முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பண்டிகைகள் இருந்து என்ன பயன்???

இதோ பொங்கல் வருகிறது, பொங்கல் கொண்டாடவே விருப்பம் கொஞ்சம் குறைந்து விட்டது, கொஞ்சம் என்ன கொஞ்சம்? நிறையவே குறைந்துவிட்டது!

புத்தாடை அணிந்து, அம்மா வைத்த பொங்கலை ஒரு கிண்ணத்தில் போட்டு, ஆசையாய் எடுத்துப் போனாலும், அதை வாங்கப் போவதில்லை, பக்கத்து வீட்டு அக்கா! காரணம் அவர் வேறு மதமாம்!

எதிர் வீட்டு அக்கா வாங்கிக் கொள்வார், காரணம் அவர் என் சாதி தானாம்!
ஆனால், பக்கத்து வீட்டு அண்ணா வாங்குவார், சாப்பிடமாட்டார், என்னிடம் வாங்கி, அவர் வீட்டின் பின்பக்கம் இருக்கும் குப்பைத் தொட்டிக்கும், நாய்க் குட்டிக்கும் பங்கு வைத்துக் கொடுப்பார்! அவர் வேறு வகுப்பாம்!

வீட்டில் தான் இந்தக் கொடுமை, கல்லூரியில் எல்லோரும் என் நட்பு தானே? கொண்டாடுவோம் என்றால், அதுவும் நடக்காது.

கல்லூரி விடுதியில் வைத்த பொங்கலை எல்லோரும் உண்டார்கள், உண்டோம், ஒரு சிலரைத் தவிர, ஒரு சில தோழிகளைத் தவிர!

ஏன் உண்ணவில்லை அவர்கள்? வேறு மதமாம் அவர்கள்!

சாத்தான் பிடிக்குமோ அன்பாய் ஒருவர் கொடுக்கும் உணவை உண்டால்? அன்பு! அன்பு என்று பேசுபவர்கள் தான் இவர்களும், ஆனாலும், நான் கொடுக்கும், என் அன்பு நிறைந்த பொங்கல், அதைத் தீண்டவும் மாட்டார்கள்!

பொங்கலைப் பிடித்ததை விட, அவர்களது "மதம்" பிடிக்கும் போலும் அவர்களுக்கு!

நான் உண்கிறேன், ஒவ்வொரு முறையும், கிறிஸ்துமஸ் என்றும், ரமலான் என்றும் எல்லோர் கொடுக்கும் அன்பையும், உணவுகளை அல்ல, அன்பை! ஆம், அப்படித்தான் நினைத்துக் கொள்வேன் நான்.

 ஆனால், என் அன்பை இவர்கள் ஏற்க மறுப்பது ஏன்?

"கல்லூரியில் பள்ளிகளில் சமத்துவப் பொங்கல்!", செய்தியில் சொன்னார்கள்.
வேதனையாக இருந்தது எனக்கு மட்டும், என் கல்லூரியில் தான் பொங்கலை விட மதம் பிடித்தவர்கள் அதிகமோ என்று! :( :(

ஆனால், எல்லோரையும் குறை சொல்லவும் இயலாது, என் தோழிகள் சிலர் இருக்கிறார்கள், என் போல, பொங்கல் பிடிக்கும் அவர்களுக்கு, மதம் அல்ல!

பண்டிகைகள் இருந்து என்ன பயன்? 
பாசத்தை மதிக்காதவர்கள் மத்தியில்,
பண்டிகைகள் இருந்து என்ன பயன்?
அன்பை விட,
மதம் விரும்புபவர்கள்
மத்தியிலே, இங்கு,
பண்டிகைகள் இருந்து என்ன பயன்?
அன்பு இல்லாத இவர்களுக்கு,
பண்டிகைகள் இருந்து என்ன பயன்?
பிரிந்து கிடக்கும் இவர்களிடையே,
பண்டிகைகள் இருந்து என்ன பயன்?
இணைய மறுக்கும் இவர்களிடையே,
பண்டிகைகள் இருந்து என்ன பயன்!!!???

அன்பை மட்டுமே மதிக்கும், விரும்பும், அனைவருக்கும், கண்மணியின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

கருத்துகள்

  1. உண்மை தான்.. மத வேறுபாடு பார்ப்பவர்களும் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தான்.. நாம் எப்போது எது கொடுத்தாலும் அவர்கள் “சாமி முன்னாடி வைத்ததா?”, “பூஜை பண்ணியதா?” என்று தான் கேட்பார்கள். நீங்கள் சொன்னது உண்மை தான், ‘சாத்தான் பிடித்துவிடும்’ என்று தான் என் கிறிஸ்தவ நண்பன் சொன்னான். ஆனால் அவனுக்கு இதுவரை எந்த சாத்தானும் பிடித்ததில்லை எங்கள் வீட்டு தீபாவளி பலகாரம் தின்று (வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாமல் போவது எல்லாம் சாத்தான் வகையில் சேராது). ஆனால் பாய் வீட்டு ஆட்கள் எல்லாம் இந்த விசயத்தில் தங்கம். நாம் கொடுக்கும் பலகாரங்களையும் உண்பர், நமக்கும் அவர்கள் பண்டிகையின் போது பிரியாணி கொடுப்பர் எக்ஸ்ட்ரா சிக்கன் பீஸோடு.. கிறிஸ்தவர்கள் கொஞ்சம் மத ஒற்றுமையை வளர்த்துக்கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும்.. அப்படி வளர்த்துக்கொள்ளவில்லையென்றாலும் நமக்கு கவலையில்லை. நாம் நன்றாக சந்தோஷமாக கொண்டாடுவோம். இனிய பொங்கல் வாழ்த்துக்கள் கண்மணி :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய பிரியாணி சாப்பிட்டிருப்பீர்கள் போல! :) பொங்கல் நல்வாழ்த்துக்கள் :)

      நீக்கு
    2. ஹா ஹா நேற்று கூட ஒரு பாய் வீட்டு விசேஷத்தில் பிரியாணி சாப்பிட்டு விட்டு தான் வீட்டுக்கு புறப்பட்டேன்.. அது ஒரு தனி ருசி.. அவர்கள் போல் யாராலும் பிரியாணி செய்ய முடியாது :-D

      நீக்கு
  2. பொங்கல் திருநாளில் ஒரு நல்ல கருத்தை சொல்லியிருக்கிறாய், கண்மணி.

    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மா, இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  3. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா1/14/2013 9:29 PM

    Iniya pongal valzthukkal Kanmani :-) New year wishes too :-) May this year takes you to great heights. Nam ullam eppadiyo appadiyae kangal ulagatha paarkkum. Manasa santhosama paarthuko mathathu thaana nadakkum :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள், புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)

      நீக்கு
  5. எங்க பக்கத்துக்கு வீட்டுகாரங்க இப்டிதான், என்ன பிறவிகளோ? அன்பை பற்றி பேசுவார்கள் ஆனால் ... இவர்களைத்தான் " குரைக்கிற நாய் கடிக்காது" என்பார்களோ ?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே ...

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?...

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே, உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து! எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்! சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே? இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா ”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது! இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான் , என்ன மாதிரி ரேனு இல்ல போ....