முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறங்கும் கடிதம்! (எழுத நினைத்த காதல் கடிதம்!)

இனியவனே,

உனக்காகக் காத்துக் கிடக்கும் இந்த நாட்கள் எல்லாம், சுகமானவை தான், ரணம் தந்தாலும்! நீ கை அசைத்து, வருகிறேன் என்று சொல்லி, என்னைத் தனியே விட்டுச் சென்ற அந்த நொடி, உன்னைத் தேடத் தொடங்கிய இதயம், இன்னும் ஓயவில்லையடா! இதோ வருவாய் அதோ வருவாய், என்று என்னென்னவோ சொன்னாலும், என் மனம் ஓயாமல் கதவின் ஓரமும், சன்னலின் ஓரமும் பதுங்கி நின்று, உன்னைத் தேடித் தவிக்கிறது, வாசலைப் பார்த்துப் பார்த்து!

எத்தனை முறை தான் நானும் என்னை ஏமாற்றிக் கொள்வது, நீ அருகில் இருப்பதாய், கற்பனை செய்து? ஆனாலும் இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்!

சரி, என் புலம்பல் இருக்கட்டும், நீ எப்படியடா இருக்கிறாய்? நலம் தானே?

இங்கு அத்தை மாமா, இருவரும் நலம். தெரியுமா உனக்கு? நேற்று நான் வைத்த புளிக் குழம்பு, “நல்லா இருக்குமா”, என்று அத்தையிடம் பாராட்டு வாங்கியது! மாமாவுக்கும் கூடப் பிடித்தது!



இப்போது அதிகம் வாந்தி மயக்கம் இல்லை எனக்கு, ஐந்து மாதம் முடிந்தது அல்லவா! ராகுல் (உன்ன மாதிரி ஒரு ராகுல் தான், என்ன மாதிரி ரேனு இல்ல போ...) சமத்தாகிவிட்டான் போலத் தெரிகிறது! அத்தை நேற்று எனக்குக் குங்குமப் பூ வாங்கித் தந்தார்கள், பேரன் சிகப்பாய் பிறக்க வேண்டுமாம்! அத்தனை பிரியமாய் என்னைப் பார்த்துக் கொள்கிறார்கள். அவ்வப்போது ராகுல் தான் உதைக்கிறான்! என் அடி வயிற்றில் உள்ளிருந்து அவன் உதைப்பது, “அப்பா, எங்கமா”, என்று கேட்பது போலவே இருக்கிறது.

அவனுக்கு தினமும் இரவு நான் உன்னைப் பற்றித் தான் கதை சொல்லிகிறேன் தெரியுமாடா? “உன் அப்பா, ஆர்மில இருக்காங்க, நீ பொறக்கப் போறப்போ கண்டிப்பா இங்க வந்திடுவாங்க, உன்னப் பாக்க, நீயும் அப்பாவ மாதிரி ஆர்மில சேரனும் என்ன?”, இப்படி தினமும் சொல்லி வைத்துக் கொண்டு இருக்கிறேன். அவனும் “சரிஎன்பது போல ஒரு உதை உதைக்கிறான் தெரியுமா? அவன் உதைக்கும் போதெல்லாம் என் வயிற்றில் கை வைத்துப் பார்க்க நீ இல்லையே என்ற வருத்தம் எனக்கு!

ஒவ்வொரு முறை அவன் உதைக்கும் போதும், எத்தனை இன்பம் வருமோ, அத்தனையும் நீ அருகில் இல்லை என்று நினைக்கையில் சோகமாகிப் போகிறது! சீக்கிரம் வாடா!

கற்பனை செய்து கொள்கிறேன், நீ என் வயிற்றில் கை வைத்து ராகுல் உதைப்பதை ரசித்து மகிழ்வது போல் ஒவ்வொரு முறையும்! ஆனாலும், அது கற்பனை என்று தெரிகிறதே எனக்கு! கற்பனை என்று தெரியாமல், கற்பனை செய்யும் அளவுக்கு, இன்னும் எனக்கு பயிற்சி வேண்டுமோ? நீ அருகில் இல்லாமல் இருக்கும் இந்த நேரம், எத்தனை கொடுமையானதாய் இருக்கிறது தெரியுமா? ஆனாலும், அந்தச் சோகம் எல்லாம் காணாமல் போகிறது, உன்னைப் பற்றிப் பெருமையாய் ராகுலிடம் சொல்லும் போது! தெரியுமா? அவனுக்கு நீ தான் ஹீரோவாம்!

காலையில் எழும் போது, நீ எனக்கு நெற்றியில் முத்தம் வைத்து எழுப்புவதாய்த் தொடங்கும் என் கற்பனை, மதியம் நாம் ஒன்றாகச் சாப்பிடுவதாய் நீண்டு, மாலை நீயும் நானும் ஒன்றாய் கை கோர்த்து நடப்பதாக விரிந்து, இரவு நீ என் வயிற்றின் அருகே வந்து, மெதுவாய்க் கை வைத்து, முத்தமிட்டு, ராகுலுக்குக் கதை சொல்வதாய் முடிகிறது! பிறகு பெரும்பாலான நேரம், ராகுலுக்கு உன்னைப் பற்றி, ரானுவத்தைப் பற்றிக் கதை சொல்லியே செலவாகிறது. ஒவ்வொரு நாள் முடியும் போதும், ஒரு ஆனந்தம், உன்னைக் காணப் போகும் நாள் நெருங்குவதால்!


பிறகு நேற்று பக்கத்து வீட்டுப் பூஜா பாப்பாவிற்குப் பிறந்த நாள், என்னை அழைத்து இருந்தார்கள். பெரிய கேக் வெட்டி, அத்தனை சிறப்பாகக் கொண்டாடினார்கள், எனக்கும் நம் ராகுல் பிறந்த நாளை அப்படிக் கொண்டாட வேண்டும் என்று ஆசை!

சரி, பிறகு, உடம்பையும் கொஞ்சம் பாத்துக்கோங்க லெஃப்டினண்ட் ஜி! இதோ, இதை எழுதிக் கொண்டு இருக்கும் போது கூட, இவன் என்னை உதைக்கிறான்!

வழக்கம் போல, இந்தக் கடிதத்தையும் நான் உனக்கு அனுப்பப் போவது இல்லை, எனக்குத் தெரியும், நான் இத்தனை அதிகம் உன்னைப் பிரிந்து தவிக்கிறேன் என்று தெரிந்தால் உன் மனம் தாங்காது என்று, வேலை முக்கியம் இல்லை என்று வந்தாலும் வந்துவிடுவாய்! என்றாவது ஒரு நாள் இதை உன்னிடம் காட்டும் சமயம் வரும்போது, காட்டுவேன், உன் தோளில் சாய்ந்தவாறு, உன்னோடு சேர்ந்து, நானும் இதை வாசிப்பேன்! அன்று நீ செல்லமாய் என் நெற்றியில் வைக்கும், காதல் முத்தம், என் காயங்கள் எல்லாம் தீர்த்துவிடும்! பிறகு, எப்போதும் நீ என் அருகில் இருப்பாய், அப்போது, ராகுல் பெரியவனாக வளர்ந்து இருப்பான்! உன் தலை முடியெல்லாம் பால் போல் இருக்கும்!


இப்போது, எழுத நினைத்தேன், எழுதிவிட்டேன், இனி இது என் நாட்குறிப்பில் உறங்கட்டும், என் அன்பின் ஆதாரமாய் உறங்கட்டும், நாட்டிற்கு நீ வேண்டும், ஆதலால், என் கடிதம் உறங்கட்டும்! என் பிரிவின் வலிகள், பாவம் உறங்கட்டும்! என் வீரன் வரும் வரை, என் வார்த்தைகள் உறங்கட்டும்!

---------------
காதல் மனைவி,
கண்மணி!

இந்தக் கடிதம் “திடங்கொண்டு போராடு” தளத்தில் நடத்தும், காதல் கடிதம் போட்டிக்காக எழுதப்பட்டது!

கருத்துகள்

  1. வீர தமிழச்சியின் கடிதம் நன்றாக உள்ளது கண்மணி .பழைய தமிழ் இலக்கிய கதைகளெல்லாம் ஞாபகம் வருது...
    //என் அடி வயிற்றில் உள்ளிருந்து அவன் உதைப்பது, “அப்பா, எங்கமா”, என்று கேட்பது போலவே இருக்கிறது.//

    சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி விஜயன் :) வீரமா? :) நன்றி, நன்றி...!

      நீக்கு
    2. suprr.. i like that.. enum nammul andha thamizh thagam oyyavillai.. keep feel and write,, well done.:)

      நீக்கு
  2. இரண்டு முறை படித்தேன்...
    அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெண்டு தடவையா? :) அப்பாடி, பாஸ் ஆகிட்டேன்...! :)

      நீக்கு
  3. ஒரு தாயின் உணர்வோடு... ஏங்க வைக்கும் கடிதம்... ரசிக்க வைத்ததை விட கலங்க வைத்தது...

    போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :) மிக்க நன்றி... உண்மையிலேயே கலங்க வைக்கும் அளவுக்கு இருந்ததா? :) நன்றி...!

      நீக்கு
  4. ரேனுவா கண்மணியா?

    காதல் கடிதம் நன்று. வெற்றி பெற வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரேனு, ராகுல் என்பது குழந்தை பிறந்தால் வைக்கலாம் என்று யோசித்து வைத்த பெயர்கள். கணவரின் பெயர் அகில், மனைவிக்கு என் பெயரே வைத்துவிட்டேன்! :) மிக்க நன்றி...

      நீக்கு
  5. சூப்பர்.. இதுக்கு பரிசு கொடுக்கவில்லையென்றால் சீனுகுருவை தூக்கிருவோம்..

    பதிலளிநீக்கு
  6. அருமையான காதல் கடிதம்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் தோழி !!!

    பதிலளிநீக்கு
  7. அதீத அன்பின் வெளிபாடு அற்புதம் கண்மணி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. "அருமை வாழ்த்துக்கள்!!!"

    பதிலளிநீக்கு
  9. பிரிந்திருக்கும் கணவனுக்கு காதல் சொட்ட சொட்ட ஒரு கடிதம்! அதை அவனுக்கு அனுப்பாமல் அவன் வந்தபிறகு காண்பித்து இருவருமாக அனுபவிக்கப் போகும் இன்பத்திற்கு காத்திருத்தல் என்று கடிதம் மிக அழகாக மலர்ந்திருக்கிறது, கண்மணி.
    போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. என் அன்பின் ஆதாரமாய் உறங்கட்டும், நாட்டிற்கு நீ வேண்டும், ஆதலால், என் கடிதம் உறங்கட்டும்! என் பிரிவின் வலிகள், பாவம் உறங்கட்டும்! என் வீரன் வரும் வரை,//


    இந்தக் கற்பனை வாழ்வும், அதில் இருக்கும் தேடலும் சுகம் தான், அது உனக்காக என்பதால்!//

    இப்படி சின்ன சின்ன மென்மை உணர்வுகள் தான் காதலின் வலிமையை கூட்டுவதாய் இருக்கிறது ... மெல்லிய உணர்வுக்கு என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி :) ஆம், உண்மையில், வாழ்வை அழகாக்குவதே இது போன்ற சிறு சிறு விஷயங்கள் தானே!

      நீக்கு
  11. இது போன்ற வித்தியாசமான படைப்பை தான் உங்களிடம் இருந்து எதிர்பார்த்தேன் கண்மணி... மிக அற்புதமான கடிதம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் தங்களது, ஆசிர்வாதம் தான்! :) நன்றி!

      நீக்கு
  12. இந்த ஏக்கம் என்று தீரும்? அனுப்பாத கடிதத்தின் காரணம் மனதைத் தொட்டது.

    பதிலளிநீக்கு
  13. உங்களின் அடுத்த பகிர்வு : http://schoolpaiyan2012.blogspot.com/2013/07/blog-post_24.html

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  14. இத்தனை நாள் உங்கள் எழுத்தைப் படிக்காமல் போனேனே!
    லயிக்க வைத்த லவ் லெடர்!
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  15. //இத்தனை நாள் உங்கள் எழுத்தைப் படிக்காமல் போனேனே!//

    இதை விடவும் ஒரு பாராட்டு கண்மணிக்கு வேண்டுமா என்ன? மிக்க நன்றி! :)

    பதிலளிநீக்கு
  16. இப்போது, எழுத நினைத்தேன், எழுதிவிட்டேன், இனி இது என் நாட்குறிப்பில் உறங்கட்டும், என் அன்பின் ஆதாரமாய் உறங்கட்டும், நாட்டிற்கு நீ வேண்டும், ஆதலால், என் கடிதம் உறங்கட்டும்! என் பிரிவின் வலிகள், பாவம் உறங்கட்டும்! என் வீரன் வரும் வரை, என் வார்த்தைகள் உறங்கட்டும்!
    ஒரு கர்பிணியின் மனதில் உறங்கும் இன்ப துன்பங்கள் அழகாய் விழித்திருக்கிறது உன் அருமையான இக்கடிதத்தில்.. என் இனிய நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. சிறப்பான படைப்புகள் வெற்றி பெறத் தவறுவதில்லை.. உங்கள் படைப்பு பெற்ற வெற்றி அதை பறைசாற்றும்.. வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  18. பரிசு வென்றதற்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. காதல் கடிதப் போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  20. வாழ்த்துக்கள் கண்மணி ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி :) உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  21. போட்டியில் வென்று பரிசு பெற்ற உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  22. காதலில்( கடிதப் போட்டியில்) வென்றமைக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  23. பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் கண்மணி!

    பதிலளிநீக்கு
  24. Kanmani miga arumai, tayin kadhalum pirivum kalanga vaithu vitathu.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெண்களிடம் பேசுவது.... எப்படி?

"ஆணும் பெண்ணும் பேசுவதே தவறு" "ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது!", இப்படி எல்லாம் தான் என் ஊரில் இருக்கும் ஒரு பாட்டி சொல்லிக் கொண்டு இருப்பார் எப்போதும். ஆனால், அதெல்லாம் அப்படியா? பாட்டி பெரியவர், அவர் சொன்னால் சரியாகத் தானே இருக்கும்? இல்லையா? என் அம்மா சொல்வார், "பெரியவங்க சொன்னா  அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்" என்று! ஆனால், "பேசுவது தவறு???", இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? இப்போது இப்படி எல்லாம் "பேசுவது தவறு" என்று பேசினால், "போயா நீ, அந்தக் காலத்து ஆள் மாதிரி..", என்று சொல்லிவிடுவார்கள். இன்று ஆணும் பெண்ணும் பேசுவது, நட்பாக இருப்பது எல்லாம் சாதாரணமான ஒரு விஷயம்! பள்ளியில், கல்லூரியில், வேலை செய்யும் இடத்தில், இப்படி எங்கும் பேச வேண்டிய அவசியம், "எல்லோரிடமும்" பேச வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால், எப்படிப் பேசுகிறோம் என்பதில் தான் இருக்கிறது, நம்மைப் பற்றி மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது! சிலர், பார்த்தவுடன் யாராக இருந்தாலும், இனிமையாக சிரித்துப் பேசுவார்கள். இன்னும் சிலர் ஒரு வார்த்தை பேசவே

இது பேசும் கலை - கழை - களை!

பெரும்பாலும் நாம் நல்லவரா கெட்டவரா என்பது நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. இல்லையா? இப்படிச் சொல்வார்கள், "ஒரு சொல் கொல்லும் ஒரு சொல் வெல்லும்" என்று. உண்மை! எனக்குத் தெரிந்து பொருள் உதவி செய்தவர்களைக் கூட மறந்துவிடுவார்கள் எளிதில். ஆனால், "சொல்லால்" உதவியவர்களை ஒரு போதும் மறக்க முடியாது!  சொல்லால் உதவுவதா? ஆம், "அய்யோ!" என்று ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சோர்ந்து போய், அழுது கொண்டு இருக்கும் போது, ஒருத்தர் வந்து எப்போதும் உங்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்கிறார் என்றால்? அவரை மறக்க முடியுமா? முடியவே முடியாது! உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை, ஆனால், என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. பேசுவதைக் கூட  "கலை" என்று சொல்வார்கள், காரணம் ஒரு விஷயத்தையே அழகாக கவிதை போலவும்  சொல்ல முடியும், ஒரு "செய்தி அல்லது அறிவுரை" போலவும் சொல்ல முடியும். எந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், எப்படி வார்த்தைகளை எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம் என்பதும் உள்ளது. பேச்சுப் போட்டிகள் எல்லாம் நடத்துவார்களே பள்ளியில்?

அன்புள்ள ஆசிரியருக்கு!

மரியாதைக்குரிய ஐயா, நீண்ட நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எனக்கு அத்தனை ஆசை. காரணம், உங்களிடம் ஒரு செய்தி சொல்லவேண்டும். நீங்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி, முறை பற்றி. ஒரு நல்ல மாணவிக்கு இப்படிப் பேசுவது அழகா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், இப்பொழுதும் நான் சொல்லாமல் விட்டுவிட்டால்,  அது சரியாக இருக்காது என்று தான் சொல்கிறேன். தவறாக என்ன வேண்டாம் ஐயா. உங்களின் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆயினும், சில நேரங்களில் கோபம் வருகிறது உங்களின் மீது?!!! நீங்கள் இது வரை நிறைய முறை, வகுப்பில் எங்களிடம் கேட்டதுண்டு, "நான் நடத்துறது புரியுதாப்பா...?" நாங்களும் "புரியுது சார்..", என்று சொல்வோம். ஆனால், உங்களுக்கே தெரியும் நீங்கள் சொல்வது எதுவும் எங்களுக்குப் புரிந்ததில்லை என்று! உண்மையைச் சொல்கிறேன், என் வகுப்பில் இருக்கும் எல்லா தோழர்களின் தோழிகளின் சார்பாகச் சொல்கிறேன், "உண்மையா உங்களுக்கு நடத்தவே தெரியல சார்.. :( " நாங்களே புத்தகத்தை வாசித்தால் கூட தெளிவாகப் புரிகிறது, ஆனால், உங்களுக்கு மட்டும் ஏன் தான் எல்லாம்