சனி, பிப்ரவரி 16, 2013

பாவமடி நான்!


உண்மையில் எனக்குத் தெரியாது!
புத்தகம் படிக்கத் தெரிந்த அளவு,
பிறரது புத்தியைப் படிக்க!

கடினம் தான் எனக்கு,
கணிதம் போடுவதோடு சேர்த்து,
கொஞ்சம் ஞாபகம் கொள்வதும்!

எல்லோரும் கேலி செய்தீர்கள்,
கேலி என்ன கேலி?
கோபமே கொண்டீர்கள்!
உண்மை தான்,
பாடப் புத்தகத்தில் வரும்,
வைரஸ்கிருமியின்
பெயர்களை நினைவில்
பதிய வைத்துக் கொண்டேன்!

ஏனோ, மனிதரின் பெயர்கள்,
மனதில் பதியவே மறுக்கிறது,
அடிக்கடி மறக்கிறது!

பெயர் தான் மறந்ததே தவிர,
பாசம் மறப்பதில்லை!
பிரிவும் பிடிப்பதில்லை!


அதோ, அன்றொரு நாள்,
எனக்கு தேநீர் வாங்கித் தந்தாயே,
நீயும் நானும் ஒரே சாலையில்,
நடந்து போனோமே?

பனிக்கூழ் வாங்கக் கூடாது,
பாட வேண்டும் நான்,
மறுவாரம்,
பாட்டுப் போட்டி எனக்கு,
பாசமாய் சொல்வாயே,
பனிக்கூழ் சாப்பிடாதே என்று!

"படம் வரஞ்சு தா பிரியா"
நான் கேட்க,
எனக்காக படம்,
அழகான படம் 
வரைந்து நீ தர,

 அதை வாங்கி,
அழகாய் பையில் 
போட்டுக் கொண்டேனே?
தீபாவளி வாழ்த்துச் சொல்லி?

அதில் "கண்ணு",
நீ எழுதிய வார்த்தையில் இருந்த,
நிகரில்லா அன்பு,
மறக்கவில்லையடி எனக்கு!

எல்லாமே எனக்கு மறந்து போகும்,
நினைவு படுத்த நீ இருக்க,
மறந்தாலும் வருந்தவில்லை இதுவரை!

உண்மை தான்,
சுயநலக் காரியோ நான்?
எதுவுமே உனக்காக செய்ததாக,
நினைவிருக்கவில்லை எனக்கு!

உண்மை தான்,
பாசம் தெரியாதவளோ நான்?
பாவம் என்னை நேசிக்கும்,
உன் போன்ற தோழிகள் எல்லாம்!

உண்மை தான்,
நாடகக் காரியோ நான்?
ஞாபக மறதி எனக்கு,
பாடம் தவிர மற்ற விசயங்களில் எல்லாம்!

அய்யோ! இதுவரை மறந்தால்,
நீ இருந்தாய் அருகில்,
நினைவூட்டி வழிநடத்த,
நீ கோபம் கொண்ட பிறகு,
அட, யார் இருப்பார் நினைவூட்ட?

பேசாமல் போகாதேடி,
பாவம் உந்தன் கண்ணுமணி!
பிரியா, பேசாமல் போகாதேடி,
பாவம் நான் உன் செல்லமடி!

இனி இப்படிச் செய்யமாட்டேன்,
மன்னிப்புக் கேட்க மாட்டேன்,
கண்ணீர் வந்தாலும்,
தோழி பேசவில்லையே,
கண்ணீரோடு ஏக்கம் நிறைந்தாலும்,
மன்னிப்புக் கேட்க மாட்டேன்!

பெருமிதக் காரியோ நான்?
பொய்சொல்லியோ நான்?
எப்படி இருந்தாலும் இருக்கட்டும்!
ஏற்றுக் கொள்வேன் எல்லாம்!

ஆனால், பேசாமல் போகாதேடி,
பாவம் உந்தன் கண்மணி!
என் தோழி, பேசாமல் போகாதேடி,
சோகம் என்னை சூழுமடி!

சுயநலம் இருக்கலாம்,
ஜோடிப்பு இருக்கலாம்,
துரோகம் கூட இருக்கலாம்!

என்ன தான் இருந்தாலும்,
உரிமை உள்ளது எனக்கு,
உன்னிடம் உரிமை உள்ளது எனக்கு,
பேசிவிடு, பாவமடி நான்!
:'(  :'( 

14 கருத்துகள்:

 1. semma touching Kannu :)
  Hope you and your friend will sort out the issues soon :) Wish you a happy life :)

  பதிலளிநீக்கு
 2. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. பெயரிலேயே பிரியம் கொண்டவர்
  பிரியாவிடை எப்படி பெறுவார்?

  பிரிவு விரைவில் பிரியும்
  உங்களை விட்டு...

  பிரியம் கை கூடட்டும்
  பிரிவை விட்டு ....

  ஓ ... சிறந்த பேச்சாளி , கவிஞர், எழுத்தாளர், படிப்பில் முதல் மாணவி என்று தெரியும், பாடகி கூடவா? வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம் பாடுவேன் கொஞ்சம். என் வலைப்பூவில் கூட ஒரு சில பாடல்கள் இருக்கின்றன, கேட்டுப் பாருங்களேன்?

   நாங்கள் சேர்ந்துவிட்டோம், நன்றி :)

   நீக்கு
 4. பெருமிதக் காரியோ நான்?
  போயசொல்லோயோ நான்?

  இதில் ஏதோ நெருடல் தெரிகிறதே , கவனிக்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) ஆம், தட்டச்சுப் பிழை! பொய் சொல்லியோ நான், அது தவறாக பதிந்து இருக்கிறது. சரி செய்துவிட்டேன். நன்றி :)

   நீக்கு
  2. செழியனுக்கு ஆசிரியர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளன :-)

   நீக்கு
  3. ஆமா! சரியா சொன்னிங்க. கடுமையான ஆசிரியர்! :) :)

   நீக்கு
 5. சோகத்தை கூட அந்தக்கால கவிஞர் போல், இந்தக்கால சினிமாக்காரகள் போல் கவிதை பாடி வெளிப்படுத்துகிறீர்கள்.. நல்ல கவிதை.. எந்த நல்ல நட்பும் சண்டையால் பிரிந்ததில்லை.. சீக்கிரம் உங்கள் தோழி உங்களிடம் பேசுவார், புது உத்வேகத்துடன், அதிகமான அன்புடன்.. வாழ்த்துக்கள் :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) சமாதானம் ஆகிவிட்டோம் நாங்கள்! :) நன்றி :)

   நீக்கு
 6. தோழியின் கோவம் எவ்வளவு தூரம் உன்னை பாதித்திருக்கிறது என்று உன் வரிகளில் தெரிகிறது கண்மணி!
  பிரியா! எங்கள் கண்மணி நீங்கள் பேசாததால் மிகவும் தவிக்கிறாள், சீக்கிரம் பேசிவிடுங்கள்!

  இன்னும் கொஞ்சநாள் பேசாமல் இருந்தால் எங்களுக்கு இதைப் போன்று இன்னொரு அற்புதமான கவிதை கிடைக்கும் ஆனாலும் கண்மணி பாவம், உங்கள் செல்லம் அதனால் உடனே பேசுங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) நன்றி மா, பிரியா சமாதானம் ஆகியாச்சு! :) நன்றி :)

   நீக்கு