முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அப்பாவுக்குத் தெரியாதா? # 1


அப்பாவுக்கு எல்லாமே தெரியும், அப்பா தான் உலகத்திலேயே பெரிய ஆள். அப்பாவுக்கு நாம் மட்டும் தான் செல்லமாக இருக்க வேண்டும். வேறு யாரும் ஊடே வரக்கூடாது…”

இப்படி எல்லாம் தான் நினைத்துக் கொண்டு இருந்தேன் சிறுவயதில். பிறகு என்ன ஆனதோ, ஏது ஆனதோ தெரியவில்லை. கொஞ்சம் பெரியவள் ஆனதும், ஒரு பனிரெண்டு, பதினான்கு வயது இருக்கும் போதெல்லாம் அப்பா மீது ஏனோ கோவம் கொஞ்சம்.

பள்ளியில் ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததெல்லாம் சரி என்று நம்ப முடிந்த எனக்கு, அப்பாவின் கருத்தை எல்லாம் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

அப்பாவுக்கு கொஞ்சம் தெரியல, நமக்கு கூட தெரியுது அதெல்லாம்... இப்படி யோசிக்கத் தொடங்கி இருந்தேன்.

ஆனால் என்ன தான் நினைத்திருந்தாலும், நடந்திருந்தாலும், இப்போது நினைத்துப் பார்க்கையில் "அப்பாவுக்கு எல்லாம் சரியா தெரிஞ்சிருக்கே", என்றே தோன்றுகிறது.

அது எப்படி? அப்பாவுக்கு எல்லாம் எப்படித் தெரிகிறது? சொல்கிறேன் கேளுங்கள்!

சிறுவயதில் இருந்தே, எல்லா விஷயத்திலும் நான் அப்பாவின் பெண் தான், அதாவது என்ன ஆனாலும் சரி, அப்பா என்ன சொல்கிறாரோ அது தான் நடக்கும் எனக்கு.

ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன் நான், சைக்கிள் ஓட்ட ஒரு வருடம் சிரமப்பட்டு கற்று முடித்து இருந்தேன்.

என் தோழிகள் பலரும் பள்ளிக்கு சைக்கிளில் வந்தார்கள் அப்போது. எனக்கும் ஒரே ஆசை, எப்படியாவது சைக்கிளில் நாமும் போக வேண்டும் என்று. என் சைக்கிள் வேறு அத்தனை அழகாக இருக்கும், பி.எஸ்.ஏ. டயானா - அந்த வகை வந்த புதிதில் வாங்கியது. அடிப்படையில் சொல்லப் போனால், நான் ஒரு பெருமை பீத்து காரி. ஏதாவது புதிதாக வாங்கி இருக்கிறேன், புதிதாக செய்திருக்கிறேன் என்றால், நாலு பேரிடம் அதைக் காட்ட வேண்டும், காட்டி பீத்திக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் என்னவோ, நன்றாகவே இருக்காது. பாராட்டும் கைதட்டலும் எப்போதுமே எனக்கு முக்கியமாக இருந்து வருகிறது!

இப்போதும் அப்படித் தான் இருக்கிறேனா என்று தெரியவில்லை (சில நேரம் அப்படித் தான், என்ன தான் இருந்தாலும் அப்டி ஒத்துக்க மனம் வரல பாருங்க)

சரி, அது வேறு கதை, நமது முக்கியக் கதைக்கு வருவோம். சைக்கிள் ஆசையை அப்பாவிடம் சொன்னேன், "அப்பா அப்பா நானும் சைக்கிள்ள ஸ்கூலுக்கு போறேன்பா...", இப்படிக் கேட்ட எனக்கு அப்பா சொன்ன பதில், "வேண்டாம், உனக்கு வெவரம் பத்தாது...". முடியாது என்றதும், அழுது உருண்டு பெரண்டு, நான் உண்ணா விரதம் இருந்து, தோற்றுப் போனதெல்லாம் வேறு கதை.

எனக்கு ஒரே வருத்தம். ஆனாலும், ஒரு நாள் எப்படியாவது பள்ளிக்கு சைக்கிளில் சென்று விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

அதே போல ஒரு நாள், மார்கழி மாதம், எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. எங்கள் காலனியில் மார்கழி மாதம் தினமும் காலையில் பிள்ளையார் கோவிலில் பூஜை வைப்பார்கள், பஜனை பாடுவார்கள், நான் என் அப்பாவோடு அதிகாலையிலேயே செல்வேன், பஜனை பாடுவேன்.

அன்று குழந்தைகள் தினம், பள்ளியில் கொடி ஏற்ற வர சொல்லி இருந்தார்கள் என்னை (எல்லோரையும் தான்) அன்று எங்கள் பள்ளியில் ஒரு போட்டி வைப்பார்கள், வகுப்பறையை அழகு படுத்த வேண்டும், வகுப்பில் ஆசிரியர் மாணவர் என எல்லோரும் சேர்ந்து. எந்த வகுப்பு மிகவும் அழகாக இருக்கிறதோ அந்த வகுப்பிற்கு பரிசாக ஒரு கலர் கொடி கொடுப்பார்கள், அதை வகுப்பில் பெருமையாக வைத்துக் கொள்வோம் நாங்கள்.

BSA DIANA
அன்று கோயிலில் நான் பஜனை எல்லாம் முடித்துவிட்டு, வாங்கப்பா வீட்டுக்குப் போலாம், அப்பாவை அழைக்க, அப்பாவோ அங்கு வந்திருந்த பெரியவர்களோடு பேசிக் கொண்டு இருந்தார்.

சரி நீ வீட்டுக்குப் போ, நான் வரேன், இப்படி அப்பா சொன்னதும், எனக்கு ஸ்கூலுக்கு லேட் ஆகிரும், சீக்கிரம் வாங்க, என்றேன் நான். அப்பா, நீ போய் ரெடி ஆகு நான் வரேன், என்று என்னை வீட்டிற்கு அனுப்பிவைத்தார்.

வீட்டிற்கு வந்த எனக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, இன்று நாம் சைக்கிளில் போனால் என்ன, என்று யோசித்து, இறுதியாக அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டேன், மா, அப்பா வர லேட் ஆகுமாம், என்ன பத்மஜா கூட போக சொல்லிடாங்க, சைக்கிள்ல மெதுவா பாத்து..., இப்படி அம்மாவிடம் சொல்ல, அம்மாவும் சரி பாத்து போயிட்டு வா என்று சொல்ல, இரண்டு பொம்மைகளை எடுத்து என் சைக்கிளில் முன்னே இருக்கும் கூடையில் போட்டேன் (வகுப்பை அழகு படுத்த நாங்கள் நிறைய பொம்மைகளை அடுக்கி வைப்போம் கொலு போல, அதற்காக அந்த பொம்மைகள்)

(பத்மஜா - என் வகுப்புத் தோழி, பக்கத்து தெருவில் இருந்தாள், எப்போதும் பள்ளிக்கு சைக்கிளில் செல்பவள்)

அப்பா வருவதற்குள் வேகமாக சைக்கிளை தூக்கிக் கொண்டு (ஓட்டிக் கொண்டு தான், தூக்கும் அளவிற்கு நமக்கு தெம்பு கிடையாது) ஓடிவிட்டேன் :P :D ஏதோ சுதந்திரம் கிடைத்தது போல ஒரு உணர்ச்சி.

தோழியோடு சேர்ந்து பள்ளிக்குச் சென்று சேர்ந்துவிட்டேன்.
பத்திரமாக தான், ஆனாலும் உண்மையில் ஏதோ தீ மேல் நடப்பது போல தான் இருந்தது அந்த சைக்கிள் பயணம். உண்மையில் எனக்கு நன்றாக சைக்கிள் ஓட்டத் தெரியவில்லை என்று புரிந்து கொண்டேன்.

இப்போது, பள்ளியில் கொடி எல்லாம் ஏற்றி முடித்துவிட்டாயிற்று, வீட்டிற்கு கிளம்ப வேண்டும்.

எனக்கு அழுகை அழுகையாக வந்துவிட்டது. காலையில் நான் சீக்கிரமே பள்ளிக்கு வந்துவிட்டேன், ரோட்டில் கூட்டமே இல்லை, அந்த குறைந்த கூட்டத்திலேயே எனக்கு ஓட்ட அத்தனை பயமாக இருந்தது. இப்போது மதியம் ஆகி இருந்தது, கூட்டம் நிறைய இருக்கும்! எப்படி அந்தக் கூட்டத்தில் நான் சைக்கிள் ஓட்டிக் கொண்டு வீடு செல்வது என்று நினைத்தாலே அத்தனை பயமாக இருந்தது.

மெதுவாக சைக்கிளை உருட்டிக் கொண்டே பள்ளிக்கு வெளியே வந்தேன், கூட்டம், ஒரே கூட்டம்! பயந்துவிட்டேன், உறுதியாக அந்தக் கூட்டத்தில் என்னால் ஓட்ட முடியாது! என் தோழியோ, ஏ வா போலாம், என்று சட்டென்று ஏறி உக்காந்து முன்னே செல்லத் தொடங்கிவிட்டாள். எனக்கு அவள் அளவுக்கு ஓட்ட தெரியாதே!

ஏறவா வேண்டாமா என்று முழித்துக் கொண்டு நின்றுகொண்டிருந்தபோது, அந்த அற்புதம் நிகழ்ந்தது, என் அப்பா, என் அப்பா பள்ளிக்கு உள்ளே இருந்து வெளியே வந்தார். காலையிலேயே என்னைத் தேடி வந்திருக்கிறார்.

எனக்கு ஒரே ஆனந்தம், ஆனாலும் ஒரு பக்கம் வருத்தம், பொய் சொல்லிவிட்டு அல்லவா வந்தேன் நான்.

என் அப்பாவிற்கு தெரிந்திருக்கிறது, என்னால் கூட்டத்தில் ஓட்ட முடியாது, ஏங்கே பயந்து எங்கும் விழுந்துவிடுவேனோ என்று என்னைத் தேடி பள்ளிக்கே வந்துவிட்டார்.

Dad and daughter
அப்பா திட்டுவாரோ என்று நினைத்துக் கொண்டு இருந்தேன், அப்பா வந்தார் என் அருகே, என்ன நிக்கிற? போ... ஏறு முன்னாடி போ.., புன்னகையோடு அவர் சொன்னது இன்றும் என் கண்ணில் தெரிகிறது, எனக்கு எப்போதும் தன்னம்பிக்கை தரும் ஒரு பார்வை அப்பாவிற்கு உண்டு! இப்படி சொன்னதும், எங்கிருந்து எனக்கு தைரியம் வந்ததோ, ஏறி உட்கார்ந்து ஆனந்தமாக அந்தக் கூட்டத்தில் ஓட்டி வீடு வரை வந்துவிட்டேன்.

எனக்கு மனதில் பெரிய தைரியம், நமக்குப் பின்னே அப்பா வருகிறார், நாம் கீழே விழுந்தால் கூட நம்மை தூக்கிவிடுவார், நம்மை பார்த்துக் கொண்டு பின்னே அப்பா வருகிறார் அந்த தைரியம் தான் என்னை அந்தக் கூட்டத்தில் பயமில்லாமல் ஓட்ட வைத்தது.

இதோ, அப்பாவிற்கு எப்படி தெரிந்தது? நான் பயத்தில் பள்ளி வாசலில் நின்று கொண்டு இருப்பேன் என்று???

உண்மை, அப்பாவுக்குத் தெரியாதது ஏதாவது உண்டா?

இதே போல பத்தாம் வகுப்பிலும் ஒரு சைக்கிள் கதை. அது
தொடரும் அடுத்த பதிவில்.

(ஒரு பதிவு தான் எழுதனும்னு நெனச்சேன், அப்பாவ பத்தி பேச ஆரம்பிச்சா ரொம்ப லென்தா போகுது)

கருத்துகள்

  1. அற்புதம் கண்மணி...

    பதிலளிநீக்கு
  2. மிக மிக அருமை.. பள்ளி வாசலில் அப்பா காத்திருக்கும் தருணம் எனக்கும் மிக மிக அவசியமான நேரங்களில் இரண்டு மூன்று முறை நடந்திருக்கிறது.. நம் வாழ்வின் முதல் ஹீரோ, முதல் ரோல் மாடல் என் அப்பா தான்.. சின்ன வயதில் சினிமாவில் ஹீரோ அடி வாங்கினால் நான் என் நண்பர்களிடம் இப்படி சொல்லுவேன், “என்னடா இவன் இப்படி அடிவாங்கிக்கிட்டு இருக்கியான்? எங்கப்பாவா இருந்தா இந்நியாரம் தூக்கி போட்டு மிதிச்சிருப்பார் எல்லாரையும்” என்று.. ஆண்களை விட பெண்களுக்கு அப்பாவின் மீது ஒட்டுதல் அதிகமாக இருக்கும்.. மிக அழகான பதிவு.. வாழ்த்துக்கள்..
    //அப்பாவ பத்தி பேச ஆரம்பிச்சா ரொம்ப லென்தா போகுது// குடும்பம் என்றுமே அப்படித்தான்.. நம்மை வளர்த்த விதம் நன்றாக இருந்தால் எப்போதுமே குடும்பத்தின் மீது ஈடுபாடு அதிகமாகத்தான் இருக்கும்.. இன்றும் நான் குடும்பத்தை சுற்றியே கதைகள் எழுதிக்கொண்டு இருப்பதற்கு என் குடும்பமும் சிறு வயதில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களும் தான் காரணம்.. சிறு வயது அனுபவங்கள் தான் நம் எண்ணங்களில் என்றும் வற்றாத ஜீவ நதியாய் இருக்கும்.. :-) அந்த நினைவுகளை மீட்டு எடுத்ததற்கு நன்றி :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இந்த மாதிரி கதை எல்லாம் என் வகுப்பில் தோழிகளிடம் மறுபடி மறுபடி சொல்லி திட்டு வாங்கியதுண்டு, உண்மை, சிறுவயது நினைவுகள் அத்தனை இனிமையானவை.

      நன்றி :)

      நீக்கு
    2. அதான் ப்ளாக் இருக்கே? இங்க மறுபடி மறுபடி சொல்லுங்க.. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.. நீ..................ளமா கருத்து கூட போடுவாங்க.. ;-)

      நீக்கு
    3. :) ம்ம் சொல்றேன். நீ...........ளமா கருத்து போடட்டும்!

      நீக்கு
  3. எனக்கு சின்ன வயசுல மஞ்சள் காமாலை வந்தப்போ, உடம்பெல்லாம் பயங்கர வலி, செத்து போயிடுவோமோனு பயம் வந்துருச்சு ஓ..னு அழுகை.
    அம்மா அண்ணனை அனுப்பி அப்பாவ கூட்டி வந்து அவர் மடியில படுத்ததுக்கு அப்புறம் தான் தைரியமா தூங்கனேன்.
    "அப்பாவ தாண்டி எமன் வந்துருவானா?"னு தைரியம்...
    அப்பானா அப்பா தான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) அப்பாவத் தாண்டி எமன் வர முடியாது தான் :)

      நீக்கு
  4. பெண் குழந்தைகளுக்கு அப்பாதான் ரோல் மாடல் என்பதுடன் அப்பாக்களுக்கு பெண் குழந்தைகளுடனான ஒட்டுதல் அதிகம் தான்...தொடருங்கள்....





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி :) ஆனால், எனக்கு அம்மாவையும் நிறைய பிடிக்கும். அப்பாவோடு சிறுவயதில் நெருக்கம், ஆனால் இப்போது அம்மாவிடம் தான் எல்லாம் பகிர்ந்து கொள்வது.

      நீக்கு
  5. இனிய நினைவுகள்... எனது நினைவுகளையும் மீட்டியது...

    எனது உள்ளுணர்வு சரியாக கணித்ததை... என் பொண்ணு மூலம் உணர்ந்து நானே வியந்ததும் உண்டு...

    வழக்கமாக ஆண் குழந்தைகளுக்கு அம்மா பிடிக்கும்... அதே போல் பெண் குழந்தைகளுக்கு அப்பா பிடிக்கும்... ஆனால், எனக்கு இருவரையும் பிடிக்கும்... இதை நான் உணர்ந்தது எப்போது தெரியுமா...? எனது பெண்ணிடம்...

    இன்றைக்கும் கூட வீட்டிற்கு வருபவர்கள் யார் கேட்டாலும் (உனக்கு யார் பிடிக்கும்...? அப்பாவா...? அம்மாவா...?) அவர்களின் ஒரே பதில் "இரண்டு பேருமே..."!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால், என்னை சிறுவயதில் கேட்ட போதெல்லாம் "அப்பா" என்று சொல்லி தான் ஞாபகம். இப்போது தான் அம்மாவோடு ஒட்டுதல் அதிகம். இப்போது அப்பாவிடம் சற்று தூரம் தான்.

      கருத்துரைக்கு நன்றி... :)

      நீக்கு
  6. எனக்குக் கூட எங்க அப்பாவைத்தான் ரொம்பப் பிடிக்கும். உன்னுடைய இந்தப் பதிவைப் படித்தபின் எனக்கும் என்னோட அன்பான அப்பாவின் நினைவு வந்தது.

    ஒரு விஷயம்: குழந்தைகள் கிட்ட அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா என்ற கேள்வியே தப்பு.
    குழந்தைகள் வளர்ப்பில் இருவரும் சம பங்கு வகிக்க வேண்டும்; வகிக்கிறார்கள்.

    திண்டுக்கல் அண்ணாச்சி குழந்தைகளை நன்றாக வளர்த்திருக்கிறார். பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  7. அற்புதமான பதிவு...

    எனக்கு இப்பொழுதும் அப்பாவுடனான ஒட்டுதல் அதிகம்தான் :) எல்லாவற்றிலும் நமக்காக பார்த்து பார்த்து செய்றதுனால அப்பானா அப்பாதான் :)

    பதிலளிநீக்கு
  8. அருமையான பதிவு...

    அப்பாவுடனான ஒட்டுதல் இப்பொழுதும் எனக்கு அதிகம்தான் ... உங்கள் பகிர்வை பார்த்தவுடன் சிறு வயது நினைவுகள் மீண்டு வருகிறது :)

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா4/01/2013 3:29 AM

    அற்புதமான பதிவு கண்மணி!

    நமது வாழ்வில் நடந்த சுவாரசியங்களை சுவாரசியமாக சொல்ல தெரிந்தால் அந்த பதிவில் இருக்கும் உயிர், கற்பனை கதைகளில் கிடைக்காது. கற்பனை கதைகள் உயிராக தெரிவதும் நமது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை அது நினைவு கூறும் பொழுதுதான்.

    என்னவோ தெரியவில்லை இதுவரை கண்மணியின் விரல்கள் இட்ட எழுத்துகளில் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். என் தந்தை மீது உள்ள பற்று கூட காரணமாக இருக்கலாம். அவர் தோளில் அமர்ந்து, தலை முடியை பற்றி திருவிழா கூட்டங்களில் "அப்பா, அங்க போலாம்! அப்பா, இந்த பொம்ம வேணும்" என கேட்ட காலங்களில் இருந்து என் தோளில் கை போட்டு "உண்ண ஒழுங்கா பாத்துக்கோ கண்ணு, இந்த வயசுல சந்தோசமா இரு. அப்றம் உன் குடும்பத்துக்காக ஓடர காலம் தான் நிறைய உண்டு-னு" அவர் அனுபவம் சொல்லும் இன்று வரை எத்தனையோ ஞாபகங்கள்.. ஒரு மகனாய், சக மனிதனாய் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி :) உண்மை தான், நம் அனுபவங்களை எழுதும்போது கிடைக்கும் ஆனந்தம் வேறு எதை எழுதும் போதும் கிடைத்துவிடாது.

      அப்பானா அப்பா தானே! :)

      நீக்கு
  10. வலைச்சரத்தில் இருந்து இங்கு வந்தேன்..ஆனால் பிற பதிவுகளைப் படிப்பதற்கு முன்பு இப்பதிவு என்னை ஈர்த்து விட்டது. மென்மையான இனிய நினைவுகள்..எனக்கும் என் அப்பாவை மிகவும் பிடிக்கும், இதுபோல நிறைய சம்பவங்கள் இருக்கின்றன.. அப்பா அப்பா தான், இல்லையா? :) வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி! :) ஆம், எல்லோருக்குமே அப்பாவோடு இருந்த இனிய நினைவுகள் நீங்காமல் இருக்கத் தான் செய்யும் மனதில்! அப்பானா அப்பா தான்!

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்