காலையில் ஆறு மணி இருக்கும், நல்ல வெளிச்சம். வழக்கத்தை விட வெரசாகவே விடிந்து இருந்தது. கோடை என்பதால் போல! காலையில் வாசல் தெளித்து, கோலம் இட்டுக் கொண்டு இருந்தாள் கமலம். குட்டி மஞ்சு அந்நேரமே எழுந்து காப்பி போடத் தொடங்கி இருந்தாள் அவளது கிச்சன் செட் உதவியோடு, வீட்டு வாசலில்! அழகாக அடுக்கி வைத்து இருந்தாள் அவளது சொப்புகளை; சின்னச் சின்னக் கிண்ணம், கரண்டி, கப் அன் சாசர், காஸ் அடுப்பு, சிலிண்டர், குட்டிக் கூடை, மிக்ஸி, ஆட்டு உரல், அம்மி, சின்னது பெரியது என எல்லா அளவிலும் பல பாத்திரங்கள், தோசைக் கல், கரண்டி, இப்படி சகலமும் அவளிடம் இருந்தது! ஒவ்வொரு தடவை பொருக்காச்சிக்குப் (பொருட்காட்சி) போகும் போதும், அவள் குறைந்தது இரண்டு கிச்சன் செட்டாவது வாங்கிவிடுவாள், அப்படி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இப்போது அவளிடம் மூன்று கூட்டுக் குடும்பத்துக்கு சமைக்கும் அளவிற்கு பாத்திரம் இருந்தது. எல்லாவற்றிலும் நான்கு ஐந்து இருக்கும், காஸ் அடுப்பு மட்டும் மூன்று இருந்தது! குட்டி சைஸில் அவளிடம் டேபிள் ஃபேன் கூட இரண்டு இருந்தது!
![]() |
மஞ்சு |
”அம்மா அம்மா.. காப்பி இந்தாங்க... அப்பா.. உங்களுக்கு..., அவ்வா (பாட்டி) இது உனக்கு, தாத்தா.. இது உங்களுக்கு சீனி இல்லாம..”
எல்லோருக்கும் தனது கற்பனைக் காப்பியைக் கொடுத்து, மீண்டும் அந்த டம்ளர்களை வாங்கி கழுவத் தொடங்கி இருந்தாள்.
ஒரே மகள், செல்ல மகள் மஞ்சு. இப்போது, இரண்டாம் வகுப்பு கோடை விடுமுறை அவளுக்கு. அப்பாவுக்கு ஒரு கம்பெனியில் கணக்கெழுதும் வேலை. அம்மா இட்லி, வடை, தோசை என்று சுட்டுத் தருவாள், தாத்தா தெருவில் கூவி விற்றுவிட்டு வருவார். சில நேரம் மஞ்சுவும் விடுமுறையின் போது சேர்ந்து கொள்வாள் தாத்தாவோடு வியாபாரத்தில், கூடவே நடந்து செல்வாள், கையில் ஒரு கூடையில் வடையும், அவளது பாப்பா பொம்மையயும் போட்டுக் கொண்டு. “ஏ மரிப்பூ கூடைக்குள்ள உக்காந்து வடைய திங்கக்கூடாது என்ன?” என்று அந்த பொம்மையை அதட்டிக் கொள்வாள். மரிப்பூ என்கிற பெயரை இந்த பொம்மைக்கு என்ன அர்த்தம் என்று கூடத் தெரியாமல் வைத்து இருந்தாள் மஞ்சு. காரணம், மஞ்சுவின் அத்தை மகள் அபி, இவளை விட ஐந்து வயது பெரியவள். ஒரு நாள், மஞ்சுவிற்கு இரண்டு வயது இருக்கும் போது, அபியும் மஞ்சுவும் பொம்மைகளைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்த போது, “ஏ, மஞ்சு, என்கிட்ட முந்தி ஒரு பாப்பா பொம்ம இருந்துச்சு, அது பின்க் கலர்ல கவுன் போட்டு இருக்கும், ரொம்ப அழகா இருக்கும், மரிப்பூ என்கூட நல்லா வெளயாடும், தெரியுமா?”, இப்படி அபி கண்கள் விரிய விரிய கை ஆட்டி ஆட்டிச் சொல்ல, மஞ்சுவின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது, மரிப்பூ பொம்மை தான் அழகு என்று. அடுத்து இவளுக்கு பொம்மை கிடைத்ததும், அதே பெயரை வைத்து விளையாடத் தொடங்கிவிட்டாள். உண்மையில், மரிக்கொழுந்து - மரிப்பூ, இப்படித் தான் அந்தப் பெயர் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
![]() |
மரிப்பூ |
ஒரே மகள் என்பதால், பெரும்பாலும் தனியாகத் தான் அவளது விளையாட்டு இருக்கும், யாருக்கு அவளைப் பற்றித் தெரியுமோ என்னவோ, அவள் மரிப்பூவுக்கு நன்றாகத் தெரியும். அதோடு தான் பேசிக் கொண்டே இருப்பாள். அது அவளுடைய பாப்பா, அவள் தான் அதுக்கு அம்மா.
”அம்மா சொன்னா கேக்கனும், அம்மா கிட்ட வாடா.., தூங்கு தூங்கு.. அம்மா தட்டிக் குடுக்குறேன், என் செல்லம் கொஞ்சம் சாப்புடுமா.. ஐயோ ஒடம்பு என்னமா கொதிக்குது... அழாம ஸ்கூலுக்குப் போய் நல்லா படிச்சி பெரிய ஆளா வரனும்... மரிப்பூ பெருசாகி என்னவாகப் போறா?? சமத்தா இரு, குளிக்கிறப்போ ஆடுனா மூக்குல தண்ணி போய்டும், கண்ணுல சோப்பு பட்டுடும்...”
இப்படி அவளிடம் அவள் அம்மா சொல்லும் வசனங்களை எல்லாம் மஞ்சு அதே டோனில் அந்த மரிப்பூவிடம் சொல்லிக் கொண்டு இருப்பாள்.
மரிப்பூவோடு தான் எல்லா இடங்களுக்கும் செல்வாள். ”அதத் தூக்கிக்கிட்டே திரியாதடி”, இப்படி அம்மா எத்தனையோ முறை சலித்துக் கொண்டும், கோபித்துக் கொண்டும் சொல்லிப் பார்த்தாயிற்று, கேட்பதாக இல்லை மஞ்சு!
அன்றும் வழக்கம் போல விளையாடிக் கொண்டு இருந்தாள் வாசலில் தனது சொப்புக்களை வைத்து மரிப்பூவோடும் தாத்தாவோடும். அந்நேரம் பக்கத்து வீட்டு வனஸ்ரீ வந்தாள், “ஏ மஞ்சு.. இங்க பாத்தியா..”, என்று முந்தைய தினம் பொருக்காச்சியில் அவள் வாங்கிய பெரிய பொம்மையைக் காட்டினாள். வேகமாக மஞ்சு, “எங்க வாங்குன? பொருக்காச்சி வந்துருச்சா???”, என்று ஆசையாகக் கேட்டாள்.
“ஆமா, அது வந்து அஞ்சு நாள் ஆச்சி.. உனக்குத் தெரியாதா?? நான் ரெண்டு தடவ போயிட்டு வந்துட்டேன் தெரியுமா...”, பெருமையாகச் சொன்னாள் வனஸ்ரீ.
“நானும் போவேனே இன்னிக்கு, எங்கப்பா வந்ததும் சாயந்தரம்...”, இப்படி சிரித்துக் கொண்டே தன் கட்டை விரலை ஆட்டி ஆட்டி சொன்னாள் மஞ்சு. ஆனாலும், தனக்கு முன்பாக அவள் பொருக்காச்சிக்குப் போய் வந்தது இவளுக்கு ஒரே வருத்தம் தான். கோடை விடுமுறை என்றாலே மஞ்சுவிற்கு அந்தப் பொருக்காச்சி தான்! சொப்பு விற்கும் கடையைத் தேடித் தான் முதலில் செல்வாள், பிறகு, கம்மல், வளையல், பொட்டு, நக பாலிஸ் இப்படி, அடுத்து, டெல்லி அப்பளம் சாப்பிடுவாள். ஐஸ் க்ரீம், பஞ்சு மிட்டாய் எல்லாம் கேட்க ஆசையாக இருக்கும், ஆனால், அவளுக்கே தெரியும் அதெல்லாம் கேட்டால், ”இரவு நேரம் சாப்பிடக் கூடாது, உடம்புக்கு சேராது”, என்று அப்பா சொல்லிவிடுவார், அதனால், ஏக்கமாய் ஐஸ் கிரீம் திங்கும் குழந்தைகளைப் பார்த்துவிட்டு அமைதியாக வந்துவிடுவாள் அவளாகவே சமத்துப் பெண்ணாக.
எல்லா வருடமும் அவர்கள் ஊருக்கு பொருக்காச்சியோடு சேர்ந்து மழையும் வந்துவிடும். அது மஞ்சுவிற்குப் பிடிக்கவே பிடிக்காது. மழை பெய்யும் நாள் அவளை அப்பா பொருக்காச்சிக்குக் கூட்டியே போக மாட்டார்! ”அப்பா, மழ வராதுபா, போலாம்பா இன்னைக்கு...”, இப்படிக் கெஞ்சிக் கொஞ்சிக் கேட்டுப் பார்ப்பாள். ஆனால், மழை வருகிறது போல இருந்தாலே அவளை பொருக்காச்சிக்குக் கூட்டிப் போகமாட்டார்கள்.
அன்று சாயந்தரம் அப்பா வந்ததும் கேட்கலாம், பொருக்காச்சிக்குப் போகலாம் என்று மஞ்சு ஆவளாகக் காத்திருந்தாள். நான்கு மணிக்கே மழை மேகம் வந்து சற்று இருட்டியது போல இருந்தது, வாசலில் மஞ்சுவும் தாத்தாவும் விளையாடிக் கொண்டிருந்தார்கள் வழக்கம் போல, அவள் தாத்தாவுக்கு மாலை தேனீர் தயார் செய்து கொண்டு இருந்தாள், தாத்தா வெளியெ நின்ற சைக்கிளில் மரிப்பூவிற்குத் துண்டை வைத்து தொட்டில் கட்டி, தொட்டிலை ஆட்டிக் கொண்டு இருந்தார். மஞ்சு அருகே தேனீர் செய்து கொண்டே, ”ஆராரோ ஆரிராரோ... அத்த அடிச்சாரோ... அல்லிப் பூச்செண்டாலே...”, என்று தாலாட்டுப் பாடிக் கொண்டு இருந்தாள். திடீரென தாலாட்டை நிறுத்தி விட்டு, மஞ்சு தாத்தாவிடம், “தாத்தா, மணி ஆறு ஆகிடுச்சா..? இருட்டிருச்சுல, அப்பா ஏன் இன்னும் வரல??”
“இல்லடா, மணி நாலு தான் ஆகுது, மழ வராப்ல இருக்குது, பாரு, மேகம், கருப்பு மேகம், அதான் வெரசா இருட்டிருச்சி..”
அவள் முகம், மழை என்றதும், வாடிப் போனது. “அப்போ, அப்பா இன்னிக்கு பொருக்கச்சிக்குக் கூட்டிட்டு போக மாட்டாங்களா...”
சில்லென்றும், சர சரவென்றும் அப்போது வேகமாக காற்று அடித்தது. அவளுக்கு அவளின் வகுப்பில் சொன்னது ஞாபகம் வந்தது, காத்து அடிச்சா பெருசா மழ வராது, மேகம் எல்லாம் காத்து அடிக்கிற பக்கமா போயிடும்...
”மழ மேகம் காத்துல போகட்டும், பறந்து போகட்டும்... வேற ஊருக்குப் போகட்டும்... ரெயின் ரெயின் கோ அவே... கோ அவே...”, பாடினாள் மஞ்சு.
காற்று நின்றுவிட்டது!!! “அய்யோ.. நின்னு போச்சு காத்து... தாத்தா.. நீங்களும் சொல்லுங்க, “ரெயின் ரெயின் கோ அவே..”, தாத்தாவும் தப்பும் தவறுமாக, “ராயி ரயி, கோ அபே..” என்று அவளோடு பாடிக் கொண்டு இருந்தார்.
அவர்கள் பாடியதாலோ என்னவோ, இருட்டி இருந்தது, ஆனால், மழை வரவில்லை.
ஆறு மணிக்கு மேலே ஆகி இருந்தது, தாத்தா உள்ளே சென்றிருந்தார், மஞ்சு மட்டும் வாசலிலே அமர்ந்து வானத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
வீட்டில் யாரும் அவளை கவனிக்கவில்லை, அவள் தனியாக உட்கார்ந்து வானத்தையும் வாசலையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அன்று அப்பா வர கொஞ்சம் நேரம் ஆகி இருந்தது, லேட்! வந்ததும் அப்பா, “மஞ்சு...” அழைக்க, இவளை ஆளைக் காணோம்!
“ஏய்... மஞ்சு எங்க??”, கமலத்திடம் கேட்க, ”இங்க தான் வாசல்ல இருந்தா...”, தாத்தாவும் அம்மாவும் சேர்ந்து சொல்ல, மஞ்சுவைக் காணோம்!!!
வாசல்ல இல்லயே... பதறிப் போய் தேட ஆரம்பித்தார்கள். பக்கத்து வீட்டில், எதிர் வீட்டில், வீட்டச் சுற்றி... எங்கேயும் காணோம்!!!
மஞ்சு வீட்டை விட்டு வெளியே, சொல்லாமல் போகிற பெண் கிடையாது. அப்பா பயந்தே போனார்... வாசலில் நின்று, ”மஞ்சு... மஞ்சூ...” பயந்து போய் கத்திக் கத்திக் கூப்பிட்டுக் கொண்டு இருந்தார்...
மஞ்சு... மஞ்சுவைக் காணோம்... எதிர் வீட்டு வனஸ்ரீ, “மாமா, மஞ்சு மாடிக்குப் போனா... மொட்ட மாடிக்கு, நான் பாத்தேன், அப்போவே போனா.. இன்னும் என்ன பண்ணுறா அங்க போயி...”
வேகமாக மாடிக்கு ஓடினார் அப்பா. மஞ்சு ஒரு ஒரமாக மரிப்பூவோடு தூங்கிக் கொண்டு இருந்தாள் சுவரில் சாய்ந்தவாரே...
மஞ்சுவை எழுப்பி, கட்டிக் கொண்டு, “ஏன்டா குட்டி இங்க வந்து தூங்குன??”
![]() |
அப்பா! |
“இல்லப்பா, பொருக்காச்சிக்கு மழ வந்தா போக முடியாதுல, அதான், நானும் மரிப்பூவும் ரெயின் ரெயின் கோ அவே பாடிட்டு, ஸ்டார் இருக்கானு பாக்க வந்தோம்... நீங்க தான சொன்னிங்க போன வருஷம், வானத்துல ஸ்டார் வந்துட்டா மழ வராது, ஸ்டார் தெரிஞ்சா அப்பாக்குக் காட்டு, பொருக்கச்சிக்கு போலாம்னு, அதான், இன்னிக்கு மழ வராப்ல இருந்துச்சா, உங்களுக்கு ஸ்டார் காட்டி பொருக்காச்சிக்குப் போலாம்னு வந்தேன்... மரிப்பூக்கு தூக்கம் வந்துச்சா, அது என்னையும் கொஞ்ச நேரம் தூங்க சொல்லுச்சா... தூங்கிட்டேன்... ரொம்ப நேரம் ஆச்சா...??? நைட் ஆகிருச்சா..???”, வேகமாக வானத்தைப் பார்த்தாள், வானமெல்லாம் நட்சத்திரம்...
“அப்ப்பா.. அப்ப்பா... ஸ்டார் ஸ்டார்.. நெறைய ஸ்டார்... பொருக்காச்சிக்குப் போலாம்பா.. ப்ளீஸ்...”
பொருக்காட்சி! |
அன்று அவளுக்கு இன்னொரு சொப்புச் சாமான் செட்டும், எப்போதும் இல்லாத அதிசயமாக அவளுக்கு ஐஸ்கிரீமும் கிடைத்தது.
”அப்பா... சளிப் புடிக்காதா???...”, சிரித்துக் கொண்டே அவள் கேட்க, “சாப்டு, வீட்டுக்குப் போய் சுருக்தண்ணி (சுடு தண்ணி) குடிச்சா சளி வராது...”, முத்தம் இட்டார்.
“அப்படியா...”, என்று அவளுக்குக் கிடைத்த சொப்புக்களை கைக்குக் கீழ் இடுக்கிக் கொண்டு, ஐஸ்கிரீமை ரசித்துத் தின்றாள் மஞ்சு.
----------------------------------------------------------
"இத்தன நாளா எழுதவே இல்லையே? ஏன்? எழுதேன்?..", இப்படிக் கேட்ட அன்பு உள்ளங்களுக்கு எல்லாம், ”நன்றி நன்றி நன்றி..”
எழுதிட்டேன்பா, ரொம்ப மாசம் கழிச்சு ஒரு கதய!
Thank you so much for motivating me to write. Thank you :)
மழலை உள்ளத்தைப் பற்றி
பதிலளிநீக்குஅழகான கதை..!
சிறப்பான கதை! பாத்திரங்கள் மனதோடு உறவாடுகின்றன! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா :) சின்னப் பிள்ளைகள் என்றால் எல்லோருக்குமே பிடிக்கும் தானே!
நீக்குநானும் யோசித்துக்கொண்டே இருந்தேன், கண்மணி ரொம்ப நாட்களாக உன்னைக் காணோமே என்று.
பதிலளிநீக்குமஞ்சு பொருக்காச்சிப் மகிழ்ந்தது போல நானும் உன் கதையைப் படித்து மகிழ்ந்தேன், பல நாட்களுக்குப் பிறகு.
ம்ம், கல்லூரி கடைசி செமஸ்டர் அது ஒரு காரணம் வராததற்கு. மிக்க நன்றி மா :)
நீக்குஅருமை.
பதிலளிநீக்குநன்றி :)
நீக்குYou made me remember my childhood.. i too had these kind of happy memories.. thanks and loving it ..
பதிலளிநீக்குநன்றி மொஹமத் :)
நீக்குஎளிமையான கதை...நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் :) தமிழ் இதழ்களுக்கு சிறுகதை எழுத முயற்சிக்கலாமே? (ஒருவேளை இதுவரை செய்யாமல் இருந்திருந்தால்)
பதிலளிநீக்குமிக்க நன்றி. நான் அனுப்பிப் பார்த்தேன், எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படவில்லை! :( என்ன செய்ய!
நீக்குKeep writing... You have the potential and with some practice, you will surely get published. All the best :)
நீக்குSo cute !! கதை , மஞ்சு பேசும் கொஞ்சு மொழிகள் Fantastic :)
பதிலளிநீக்குThanks for the insight of small gal world... U r realistically fantastic.. There are some traces of the great jayakanthan... Just my perspect...
பதிலளிநீக்குThank you so much :)
நீக்கு