப்பி விடுவார்.. யோசித்து பார்த்ததில் அது அவரது சாம்ராஜ்யம், நான் உள்ளே நுழைவது அவருக்கு பிடிக்கவில்லை என தெரிந்தது.. இப்போது நானும் ஒதுங்கிக்கொண்டேன்.. ஒரே பயம் என்னவென்றால் இன்னும் சில வருடத்தில் அவரது சாம்ராஜ்யத்தை பங்கு போட இன்னொருவர் வந்தால் என்ன ஆகும் என்கிற பயம் தான் இப்போது அதிக வருத்தமளிக்கிறது.. பார்க்கலாம்..
பதிலளிநீக்குநல்ல பயம் தான், அது தான் சண்டை வருகிறது போலும் நிறைய குடும்பகளில். பயப்படாதீர்கள் அந்த சண்டைகள், ஈகோ எல்லாம் நல்லவை தான். அன்புச் சண்டைகள் :)
பதிலளிநீக்கு